“ஒரு காலத்தில் நமது இந்திய கலாச்சாரத்தில் வருடம் 365 நாட்களையும் ஏதோ ஒரு திருவிழாவாகவே கொண்டாடினார்கள். ஆனால் வறுமையால் இந்த கலாச்சாரம் சிறிது சிறிதாக அழிந்து, இன்று ஒரு வருடத்தில் ஏதோ ஒருசில பண்டிகைகளே கொண்டாடப் படுகின்றன.”

திருவிழா என்றால் மக்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி இணைந்து பல உற்சாகமிக்க செயல்களை செய்து, அந்த திருநாளை கொண்டாடுவதாகும். இம்மாதிரி பண்டிகைகளை ஏன், எதற்காக கொண்டாடுகிறோம் என்பதை எல்லோருக்கும் புரிய வைத்தோமென்றால், நமது பாரம்பரிய கலாச்சாரத்தை அடுத்துவரும் சந்ததியினரும் அதனை புரிந்துகொண்டு, தொடர்ந்து கொண்டாடி மகிழ்வார்கள். ஆடி மாதத்தின் 18ம் நாள் கொண்டாடும் ஒரு தமிழர் திருவிழா "ஆடிப் பெருக்கு". இந்நாளில் இயற்கை வளத்தை அம்மனாக நினைத்து வழிபட்டு, நீரின் உயிர்த் தன்மைக்கு தலை வணங்கி, அமைதி, வளமை மற்றும் மகிழ்ச்சியை மக்கள்மேல் பொழியுமாறு வேண்டும் ஒரு திருநாள்.

நமது ஈஷா வித்யா பள்ளியில் ஆடிப்பெருக்கு திருநாள் எல்லோரும் கலந்துகொள்ள, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் எல்லோரும் பாரம்பரிய ஆடை அணிந்து, ஆங்காங்கே வண்ண கோலங்கள் இட்டு, மொத்த பள்ளியும் திருவிழாக் கோலம் கொண்டிருந்தது.

பாரம்பரிய உடை உடுத்திய நமது பள்ளி மாணவர்கள் அம்மன் சிலையை வண்ணமயமாக அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். முளைப்பாரி தாங்கிய நமது பெண் மாணவர்கள் ஊர்வலத்தின் பின் சென்றனர். சர்க்கரைப் பொங்கலும், பாயசமும் அம்மனுக்கு நெய்வேத்தியமாக நமது ஆயாம்மாக்களால் செய்யப்பட்டது. நமது ஆசிரியர்களின் தகுந்த வழிகாட்டுதலோடும், ஆயாமாக்கள் மற்றும் வண்டி ஓட்டுனர்களின் உதவியாலும் மாணவர்களே எல்லாவித ஏற்பாடுகளையும் செய்துமுடித்தார்கள் என்று சொல்வதில் நாம் மிக பெருமைப்படுகிறோம். கூடி வாழ்ந்து, ஒன்றாக அனைத்து ஏற்பாடுகளும் செய்து, ஏதோ ஒன்றை உருவாக்கி, அதனால் உண்டாகும் சந்தோஷத்தை எல்லோரும் அனுபவிப்பதே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் நமக்கு வழங்கும் மிகப்பெரிய பாடம். ஈஷா வித்யா மாணவர்கள் ஆடிப்பெருக்கு திருவிழாவை ஒன்றாகக் கூடி ஆனந்தத்துடன் அனுபவித்து மகிழ்ந்தனர்.

குறிப்பு : ஈஷா வித்யா கடலூர் பள்ளி மாணவர்களின் ஆடிப்பெருக்கு கொண்டாட்டத்தின் தொகுப்பு

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.