சத்குரு: தனது ராஜ்ஜியத்தைத் துறந்து, முறைப்படி தனக்கு கிடைத்திருக்க வேண்டிய அனைத்தையும் விருப்பத்துடன் விட்டுச்சென்ற ஒரு மகத்தான மனிதரின் பெயரில், 2.77 ஏக்கர் நிலத்திற்காக இந்த தேசம் சில நூற்றாண்டுகளாக ரத்தம் சிந்தியிருப்பது வேதனைக்குரிய விஷயம். எனினும், இந்த தேசத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு அவர்மீதுள்ள அபாரமான பக்தியை எவரும் குறைத்து எடைபோட்டுவிட முடியாது.

நான் ஆரம்பத்திலேயே இதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன், நான் ஹிந்து சமூகத்தையோ இஸ்லாமிய சமுதாயத்தையோ ஆதரிப்பவராக என்னைக் கருதவில்லை. ஒரு யோகியாக, நான் எந்தவொரு குறிப்பிட்ட மதத்துடனும் என்னை அடையாளப்படுத்துவது கிடையாது. யோகா என்பது அடையாளங்களை உதிர்க்கும் அறிவியல், அடையாளங்களை சேர்ப்பதல்ல. அதுவும் தென்னிந்தியாவில், ராமரின் பிறப்பிடம் மக்களை பெரிதாக உணர்ச்சிவயப்படுத்தும் விஷயமில்லை. தென்னிந்தியாவில் ராமரின் பல பக்தர்கள் உள்ளனர், ஆனால் ஒரு புனிதத்தலமாக அயோத்யா அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை.

எனினும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன் என்றால், இந்த தேசத்தின் முன்னேற்றம் நோக்கிய பாதையிலுள்ள இடையூறுகள் அனைத்தையும் அகற்றவிரும்பும் பலரில் நானும் ஒருவனாக இருப்பதால்தான். நமது மக்கள்தொகையில் 95 சதத்தினர் இப்படித்தான் உணர்கிறார்கள் என்பதை நான் அறிவேன். நாங்கள் அனைவருமே, நீண்டகாலமாக ரணமாகிக்கிடக்கும் இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வை விரும்புகிறோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதைத்தான் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு, அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு மைல்கல்.

ராமர் - முன்னுதாரணமாகும் ஒரு வரலாற்று அடையாளம்

நமது தனிப்பட்ட சார்புகள் என்னவாக இருந்தாலும், ராமாயணம் என்பது இந்த நாகரிகத்தின் அடித்தளமாக விளங்கிய ஒரு புராணம் என்பதை நாம் மறவாதிருக்க வேண்டும். 7,000 ஆண்டுகளுக்கு மேலாக, ராமர் பலகோடி மக்கள் வாழ்வின் நாயகனாக இருந்துள்ளார். அவரை ஒரு மதம்சார்ந்த மனிதராக பார்க்காமல் இருப்பது முக்கியம். ராமர் இந்த கலாச்சாரத்திற்கும் ஆன்மீகத்திற்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்திருக்கிறார் என்றால், அவர் நிலைத்தன்மை, சமநிலை, அமைதி, உண்மை, நேர்மை, கருணை மற்றும் நியாயத்தின் உருவமாக விளங்கியதால்தான். மகத்தான ஒரு நாகரிகத்தை உருவாக்கத் தேவையான குணங்களின் திருவுருவமாக இருப்பதால் அவரை நாம் போற்றுகிறோம். இந்திய சுதந்திர போராட்டத்தின்போது, மகாத்மா காந்தி ராமராஜ்ஜியத்தை மேற்கோள் காட்டினார் என்றால், நமது மரபணுவின் பகுதியாக, நம் கூட்டு மனப்பான்மையில் ஆழப்பதிந்திருக்கும் அடித்தளப் புராணமாக அது விளங்குவதால்தான். அத்தகைய ஒரு கதையை நாம் அழிக்காமல் இருப்பது முக்கியம்.

 

இன்றைய மனங்களில், 'ராமரை நாம் எதற்காக போற்றுகிறோம்?' என சிந்திக்கும் நிலை இருப்பது உண்மைதான். எப்படியும், ராமர் ஒரு வெற்றிக்கதையின் நாயகனாக விளங்கவில்லை. சொல்லப்போனால், அவர் வாழ்க்கை முழுக்க பேரிழப்புகளின் தொகுப்பாகத்தான் இருந்தது. ஒரே ஜென்மத்தில் இத்தனை துயரங்களை வெகுசிலரே சந்தித்திருப்பார்கள். முறைப்படி அரியாசனம் அவருக்கு சொந்தமாகியிருக்க வேண்டிய நிலையிலும், தனது ராஜ்ஜியத்தை இழந்து காட்டிற்குச் செல்கிறார். அங்கு மனைவியை இழந்து அவளை மீட்க போர் தொடுக்கிறார். அந்தப் போரில் ஒரு தேசத்தையே எரித்து மனைவியை மீட்டுவருகிறார். நாடு திரும்பியபின் தனது மக்களின் பழிச்சொற்களால் மீண்டும் மனைவியைப் பிரிகிறார். மென்மேலும் துயரங்கள்! அவருக்குப் பிரியமான அரசியோ, தன் பிள்ளைகளை காட்டில் பெற்றெடுக்கிறாள். மேலும் துயர்சேர்க்கும் விதமாக, அறியாமல் தன் பிள்ளைகளையே எதிர்த்து சண்டையிடுகிறார். பிறகு அவர் வாழ்க்கையில் அவர் நேசித்த ஒரே பெண்ணான சீதை, காட்டில் உயிர்நீக்கிறாள். இது தொடர் துயர்களின் கதை. அவர் வாழ்க்கையே மிகப்பெரிய தோல்வியைப் போலத் தெரியும். எனினும் அவரை நாம் மதித்துப் போற்றுகிறோம் என்றால், தோல்விகளை சந்தித்தபோதும், அவர் பாங்குடனும், கண்ணியத்துடனும், வீரத்துடனும், உறுதியுடனும் வாழ்க்கையை வாழ்ந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நவீன கண்ணோட்டத்துடன் இந்தக் கதையை நாம் பலவிதங்களில் விமர்சிக்க முடியும். சீதையை ராமர் நடத்திய விதம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி எனலாம், அல்லது வானரங்களாக சிலர் சித்தரிக்கப்பட்ட விதத்தை இழிவுபடுத்தும் இனப்பாகுபாடு எனலாம். கடந்தகாலத்தைச் சேர்ந்த எந்தவொரு மனிதரையும் எடுத்துக்கொண்டு நாம் பகுத்தாய்வு செய்வது மிகச்சுலபம். கிருஷ்ணராக இருந்தாலும், இயேசு அல்லது புத்தராக இருந்தாலும், தற்கால மனப்பான்மையின் கண்ணாடி வழியாகப் பார்த்து அவர்களிடம் குறைகள் கண்டறிவது சுலபம். ஆனால் இப்படி நம் சொற்ப கருத்துகளைக் கூறி அவர்களைப் புறந்தள்ளும்முன், மனிதகுலத்திற்கு போற்றிக் கொண்டாட மகான்கள் தேவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த மகான்களின் உருவகங்கள், பகுத்தாய்வில் அவர்களிடம் தென்படக்கூடிய குறைகளையும் தாண்டி, பல நூற்றாண்டுகளாக மக்களுக்கு அத்தியாவசியமான ஊக்கத்தை வழங்கியுள்ளன.

இன்றைய இந்தியாவிற்கு ராமர் எவ்விதத்தில் பொருந்துகிறார்.

ராமர் நமக்கு நாயகனாக விளங்குவது அவர் முழுநிறைவான வாழ்க்கை வாழ்ந்தார் என்பதால் அல்ல, குறிப்பிடத்தக்க விதத்தில் வாழ்ந்தார் என்பதால்தான்

ராமரை தனித்துவமானவராகச் செய்வது என்னவென்று பார்ப்போம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் வேறுபல பகுதிகளின் ஆட்சியாளர்கள் வெறும் ஆக்கரமிப்பாளர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் இருந்த காலகட்டத்தில், ராமர் அசாத்தியமான மனிதம், தியாகம் மற்றும் நீதியின் உருவமாகத் திகழ்ந்தார். வெளி வாழ்க்கையில் ஜெயித்ததற்கு அவர் போற்றப்படவில்லை, வாழ்க்கையின் இடர்கள் அவரை அசைக்காதபடி உள்நிலையில் ஜெயித்ததற்கு அவர் போற்றப்படுகிறார். ராவணனைக் கொன்றபோதும் அவர் பெருமைப்படவில்லை. சக்திவாய்ந்த ராவணன் சரிந்துவிழுந்தபோது, அவன் உடலருகில் சென்று தான் செய்யநேர்ந்த காரியத்திற்கு வருத்தப்பட்டார். அவர் வாழ்வின் சவால்கள் அனைத்திலும், அவர் தனது சமநிலையை இழக்கவில்லை, கசப்பையோ பழிதீர்க்கும் உணர்வையோ வளர்க்கவில்லை. சூதுவாதும் யதார்த்தமும் பாராமல், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாது இருப்பதில் கருத்தாக இருந்தார். சமநிலையான ஒரு மனிதராக, நேர்மை மற்றும் தியாகத்தின் உருவமாக, தனது பிரஜைகளுக்காக தன் சந்தோஷத்தையும் விருப்பத்துடன் விட்டுக்கொடுத்து அவர்களுக்கான உதாரணமாக வாழ்ந்துகாட்டினார். எல்லாவற்றுக்கும் மேலாக, முக்தி அல்லது விடுதலையைப் போற்றும் ஒரு கலாச்சாரத்தில், எதிர்மறை உணர்வுகள், சுயநலம் மற்றும் தீய எண்ணங்களில் இருந்து விடுதலையாவதை அவர் குறிக்கிறார். செயலளவில் கொந்தளிப்புகள் நிறைந்த வாழ்க்கையிலும், அது அவரது உள்தன்மையை ஆட்டிப்படைக்க அனுமதிக்காமல் வாழ்ந்தார்.

சுருக்கமாக சொல்வதென்றால், ராமர் நமக்கு நாயகனாக விளங்குவது அவர் முழுநிறைவான வாழ்க்கை வாழ்ந்தார் என்பதால் அல்ல, குறிப்பிடத்தக்க விதத்தில் வாழ்ந்தார் என்பதால்தான். அதனால்தான் அவர் மரியாதை புருஷராக கருதப்படுகிறார். ராமராஜ்ஜியம் நாம் அடையவிரும்பும் இலக்காக இருப்பது, அவர் நீதி மற்றும் நியாயத்தின் ஆட்சிக்கு உருவகமாக இருப்பதால்தான், அவர் சர்வாதிகாரம் அல்லது அதிகாரத்துவத்தை குறிப்பவரல்ல. இந்தியாவை இன்று நாம் அப்படிப்பட்ட தேசமாகத்தான் உருவாக்க விரும்புகிறோம், அதனால்தான் தொன்றுதொட்டு இன்றுவரை இந்த புராணம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

அயோத்தி தீர்ப்பு

..ஒரே மக்கள்சக்தியாக, ஒரே தேசமாக, ஒற்றை நோக்கத்துடன் முன்னேறிச் சென்றோம். அப்படி மீண்டும் ஒன்றுசேர்வதற்கான நேரம் வந்துவிட்டது.

ஆழமான உணர்ச்சிகள் சார்ந்த ஒரு விஷயத்தை, நிலப்பிரச்சனையாக நடத்தமுடியாது. அரசர் சாலமனின் நீதியைப்போல அப்படிப்பட்ட ஒரு தீர்வு நிறைவைத் தராது. அந்த விவேகமான அரசரிடம் இரு பெண்கள் ஒரு குழந்தையை எடுத்துவந்து, தனது குழந்தை என்று அவரவர் சொந்தம் கொண்டாடும்போது, இரண்டாக வெட்டி ஆளுக்கொரு பாகத்தை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார். உடனே உண்மையான தாய் அந்த இன்னொரு பெண்ணிடம், "குழந்தையை நீயே எடுத்துக்கொள். என் மகனை நான் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டேன்" என்கிறாள். ஏதோவொன்றை துண்டுதுண்டாக வெட்டுவது என்றுமே ஒரு தீர்வாக இருந்ததில்லை. தீர்வு என்றால், அது அர்த்தமுள்ளதாக, மரியாதைக்குரியதாக, அனைவருக்கும் வேலைசெய்வதாக இருக்கவேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இதனை நமக்கு வழங்கியுள்ளது. இந்த தேசத்தை நீண்டகாலமாக ஆட்டிப்படைத்துள்ள பிரச்சனைக்கு, தீர்மானமான, இருதரப்பினருக்கும் நியாயமான, திட்டவட்டமான தீர்வு வழங்கப்பட்டுள்ளது. இருசமூகத்தையும் சேர்ந்த பொறுப்பான உறுப்பினர்கள் இந்த தீர்வை வரவேற்றுள்ளனர். இது முன்னேறிச் செல்வதற்கான நேரம்.

இந்த தேசத்தின் ஒரு பிரிவினர் - நல்லவேளையாக அது சிறு பிரிவாக இருக்கிறது - இவர்கள் ஒவ்வொரு தீர்விலும் பிரச்சனைகள் கண்டறியப் பார்க்கின்றனர். ஆனால் போதும்போதும் என்ற அளவு நாம் இந்த மனப்பான்மையை பார்த்துவிட்டோம். இது ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வுகள் கண்டறியும் நேரம். பிரித்தாள முற்பட்ட ஆங்கிலேயர்களின் அயராத முயற்சிகளையும் தாண்டி, 1857ல் இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்காக ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றுசேர்ந்ததை நாம் மறவாதிருக்க வேண்டும். நம்மைப் பிரிப்பதன்மூலம் பலவீனமாக்கும் அவர்களின் திட்டம் நம்மை அடிமைப்படுத்த நாம் அனுமதிக்கவில்லை. நமக்கான விதியை நாமே எழுத முடிவுசெய்தோம். சுதந்திரப் போராட்டத்தின்போது நாம் ஒன்றுகூடினோம், ஒரே மக்கள்சக்தியாக, ஒரே தேசமாக, ஒற்றை நோக்கத்துடன் முன்னேறிச் சென்றோம். அப்படி மீண்டும் ஒன்றுசேர்வதற்கான நேரம் வந்துவிட்டது.

 

பொறுப்பை ஏற்று, முன்னோக்கி நகர்தல்

ஒரு சரித்திரம் பற்றிய விமர்சனங்களில் சிக்கிப்போகாமல், பாலங்கள் அமைத்து முன்னேறிச் செல்வதற்கான நேரமிது.

சரித்திரம் ஏற்படுத்திய காயங்களை மீண்டும் திறக்காமல் இருப்போம். யுகயுகமாக வெடித்த கொந்தளிப்பையும் சண்டையையும் மறுசுழற்சி செய்யாமல், வன்முறை மற்றும் பழிதீர்ப்பின் கதைகளைக் கூறி அவற்றை மீண்டும் தூண்டாமல் இருப்போம். எஞ்சிய வலி பூரணமாக குணமாகட்டும். ஹிந்து சமுதாயத்தினர், எவர்மீதும் தீய எண்ணமும் காழ்ப்பும் சுமக்காத ஒரு மாமனிதரின் பாரம்பரியத்தை பாதுகாக்கவே தாங்கள் பாடுபடுகின்றனர் என்பதை நினைவில்நிறுத்தி, வலியில் இருப்போருக்கு உதவிக்கரம் நீட்டி ஆறுதல்செய்யும் நேரமிது. ராமரின் பணிவை நினைவில்கொண்டு, அவர்கள் பாங்குடனும் நன்றியுடனும் தலைவணங்கும் நேரமிது. தேசத்தின் இஸ்லாமிய சமுதாயத்தினரும், இந்த பூமி முழுவதும் வழிபாட்டிற்கான இடம்தான் என்றுகூறும் பாரம்பரியத்தின் அறங்காவலர்கள் தாங்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியம். அனைத்தையும் இணைத்துக்கொள்ளும் நோக்கத்தை இதற்குமேல் தெளிவாகக்கூறும் கூற்று இருக்கமுடியாது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு முக்கிய மைல்கல். இதற்கு அர்த்தம், நம் குழந்தைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டுச்செல்லாமல், நம் பிரச்சனைகளுக்கு நாமே பொறுப்பேற்கிறோம் என்பதுதான். இந்த தேசத்தைச் சேர்ந்த வருங்கால சந்ததியினருக்கு அவர்களுக்கென தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் இருக்கும், ஆனால் காலங்காலமாக தொடரக்கூடிய ஒரு பிரச்சனையை நாம் அவர்கள்மீது திணிக்காமல் இருப்போம். நம் கடந்தகாலத்தால் இனியும் வேதனைப்படாமல் இருப்போமாக. மடிந்துபுதைந்த ஒரு சரித்திரம் பற்றிய விமர்சனங்களில் சிக்கிப்போகாமல், பாலங்கள் அமைத்து முன்னேறிச் செல்வதற்கான நேரமிது.

ஆசிரியர் குறிப்பு: இந்தக் கட்டுரை முதலில் Open Magazineல் வெளியானது.