2020 ஐ தொலைநோக்கு மற்றும் தெளிவின் ஆண்டாக மாற்ற இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்
2020க்குள் நுழைவதற்கு தயாராகிவிட்டீர்களா? புதிய சவால்களைச் சமாளிக்கவும், புதிய வாய்ப்புகளை கண்டடைந்திடவும் தயாரா? சத்குரு வழங்கும் இந்த 5 கருவிகள் 2020ஐ உள்நிலைத் தெளிவுடன் அணுகுவதை உறுதிசெய்யும்!

#1 உங்களை ஒரு அற்புதமான மனிதனாக மாற்றும் மூன்று விஷயங்களைத் தேர்வு செய்யுங்கள்
சத்குரு: எல்லோரும் ஒரு அற்புதமான மனிதனாக மாற முயற்சி செய்யலாம். அதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு நீங்கள் செய்யக்கூடிய எளிய செயல்முறை உள்ளது. ஒரு மனிதனை ஒரு அற்புதமான மனிதனாக ஆக்குவதாக நீங்கள் நினைக்கும் மூன்று விஷயங்களை எழுதி, அவற்றை உங்கள் வாழ்க்கையில் ஒரு யதார்த்தமாக்குங்கள்.வேறொருவர் விரும்புவதை நீங்கள் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், உயர்ந்தது என்று நீங்கள் நினைப்பதைச் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பியதைச் செய்யாவிட்டால், இது வீணான வாழ்க்கையாக மாறும். நீங்கள் நினைக்கும் அந்த மூன்று விஷயங்கள் ஒரு மனிதனை உண்மையிலேயே அற்புதமான மனிதனாக மாற்றும், அவற்றை ஒரு யதார்த்தமாக்கும்.
#2 அறிமுகமில்லாத மூன்று நபர்களைப் பார்த்து புன்னகை செய்யுங்கள்
உங்களைச் சுற்றி வெளிச்சத்தைக் கொண்டுவர, தெருவில் குறைந்தது மூன்று அறிமுகமில்லாதவர்களைப் பார்த்து புன்னகை செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அவர்களுக்கு ஒரு பெரிய புன்னகையை மட்டும் கொடுங்கள். தயவுசெய்து, இதைச் செய்து உங்களைச் சுற்றியுள்ள உலகிற்கு சிறிது வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள்.
Subscribe
#3 நீங்கள் இறக்கும்போது மக்கள் உங்கள் இழப்பை உணரும்படி வாழுங்கள்
உங்களது எல்லைகளையும், தவறான அபிப்ராயங்களையும், உங்களைச் சுற்றியுள்ளவர்களை காயப்படுத்தும் முட்டாள்தனங்களையும் ஒட்டுமொத்தமாக, உடனடியாக உங்களால் விடமுடியாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அவற்றுள் ஒன்றை விடுவதன் மூலம் அதை நீங்கள் தொடங்க முடியும். தயவு செய்து சிறிதளவு மாற்றம் நிகழச் செய்யுங்கள். அதனால், நீங்கள் வாழும் காலத்தில் உங்களுடன் வாழ்ந்திருப்பதை மக்கள் விரும்புவதுடன், நீங்கள் இறந்தபிறகு உங்கள் இழப்பை உணர்வார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் நீங்கள் வாழவேண்டும். நீங்கள் வாழ்ந்திருக்கும்போது, மக்கள் உங்கள் இருப்பினால் சந்தோஷப்பட வேண்டும். நீங்கள் இறக்கும்பொழுது, அதற்காக வருந்தவேண்டும்.
#4 தினசரி இரவு, உங்கள் மரணப்படுக்கையில் அமர்ந்திருங்கள்
நம் அனைவருக்கும் ஒரே வேகத்தில் நேரம் நழுவி செல்கிறது. “நான் திரைப்படத்திற்குச் சென்றேன்”, “நான் கடைக்குச் சென்றேன்”, “நான் விடுமுறைக்குச் சென்றேன்” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் உடலைப் பொருத்தவரை அது நேராக மயானத்திற்குச் செல்கிறது. ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு சுவாசத்திலும், உங்கள் உடல் மயான பூமிக்கு நெருக்கமாகி வருகிறது.
இது சித்தப்பிரமை அடைவது பற்றியது அல்ல. நீங்கள் இறக்கக்கூடியவர் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், இந்த வாழ்க்கையிலிருந்து சிறந்ததை நீங்கள் செய்ய விரும்புவீர்கள். நீங்கள் இறக்கக்கூடியவர் என்பதை நீங்கள் மறந்துவிட்டால், எதையும் குறிக்காத அபத்தமான செயல்களைச் செய்யத் தொடங்குவீர்கள்.
ஒவ்வொரு இரவும், இந்த எளிய பயிற்சியை செய்யுங்கள். நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன், உங்கள் படுக்கையில் உட்கார்ந்து இது உங்கள் மரணப்படுக்கை என்று நினைத்துப் பாருங்கள் - நீங்கள் வாழ இன்னும் ஒரு நிமிடம் இருக்கிறது. இன்று நீங்கள் செய்திருப்பது பயனுள்ளதா என்பதை திரும்பிப் பாருங்கள். "இன்று, இந்த இருபத்தி நான்கு மணிநேரங்களையும் நான் கையாண்ட விதம், இப்போது நான் இறந்து கொண்டிருப்பதால் பயனுள்ளதா" நீங்கள் இதைச் செய்தால், நீங்கள் ஒரு பயனுள்ள வாழ்க்கையை வாழ்வீர்கள்.
#5 தளர்வாக இருங்கள், படு சீரியஸாக இருக்காதீர்கள்
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒருமுறை சொன்னார், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது என்று நீங்கள் நினைக்கத் தொடங்கினால், நீங்கள் விடுமுறை எடுக்க வேண்டும். உங்களது சீரியஸ் தன்மையிலிருந்து நீங்கள் விடுமுறை எடுக்கவேண்டும். உங்கள் சுய முக்கியத்துவத்தின் காரணத்தினால்தான் சீரியஸ் தன்மை எழுகிறது.
ஆனால் இதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பரந்த இருப்பில், நீங்கள் ஒரு தூசு போன்றவர். இந்தப் பரந்த பிரபஞ்சத்தில், இந்த சூரிய மண்டலம் ஒரு சிறு புள்ளி போன்றது. நாளைக்கே இந்த சூரிய மண்டலம் மறைந்துவிட்டால், பிரபஞ்சத்தில் அது கவனத்திற்கே வராது. சூரிய மண்டலத்தின் இந்த சிறு புள்ளியில், பூமிக்கிரகம் அதைவிட பல மடங்கு சிறிய புள்ளி. பூமிக்கிரகத்தின், நீங்கள் வாழும் நகரம் என்பது அதைக் காட்டிலும் சிறிய புள்ளி. அதில்தான் நீங்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருக்கிறீர்கள்! சற்று சிந்தித்துப் பாருங்கள், இது கண்ணோட்டத்தில் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனை.
உங்கள் வாழ்வை சிறிது தளர்த்திக்கொள்ளுங்கள். சற்றே அதிகம் சிரியுங்கள். உங்களைச் சுற்றியுள்ள மக்களுடன் ஈடுபாடுகொள்ளுங்கள். அவ்வளவு முக்கியமில்லை என்று நீங்கள் நினைக்கும் விஷயங்களைச் செய்யுங்கள். உங்களுக்கு மிகவும் முக்கியமாக இருக்கும் விஷயங்களை மட்டும் செய்யாதீர்கள். எளிமையான விஷயங்களைச் செய்யுங்கள். எளிமையான விஷயங்களை நீங்கள் செய்வது மிகவும் முக்கியமானது.
முழு உலகமும் இயற்கையாகவே ஆன்மீகமாக இல்லாததற்கு ஒரு காரணம் என்னவென்றால், அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி அதிக முக்கியத்துவம் கொண்டுள்ளனர். அவர்கள் இன்னும் கொஞ்சம் தளர்வாக இருக்க முடிந்தால், அவர்கள் வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியுடன் பார்க்க முடிந்தால், அவர்களுக்குள் இருக்கும் நகைச்சுவையை அவர்கள் காண முடிந்தால், அவர்கள் தங்களையும், அவர்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையையும் இன்னும் கொஞ்சம் தெளிவாகக் காண முடியும். உங்களைப் பற்றியும் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்தால், அது இயற்கையாகவே உலகில் நீங்கள் செய்ய விரும்பும் எந்தவொரு விஷயத்திலும் உங்களை அதிக திறன் கொண்டதாக மாற்றும்.