நீங்கள் சிவப்பு, கருப்பு மற்றும் பச்சை கொள்ளுப் பயறுகளைப் பற்றி அறிந்திருக்கலாம். ஆனால், உணவுகள் பற்றி மிகவும் ஆர்வமிக்கவர்கள் கூட சில நேரங்களில் கொள்ளு சாப்பிடுவதை தவறவிடுகிறார்கள். அவ்வளவாக பிரபலமில்லாத இந்த எளிய தானிய வகையின் ஆங்கிலப்பெயர், கால்நடைகளுக்கு பிரதான உணவாகப் பயன்படுத்துவதால் 'ஹார்ஸ் கிராம்' என்று குதிரையின் பெயரைத் தாங்கி நிற்கிறது. இதன் ஆங்கிலப் பெயர் ஆர்வத்தைக் குறைப்பதாக நினைத்தால், தமிழில் கொள்ளு, தெலுங்கில் உலவலு மற்றும் ஹிந்தியில் குல்தி என்று வேறு பிற மொழிகளில் அழைக்கலாம்.

பண்டைய காலங்களிலிருந்து இந்தியாவில் பரவலாக பயிரிடப்பட்டு உணவாகக் கொள்ளப்படும் ஒரு ஆற்றல் தரும் பயறுவகை கொள்ளு (Macrotyloma uniflorum). இது தென்கிழக்கு ஆசியா மற்றும் வெப்பமண்டல ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளது. அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி இந்த தாவர இனத்தை எதிர்காலத்திற்கான தகுதிவாய்ந்த உணவு ஆதாரமாக அடையாளம் கண்டுள்ளது. அதன் அபாரமான ஊட்டச்சத்து, வறட்சியை தாங்கும் தன்மை மற்றும் கடினமான சூழலில் வாழும் தன்மை போன்றவைக்கு நமது நன்றிகள்!

கொள்ளுப் பயறு உலகிலுள்ள பயறு வகைகளில் அதிக புரதச்சத்துள்ள ஒன்றாக உள்ளது. இது அதிக சக்தியைக் கொண்டது. அதனால்தான் பந்தய குதிரைகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. ஒரு முக்கியமான மற்றும் அதிக மக்கள் பயன்படுத்திக்கொள்ளாத இந்த வெப்பமண்டல தாவரம், பெரும்பாலும் வறண்ட விவசாய நிலங்களில் பயிரிடப்படுகிறது. மேலும், இப்போதெல்லாம் அதிகம் அறியப்படாமல் இருக்கிறது. ஆனால், அதன் சிறப்பை உலகறியச் செய்யத் தேவையுள்ளது! அதற்கான காரணங்கள் இங்கே!

கொள்ளு (Horse Gram in Tamil): பிரமாதமான ஒரு உணவு

குதிரைக் கொள்ளு என்று அழைப்பது ஒருவேளை விரும்பப்படாமல் இருக்கலாம், ஆனால் அதன் குணங்கள் மறுக்க இயலாத வகையில் அற்புதமானவை.

 • இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் புரதம் அதிகம். உண்மையில், பருப்பு வகைகளில் மிக அதிகமான கால்சியம் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதாகவும், சைவ உணவுகளில் புரதச்சத்து மிகுந்த ஒன்றாகவும் கொள்ளு உள்ளது.
 • குறைவான கொழுப்புச் சத்து மற்றும் அதிக கார்போஹைட்ரேட் கொண்டது.
 • லிப்பிட் மற்றும் சோடியம் உள்ளடக்கம் குறைவாக உள்ளது.

மேலும், அதன் மெதுவாக ஜீரணமாகக்கூடிய ஸ்டார்ச், நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது. இப்போது இது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறதா? சரி, இது ஆரம்பம்தான்! இன்னும் இருக்கிறது, கேளுங்கள்!

Click Image to Enlarge
Embed this infographic

Infographic - The Benefits of Horsegram

கொள்ளு: உணவா அல்லது மருந்தா?

சமைக்காத கொள்ளுப் பயரில், முக்கிய ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்களான பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் புரதங்கள் அதிகம் உள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இதனால் உங்கள் உடலை இளமையாகவும், துடிப்பாகவும் வைத்திருக்க முடியும்! மேலும், கார்போஹைட்ரேட் செரிமானத்தை குறைப்பதன் மூலமும், இன்சுலினை எதிர்க்கும் திறனைக் குறைப்பதன் மூலமும், பதப்படுத்தப்படாத கொள்ளுப் பயறுகள், உணவு சாப்பிட்ட பின் உள்ள உயர் இரத்த சர்க்கரையை குறைக்கும் திறனைக் கொண்டுள்ளன. இதனை இந்திய வேதியியல் தொழிற்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த தன்மைகளால் நீரிழிவு நோய்க்கு ஏற்ற இன்னுமொரு நல்ல உணவாக கொள்ளு இருக்கிறது!

கொள்ளு தானியத்தின் (Horse Gram in Tamil) ஆரோக்கிய நன்மைகள் எண்ணற்றவை! ஏதேனும் ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சொல்லுங்கள், அதற்கெல்லாம் “கொள்ளு-சக்தி” வேலை செய்யும்! ஆஸ்துமா, சுவாசக்குழாய் அலர்ஜி, லுயுக்கோடெர்மா, சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரக கற்கள் மற்றும் இதய நோய்களுக்கான அதன் உபயோகத்தை நம் பாரம்பரிய மருத்துவ நூல்கள் விவரிக்கின்றன. மஞ்சள் காமாலை அல்லது உடலில் நீர்த்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுர்வேதத்தில் கொள்ளு பரிந்துரைக்கப்படுகிறது. வாத நோய், புழுக்கள், கண்களில் ஏற்படும் அலர்ஜி மற்றும் மூல நோய்க்கு கொள்ளு மிகவும் திறன்மிக்க வகையில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

கொள்ளு ஆஸ்ட்ரிஞ்சண்ட் மற்றும் டையூரிடிக் (astringent and diuretic) பண்புகளைக் கொண்டுள்ளது. கபத்தை வெளியேற்றுதல், காய்ச்சலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் இது பலன் தருகிறது. சில ஆய்வுகளின்படி, கொள்ளின் லிப்பிட் சாறுகள் வயிற்றில் உள்ள அல்சர் போன்ற புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் பலன் தருகிறது, மேலும், இந்த அற்புத பயறு வகைகள் வாயுத்தன்மையைக் குறைத்து பல்வேறு மாதவிடாய் சிக்கல்களைக் கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எண்ணற்ற பலன்கள், இல்லையா?

இன்னும் இருக்கிறது!

உணவில் நிறைய கொள்ளை சேர்த்துக்கொள்வது உண்மையில் உடல் பருமனை நிர்வகிக்க உதவும். ஏனெனில், இது கொழுப்பு திசுக்களை தாக்கும் திறனைக் கொண்டுள்ளது. இதற்கு காரணம், கொள்ளில் பினோல் (phenol) எனப்படும் கூறுகள் இருக்கிறது, அதற்கு நமது நன்றிகள்!

உங்கள் உடலமைப்பில் வெப்பத்தையும் சக்தியையும் உருவாக்கும் திறனும் கொள்ளிற்கு உண்டு, எனவே இது குளிர்கால நாட்களில் உங்களை சூடாக வைத்திருக்கும்.

கொள்ளு இப்போது உங்களது தோழனாக மாறத் தொடங்கும் என்று நம்புகிறோம். இந்த பூமிக்கும் கொள்ளு ஒரு நல்ல தோழனாவது எப்படி என்பதை, அதன் பசுமை சக்தியின் சில உண்மைகளுடன் இங்கே பார்ப்போம்!

வேளாண்மையில் கொள்ளுப் பயிரின் பங்களிப்பு

மண் அரிப்பைத் தடுக்கிறது: இந்த செடி மிக வேகமாக வளர்ந்து, மிகக் குறுகிய காலத்தில் மிகவும் அடர்த்தியாகிறது. இதனால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. குறைவான கனிம வளம் கொண்ட மற்றும் சரிவான நிலப்பகுதிக்கும் ஏற்ற ஒரு சிறந்த தாவரம் கொள்ளு.

வறட்சியை தாங்குதல்: கொள்ளு குறிப்பிடத்தக்க வகையில் வறட்சியை தாக்குப்பிடிக்கிறது. இது விவசாயிக்கு அதிக வேலை கொடுக்காமல் வளரக்கூடிய, நீண்ட கால வறட்சியைத் தாங்கும் திறனைக் கொண்ட ஒரு தாவரம். குறைந்த நீர்ப்பாசனம் உள்ள வறண்ட நிலங்களில், எந்தவித தொழிற்நுட்பங்களும் இல்லாத சூழலில் கொள்ளு பெரிதும் பரிந்துரைக்கப்படும் ஒரு பயிர். பிற பயிரினங்கள் வளராத குறைந்த விளைச்சல் உள்ள பகுதிகளிலும் இது வளர்க்கப்படுகிறது. மண்ணை மீட்டு வளப்படுத்தும் நோக்கத்திற்கு இது ஒரு சிறந்த பிரதிநிதியாகிறது.

இந்த காரணிகள் அனைத்தும் இணைந்து ஊட்டமிக்க உணவு, கால்நடைத் தீவனம் மற்றும் உரம் ஆகியவற்றிற்கான, செலவு குறைந்த, நல்லதொரு ஆதாரமாக கொள்ளு அமைகிறது.

நிழலடிப் பயிர்: ஏற்கனவே நாம் சொன்னதைப் போல கொள்ளு ஒரு பிரபலமில்லாத ஒரு தானிய வகையாக உள்ளது. இது தென்னிந்தியாவில் உள்ள தோட்டங்களில் ஒரு நல்ல நிழலடிப் பயிராக செயல்படுகிறது. இதற்கு மற்ற தாவரங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலான சூரிய ஒளி தேவைப்படுவதால், அது மரங்களின் அடியில் சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கும். மேலும், அது மடியும்போது மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.

தீவனம்: விலங்குகளுக்கு உயர்தரமான தீவனத்தை கொள்ளு வழங்குகிறது. 30-40% ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கும் அதன் தண்டுகள் மற்றும் தழைகள் விலங்குகளின் தீவனமாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கொள்ளு எந்த சாத்தியத்தையும் வீணாக்க விடுவதில்லை. எனவே, கொள்ளு உங்களையும், அன்னை பூமியையும், விலங்குகளையும் பேணிக் காக்கிறது. இந்த சூப்பர் ஹீரோ உங்கள் இதயத்தில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார் என நம்புகிறோம், விரைவில் உங்கள் சமையலறையில் இடம்பிடிப்பார் என நினைக்கிறோம்!

கொள்ளு சமையல் குறிப்புகள்

இதை எவ்வாறு உட்கொள்வது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இங்கே இரண்டு குறிப்புகள் உள்ளன. நீங்கள் சத்குருவின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி இவற்றை முளைகட்ட வைத்து உண்ணலாம் அல்லது சூடான உணவை விரும்புவதாக இருந்தால் சுவையான சூப்பை செய்து பருகலாம்.

சத்குரு: பல ஐரோப்பியர்களின் வயிறு கொள்ளினை ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம். எனவே அதை முளைகட்டி உண்பது நல்லது, இது எளிதில் ஜீரணமாகிறது. கொள்ளினை ஒரு வெள்ளை துணியில் வைத்து, துணியை சுமார் ஆறு முதல் எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அதை மூடி வைக்கவும். சுமார் மூன்று நாட்களில், விதைகள் முளைக்கும். முளையின் அளவு விதையிலிருந்து அரை இஞ்ச் இருந்தால், நீங்கள் அதை அப்படியே பச்சையாக சாப்பிடலாம். இதை நன்கு மென்று சாப்பிட தேவையிருக்கும், மேலும் இது உடலுக்கு மிகவும் நல்லது.

கொள்ளு உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். நீங்கள் அதிக வெப்பத்தை உணர்ந்தால், உடலமைப்பை குளிர்விக்கும் முளைகட்டிய பச்சைப் பயறுகளைச் சாப்பிடுவதன் மூலம் அதை சமப்படுத்த வேண்டும்.

கொள்ளு சூப்

தேவையான பொருட்கள்
கொள்ளு : 1/2 கப்
புளி பேஸ்ட் : 2, 3 டீஸ்பூன்
மிளகு : 1 ஸ்பூன்
சீரகம் : 1 ஸ்பூன்
கடுகு : 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை : 1 இணுக்கு
கொத்தமல்லி தழை : சிறிதளவு
உப்பு : சுவைக்கேற்ப
எண்ணெய் : 2 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை

 • கொள்ளுப் பயறை இரவு முழுக்க ஊறவைத்து, மிருதுவாக ஆகும்வரை வேக வைக்கவும்.
 • தண்ணீரை வடிகட்டி, பின்னர் பயன்படுத்துவதற்காக அதனை எடுத்து வைக்கவும். (தண்ணீரின் நிறம் சாக்லேட் நிறத்தில் இருக்கும்)
 • கடுகு, சீரகம் மற்றும் மிளகை வறுத்து பொடியாக அரைக்கவும்.
 • வேகவைத்தக் கொள்ளில் பாதியை நன்கு பிசைந்துவிடவும்.
 • ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பிலையை தாளிக்கவும்.
 • அதில் புளி விழுது, வடிகட்டிய கொள்ளு தண்ணீர், வறுத்து பொடித்த தூள், பிசையப்பட்ட கொள்ளு மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
 • போதுமான தண்ணீரைச் சேர்த்து, கிரேவி மிகவும் கெட்டியாக இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • மீதமுள்ள கொள்ளுப் பயறுகளைச் சேர்த்து கலக்கவும்.
 • அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
 • இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை கிரேவி மீது தூவவும்.
 • சப்பாத்தி மற்றும் சமைத்த சாதத்துடன் பரிமாறி, உண்டு மகிழுங்கள்!

நீங்கள் கொள்ளுப் பயறை எவ்வாறு அறிந்து வைத்துள்ளீர்கள், அதனை நீங்கள் உணவில் இணைத்துக்கொள்ள எப்படி முயன்றீர்கள் என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள்!

ஆசிரியர் குறிப்பு: ஆரோக்கியமாக சாப்பிடுவது குறித்த மேலும் அதிக உதவிக்குறிப்புகளை நீங்கள் தேடுகிறீர்களானால், மிகவும் பிரபலமான எங்களது இணைய புத்தகமான Food Bodyஐ படித்துப் பாருங்கள். இதற்காக நீங்கள் விரும்பிய தொகையை செலுத்தலாம். (இலவசமாக பெற ‘0’ என்று பதிவிடவும்)

Image courtesy: Kollu soup by creativelycarvedlife