கேள்வி: சத்குரு, ஆன்மீகப் பாதையும் யோகப் பயிற்சிகளும் இரு வெவ்வேறு பாதைகளா அல்லது ஒன்றா? மனிதர்கள் உச்சபட்ச சாத்தியத்தை ஆன்மீக பயிற்சிகள் மூலமாக அடைந்துள்ளனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதேநேரத்தில் எந்தப் பயிற்சிகளும் இல்லாமல் மனிதர்கள் அந்த நிலையை அடைந்திருப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இது பற்றி விளக்கவும்.

சத்குரு:

உங்களின் உச்சபட்ச இயல்புக்கு எது உங்களை அனுமதிக்கிறதோ அதுதான் யோகா.
யோகப்பயிற்சி இல்லாமலே சிலர் உச்ச நிலையை அடைந்திருக்கிறார்களா? அப்படி எதுவும் கிடையாது. நீங்கள் இந்த யோக வகுப்பிற்கு வருவதற்கு முன்பே யோகா செய்து கொண்டுதான் இருந்தீர்கள், முறையில்லாமல் (சிரிக்கிறார்). இந்த வகுப்பிற்கு வருவதற்கு முன்பே நீங்கள் சுவாசித்துக் கொண்டிருந்தீர்கள், இல்லையா? அது ஒருவிதமான யோகா. நீங்கள் ஒருவிதமாக சுவாசித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தபோது இப்படி சுவாசித்துக் கொண்டிருந்தீர்கள் (மெதுவாக செய்து காண்பிக்கிறார்); நீங்கள் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும்போது அப்படி சுவாசித்து கொண்டிருந்தீர்கள் (வேகமாக செய்து காண்பிக்கிறார்). கோபமாக இருந்தபோது இப்படி சுவாசித்துக் கொண்டிருந்தீர்கள் (செய்து காண்பிக்கிறார்). ஆக பலவிதமான யோகா நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள், இல்லையா? எனவே அது அதற்கேற்ற பலன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இப்போது நீங்கள் அதே யோகாவை முறையுடன் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். யாராவது மந்திரங்கள் உச்சரித்தாலோ அல்லது கோவிலுக்குப் போனாலோ அவர்கள் யோகா செய்யவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்களும் யோகா செய்தார்கள். ஒருவேளை அவர்கள் உங்களைப் போல முயற்சிக்கவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யோகா என்னும் வார்த்தை ஒரு குறிப்பிட்ட பயிற்சியைக் குறிப்பிடுவதில்லை, உடலை வில்லாக வளைப்பதைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை, மூச்சை நிறுத்தி வைப்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லை, உங்கள் தலையால் நிற்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

உங்களின் உச்சபட்ச இயல்புக்கு எது உங்களை அனுமதிக்கிறதோ அதுதான் யோகா. எனவே என்னென்ன விதமான யோகாக்கள் நீங்கள் செய்ய முடியும்? அடிப்படையாக நீங்கள் 4 விதமான யோகா மட்டுமே செய்ய முடியும். உடலைப் பயன்படுத்தி ஒருவிதமான யோகா செய்யமுடியும். மனதைப் பயன்படுத்தி இன்னொரு விதமான யோகா செய்யமுடியும். உணர்ச்சியைப் பயன்படுத்தி ஒருவிதமான யோகா செய்யமுடியும். சக்திநிலையைப் பயன்படுத்தி வேறுவிதமான யோகா செய்யமுடியும். இந்த 4 விதமான யோகாக்கள்தான் நீங்கள் செய்ய முடியும். மற்றவையெல்லாம் கற்பனைதான், இல்லையா? ‘இல்லை, இல்லை, நான் கடவுளை நம்புகிறேன்’, அது அருமைதான். உங்கள் கடவுள் நம்பிக்கை உங்களுக்குள் நடக்கிறது. அது நீங்கள் செய்வது, உங்களுக்கு வெளியில் நடக்கவில்லை, இல்லையா?

நேற்று நீங்கள் குறிப்பிட்ட பங்குகள் வாங்கினீர்கள், இன்று அந்தப் பங்குகளின் விலை ஏற வேண்டுமென்று கடவுளை வழிபடுகிறீர்கள், அவை அப்படி நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் வேறு காரணங்களினால் நடந்திருக்கலாம். உங்கள் பிரார்த்தனையால் அது நடக்கவில்லை. ஆனால் பிரார்த்தனை கைகொடுக்கும் என்று எப்போதும் நம்பினீர்கள், இல்லையா? சில நேரங்களில் அப்படி நடந்தது, ஆனால் அது வேறு பல காரணங்களை முன்னிட்டு நடந்தது.

நீங்கள் எது செய்தாலும் அடிப்படை நோக்கம் ஆனந்தம்தான், இல்லையா?
ஆனால் உங்கள் பக்தி உங்களுக்குள்தான் இருக்கிறது, இல்லையா? பக்தி என்பது உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி நீங்கள் பெறும் அதிகபட்ச இன்பம். எனவே நீங்கள் அதை அனுபவித்தீர்கள். அந்த மகிழ்ச்சியில் வேறு ஏதாவது நடந்திருக்கலாம், நிச்சயமாக அது நடக்கும். இதுதான் பக்தி யோகா. நீங்கள் எப்படி அவர்கள் யோகா செய்யவில்லை என்று கூறுகிறீர்கள்? அவர்கள் பக்தி யோகா செய்து கொண்டிருந்தார்கள். சிலர் தங்கள் அறிவைப் பயன்படுத்தி வாழ்க்கையின் எல்லைகளை உடைத்தார்கள். அது ஞான யோகா. சிலர் உடல் செயலைக் கொண்டு வாழ்க்கையின் எல்லைகளை உடைத்தார்கள். இது கர்ம யோகா. சிலர் தங்கள் சக்தி நிலையில் மாற்றம் செய்து வாழ்க்கையின் எல்லைகளை உடைத்தார்கள். இது கிரியா யோகா. நீங்கள் கர்மா அல்லது கிரியா யோகா செய்யலாம். கர்மா என்பது வெளிப்புற செயல். உங்கள் உடல், மனம், உணர்ச்சியைப் பயன்படுத்தி நீங்கள் செய்யும் செயல் கர்மா எனப்படும். அடிப்படை உயிர்த்தன்மையின் செயல்முறைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் செயல் கிரியா எனப்படும் - இருவிதமான செயல்கள், கர்மா மற்றும் கிரியா.

வெளிப்புற செயல்கள் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு கர்ம யோகி ஆக முடியும். ஆனால் அது ஒரு நீண்ட செயல்முறை. லட்சம் செயல்கள் முயற்சித்தால் ஒன்று மட்டுமே சரியாக முடியும். அது முடியாது என்று நான் சொல்லவில்லை, முடியும். ஆனால் அது ஒரு நீண்ட செயல்முறை. அல்லது உங்கள் மனதை உபயோகித்து உங்கள் எல்லைகளின் ஓட்டை உடைக்கலாம். அது ஞான யோகா. உங்கள் உணர்ச்சியை உபயோகித்து நீங்கள் அதை செய்யலாம், அது பக்தி யோகா. மற்றது கிரியா யோகா. இந்த 4 மட்டுமே சாத்தியங்கள். இவைகள் உங்கள் காரின் 4 சக்கரங்கள் போல. உங்கள் கேள்வி குறிப்பாக பக்தியின் காரணமாக வந்தது, இல்லையா? ஒருவேளை உங்கள் உணர்ச்சிகள் நன்றாக இயங்குகின்றன. அதாவது உங்கள் காரின் ஒரு சக்கரம் நன்கு இயங்குகிறது. மற்ற 3 சக்கரங்கள் நகரவில்லை, அல்லது பழுதடைந்துள்ளது. இப்போது நீங்கள் காரை ஓட்ட முயற்சிக்கிறீர்கள். அது எவ்வளவு பெரிய நரகம் என்பது உங்களுக்கு தெரியும், இல்லையா? அப்படியும் ஒரு சக்கரம் மட்டுமே வைத்து ஓட்ட முயற்சித்தால் சில காலம் கழித்து காருக்கு சரியான இடம் பார்க்கிங் இடம்தான் (parking place) என்ற முடிவுக்கு வருவீர்கள், அதுதான் பெரும்பான்மையோருக்கு நடந்திருக்கிறது. 3 சக்கரங்கள் நகராமல் இருக்கும்போது, அதை பார்க்கிங் இடத்தில் நிறுத்திவிட்டாலே அது ஒரு பெரிய விஷயமாகத் தோன்றுகிறது, இல்லையா?

எனவே நீங்கள் இயல்பாகவே வாகனம் நிறுத்துமிடத்தைத்தான் வாழத் தேர்ந்தெடுப்பீர்கள். பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் இதுதானே உண்மையாக இருக்கிறது? அவர்கள் இளமையாக இருக்கும்போது எதையும் துடிப்போடு செய்ய முயற்சித்தார்கள். சில காலம் கழித்து குடும்பம் அவர்களுக்கு ஒரு சாத்தியமாக இருக்கவில்லை, குடும்பம் ஒரு வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிவிட்டது. எதுவும் மாறக்கூடாது, அதுதான் வாகனம் நிறுத்துமிடம், இல்லையா? வாகனம் நிறுத்துமிடம் ஒரு அற்புதமான இடம், ஏனெனில் பாதுகாப்பான இடம், நீங்கள் காரிலேயே இருந்து கொள்ளலாம். அங்கும்தான் காலை இரவாகிறது, இரவு மீண்டும் காலையாகிறது, பருவங்கள் மாறுகின்றன. காரிலேயே மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கலாம். கை விட்டுக் கூட கார் ஓட்டலாம். ஆனால் ஒன்றே ஒன்று, நீங்கள் எங்கும் போய் சேரமாட்டீர்கள் (சிரிக்கிறார்). அதைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையானால் வாகனம் நிறுத்துமிடம் உங்களுக்கு அருமையான, பாதுகாப்பான பகுதி. பெட்ரோல் மிச்சம், செலவில்லை, சூற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு விஷயம், நீங்கள் எங்கும் போய்ச் சேரமாட்டீர்கள், அவ்வளவுதான்.

ஆனால் காரில் ஏறியதன் நோக்கமே எங்காவது போய் சேரவேண்டும் என்பதுதானே, இல்லையா? நீங்கள் எது செய்தாலும் அடிப்படை நோக்கம் ஆனந்தம்தான், இல்லையா? படிப்பதானாலும் சரி, வேலைக்குப் போவதானாலும் சரி, திருமணம் செய்வதானாலும் சரி, குழந்தைகள் பெறுவதானாலும் சரி, அடிப்படை நோக்கம் ஆனந்தம்தான். ஆனால் அதைத் தவிர்த்து மற்றதெல்லாம் நடக்கிறது, இதுதான் வாகனம் நிறுத்துமிடம் என்பது. போய்ச் சேர வேண்டிய இடம் தவிர்த்து மற்றதெல்லாம் நடக்கிறது, இல்லையா? அந்த இடத்திற்கு போக வேண்டும் என்றுதான் இவ்வளவும் ஆரம்பித்தார்கள், ஆனால் அதைத் தவிர மற்றதெல்லாம் நடக்கிறது. சரி, ஒரு கதை கேட்கிறீர்களா?

அடுத்த பகுதியில்...

ஆன்மீகத்தில் நான்கு தன்மைகளும் ஒன்றிணைந்து ஒருவரிடம் செயல்பட வேண்டியதன் முக்கியத்தை உணர்த்தும் விதமாக ஒரு அழகான கதையை விவரிக்கிறார் சத்குரு.