நவிகா குமார்: இந்துக் கலாச்சாரத்தில் சில கோவில்களுக்குள் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 70 வருட காலமாகக் காத்திருந்து இப்போது 2016-ல்தான் பெண்களுக்கு சிக்னாபூர் சனி கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது. ஆனால், இப்போதும்கூட சபரிமலை கோவிலுக்குச் செல்ல அவர்களுக்கு அனுமதியில்லை. 10ல் இருந்து 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற பாகுபாட்டை எதிர்த்து இன்று நடந்துவரும் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

சத்குரு: இதுபற்றி ஊடகங்களில் நான் ஏற்கெனவே பலமுறை பல விதங்களில் பேசியிருக்கிறேன். இப்போது நீங்கள் மறுபடியும் இதுபற்றிக் கேட்கிறீர்கள். அதுமட்டுமல்ல இதுபற்றிய சர்ச்சைகள் மீண்டும் கிளம்பியுள்ளன. அதனால் மீண்டும் ஒருமுறை இதுபற்றி பார்ப்போம்.

ஒன்றை முதலில் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். இந்தக் கலாச்சாரத்தில் ஆண் தெய்வங்களுக்கான கோவில்களைவிட பெண் தெய்வங்களுக்கான கோவில்கள்தான் அதிகம் உள்ளன. அதுமட்டுமல்ல, இங்கு ஆண் தெய்வங்களைவிட பெண் தெய்வங்களைத்தான் மக்கள் அதிகம் வணங்குகிறார்கள். இதை புரிந்துகொள்ள வேண்டுமெனில், நம் ஒவ்வொரு கிராமத்திலும் பாருங்கள். தென்பகுதிகளில் அம்மன், மாரியம்மன் என்றும், வடக்குப் பகுதியில் பல தேவி ரூபங்களிலும் பெண்தெய்வங்களுக்கு கோவில்கள் உள்ளன. இப்படி ஆன்மீகத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் இடத்தில், குறிப்பிட்ட சில கோவில்களில் மட்டும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றால், அதற்கு முற்றிலும் வேறொரு காரணம் உள்ளது. சிக்னாபூர் சனி கோவில் பற்றி முன்பு சர்ச்சை எழுந்தபோது அதுபற்றி நான் விளக்கம் அளித்தேன். அச்சமயத்தில் உரிமைப் போராளிகள் பலரும் எனக்கு எதிராகத் திரும்பினர். எப்போதும் இதுபோன்ற வாய்ப்பிற்காக அவர்கள்தான் காத்திருப்பார்கள்...

சிக்னாபூர் சனி கோவில் போன்ற கோவில்கள் பிரத்யேகமாக செய்வினை, மாந்திரீகம் போன்ற செயல்களுக்காக உருவாக்கப்பட்டவை. அதுபோன்ற செயல்கள் நடைபெறும் இடங்களில் பெண்கள் கர்ப்ப காலத்தில், மாதவிடாய் சமயங்களில் செல்வது அவர்களுக்கு நல்லதல்ல. ஏனெனில் அந்நேரங்களில் அவர்கள் எளிதில் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். இது அவர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வை பெரிதும் பாதித்துவிடும். அதனால்தான் இதுபோன்ற கோவில்களுக்கு செல்லவேண்டாம் என்றார்கள். அப்படியே செல்லவேண்டும் என்றாலும், இதுபோன்ற செயல்பாடுகள் அக்கோவிலில் எந்த சமயத்தில் நடைபெறவில்லையோ அந்த நேரத்தில் செல்லலாம் என்றார்கள்.

இப்போது சபரிமலை மற்றும் பிற மலைக் கோவில்களை எடுத்துக் கொண்டால், அம்மலைகள் வனப்பகுதி என்பதால் அக்காலத்தில் அங்கு புலிகளின் நடமாட்டம் அதிகம் இருந்தது. ஆனால் இப்போதோ பாவம், அப்புலிகளை நீங்களும் நானும் காக்கவேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. அன்று நம் தென்னாட்டில் இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆயிரக்கணக்கில் புலிகள் நடமாடின. அதனால் மலைக் கோவில்களுக்குச் செல்வது ஆபத்தான விஷயமாக இருந்தது. அக்கோவில்களுக்கு செல்பவர்கள் இன்றும்கூட சாம்பிராணி எடுத்துச் செல்வது வழக்கத்தில் உள்ளது. மலைமீது ஏறும்போது புலி வந்தால், அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள அவர்கள் சாம்பிராணி புகையை உபயோகித்தனர்.

மாமிச வாசம் சிறிது வந்தாலும் புலி உங்களைத் தேடிவந்து தாக்கும். அதிலும் இதுபோன்ற மாமிச உண்ணி விலங்குகள், ஆண் உடலைவிட பெண்களை இன்னும் எளிதாக மோப்பம் பிடித்துவிடும். அதனால்தான் பெண்களை உடன் கூட்டிச் செல்லவேண்டாம், கூட்டிச்சென்றால் புலி நிச்சயம் உங்களைத் தாக்கும் என்றார்கள். இது சபரிமலைக்கு மட்டுமல்ல, எல்லா மலைக் கோவில்களுக்குமே இந்தத் தடை இருந்தது. இன்று இந்நிலை மாறிவிட்டது. இப்போது பாவம் அந்தப் புலிகளுக்குத்தான் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

நவிகா குமார்: அப்படியெனில் இப்போது அந்த வழக்கத்தை மாற்றலாம்தானே?

சத்குரு: இப்போது முன்போல் இல்லை. பெண்களுக்கு பல வசதி வாய்ப்புகள் உள்ளன. எப்படிப்பட்ட சூழலை சந்திக்கவும் அவர்கள் தயார்நிலையில் இருப்பது சாத்தியமாகி இருக்கிறது. தடை விதிக்கப்பட்டது பாதுகாப்பின் அடிப்படையில் மட்டும்தான் எனும் பட்சத்தில், அது நிச்சயம் மாறவேண்டும்தான், அதில் சந்தேகமில்லை. ஆனால் அதேசமயம், அது தவிர்த்து வேறு காரணங்கள் இருந்தால், அதையும் நாம் பார்க்கவேண்டும். சபரிமலை பற்றி எனக்கு முழு விவரங்கள் தெரியாது. அக்கோவில் நிர்வாகிகள் எனக்குக் கூறியது என்னவெனில், இத்தடை இருப்பதற்கு முக்கியக் காரணம் அங்கிருக்கும் தெய்வம் பிரம்மச்சாரி என்பது. இதுபோன்ற ஒரு நுண்ணிய உணர்வு இருக்கும்போது, அதில் தலையிடாமல் அதை அப்படியே விட்டுவிடுவதுதான் சரி என்று எனக்குத் தோன்றுகிறது. இங்கு ஆயிரமாயிரம் கோவில்கள் காலியாக உள்ளன. அது ஏன் அந்த ஒரு கோவிலுக்குதான் செல்லவேண்டுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நவிகா குமார்: ஏன் கூடாது? இப்போது நீங்கள்தான் கூறினீர்கள். இது 21ம் நூற்றாண்டின் இந்தியா. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல்கள் தற்சமயத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி எழுதப்பட வேண்டும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் வழக்கத்தில் வந்துவிட்ட செயல்முறைகள் மாற்றப்பட வேண்டும் என்று. இப்போது இதற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு சொல்கிறீர்கள்?

சத்குரு: இல்லை நான் விதிவிலக்கு சொல்லவில்லை. இதை தெளிவாகவே சொல்கிறேன். தடை விதிக்கப்பட்டது பாதுகாப்பு கருதி மட்டும்தான் என்றால், இப்போது அதற்கு அர்த்தமில்லை. இன்று எந்த மலையாக இருந்தாலும் அதை ஏறுவதற்கு பெண்கள் எல்லா வகையிலும் தயாராக இருக்கிறார்கள். அவ்வளவு ஏன், இப்போதுதான் 3-வார இமயமலை ஏற்றத்தில் இருந்து நான் திரும்பி வந்திருக்கிறேன். இதில் என்னுடன் மலை ஏறியவர்களில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கைதான் அதிகம். மலையேற்றத்திற்குத் தேவையான அனைத்தும் - உடை, காலணிகள், மற்ற இத்யாதிகள் என, ஆண்களுக்கு இருக்கும் அனைத்து வசதிகளும் இன்று பெண்களுக்கும் உள்ளது. ஆனால் அந்தக் காலத்தில் சூழ்நிலை வேறு. அதனால் அது பெண்களுக்கான கோவில் இல்லை என்று வழங்கப்பட்டது. “பெண்” என உடல் கூற்றின் ஒரே அடிப்படையில் பாகுபாடு செய்யப்படுகிறது என்றால், இது நிச்சயம் மாற்றப்பட வேண்டும், அதில் சந்தேகமில்லை. ஆனால் கோவிலின் தன்மை ஒருவிதமாக இருப்பதால் இவ்வாறு வழங்கப்படுகிறது என்றால், நாம் அதை கவனிக்க வேண்டும்.

நவிகா குமார்: ஆனால் சத்குரு... நான் பணிவோடு கேட்கிறேன்... அங்கிருக்கும் புனிதமான தெய்வம் பிரம்மச்சாரி; மிகவும் சக்தி வாய்ந்தவர் எனும்போது, நாங்கள் அந்த பிரம்மச்சாரியை வணங்கக்கூடாதா? ஏன் இந்தத் தடை? இல்லை... பெண்கள் அங்கு வருவதால் அவர் நிலை தடுமாறிவிடலாம், அதனால் கூடாது என்கிறீர்களா?

சத்குரு: இல்லை, அப்படியில்லை. இப்போது எங்கள் ஆசிரமத்தையே எடுத்துக்கொண்டால், அங்கு பிரம்மச்சாரிகளும் உள்ளனர், பிரம்மச்சாரினிகளும் உள்ளனர். பிரம்மச்சாரிகள் வசிப்பதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை “சங்கா” என்றழைப்போம். இப்போது அங்கிருக்கும் பெண்கள், “நாங்கள் ஆண்களின் சங்காவிற்குள் செல்ல வேண்டும்,” என்றால் அது கூடாது. ஏனெனில் பெண்களின் சங்காவிற்குள் செல்ல எங்களுக்கும் அனுமதியில்லை. இதில் விவாதிக்க என்ன இருக்கிறது? கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பல கோவில்களுக்குள் செல்ல ஆண்களுக்கு அனுமதி கிடையாது. இதுபற்றி தெரியுமா உங்களுக்கு? இது ஏனெனில், அவை முற்றிலும் வேறொரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டவை. இது பாலின பாகுபாடல்ல. இதை பாலின பாகுபாடு என்று சொல்வதற்கு இடமில்லை. ஆனால், பாலின அடிப்படையில் பாகுபாடு நடக்கிறது என்றால் அதை ஒழிக்கவேண்டும், அதில் சந்தேகமில்லை.

நவிகா குமார்: ஆனால், இதுதானே பாலின பாகுபாடு? இதை வேறெப்படி கூறமுடியும்?

சத்குரு: பெண்களின் கழிவறைக்குள் நான் செல்லமாட்டேன் என்று நான் சொன்னால் அது பாலின பாகுபாடா? இது வெறும் அறிவு, அடிப்படை அறிவு.

நவிகா குமார்: அப்படியெனில், பெண்கள் சபரிமலை கோவிலுக்குச் செல்லாமல் இருப்பதையும், ஆண்கள் பெண்களின் கழிவறைக்குள் செல்லாமல் இருப்பதையும் ஒன்று என்பீர்களா?

சத்குரு: இல்லை. கோவிலையும் கழிவறையையும் ஒன்றென பேச வேண்டாம். நான் அப்படிச் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம், நுண்ணிய உணர்வுகள் சம்பந்தப்பட்டிருப்பது ஒன்று, பாகுபாடு என்பது மற்றொன்று. இவையிரண்டும் ஒன்றல்ல. முற்றிலும் வெவ்வேறானவை. நுண்ணிய உணர்வுகளை நாம் மதிக்கவேண்டும். எல்லாவற்றையும் சமன் செய்யமுடியாது. ஆனால் “பெண்” என்ற அவள் உடல்கூற்றை வைத்து பாகுபாடு நடக்கிறது என்றால், அதை நிச்சயம் அகற்றவேண்டும் 100% அகற்ற வேண்டும்.

நவிகா குமார்: இதுவும் அதுதானே? 10-50 வயது வரையிலான பெண்கள் மட்டும் போகக்கூடாது. 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் போகலாம் என்பது உடலியல் சம்பந்தமான பாகுபாடுதானே?

சத்குரு: இல்லை. இங்கு திருவுருவச் சிலையை உயிரோட்டம் நிறைந்த ஒரு மனிதனாகவே பார்க்கிறோம். இதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பிரம்மச்சாரி அவருடைய உறைவிடத்தில் அமர்ந்திருக்கிறார், அதனால் பெண்கள் அங்கு செல்லமாட்டார்கள். இது எப்படியெனில், இங்கு ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தால், ஆண்கள் அங்கு செல்லக்கூடாது என்போம். அதேபோல்தான் இதுவும். பிரம்மச்சாரிகள் அவர்களின் சங்காவிற்குள் இருக்கும்போது, பெண்கள் அங்கு செல்லக்கூடாது. இது என்ன பாலின பாகுபாடா? இதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது அந்த பிரம்மச்சாரிகளின் பாதுகாப்பிற்காக, அப்பெண்களின் பாதுகாப்பிற்காக அல்ல... (சிரிக்கிறார்)

நவிகா குமார்: நன்றாகவே பேசுகிறீர்கள்... ஆனால் நம் நாட்டின் அரசியல் சாசனத்தை அடிப்படையாகக் கொண்டு, நிலவும் சூழ்நிலைகள் மற்றும் பிற அனைத்தையும் கணக்கில் கொண்டு, நம் உச்சநீதிமன்றம் சொல்வதை நாம் பின்பற்ற வேண்டும் என்றும்தானே சொல்கிறீர்கள்?

சத்குரு: ஆம். ஆனால் நாட்டுப் பிரஜைகளின் நுண்ணிய உணர்வுகளை கணக்கில் கொள்ளக்கூடாது என்று நம் அரசியல் சாசனத்தில் எங்குமே கூறப்படவில்லை. இங்கு வாழும் அனைவரின் நுண்ணிய உணர்வுகளையும் நாம் மதிக்கவேண்டும். ஆனால் அதேசமயம், நடந்து கொண்டிருப்பது வெளிப்படையான பாகுபாடு, இதனால் பலரும் ஏமாற்றப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள் என்றால், அது நிச்சயம் அகற்றப்பட வேண்டும்.

நான் மீண்டும் சொல்கிறேன். ஏதோவொரு கோவிலில் உடல்கூற்றை காரணம் கூறி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றால், அது நிச்சயம் அகற்றப்பட வேண்டும், அதில் சந்தேகமில்லை. ஆனால் நுண்ணிய உணர்வுகளின் அடிப்படையில் இது கூறப்படுகிறது, அங்கிருக்கும் தெய்வத்தின் தன்மை ஒருவிதமாக இருக்கிறது, அதனால் கோவிலை ஒருவிதமாக பராமரிக்க வேண்டும் என்ற அடிப்படை இருக்கிறது என்றால், அதை நாம் மதிக்கவேண்டும். இப்போது பாருங்கள், ஆண்கள் நுழையக்கூடாத கோவில்கள் பற்றி இங்கு ஏன் யாரும் பேசமாட்டேன் என்கிறீர்கள்? இதுபோல் கர்நாடக மாநிலத்தில் பல கோவில்கள் இருக்கின்றதே!

ஆசிரியர் குறிப்பு: நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

SG Tam App