ஆண், பெண் - யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்?
வேதகாலங்களில் ஆணும் பெண்ணும் எப்படி சரிசமமாக வாழ்ந்தார்கள், காலப்போக்கில் எப்படி அடிமைத்தனம் ஏற்பட்டது என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறார் சத்குரு...
 
 

பெண்கள்... அன்றும், இன்றும், என்றும்! - பகுதி 3

வேதகாலங்களில் ஆணும் பெண்ணும் எப்படி சரிசமமாக வாழ்ந்தார்கள், காலப்போக்கில் எப்படி அடிமைத்தனம் ஏற்பட்டது என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறார் சத்குரு...

சத்குரு:

துறவு மெற்கொண்ட பெண்கள்

மனித இனத்தை விருத்தி செய்வதில் ஆணை விட பெண்ணுக்குத் தான் அதிக பங்கு இருக்கிறது.

வேதகாலங்களில் ஒரு பெண் தன்னுடைய குடும்ப வாழ்வை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். ஆணுக்கு இருந்த அதே சுதந்திரம் பெண்ணுக்கும் இருந்தது. சமூகத்தில் எந்த ஒரு எதிர் விளைவையும் ஏற்படுத்தாமல், இத்தகைய முடிவுகளை பெண்கள் எடுத்ததற்கான பல சான்றுகள் உள்ளன. அது சமூகத்தால் ஏற்கப்பட்டது. ஒரு பெண் தான் விரும்பிய கணவரை தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அந்த எல்லை தாண்டி அவள் வளர்ந்துவிட்டதாகக் கருதினால் குடும்பம் என்கிற அமைப்பைவிட்டு ஒரு ஆண் வெளியேறுவதைப் போலவே பெண்ணும் வெளியேறிக் கொண்டிருந்தாள். ஆண் ஒருவனுக்குத் திருமணமாகி, பத்து, இருபது ஆண்டுகள் குடும்பம் நடத்துகிறான். பிறகு ஆன்மீக நாட்டம் வருகிறது. குடும்பத்தைத் துறந்து விட்டுப் போகிறான். அதே உரிமை ஒரு பெண்ணுக்கும் இருந்தது. ஆன்மீகப் பாதையில் செல்ல வேண்டும் என்கிற நாட்டம் அவளுக்கு வந்தபோதெல்லாம் குடும்பத்தைத் துறந்துவிட்டு அவள் சென்றிருக்கிறாள். இது வேத காலத்தில் முழு மனதோடு ஏற்கப்பட்டிருக்கிறது.

காலப் போக்கில், யாரோ துறவு மேற்கொள்வது ஆணுக்குத்தான் சாத்தியம் என்று வரையறுத்து விட்டார்கள். இது பற்றி யாருமே கேள்வி எழுப்புவது இல்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணைத் துறந்துவிட்டு ஆன்மீகப் பாதையில் போகலாம். தன்னிடம் இருப்பது எதையும் துறப்பது எல்லோருக்கும் உள்ள உரிமைதானே. ஒரு ஆண் ஒரு பெண்ணைத் துறந்துவிட்டால் அந்தப் பெண்ணை யார் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு விடையே கிடைப்பதில்லை. அதை அப்படியே விட்டுவிட்டார்கள். இருவருக்கும் அதே சுதந்திரம் இருந்தால் அது வேறு. ஒருவருக்கு மட்டும் இந்த சுதந்திரம் இருந்து, இன்னொருவருக்கு இல்லாதபோது அது தீமை இழைப்பதாகத்தான் இருக்கமுடியும். துரதிர்ஷ்டவசமாக, அப்படியொரு சட்டம் போடப்பட்ட பிறகுதான், மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்கிற ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று கருதுகிறேன்.

ஆணுக்கு பெண் அடிமையாகி இருந்தால்...

ஆமாம்! ஏனென்றால், இரண்டு பேர் முழு மகிழ்ச்சியாக, ஆனந்தமாக சேர்ந்து வாழ்வது எப்போது சாத்தியமென்றால், அவர்கள் சுதந்திரமான நிலையில் சந்திக்கிறபோதுதான், ஒரு கட்டுப்பாட்டோடு சந்திக்க நேர்ந்தால், பிறந்த நாள் முதல் அடிமையாகவே இருந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய நேர்ந்தால், அந்தப் பெண்ணை உங்களுக்கு அடிமையாக இருக்கத்தான் பழக்கியிருப்பார்களே தவிர வேறு எதுவும் இருக்காது. இங்கு வாழ்வை அனுபவிப்பதற்கான எந்த வழியும் இல்லை. ஒருவேளை அதிகபட்சம் அந்த வாழ்க்கை அவளுக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்க்கை ஆனந்தமாக இருக்க முடியாது. அவள் வசதியாக இருப்பாள். உங்கள் தேவைகளைப் பார்த்துக் கொள்வாள்.

பெண்கள், ஆண்களைப் போல் ஆக முயற்சி செய்து வருகிறார்கள். அது நிகழ்ந்தால் இரு சாராருக்குமே சேதம் தான் அதிகம்.

துரதிர்ஷ்டவசமாக இன்றுகூட இதுதான் தொடர்கிறது. ஒரு உயிர் பெண்ணாகப் பிறந்த உடனேயே, ஒன்று தன் தந்தைக்கு அல்லது கணவனுக்கு சேவைகள் செய்வதற்குத்தான் அந்தப் பிறப்பே எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதைத்தாண்டி, எதுவுமேயில்லை என்பதுபோல சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் இதைச் சொல்பவர்கள் யாரென்றால் அத்வைதம் பேசுகிறவர்கள்தான் இதைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். "உலகில் எல்லாமே ஒன்றுதான், ஆனால் ஆண்களைவிடக் குறைந்தவள் பெண்" இது அவர்களுக்கு எப்படித் தோன்றியது என்று எனக்குப் புரியவில்லை.

ஆணின் குறுகிய மனப்பான்மை

பிறப்பிற்குக் காரணமாக பாலியல் ரீதியான வேற்றுமையைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத யாருமே அத்வைதிகளாக இருக்க முடியாது. ஆணுடைய வாழ்க்கை பெண்ணைச் சார்ந்து இருக்கிறது. எனவே அவளை ஒப்புக்கொள்ள இயலாவிட்டால், வாழ்க்கையின் அனைத்து இருமைகளையும் ஒன்றாக ஏற்றுக் கொள்வதென்பது சாத்தியமே இல்லாத ஒன்று. மனித இனம் அவளைத் தான் ஆதாரமாகக் கொண்டுள்ளது. மனித இனத்தை விருத்தி செய்வதில் ஆணை விட பெண்ணுக்குத் தான் அதிக பங்கு இருக்கிறது. ஆணின் பங்கு குறைவு தான். எனவே, பெண்ணை ஏற்றுக் கொள்ளாததற்கு காரணம், ஆண் மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டிருக்கக்கூடும் அல்லது அறியாமையில் மூழ்கி இருக்கக்கூடும். அநேகமாக தனக்கு நன்மையும் வசதிகளும் கிடைத்தால் போதும் என்கிற குறுகிய மனப்பான்மை தான் காரணமாக இருக்கும். தனக்கு வசதியாக இருந்தால் எதற்காக அதை விட்டுக் கொடுப்பது? அது சரியா? தவறா? என்பதெல்லாம் பொருட்டல்ல. அதில் நன்மை கிடைக்கிறது என்றால் ஏன் விடவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த மனநிலை மாறாவிட்டால் அங்கே ஆன்மீகம் நிகழாது. அங்கே ஆன்மீகம் நிகழ வாய்ப்பே இல்லை.

இன்றுகூட நாம் பார்க்கிறோம். அம்மன் கோயில் முன்னால் போய் விழுந்து கும்பிடுகிற ஒரு ஆண் வீட்டுக்குப் போய் மனைவியை அடிக்கிறான். அவன் அறியாமை கொண்டவன் மட்டுமல்ல, குறுகிய மனப்பான்மை உடையவன். குறுகிய மனம் இல்லாவிட்டால் இப்படிச் செய்ய முடியாது. எனவே ஆண் செய்வதை எல்லாம் பெண்ணும் செய்வது என்று வந்தால் அது சரியாயிருக்காது. அது மிகவும் ஆபாசமாகத்தான் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இது தான் நடக்கிறது. இங்கேயும்கூட இது ஓரளவு நடக்கிறது. பெண்கள், ஆண்களைப் போல் ஆக முயற்சி செய்து வருகிறார்கள். அது நிகழ்ந்தால் இரு சாராருக்குமே சேதம் தான் அதிகம். ஒரு பெண், பெண் தன்மையை இழந்தால், அது மிகவும் அசிங்கமாக இருக்கும். ஆண் போல ஆக வேண்டும் என்று நினைப்பதே தவறு. அவள் ஏன் ஒரு ஆண் போல ஆக வேண்டும்? ஏனென்றால் அவளுக்குள்ளேயே ஏதோ ஓரிடத்தில் தான் தாழ்ந்தவள் என்றும், ஆண் உயர்ந்தவன் என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது. எனவே அவள் ஆண் போல ஆக நினைக்கிறாள்.


அடுத்த வாரம்...

'பெண்களின் இந்த நிலைக்கு யார் காரணம்..?' விளக்குகிறார் சத்குரு...


பெண்கள்... அன்றும், இன்றும், என்றும்! தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1