மஹாபாரதம் பகுதி 13: தர்மம் - தனிமனித தர்மம் மற்றும் பிரபஞ்ச தர்மம்
தர்மம் மற்றும் அதர்மம், இந்த இரண்டு நிலைகளை பற்றியபடி மஹாபாரதத்தில் வரும் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கை பயணமும் நிகழ்கிறது. இது நல்லது, இது கெட்டது என்ற தீர்ப்புகளை கடந்து, ஒருவர் தன்னளவில் வாழ்க்கையை சுதந்திரமாக, அதேசமயம் பிறருடன் மோதல் இல்லாமல் வாழும் வாழ்க்கை முறையே தர்மம் என நிலவிய அன்றைய காலகட்டத்தைப் பற்றி சத்குரு நமக்கு இங்கே விளக்குகிறார்.
தர்மம் - அதர்மம்
சத்குரு: மஹாபாரதத்தின் நிகழ்வுகள் அனைத்துமே இந்த இரண்டு அடிப்படைகளை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது - தர்மம் மற்றும் அதர்மம். "தர்மம்", "அதர்மம்" என்றதுமே, அதை சரி - தவறு, நல்லது - கெட்டது, நியாயம் - அநியாயம் என்ற அடிப்படையிலேயே பெரும்பாலான மக்கள் பார்க்கிறார்கள். தர்மம் மற்றும் அதர்மத்தை பார்க்க பல்வேறு வழிகள் இருக்கிறது. போர்வீரனாக இருக்கும் ஷத்ரியனுக்கு என தனித்த ஒரு தர்மம் இருக்கிறது. ஆசிரியராக இருக்கும் பிராமணனுக்கு ஒரு தர்மம் இருக்கிறது. இப்படியே வைசியர் மற்றும் சூத்திரருக்கு என அவரவருக்கு ஏற்ப ஒரு தர்மம் இருக்கிறது. இது வாழ்க்கையை மிக நுட்பமாக பார்க்கும் ஒரு தன்மை. வெவ்வேறு குழுவினருக்கிடையே வெவ்வேறு விதமான தர்மம் நிலவியதுடன், குழுவிலிருந்த ஒவ்வொரு தனிமனிதருக்கும் அவனுக்கு அல்லது அவளுக்கு என தனிப்பட்ட ஒரு தர்மமும் இருந்தது. பீஷ்மர் மற்றும் பலரும் "இதுவே எனது தர்மம்" என மீண்டும் மீண்டும் சொல்வதை பல தருணங்களிலும் நீங்கள் கேட்கலாம். இப்படி ஒவ்வொருவரும் எனது தர்மம் இது என தனித்தனியாக அவரவருக்கு ஒரு நீதி வைத்துக்கொண்டால், சட்டம் என்பது எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழும். ஒவ்வொருவரும் தமக்கென தனியாக ஒரு சட்டம் வைத்துக்கொண்டு, அது மற்றவர்களுடன் மோதலை ஏற்படுத்தி, அதனால் குருஷேத்திர போர் மூளவில்லை. மக்கள், தங்கள் தர்மத்தை தாங்களே மீறியதால்தான் குருஷேத்திர போரே மூண்டது. ஒவ்வொருவருக்கும் தனித்த தர்மம் இருந்தபோதும், அனைவருக்கும் பொதுவான ஒரு தர்மத்தை யாரும் மீறாமல் பார்த்துக்கொள்வது என்பதும் வாழ்க்கையை பார்க்கும் ஒரு வழி. இந்த வழியில் ஒவ்வொருவரும் சுதந்திரமாக தங்கள் வாழ்க்கையை வாழ்வதுடன், ஒருவருக்கொருவர் மோதல் இல்லாமலும் வாழ முடியும். தர்மத்தின் அடிப்படையாக நிலவிய இந்த மூல நியதி, பண்பட்ட வாழ்வை சாத்தியமாக்கியிருந்தது.Subscribe
“மீன் நியாயம்”
தர்மம் நிலைநிறுத்தப்படுவதற்கு முன்பாக, மத்ஸ்ய நியாயம் என ஒன்று வழக்கத்தில் இருந்தது. இதைப் பற்றிய ஒரு கதையும் இருக்கிறது. ஒரு நாள், ஒரு சிறு மீன் கங்கை நதியில் ஆனந்தமாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அதைவிட பெரிய மீன் ஒன்று எங்கிருந்தோ வந்து சேர்ந்தது. ஏற்கனவே அங்கிருந்த சின்ன மீன், பெரிய மீனின் பாகமாக ஆனது. பெரிய மீனும் ஆனந்தமாக நீந்தி விளையாட துவங்கியது. சில நாட்களில், இன்னும் கொஞ்சம் பெரிய மீன் வந்து இங்கே ஏற்கனவே இருந்த பெரிய மீனை விழுங்கியது. இப்படியே ஒவ்வொரு முறையும் பெரிதுபெரிதான மீன் வருவதும், அங்கே இருக்கும் சின்ன மீனை விழுங்குவதும் நடந்தது. இந்த பெரிய மீன் அப்படியே கடலுக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்த சின்ன மீன்களை விழுங்கி பெரிதாக வளர துவங்கியது. எவ்வளவு பெரிதாக என்றால், அந்த மீன் தனது வாலை அசைத்தாலே கடலில் எழும்பிய அலைகள் இமாலய சிகரத்தில் வந்து மோதியது. இது உலகிற்கே அபாயமாக மாறியது. இந்த கதையை சரியான கோணத்தில் புரிந்துகொள்ள வேண்டும். இப்போதும் கூட, ஒவ்வொரு சின்ன மீனும் தான் இருக்கும் நிலையைவிட பெரிதாக வளரவே முயற்சி செய்துகொண்டு இருக்கிறது என்பது உண்மைதான். எல்லா மீன்களும் ஒரே சீராக வளர்ந்தால், நாகரீகமான சமுதாயமாக அது இருக்கும். ஆனால், ஒரு மீன் மட்டுமே மிக பிரமாண்டமாக வளர முயற்சித்தால், சமுதாயத்தின் சட்டங்களும் நாகரீகமும் சிதைவதற்கான சூழல் ஏற்படும். அந்த பெரிய மீனின் ஆசையே சட்டமாக மாறும். இப்படிப்பட்ட மத்ஸ்ய நியாயத்திலிருந்து, அதாவது மீன் நியாயத்திலிருந்து, சமுதாயத்தில் தன்னுடைய சுய தர்மத்தை தானே அமைத்துக்கொள்ளும் சுதந்திரமும், அதேசமயம் அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கக்கூடிய தர்மத்தை உடைக்காததாகவும் இருக்கும் ஒரு நிலைக்கு மக்களை அழைத்துச் செல்லவே அவர்கள் முயற்சி செய்தார்கள்.
மஹாபாரதத்தில் தர்மம்
மஹாபாரதத்தின் சூழ்நிலையே, சில மீன்கள் மிகப்பெரிதாக வளர்ந்ததுடன், ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்தையும் அனுமதித்து வந்த அடிப்படையான தர்மத்திற்கு மரியாதை வழங்காமல் போனதுதான். அவர்கள் தர்மம் அல்லது நீதி என்று பேசியது அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டம் என்பதை பற்றி அல்ல, சமுதாயத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதை பற்றி அல்ல, மக்கள் தங்கள் அன்பு, திறமை மற்றும் சுதந்திரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. தர்மம் என்பது, தங்கள் உச்சபட்ச இயல்பை நோக்கி நகரும் வகையில் அனைவருமே தங்கள் வாழ்க்கையை சீரமைத்துக்கொள்வதே. நீங்கள் உங்கள் உச்சபட்ச இயல்பை, உண்மையை, தெய்வீக இயல்பை நோக்கி முன்னேறும்போது, நீங்கள் தர்மத்தின் வழி இருக்கிறீர்கள். நீங்கள் யாருக்கும் துன்பம் தராதவராகவே இருந்தாலும்கூட, நீங்கள் முன்னேறாமல் இருந்தால் நீங்கள் தர்மத்தின் வழியில் இல்லை.மஹாபாரதத்தில் நிலவிய தர்மத்தின் அடிப்படை இதுதான். "இது என்னுடைய தர்மம்" என்று ஒருவர் சொல்லும்போது, அதன் அர்த்தம், அது அவர்களுக்கு பிடிக்காததாக இருக்கலாம், அது அவர்களுக்கு சௌகரியமானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு அவர்களின் உச்சபட்ச இயல்பை அடைய அதுவே வழியாக இருந்தது. பீஷ்மர், "இந்த சபதமே எனது தர்மம்.குரு வம்சத்திற்காக, இந்த சாம்ராஜ்யத்திற்காக என் உயிரையே கொடுக்க நான் தயாராக இருந்தாலும், இந்த குரு வம்சமோ, இந்த சாம்ராஜ்யமோ அழியும் சூழல் வந்தாலும்கூட என் சபதத்தில் இருந்து நான் மீறமாட்டேன்" என்றதன் மூலம், இந்த வழியில் பீஷ்மர் தன் முக்தியை அடையப் போவதையும், எது எப்படியானாலும் அதிலிருந்து விலகப் போவதில்லை என்பதையுமே வெளிப்படுத்துகிறார். விதுரர் இப்படி சொன்னதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்தானே... "ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒரு தனிமனிதனை தியாகம் செய்யலாம், ஒரு கிராமத்தின் நலனுக்காக ஒரு குடும்பத்தை தியாகம் செய்யலாம், ஒரு தேசத்தின் நலனுக்காக ஒரு கிராமத்தையே தியாகம் செய்யலாம், உட்சபட்ச இயல்புக்காக இந்த உலகையே கூட தியாகம் செய்யலாம்." தர்மத்தை அவர்கள் இந்த அடிப்படையிலேயே பார்த்தார்கள். உச்சபட்ச இயல்பை அடைவதே உச்சபட்ச இலக்காகவும், அதற்கே உச்சபட்ச முக்கியத்துவமும் அளிக்கப்படவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள்.
பீஷ்மரின் வலிமை
இதை அடிப்படையாக வைத்தே எல்லா விதிமுறைகளையும் வகுத்தார்கள். அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய எளிமையான விதிமுறைகளையும் அவர்கள் உச்சபட்ச இயல்பை அடைய பயன்படுத்திக்கொள்ளும் படிக்கட்டுகளாகவே பார்த்தார்கள். பீஷ்மர் தனது பயங்கரமான சபதத்தை எடுத்தபோது - நாம் இதை பயங்கரம் என அழைக்க காரணம், அவர் பிரம்மச்சாரியாக வாழ்ந்ததால் அல்ல, தனக்குத்தானே தகுதியிழப்பு ஏற்படுத்தி கொண்டதால் அல்ல, தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அசௌகர்யங்களையோ இழப்புகளையோ சந்தித்ததால் அல்ல, தன் குரு வம்சத்தையும் தான் மிகவும் நேசித்த தேசத்தையுமே தன் சபதத்தின் பொருட்டு இழக்கவும் தயாராக இருந்தார் என்பதால்தான். தன் வாழ்விலேயே மிகவும் மதிக்கும் ஒன்றையே தன் சபதத்திற்காக, இதுவே தனது தர்மம் என்றும், இதுவே தான் அடையும் வழி என்றும் தன் வாழ்வை அமைத்துக்கொள்கிறார். நாம் இன்னும் முன்னோக்கி செல்லும்போது பல சூழ்நிலைகளிலும் பீஷ்மர் கிட்டத்தட்ட அசாதாரணமான ஒரு மனிதராக தன்னை வெளிப்படுத்துவதை பார்க்கலாம். ஒரு ஆண் தனக்குள் இருக்கும் உயிரின் விதையை இன்னொரு பரிமாணத்திற்கு எடுத்துச்செல்ல விருப்பத்துடன் இருந்தால், இன்னொரு மனிதனை படைக்கவல்ல அந்த ஒற்றை 'செல்' உயிரணுவை வாழ்வின் விசையாக மாற்றிக்கொள்ளும்போது, அந்த உயிரணுவானது ஆற்றல்மிக்க அணுவிசையாகவே அவனில் செயல்பட துவங்குகிறது. ஒரே ஒரு அணுவில் இருந்து அளப்பரிய ஆற்றல் வெளிப்படுகிறது. பல்வேறு காலகட்டங்களில் பலரும், பீஷ்மர் பிரம்மச்சாரியாக இருப்பதால் தங்களால் அவருடன் மோத முடியவில்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தனக்குள் இருக்கும் ஒவ்வொரு விதையையும் உயிர் ஆற்றலாக மாற்றிக்கொண்டதால், மற்றவர்களால் பீஷ்மரை கொல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட மற்றவர்களால் அழிக்கமுடியாத வல்லமையை பீஷ்மராகவே தேர்வு செய்தார். இதை அடிப்படையாக கொண்டுதான், தனக்கு மரணம் நிகழும் நேரத்தை தானே நிர்ணயிக்கும் ஆற்றல் பீஷ்மரிடம் இருந்ததாக பேசினார்கள். அவர் அழிக்கமுடியாதவர் இல்லை, ஆனால் தன் மரணம் நிகழ வேண்டிய நேரத்தையும் இடத்தையும் தானே தேர்வு செய்யக்கூடியவராக இருந்ததால், அதுவும் மரணமில்லாத வாழ்வாகவே பார்க்கப்பட்டது. மரணமில்லா வாழ்வு உங்களுக்கு வேண்டுமானால் அது யாராவது சாபமிட்டால்தான் உங்களுக்கு கிடைக்கும். மரணமின்றி நெடுங்காலம் வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயம் எவ்வளவு சித்திரவதையாக இருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? மரணமே இல்லை என்பதுதான் சாபம். உங்களுக்கு எப்போது மரணம் நிகழ வேண்டும் எனும் தேர்வு உங்களிடம் இருப்பது வரம்.
மஹாபாரதம் - வருங்காலத்தின் முன்னோடி
தன்னுடைய சக்தி மற்றும் இயற்கையில் உள்ள சக்திகளை தன் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக்கொள்ளும் செயல்முறையே இது. மஹாபாரதத்தில் இன்னொரு உதாரணத்தை, அஸ்திரங்கள் என அழைக்கப்படும் சக்திவாய்ந்த ஆயுதங்களையும் நாம் பார்க்கலாம். பொருள்தன்மையில் படைக்கப்பட்டுள்ள மிகச்சிறிய ஒரு பொருளை, போர்க்களத்தில் மிகச் சக்திவாய்ந்த ஆற்றலாக பயன்படுத்த முடியும் என்றும் இதில் பேசப்பட்டிருக்கிறது. அவர்கள் போரிட வில், அம்புகளை பயன்படுத்தினாலும், அவர்கள் பேசுவது அணு ஆயுதத்தை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. மேலும் அவர்கள் சிலவகை அஸ்திரங்கள் பற்றியும் பேசுகிறார்கள், "இந்த ஆயுதம் இந்த உலகத்தை அழிக்காவிட்டாலும், தாயின் கருவில் இருக்கும் குழந்தைகள் எல்லாவற்றையும் இது அழிக்கும்" என்றும் பேசப்பட்டிருக்கிறது. ஒன்று, அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு அபாரமான கற்பனை திறன் உள்ளவர்களாக இருக்க வேண்டும் அல்லது உண்மையிலேயே அவர்களிடம் இதைப்பற்றிய அறிவு இருந்திருக்கவேண்டும். உண்மையிலேயே அவர்களிடம் இப்படிப்பட்ட ஆயுதங்கள் இருந்ததா, இதை வேறு எங்கேயாவது பார்த்தார்களா, அல்லது வேறு எங்கிருந்தோ வந்த யாரோ இதைப்பற்றி கற்றுத் தந்தார்களா என எதுவுமே நமக்கு தெரியாது. ஆனால், கதையை நீங்கள் குறிப்பிட்ட கவனத்துடன் பார்க்க வேண்டும். இது யாரோ சிலர் சண்டையிட்டுக் கொள்வதோ, ஒருவன் அரச பதவியையோ, மனைவியையோ, குழந்தையையோ அடைவதை பற்றியதல்ல. இதில் பல பரிணாமங்கள் இருக்கிறது.
தொடரும்...