மஹாபாரதம் பிற பகுதி

கேள்வியாளர்: சத்குரு, பார்பாரிக் தென்னிந்தியாவைச் சேர்ந்த வீரன் என்று நீங்கள் கூறினீர்கள். அதேவிதமாக, போரில் தென்னிந்திய மறைஞானம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் கூறினீர்கள். அது பற்றி இன்னும் சற்று விளக்க முடியுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: பார்பாரிக் தனது அபார ஆற்றலை வெளிப்படுத்தினான். ஆனால் நல்லவேளையாக அவனால் அதை பாண்டவர்களுக்கு எதிராக பயன்படுத்த முடியாமல் போனது. இவனால் சர்வநாசம் விளையும் என்பதை பார்பாரிக்கைப் பார்த்த அந்த கணமே கிருஷ்ணர் முடிவு செய்தார். பாரதப் போரில் கலந்துகொள்ள வந்த பார்பாரிக், வெறும் மூன்று அம்புகளை மட்டுமே தன்னுடன் எடுத்து வந்தான். தன்னுடைய ஆற்றல் மீது அவனுக்கு அந்தளவு நம்பிக்கை இருந்தது. மொத்த உலகையும் வெல்ல இந்த மூன்று அம்புகளே போதுமானது என்று அவன் நம்பினான். அதோடு, பார்பாரிக் கௌரவர்களுடனோ அல்லது பாண்டவர்களுடனோ இணைந்து போர் செய்ய விரும்பவில்லை - யார் தோல்வியடையும் நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் பக்கம் நின்று போர் செய்வேன் என்ற முடிவோடு அவன் குருஷேத்திரம் வந்திருந்தான். பார்பாரிக்கிற்கு இந்த போர் விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது, ஏனென்றால் தன்னால் வெல்ல முடியும் என்று அவன் உறுதியாக நம்பினான்.

தென்னிந்திய மறைஞானம் யுத்த களத்தில் பெரும்பங்கு வகித்தது. கடோத்கஜனின் அமானுஷ்ய ஆற்றலால் கர்ணன் தனது சக்தி ஆயுதத்தை இழக்க நேரிட்டது. சக்தி ஆயுதம் மட்டும் கர்ணனிடம் இறுதிவரை இருந்திருந்தால், நிச்சயமாக அர்ஜுனன் இறந்திருப்பான். தன்னைக்கூட கர்ணனால் கொல்ல முடியும் என்று கிருஷ்ணரே கூறியிருக்கிறார். எனவே குருஷேத்திர யுத்தத்தில் தென்னிந்திய மறைஞானம் வெற்றியை தீர்மானிப்பதாக இருந்திருக்கிறது. கடோத்கஜனின் தாயான இடும்பி, ஒரு பெண் தெய்வத்தை வழிபட்டு வந்ததையும், அந்த தெய்வத்தின் அருளை பெறுவதற்காக நரபலி கொடுத்து வந்ததைப் பற்றியும் பல கதைகள் இருக்கிறது. இப்படிப்பட்ட வழிபாட்டு முறை அவர்களது கலாச்சாரத்தில் இருந்திருக்கிறது. இடும்பியின் பூர்வீகம் தென்னிந்தியா.

மஹாபாரதப் போரின்போது, இருதரப்பினருக்கும் உணவு தயாரித்து வழங்கும் பொறுப்பை உடுப்பியின் அரசர் ஏற்றிருந்தார். தென்னகம் பலவிதங்களில் ஆதரவு அளித்தாலும், போர் நடந்தது வடபகுதியைச் சேர்ந்த அரசர்களுக்கிடையேதான். அவர்கள்தான் போர்க்களத்தில் நேரடியாக மோதியவர்கள். அதேசமயம், தென் பகுதியைச் சேர்ந்த வீரர்களும் யுத்த களத்தைத் தவறவிட விரும்பவில்லை. அவர்கள் போரில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், குறைந்தபட்சம் யுத்த களத்தில் போர் எப்படி நடக்கிறது என்று பார்க்க விரும்பினார்கள். பார்பாரிக் தன் தலையைத் தானே கொய்துகொண்ட பிறகும் கூட, ஒரு சிறு குன்றின் மீது இருந்தபடி போரை முழுமையாக பார்க்கும் வாய்ப்பை அவனது தலைக்கு கிருஷ்ணர் அருளியதால், களத்தில் என்ன நடக்கிறது என்ற முழுமையான புரிதலுடன் இருதரப்பினரையும் கவனித்து பேசியிருக்கிறான் பார்பாரிக்.

தொடரும்...

மஹாபாரதம் பிற பகுதி

ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதப் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞான தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.