மஹாபாரதம் பகுதி 51: கிருஷ்ணர் - அவதாரமா அல்லது பகவானா?
"அவதாரம், பகவான் எனும் இரண்டு அம்சங்களுக்கு இடையேயான வேறுபாட்டை எப்படி அறிவது? உண்மையில் கிருஷ்ணர் என்பவர் யார்?" இந்த கேள்வியை சத்குருவிடம் ஒரு கேள்வியாளர் எழுப்புகிறார். இரண்டு அம்சங்களுக்கும் இடையேயான வித்தியாசங்களை விளக்கும் சத்குரு, இதில் கிருஷ்ணர் எந்த அம்சத்தில் பொருந்துவார் என்பதையும் நமக்கு வெளிப்படுத்துகிறார்.
மஹாபாரதம் தொடரின் மற்ற பகுதிகள்
கேள்வியாளர்: ஒருவரை அவதாரம் என்றும், பகவான் என்றும் அழைக்க காரணமாகும் தன்மையை எப்படி அறிவது? உண்மையில் கிருஷ்ணர் என்பவர் யார்?
Subscribe
யார் ஒருவர் தனது உச்சபட்ச இலக்கை அடைவதற்கான வழியாக தனது செயல்கள் துவங்கும்படி அல்லது அதை நோக்கி இயல்பாகவே நிகழும்படி நிர்ணயிக்கிறாரோ, அந்த உயிர் அவதாரம் என்று குறிப்பிடப்படுகிறது. அவதாரம் என்ற பதம் வெளிப்பாடு என பொருள் தருகிறது. எதன் வெளிப்பாடு? ஒவ்வொரு உயிரினமும் படைத்தவனின் வெளிப்பாடே. மரம் மற்றும் எறும்பு என எல்லாமும் படைத்தவனின் வெளிப்பாடுகளே. நீங்கள் படைத்தவனை போல செயல்பட வேண்டும் என்றால், உங்கள் விழிப்புணர்வு படைத்தவனின் சாத்தியங்களை அணுகக்கூடிய அளவுக்கு மேம்பட்டதாக இருக்க வேண்டும். இந்த உயிர் படைத்தவனின் சாத்தியங்களை அணுகக்கூடிய அளவுக்கு மேம்பட்டதாக இருக்கிறது என்பதை மக்கள் அறிந்ததும், அவரை பகவான் என்று அழைக்கின்றனர்
சாதாரண மக்கள் உணர்ச்சிவசப்பட்டு யாரோ ஒருவரை பகவான் என்று அழைக்கக்கூடும். ஒரு தகுதியான நபர், ஒரு ரிஷியோ அல்லது முனிவரோ, ஒரு குறிப்பிட்ட ஞான நிலையில் உள்ள ஒருவர், யாரோ ஒருவரை "பகவான்" என்று குறிப்பிடுகிறார் என்றால், அந்த உயிர் படைத்தவனின் சாத்தியங்களையும், படைத்தவனின் வழிகளையும் கண்டறிந்திருக்கிறது என்று பொருள். பகவான் என்பவர் வெறுமே அமர்ந்து ஆசி வழங்குவார்; அவர் எதையும் கற்பிப்பதில்லை. அதே நபர், சில நேரங்களில் படைப்பாளியாகவும், சில நேரங்களில் மிகமிகச் சாதாரணமான மனிதராகவும் தோற்றமளிக்கிறார் என்றால், அப்போது அவரை அவதாரம் என்று குறிப்பிடுகின்றனர்.
அவதாரம் என்றால் அவர் படைத்தவனின் வெளிப்பாடு, ஆனால் ஒவ்வொரு க்ஷணமும் அவர் அப்படி வாழ்வதில்லை. சுற்றியுள்ள மக்களுக்கு செயல்முறையை சற்று இலகுவாக்க இந்த வடிவம் எடுப்பதை அவர் தேர்ந்தெடுத்து கீழிறங்கி வந்திருக்கிறார். அவதாரம் என்பவர் கீழிறங்கி வந்து கற்பிப்பார், உணவு உண்பார், செயல்களில் ஈடுபடுவார் - அவர் விழிப்புணர்வுடன் வடிவெடுத்து கீழிறங்கி வருவார், செயல் நிறைவடைந்ததும் விடைபெறுவார். எனவே தொழில்நுட்ப ரீதியாக "அவதாரம்" என்ற பதம் கிருஷ்ணராக வடிவெடுத்து இறங்கி வந்த உயிருக்கு பொருத்தமான பதம். ஆனால் அவரது விஸ்வரூப தரிசனத்தை கண்ட க்ஷணத்தில் மக்கள் அவரை பகவான் கிருஷ்ணர் என்பார்கள்.
தொடரும்...
மஹாபாரதம் தொடரின் மற்ற பகுதிகள்
ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதப் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞான தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.