இதுவரை: யுதிஷ்டிரன் வஞ்சனை கொண்ட சகுனியுடனான தாய விளையாட்டில் தன்னை இழப்பதுடன், தனது சொத்து, ராஜ்ஜியம், தனது சொந்த சகோதரர்கள், அவர்களது மனைவி திரௌபதி என அனைத்தையும் கௌரவர்களிடம் இழக்கிறான். துரியோதனின் ஆணைப்படி துச்சாதனன் திரௌபதியை அவைக்கு இழுத்து வந்து துகிலுரிய முற்படுகிறான். ஆபத்பாந்தவனாக கிருஷ்ணர் தக்க சமயத்தில் வேறெங்கோ இருந்தபடியே உதவிக்கரம் கொடுக்க, துச்சாதனனின் முயற்சி வெற்றியடையவில்லை.

முதல்முறை தாயமாடிய பிறகு

சத்குரு: குரு வம்சத்தின் அரசவையில் நடந்திருந்த இந்த கொடூரமான சம்பவம் மென்மையான உயிராக இருந்தவர்களை மிருகமாக்கியிருந்தது. எப்போதும் ஆனந்தமாக, குறும்புத்தனம் கொப்பளிக்க வலம் வந்து கொண்டிருந்த பீமனையும் மிருக குணம் வந்தடைந்திருந்தது. துரியோதனின் தொடையை பிளப்பதாகவும், துச்சாதனனின் இரத்தத்தை குடிப்பதாகவும் சபதம் செய்தான் பீமன். துச்சாதனனின் இரத்தத்தை தலையில் பூசும் வரை தலைமுடியை முடியமாட்டேன் என்று சபதமிட்டாள் திரௌபதி. யுதிஷ்டிரனை தவிர மற்ற பாண்டவ சகோதரர்கள் நால்வரும், கௌரவர்கள் அனைவரையும் கொல்வதாக சபதமிட்டனர். ஆனால் பீமன், அதை என்னிடமே விட்டுவிடுங்கள், அவர்கள் நூறுவரையும் நானே கொல்லப் போகிறேன் என்றான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த பயங்கரம் நிகழ்ந்தபோது, திருமணமாகி, தன் இளம் பிராயத்தில் அரசியாகவும் வாழ்க்கையை ஆனந்தமாக கழித்துக்கொண்டிருந்த திரௌபதி, சீற்றமடைந்து தன் வலிமையை வெளிப்படுத்தினாள். சூழ்நிலை வேறு விதமாக வடிவமெடுப்பதை உணர்ந்து திகிலடைந்த திருதராஷ்டிரன் உடனே‌ தலையிட்டு, இந்த விளையாட்டில் யுதிஷ்டிரன் எதை பணயம் வைத்து இழந்திருந்தாலும் அதை திரும்ப கொடுத்துவிட வேண்டும் என்கிறான். மேலும் திரௌபதியை சமாதானம் செய்யும் வகையில், நீ என்ன கேட்டாலும் தருகிறேன் என்கிறான். திரௌபதி தன் கணவர்களின் விடுதலையை கேட்கிறாள். அதை உடனடியாக நிறைவேற்றும் திருதராஷ்டிரன், இனி அவர்கள் சுதந்திர மனிதர்கள், இன்னும் என்ன வேண்டும் கேள் என்கிறான். அதற்கு திரௌபதி, அவர்கள் அவர்களது ராஜ்ஜியத்தை திரும்ப பெற வேண்டும்‌ என்கிறாள். அப்படியே‌ ஆகட்டும், மேலும் ஒரு வரம் கேள் என்கிறான் திருதராஷ்டிரன். இது மட்டும் போதும். பேராசைப்படுவது மனிதனின்‌ புத்திசாலித்தனத்திற்கு அழகல்ல என்று மறுமொழி தருகிறாள் திரௌபதி.

உங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளில் நீங்கள் என்ன விதமான தெரிவுகளை தேர்ந்தெடுக்கிறீர்கள்? அந்த தெரிவுகள் உங்களை மட்டும் தனித்தன்மையாக பிரதிபலிக்கிறதா அல்லது அனைவரையும் அரவணைப்பதாக இருக்கிறதா?

திருதராஷ்டிரன், உனக்காக எதுவுமே வேண்டாமா? உனக்காக ஏதாவது கேள் என்கிறான். அப்போதும் திரௌபதி விடுதலை அடையாமல்தான் இருக்கிறாள். அவள், எனக்கு எதுவும் வேண்டாம்; நான் ஒரு அடிமையாகவே இருக்கிறேன் என்கிறாள். இந்த விளையாட்டில் என்னை பணயம் வைத்த இந்த ஆண்மகன்கள் சுதந்திரமாக இருக்கட்டும். அவர்கள் அரசர்களாகட்டும். நான் அவர்களை நேசித்திருக்கிறேன். ஆனால் அது இப்போது முக்கியமில்லை. எனக்காக மூன்றாம் முறையாக எதையும் கேட்டுப் பெற நான் விரும்பவில்லை என்று திரௌபதி அறிவிக்கிறாள். இந்த இடத்தில்தான், பாண்டவர்கள் பணயம் வைத்து இழந்த அனைத்தையும் திரும்ப அவர்களுக்கே வழங்குவதாக அறிவித்து பாண்டவர்களுக்கும், திரௌபதிக்கும் அவர்களது சுதந்திரத்தையும் திரும்பத் தருகிறான் திருதராஷ்டிரன். இதைக்கண்டு கௌரவர்களும், கர்ணனும், சகுனியும் ஏமாற்றமடைகிறார்கள். கர்ணன், எப்பேர்ப்பட்ட ஷத்ரிய வீரர்களை ஒரு பெண் வந்து காப்பாற்ற வேண்டியிருக்கிறது, இவர்கள் உண்மையான வீரர்கள்தான். எப்படி மலிவாக தப்பினார்கள் என்கிறான். இப்படியான இகழ்வான பேச்சுக்களே மீண்டும் ஒருமுறை தாயகரத்தில் மோதுவதற்கு அவர்களை கொண்டு வந்து நிறுத்தியது. இந்த முறை அவர்கள்‌ முற்றிலுமாக அனைத்தையும் இழந்தார்கள். பாண்டவர்களும் திரௌபதியும் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியிருந்தது, அதன் பிறகு அடுத்த ஒரு வருடத்திற்கு தலைமறைவாக வாழ வேண்டியிருந்தது. ஒருவேளை அவர்களது மாறுவேடம் அடையாளம் காணப்பட்டால், அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு அவர்களது வனவாசம் நீட்டிக்கப்படும்.

கிருஷ்ணரின் சபதம்

தனக்கு நிகழ்ந்ததை‌ப் பற்றி திரௌபதி கிருஷ்ணரிடம் பேச, அவமரியாதையான அந்த செயலுக்கு பழிவாங்க சபதமிடுகிறார் கிருஷ்ணர். வருத்தம் பொங்கும் கண்ணீரோடு, கடைசி நேரத்தில் நீங்கள்‌ என்னைக் காத்தாலும், நீங்கள் அங்கே இல்லை, அவர்கள்‌ என்னிடம் அப்படி நடந்துகொண்டார்கள், துச்சாதனனின் ரத்தத்தை பார்க்கும் வரை என்னால் இதை மறக்க முடியாது என்று திரௌபதி முறையிட்டாள். எனவே கிருஷ்ணர் இப்படி சபதமிட்டார்: சொர்க்கமே சீர்குலைந்தாலும், இமயம் சரிந்து தரைமட்டமானாலும், கடல்கள் இறந்தவனின் எலும்புகளாக காய்ந்து போனாலும், இந்த பூமாதேவி தன்னையே தூள் தூளாக வெடித்துக் கொண்டாலும், நான் உனக்கு கொடுத்த வாக்கை காப்பேன். உனக்கு நிகழ்ந்த குற்றத்திற்கு பழி தீர்க்கும் விதமாக எல்லா போர்களையும் நிறுத்தும் வகையில் ஒரு யுத்தம் நிகழும். இன்று நெருப்புத்துளிகளை சிந்தும் உன் கண்கள் போர்க்களத்தில் கௌரவர்கள் நூறு பேரும் மாண்டு கிடப்பதை காணப்போகிறது. உன் கண்ணீரை துடைத்துக்கொள், அவை ஹஸ்தினாபுரத்தின் நூறு விதவைகளுக்கு சொந்தமான தனியுரிமை என்றார்.

தீதும் நன்றும் - கதையிலும், வாழ்க்கையிலும்

மஹாபாரத கதையை நாம் முழுமையாக பார்த்தோமானால், சில கதாபாத்திரங்கள் நல்லவர்களாக அல்லது உயர்வாக தெரிகிறார்கள். மற்றவர்கள் மோசமாக அல்லது தீயவர்களாக தெரிகிறார்கள். இது எப்படி நிகழ்கிறது? உண்மையில், நன்மை என்றும் தீமை என்றும் தனியே எதுவுமில்லை. முக்கியமான தருணங்களில் நாம் கையில் எடுக்கும் தெரிவுகளே நம்மை நல்லவர்களாகவோ தீயவர்களாகவோ அடையாளம் காட்டுகிறது. சிலர் திரும்பத்திரும்ப அவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளோருக்கும் அபாயம் விளைவிக்கும் தெரிவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். சிலர், தங்களின் தேர்வால் என்னவெல்லாம் நிகழக்கூடும் என்பதை தொடர்ந்து அக்கறையோடு பார்த்து தெரிவு செய்கிறார்கள். அது துரியோதனனாக இருந்தாலும் சரி, யுதிஷ்டிரனாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி - இதுதான் எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறது.

உங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளில் நீங்கள் என்ன விதமான தெரிவுகளை தேர்ந்தெடுக்கிறீர்கள்? அந்த தெரிவுகள் உங்களை மட்டும் தனித்தன்மையாக பிரதிபலிக்கிறதா அல்லது அனைவரையும் அரவணைப்பதாக இருக்கிறதா? நீங்கள் அந்த தெரிவுகளை தேர்ந்தெடுத்தது உங்கள் உடலின் தேவையாலா அல்லது பிரபஞ்சம் முழுவதும் செயலாற்றும் உயிரின் இயல்பினாலா? ஒரு மிகச் சிறிய உயிராகவோ அல்லது ஒரு மாபெரும் உயிராகவோ திகழும் தெரிவு உங்களிடம்தான் இருக்கிறது. யாரொருவர் தன் நிலையிலிருந்து உயர்ந்து செயல்படுகிறாரோ, அவர் மகத்தான உயிராக பார்க்கப்படுகிறார். தனக்குள் இருக்கும் அற்ப காரணங்களை முன்னிறுத்தி செயல்படுகையில் தீய‌ மனிதனாக பார்க்கப்படுகிறார். இவை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் செயல்படுபவர் நல்ல மனிதனாக பார்க்கப்படுகிறார்.

தொடரும்...