தாழ்வுமனப்பான்மை (Inferiority Complex in Tamil) எதனால் வருகிறது?

சத்குரு: இந்த தாழ்வு மனப்பான்மை, இதற்கு அடிப்படை என்னவென்றால் நீங்கள் உங்கள் தன்மையை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள். நீங்கள் இன்னொருவரைப் பார்த்து, "நான் அவருக்கு தாழ்வாக இருக்கிறேனே?" என ஒப்பிட்டுப் பார்த்தால்...

இந்த உணர்வு எதற்காக வந்ததென்றால், உங்கள் தன்மை பற்றி உங்களுக்குக் கவனம் இல்லாமல் போய்விட்டது. இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்து, அவரை மாதிரி  இருக்கவேண்டும் என்று ஒரு முயற்சி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் என்ன புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, உங்கள் உடல்நிலையில், மனநிலையில், உணர்வுநிலையில் என எல்லா நிலையிலும் உங்களை மாதிரி இன்னொரு மனிதன் இந்த உலகத்தில் எங்கேயாவது இருக்கிறாரா? எப்போதாவது இருந்தாரா? உங்களைப்போல் மனிதர் எப்போதுமே உலகத்தில் கிடையாது; இப்போதுகூட கிடையாது; நாளைக்குகூட கிடையாது.

நீங்கள் ஒரு தனித்தன்மையான உயிர். நீங்கள் எதைப் பார்த்தாலும், எல்லாமே தனித்தன்மையான ஒரு தன்மைதான். 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களை மற்றவருடன் ஒப்பிடுவதன் அபத்தம்

இப்போது உங்கள் சிறிய விரலை எடுத்து, அப்படியே பாருங்கள்! இதைப்போல ஒரு சிறிய விரல் எங்கேயாவது பிரபஞ்சத்தில் இருக்கிறதா? எங்கேயும் கிடையாது. உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள், இந்த கையிலிருக்கும் இந்த ரேகைகூட தனித்தன்மையாக இருக்கிறதென்று சொல்லியிருக்கிறார்கள். இது வெறும் கைரேகை பற்றியது அல்ல. உங்களது ஒரு முடியை எடுத்தாலும், தனித்தன்மையாகத்தான் இருக்கிறது. இப்படி ஒரு பிரமாதமான ஒரு படைத்தல். இது தனித்தன்மையான படைத்தல். உங்களைப் போன்ற மனிதன் எப்போதுமே பிரபஞ்சத்தில் கிடையாது. திரும்ப எப்போதுமே வரமாட்டார். இப்போதுகூட எங்கேயும் இல்லை. நீங்கள் மட்டும் இல்லை, உங்கள் மனைவி, உங்கள் கணவன், உங்கள் குழந்தை, உங்களுக்குப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், உங்கள் எதிரி, உங்கள் மாமியார், எல்லோருமே தனித்தன்மையான மனிதர்தான். 

எப்போது இது தனித்தன்மையான உயிர் என்று நீங்கள் உணர்கிறீர்களோ, இதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?

எப்போது இது தனித்தன்மையான உயிர் என்று நீங்கள் உணர்கிறீர்களோ, இதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? இதைத் தனித்தன்மையாக, இப்படி உருவாக்க வேண்டுமென்றால்... இந்த படைத்தலுக்கு மூலமாக எது இருக்கிறதோ, அது உங்களைத் தனித்தன்மையாக உருவாக்க வேண்டுமென்றால், இதற்கு மிகவும் மதிப்பு வைத்துதானே இப்படி உருவாக்கி வைத்திருக்கிறது?

இந்த படைத்தலுக்கு மூலமாக இருக்கிற தன்மை உங்கள் மீது எவ்வளவு மதிப்பு வைத்து, உங்களை தனித்தன்மையான உயிராக உருவாக்கி இருக்கும்போது, நீங்கள்போய் உங்கள் தனித்தன்மையை இன்னொருவருடன் ஒப்பிட்டுப்பார்த்து, அவரைப் போல இல்லையே, அவரை மாதிரி இல்லையே என்று நீங்கள் நினைத்தால் என்ன பிரயோஜனம்?

உங்கள் தனித்தன்மையை உணரும்போது…

நீங்கள் ஒரு தனித்தன்மையான உயிர். "நான் தனித்தன்மையான உயிர்" என்று நீங்கள் எப்போது முழுமையாக உணர்கிறீர்களோ, அப்போது தாழ்வு என்பது கிடையாது. நாம் இன்னொருவரின் தலைமீது உட்கார்ந்துகொள்ள வேண்டும் என்று தேவையில்லை. நமக்கு இன்னொருவர் தாழ்வாக இருக்கவேண்டும் என்று தேவையில்லை. உங்களது தன்மையை முழுமையாக மலரவைப்பது எப்படி என்று மட்டும்தான் நீங்கள் பார்க்க வேண்டும். இப்போது இங்கே ஒரு ரோஜா செடி இருக்கிறது. அங்கே தென்னை மரம் இருக்கிறது. இந்த ரோஜா செடி அந்த தென்னை மரத்தைப் பார்த்து, "ஓ... அவர் மிகவும் உயரமாக இருக்கிறாரே? நான் அவரைமாதிரி இல்லையே, அவரை மாதிரி இல்லையே?" என்றால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

Rose Flower, ரோஜா

Coconut Tree, தென்னை மரம்

இதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது; ஒரு அழகு இருக்கிறது. அதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது; ஒரு அழகு இருக்கிறது. உங்கள் தன்மையை முழுமையாக மலரவைப்பது எப்படி என்று மட்டும்தான் நீங்கள் பார்க்கவேண்டும். இதற்குத் தேவையான உதவியை, இதற்குத் தேவையான ஊட்டத்தை நாம் எப்படி உருவாக்குவது என்று மட்டும்தான் நாம் பார்க்க வேண்டும்.

இதில் எந்தமாதிரி காய் வரும், எந்தமாதிரி பூ வரும், எங்கே போகவேண்டும் என்று நீங்கள் நிர்ணயிக்கக்கூடாது. இதை இயற்கை, படைத்தலுக்கு மூலமாக இருப்பது நிர்ணயிக்கும். உங்கள் வேலை என்னவென்றால், இந்த உயிரை எப்படி முழுமையாக வளரவைப்பது என்பதுதான். இந்த உயிர்த்தன்மையை எப்படி ஒரு மலராக நாம் பண்ணிக்கொள்வது...!

இதில் ரோஜாப்பூ வரப்போகிறதா அல்லது தேங்காய் வரப்போகிறதா? அல்லது மல்லிகைப்பூ வரப்போகிறதா? இதை நீங்கள் நிர்ணயிக்கக்கூடாது. உலகம் எல்லாம், உலகத்தில் இருக்கிற மனிதர் எல்லோரும் ஒரே மாதிரி இருந்தால், நாம் இங்கே வாழமுடியுமா?

ஒவ்வொரும் மனிதனும், ஒவ்வொரு உயிரும் இங்கே தனித்தன்மையான உயிராக இருக்கிறது. இவ்வளவு மதிப்பு கொடுத்து, உங்கள் உயிர், உங்கள் தன்மை, உங்கள் உடல் அனைத்தையும், இந்த படைத்தவன் இப்படி உருவாக்கியிருக்கும்போது, நீங்கள் இதை ஒப்பிட்டுப் பார்த்து இதை தாழ்வாக பண்ணிக்கொள்ள தேவையில்லை.