கேள்வியாளர்: எங்கள் வாழ்க்கை முழுவதுமே, பள்ளிக்கூட நாட்களிலிருந்து இன்று அலுவலகத்தில் பணி புரிவது வரை, எப்போதும் எங்களை மற்றவருடன் ஒப்பிடுகின்றனர். ஏன் இந்தஒப்பீடுகள்? எங்களை எங்கள் நிலையிலேயே ஏற்று ஏன் யாரும் மதிப்பதில்லை?

சத்குரு:

நம் வாழ்வின் சிலபகுதிகளில், நாம் கற்றுக்கொள்ளும் அனைத்தும் முற்காலத்தில் நடந்த பற்பல சம்பவங்களைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. இன்று நீங்கள் ‘அ, ஆ, இ...’ எழுதுகிறீர்கள் என்றால், அது உங்களுக்கு முன்பு வேறு யாரோ ‘அ, ஆ, இ...’ எழுதியதால்தான். இல்லையெனில், நீங்களாகவே இன்று ‘அ, ஆ, இ...’ எழுதியிருக்க மாட்டீர்கள். அதனால் நீங்கள் எதையெல்லாம் செய்ய முடியும் என்பதை உங்கள் சுயதிறன் மட்டும் நிர்ணயிக்கவில்லை. நீங்கள் என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் ஒட்டுமொத்த மனித இனத்தின் அனுபவத்திலிருந்துதான் வந்திருக்கிறது. இந்த ‘அ, ஆ, இ...’ என்பதும் கூட பல்லாயிரம் தலைமுறைகளின் ‘மொழி’ அனுபவத்தால்தான் இன்று உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

உங்களால் செய்ய முடிந்த பிற அனைத்துமே கூட இதுபோலத்தான். அவற்றை நீங்கள் மட்டுமே சுயமாக செய்யவில்லை. இதுவரை பலர் உங்களுக்குத் தந்திருக்கும் அறிவு மற்றும் திறன் அளவிலான அன்பளிப்பால்தான் அவை உங்களுக்கு சாத்தியமாயிற்று. எதனால் ‘ஒப்பிட்டுப் பார்த்தல்’ முக்கியமானதாக ஆனது என்றால் ஒப்பிடவில்லை என்றால், நீங்கள் செய்யும் காரியங்களை சரியாகச் செய்கிறீர்களா அல்லது முட்டாள்தனமாகச் செய்கிறீர்களா என்று எப்படி அறிவது? நீங்கள் ஏதாவது முட்டாள்தனமாக செய்து கொண்டிருப்பீர்கள், ஆனால், அற்புதமாக செய்து கொண்டிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். இப்படி போதுமான அளவில் உங்களுக்கு நடந்ததில்லையா? நீங்கள் ஏதோ ஒன்றை பிரமாதமாக செய்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அப்போது யாரோ ஒருவர் வந்து அதை மிக எளிதாக செய்து முடிப்பதை பார்க்கும்போதுதான், நீங்கள் முட்டாளாய் இருந்தது உங்களுக்குத் தெரியவரும். இந்த ஒப்பீடு நிச்சயம் தேவை. இல்லையென்றால், முட்டாள்தனமாக செயல்கள் செய்துகொண்டே, ஒவ்வொருவரும் தங்களை அரசனாக பாவித்துக் கொள்வர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த ஒப்பீடுகள் சரிதான். ஆனால் இந்த ஒப்பீடு உங்களைப் பற்றியதல்ல. உங்களால் என்ன செய்யமுடியும் என்பதைப் பற்றி, உங்கள் செயல்திறனைப் பற்றி மட்டுமே! செயல்திறனைப் பொருத்தவரை, நாம் ஒவ்வொருவருமே வெவ்வேறு அளவிலான திறன் கொண்டவர்கள்தான். இதற்கென மதிப்பீட்டு அளவுகோல் இல்லையெனில், நம் செயல்திறனை நம்மால் வளர்த்துக் கொள்ளவே முடியாது. அனைவருமே ஆர்வத்தோடு தங்கள் பணிகளைச் செய்வதில்லை. எனவே அவர்களுக்கு சில அளவுகோல்கள் தேவைப்படுகின்றன. இதில் தவறேதும் இல்லை. அந்த அளவுகோலை வைத்தாவது ஒவ்வொரு நாளும் விட்ட இடத்திலிருந்து, ஒரு முனைப்புடன் பணி துவங்குவார்கள்.

உங்களைவிட வேறொருவர் திறமையாக இருக்கிறார் என்பது உங்களுக்கு பாதிப்பாக இருந்தால் மட்டுமே ஒப்பீடுகள் ஒரு பிரச்சினையாக உருவெடுக்கும். உங்களைவிட வேறொருவர் திறமையாக வேலை செய்கிறார் என்பது உங்களுக்கு பாதிப்பை உருவாக்கக்கூடாது. என்னையே எடுத்துக் கொண்டால், எப்போதும் என்னை விட திறமையானவரையே என்னுடன் வைத்துக்கொள்ள நான் விரும்புவேன். அப்போதுதான் என் வேலைகள் சுலபமாக நடக்கும். அவர்கள் என்னை விட திறமையாக வேலை செய்யும்போது என் வாழ்வும் சுகமாக, அழகாக இருக்கும். ஆனால் நீங்கள் ஒரு கொடுமையான சர்வாதிகாரியாக இருந்தால்,  இன்னொருவர் உங்களை விட சிறப்பாக பணி புரிவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். இது முட்டாள்தனம். இந்த முட்டாள்தனம் உங்களுக்குள் இருப்பதற்குக் காரணம், ஒருவரை பார்க்கும்போது, அவன் பெரியவனா இல்லை நான் பெரியவனா என்னும் குடைச்சல் உங்களுக்குள் இருப்பதுதான். ஏனெனில் எப்போதும் எந்த இடத்திலும் எப்படியாவது நீங்களே எல்லோரையும் விட உயரத்தில் இருக்க விரும்புகிறீர்கள்.

உங்கள் பெற்றோரும், உங்கள் கம்பெனியும் இப்படி உங்களை மற்றவரோடு ஒப்பிட்டு தூண்டிவிடக் காரணம், நீங்கள் திறம்பட செய்யவேண்டும் என்பதில் அவர்களுக்கு ஏதும் ஆர்வமில்லை, நீங்கள் ‘நம்பர் ஒன்’னாக இருக்கவேண்டும் என்பதில்தான் அவர்களுக்கு ஆர்வம். 100 மீட்டர் தூரத்தை நீங்கள் ஏழே வினாடிகளில் ஓடி முடிப்பது அவர்களுக்கு முக்கியமில்லை. இதுவரை யாருமே ஏழு வினாடிகளில் அந்த தூரத்தை இதுவரை கடக்கவில்லை என்றாலுமே, அது அவர்களுக்கு முக்கியமில்லை. அவர்களுக்கு வேண்டியது எல்லாம், மற்றவரைவிட ஒரு அங்குலமேனும் நீங்கள் முன்னால் இருக்கவேண்டும் என்பதுதான். பந்தயத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு காலே இல்லை என்றாலும் பரவாயில்லை. எப்படியாவது ஒரு அங்குலமாவது மற்றவரைவிட நீங்கள் முன்னிலையில் இருக்க வேண்டும். இப்படி வாழ்வது முட்டாள்தனமானது. இவ்வழியில் உங்கள் முழுதிறன் வளராது. உங்களுக்கு சாத்தியமானவற்றை எல்லாம் நீங்கள் செய்யமாட்டீர்கள். அடுத்தவரைவிட ஒரு அங்குலம் மேல்நிலையில் இருப்பீர்கள். அவ்வளவுதான் நடக்கலாம்.

இந்த நெருடல் உங்களுக்கு உருவாகக் காரணம், உங்களுக்கு உங்களைப் பற்றி ஒரு பாதுகாப்பின்மை இருப்பதால்தான். உங்கள் முழு வாழ்க்கையும் அடுத்தவரை விட சிறிதளவாவது நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில்தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி வாழ்வது வீண். ஏனெனில் அனேகமாக நீங்கள் இதில் வெற்றி பெற மாட்டீர்கள். மற்றவரைவிட ஒரே ஒரு அங்குலமாவது மேலே இருப்பதுதான் உங்களைப் பொறுத்தவரை ‘வெற்றி’ என்றால், உங்களிடமிருந்து உங்கள் முழுத்திறன் நிச்சயம் வெளிப்படாது. இந்த மனநிலையில் நீங்கள் இருக்கும்போது, நீங்கள் வெற்றி பெற்றாலும் கூட நீங்கள் துயரத்தில்தான் இருப்பீர்கள். ஏனெனில் யாரேனும் உங்களைக் கீழே தள்ளிவிட்டு முன்னேறிப் போய்விடுவார்களோ என்னும் பாதுகாப்பற்ற உணர்வு உங்களை அரித்துக் கொண்டேயிருக்கும். எனவே பிறரைவிட முன்னே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து செயல்படுவது மிகவும் பரிதாபத்திற்குரியதே.

இப்போது ஈஷா யோகா மையத்தின் சார்பாக ‘ஆனந்தஅலை’ என்னும் யோகா வகுப்புகள் நடத்தி வருகிறோம். மக்களை ஆனந்தமானவராக மாற்றுவது இப்போது மிகவும் அவசியமாக இருக்கிறது. நீங்கள் ஆனந்தமாக இருக்கும்போது, ஒரு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டால், உங்கள் முழுத்திறனிற்கு நீங்கள் ஓடுவீர்கள். வெறுமனே ஓடுவதே கூட உங்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும். வெறும் ஆனந்தத்திற்காகவே ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடுவீர்கள். வேறொருவர் உங்களைத் தாண்டி ஓடினாலும், அதுவும் உங்களுக்கு சந்தோஷமாகவே இருக்கும். ஆனால் இதுவே நீங்கள் துன்பமான மனிதராக இருந்தால், உங்கள் சந்தோஷம், நீங்கள் அடுத்தவரைவிட ஒரு படி மேலே நிற்பது மட்டுமாகத்தான் இருக்கும். போட்டிகளிலும் கடைசியில் இதைத்தான் செய்கிறார்கள். வெற்றி பெற்றவர்களை வெற்றி மேடையில் நிற்க வைக்கும்போது, முதலாவதாக வந்தவர் இரண்டாவதாக வந்தவரை விட 6 அங்குலம் அதிக உயரத்தில் நிற்பார். 2வது வந்தவர் மூன்றாவதாக வந்தவரைவிட 6 அங்குலம் அதிக உயரத்தில் நிற்பார். தப்பித்தவறி, இரண்டாவதாக வந்தவர் முதலாவதாக வந்தவரைவிட 7 அங்குலம் உயரமான மனிதராய் இருந்துவிட்டால், முதலாவதாக வந்தவர்க்கு தான் உயரமாய் நிற்கிறோம் என்னும் சந்தோஷமும் பறிபோய்விடும். ஆக, இப்போது முதல்படியில் நின்றாலும் அவருக்கு பிரச்சினைதான்.

அதனால் நீங்கள் செய்ய வேண்டிய மிக அத்தியாவசியமான ஒன்று, நீங்கள் எவ்வகையில் இந்த வாழ்க்கையை உணரப் போகிறீர்கள் என்பதை நிர்ணயித்துக் கொள்வதுதான். உங்கள் இயல்பிலேயே நீங்கள் சந்தோஷமானவராக இருந்தால், வாழ்க்கையில் நீங்கள் என்ன விதமான பணியில் ஈடுபட்டிருந்தாலும் உங்கள் வாழ்க்கையை துன்பமாக வாழமாட்டீர்கள். எப்படிப்பட்ட போட்டியாக இருந்தாலும், அதில் கலந்துகொள்வீர்கள். ஏற்கெனவே ஆனந்தமாய் இருப்பதால், உங்கள் முழுத்திறனிற்கு அதில் பங்கு பெறுவீர்கள். அதில் நீங்கள் கடைசியாக வந்தாலும் அதுவும் உங்களுக்கு அழகாகவே இருக்கும், ஏனெனில், போட்டியில், நீங்கள் உங்கள் முழு திறனையும் பயன்படுத்தினீர்கள்.

உங்கள் இயல்பிலேயே நீங்கள் ஆனந்தமானவராக இருந்தால் வெறுமனே செயல் செய்வதே உங்களுக்கு ஆனந்தமாகத்தான் இருக்கும். நீங்கள் செய்யும் செயல்களே சுற்றி இருப்பவற்றில் இருந்து எப்படியாவது சந்தோஷத்தை கசக்கிப்பிழிவதற்காக மட்டும் இருந்தால், எப்பொழுதாவது வெற்றிகிடைக்கும்போது மட்டும் பெருமிதம் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இல்லையெனில் சோகத்தில் அமிழ்வீர்கள். எந்த வகையான செயலைச் செய்தாலும், ஒரு நாளிலே எத்தனை வெற்றிக் கணங்களை நீங்கள் அடைந்துவிடப் போகிறீர்கள்? பெரும்பாலான நாட்களில் ஒரு கணம்  கூட இருக்காது. ஒருவேளை வெற்றி என்பது எல்லோரையும் இடித்துத் தள்ளிவிட்டு, முதல் ஆளாய் சென்று வெற்றிக் கோட்டைத் தொடுவதுதான் என்று நீங்கள் நினைத்தால், எப்போதாவது சில வெற்றிக் கணங்களை நீங்கள் சந்திக்கலாம். அதுவும் இந்த முறையிலேயே, ஒரு ஆழமான வெற்றியை உணரப் பார்ப்பீர்கள் என்றால், நீங்கள் நினைக்கும் வெற்றி என்பது பல வருடங்களில் ஒருமுறை கிடைக்கலாம். அப்படியெனில், பல வருடங்களுக்கு ஒருமுறைதான் மகிழ்ச்சியாக இருப்பீர்களா? இது வாழ்வதற்கான முறையல்லவே!

உங்களுக்கு மிகமிகப் பிடித்தமான ஏதோ ஒன்றை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்றால், உருவாக்கும் அந்த செயலே உங்களுக்கு ஆனந்தமாக இருந்தால், ஒருவேளை நீங்கள் உருவாக்க நினைத்தது வெற்றியடையாமல் மீண்டும் ஒருமுறை ஆரம்பத்தில் இருந்து முயற்சி எடுக்க வேண்டி வந்தாலும், அது உங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது.அதை செய்வதற்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைப்பதே உங்களுக்கு ஆனந்தம்தான். ஆனால் நீங்கள் துன்பமான மனிதராக இருந்தால், எந்தக் காரியம் செய்தாலும் அதில் உள்ள ஆனந்தத்திற்காக செய்ய மாட்டீர்கள், பலனை எதிர்பார்த்து மட்டுமே செய்வீர்கள். பலன் கிடைக்கவில்லை எனில், நெஞ்சடைத்து இறந்தும் கூடப் போவீர்கள். ஏனெனில் நீங்கள்தான் இவ்வுலகையே உங்கள் தலைமீது சுமந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இவ்வுலகையே நீங்கள்தான் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கும்போதுதான், மற்றவரைவிட தானே உயர்ந்து இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு முக்கியமாக இருக்கும். இங்கே உட்கார்ந்து வெறுமனே சுவாசிப்பதே உங்களுக்கு அற்புதமான அனுபவமாய் இருந்தால், மற்றவரைவிட சிறப்பாக சுவாசிக்க வேண்டும் என்று எண்ணம் உங்களுக்குத் தோன்றுமா, என்ன? நிச்சயம் இல்லை. ஆனால் இவ்வுலகை உங்கள் தோள் மீது சுமந்து கொண்டிருப்பதாக நீங்கள் நினைத்தால், அடுத்தவரைவிட ஓரளவு சிறப்பாக சுவாசிக்க வேண்டும் என்று நிச்சயம் நினைப்பீர்கள். அதுபோன்ற மனநிலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள். எவ்விதத்திலும் நன்மை பயக்காத இந்தப் புதைகுழியில் போய் இன்று எல்லோரும் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வை நலமுடன் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை அஸ்திவாரத்தை சரிவர அமைத்துக் கொள்ளாமல், அவசர அவசரமாக வாழ்விலே நாம் குதித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு குழந்தையாக இங்கு வரும்போது, நமக்கிருக்கும் அடிப்படை குணங்களில் முதன்மையான ஒன்று ஆனந்தம். வயிறு மட்டும் நிரம்பிவிட்டால், எப்படி ஆனந்தமாக இருப்பது என்று அந்த குழந்தைக்குத் தெரிந்திருக்கும். பச்சிளங்குழந்தைக்குக் கூட இது தெரியும். பசியில் இருக்கும்போது மட்டும்தான் குழந்தைகள் அழுவார்கள். மற்ற நேரம் எல்லாமே அவர்கள் ஆனந்தமாகத்தான் இருப்பார்கள். இதுதான் வாழ்வின் அடிப்படை நியதியும் கூட. இப்படி ஆனந்தமாய் இருப்பது, ஆரோக்கியமான வாழ்விற்கு அத்தியாவசியம் என்று இயற்கை தெளிவாகக் காண்பிக்கிறது. இதனை முதலில் உங்களுக்குள் பசுமரத்தாணி போல் உறுதி செய்துகொள்ளுங்கள். உங்கள் ஆனந்தத்தை நீங்கள் முதலில் உறுதி செய்த பின்னரே நீங்கள் எந்தவொரு செயலிலும் இறங்கவேண்டும். இதை செய்துவிட்டால், அதற்குப்பின் செயல் எப்படி நடந்தாலும், அது மேலே போனாலும், கீழே வந்தாலும், நீங்கள் மேலும் கீழும் போகாமல் சஞ்சலமின்றி தெளிவாய் இருப்பீர்கள்.