கேள்வியாளர்: யாரேனும் ஒருவர் உங்களுடன் தொடர்புக்கு வருகிறார் என்றால், அது அவர்களுக்குக் கடைசி பிறவி என்று அர்த்தமா?

சத்குரு: சற்று முன்பு என்னிடம் யாரோ ஒருவர் கேட்டார், “பிரம்மச்சாரிகள் மட்டும்தான் உங்களுடைய சீடர்களா?” ஆமாம், அவர்கள் மட்டும்தான் என்னுடைய சீடர்கள். பிரம்மச்சாரிகள் என்று நான் கூறும்போது, அது அதிகாரபூர்வமான தீட்சை பெற்றவர்களாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்ட செயல்முறைக்கு உட்பட்டிருக்கிறார்களா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஏதோ ஒரு வகையில், பாதையில் அவர்கள் இருக்கிறார்கள்

பிரம்மச்சாரிகள் மட்டும்தான் எனது சீடர்கள். அவர்கள் பிரம்மச்சாரிகள் இல்லையென்றால், எப்படி இருந்தாலும் அவர்கள் எனது சீடர்கள் இல்லை. அவர்களது ஆர்வம் வேறொன்றாக இருந்தால், சிஷ்ய மனப்பான்மை என்ற கேள்வி எங்கிருக்கிறது? அவர்கள் எவர் ஒருவருக்கும் சீடராக இருக்கமுடியாது. ஒரு சீடராக இருப்பதென்பது யாரோ ஒருவரைப் பற்றியல்ல. நீங்கள் இந்த நபருடைய சீடரா அல்லது அந்த நபருடைய சீடரா என்பதல்ல. நீங்கள் ஒரு சீடராக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு சீடர் மட்டுமே, அவ்வளவுதான். நீங்கள் ஒரு பக்தராக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு பக்தர் தவிர வேறில்லை. நீங்கள் இந்தக் கடவுளின் பக்தர் அல்லது அந்தக் கடவுளின் பக்தராக இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கே இடமில்லை – அது வெறும் முட்டாள்தனம். நீங்கள் ஒரு பக்தர், அவ்வளவுதான். அது ஒரு குணம்.

 

இருளாக மாறிவிடுதல்

பலபேர் என் மீது தமது கண்களைப் பதிக்கின்றனர். ஆனால், என்னை அவர்களது குருவாக எடுத்துக்கொள்வதில்லை. அடுத்த முறை வரும்போது அவர்கள் இங்கே சுற்றிக்கொண்டிருக்கக் கூடும். நான் இங்கே இல்லாமல் போகலாம், ஆனால் அவர்கள் இங்கே சுற்றி அலைந்துகொண்டிருப்பார்கள். ஏனென்றால், அதை அவர்கள் முகர்ந்து பார்த்திருக்கின்றனர், இப்போது அதைச் சாப்பிடவேண்டும் என்று அவர்கள் விருப்பப்படுகிறார்கள். “குரு” என்றால் “இருள் அகற்றுபவர்”. “கு” என்றால் இருள், “ரு” என்றால் அகற்றுபவர். உங்களுக்கு ஒரு குரு இருக்கிறார் என்று நீங்கள் கூறும்போது, உங்களது இருள் அகற்றப்படுகிறது. பிறகு மீண்டும் ஏன் நீங்கள் இருக்கப்போகிறீர்கள்? நீங்கள் ஒளியாகிவிட்ட காரணத்தினால் உங்களது இருள் அகற்றப்படுவதில்லை. உங்களது இருள் அகற்றப்படுவது ஏனென்றால், நீங்கள் ஒன்றுமற்றவராகிவிட்டீர்கள், நீங்களே இருளாகிவிட்டீர்கள், ஆகவே எதையும் அகற்றுவதற்கான அவசியமில்லை. அதனிடமிருந்து நீங்கள் விலகியிருந்தால், இருள் அச்சுறுத்தும் ஒரு விஷயம். நீங்கள் அதுவாகவே மாறிவிட்டால், இருள் எல்லையில்லாத ஒரு விஷயம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உங்களுக்கு ஒரு குரு இருக்கிறார் என்று நீங்கள் கூறும்போது, உங்களது இருள் அகற்றப்படுகிறது. பிறகு மீண்டும் ஏன் நீங்கள் இருக்கப்போகிறீர்கள்?

இருள் பயங்கரமான விஷயமாக இருக்கிறது. ஏனென்றால், நீங்கள் ஏதோ ஒன்றின் சிறு பகுதியாக இங்கே இருக்கிறீர்கள். நீங்கள் இருளாகிவிட்டால், அது எல்லையில்லாத ஒரு விஷயம். “நீங்கள் எல்லையில்லாதவராக ஆவீர்களாக” என்று நான் உங்களை ஆசீர்வதித்தால், நீங்கள் மகத்தானவராக உணர்கிறீர்கள். “நீங்கள் இருள்மயமாவீர்களாக” என்று நான் ஆசீர்வதித்தால், இது ஒரு சாபம் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். அது அல்ல. இருள் எல்லையற்றது, எல்லையற்ற தன்மையே இருள்.

இருள் அகற்றுபவர் என்றால், அவர் உங்களுக்குள் ஒரு ஒளி விளக்கை ஏற்றுவார் என்பது பொருளல்ல. அறிஞர்களும், ஆசிரியர்களும் உங்களுக்குள் ஒரு விளக்கை ஏற்றிவைக்க முயன்றனர், அதனால் நீங்கள் எதையாவது பார்க்கமுடியும். ஒரு குரு என்பவர் உங்களுக்குள் ஒளிவிளக்கு ஏற்ற முயற்சிப்பவர் அல்ல. அவர் உங்களை எப்படி மறையச்செய்வது என்று பார்க்கிறார். நீங்கள் ஒரு குருவைக் கண்டுவிட்டால், அதன் பொருள் உங்களது இருள் மறைந்துவிடுகிறது. ஏனெனில், நீங்கள் அதன் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறீர்கள். உங்களை இருள் சூழ்ந்திருப்பதில்லை; உங்களுக்கான எல்லையில்லாத தன்மை மட்டும்தான் இருக்கிறது.

என்றென்றைக்கும் மோப்பம் பிடித்துக்கொண்டிருக்க வேண்டாம்

நீங்கள் உங்களது குருவைச் சந்தித்துவிட்டீர்கள் என்றால், மீண்டும் இங்கு இருப்பது பற்றிய கேள்வியே இல்லை. ஆனால் உண்மையிலேயே ஒரு குருவாக நீங்கள் அவரைச் சந்திக்கவில்லையென்றால், “வாசனை” மட்டும் உங்களுக்கு விருப்பமாக இருந்து, ஆனால் அவருக்குள் அடியெடுத்து வைக்கும் துணிச்சல் இல்லாமலிருந்தால், அது வேறு விஷயம். ரோஜாவின் நறுமணத்தை நீங்கள் விரும்பும்போது, ரோஜா எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நீங்கள் செல்கிறீர்கள். ஆனால், சதாகாலமும் மோப்பம் பிடித்துக்கொண்டே இருக்கவேண்டாம். அதற்குள் சென்று எரிவதற்கான தருணம் வந்துவிட்டது என்பதுடன், அவ்வாறு நீங்கள் துணியவில்லையென்றால், அது எந்த நோக்கத்திற்காக இருக்கிறதோ, அதற்கு நீங்கள் அதைப் பயன்படுத்துவதில்லை என்பது பொருள்.

எது உங்களை மகத்தான உயரங்களுக்கு அழைத்துச் செல்லுமோ, அதை சராசரியான முறையில் பயன்படுத்தினால், அது அடிமுட்டாள்தனமும், மிக மோசமானதும் ஆகும்.

வானத்தில் பறக்கும் திறன் பெற்றுள்ள ஒரு விமானம் உங்களிடம் இருக்கும் நிலையில், ஆனால் ஒரு பேருந்தை ஒட்டுவது போல் பயன்படுத்த முடிவு செய்தால், அது தவறா? அது தவறென்று நான் கூறமாட்டேன், ஆனால் அது மோசமானது. ஒரு விமானத்தைக் கார் போல ஓட்டுவது மோசமானது மற்றும் முட்டாள்தனமான செயல். மோசமாகவும், முட்டாளாகவும் இருப்பது தவறானதா? இல்லை. மோசமாகவும், முட்டாள்தனமாகவும் இருப்பது மிகவும் தீமையானது, அது தவறாக இருக்கவேண்டிய தேவையில்லை. எது உங்களை மகத்தான உயரங்களுக்கு அழைத்துச் செல்லுமோ, அதை சராசரியான முறையில் பயன்படுத்தினால், அது அடிமுட்டாள்தனமும், மிக மோசமானதும் ஆகும்.

 

குரு சிஷ்ய உறவு நீடித்து நிற்கும் உறவல்ல. நீங்கள் இந்த உறவை ஏற்படுத்திக் கொண்டால் ஒவ்வொன்றும் நிறைவுக்கு வருகிறது. ஒவ்வொன்றும் நிறைவுக்கு வரும்போது, அனைத்தும் முடியும்போது, பொருள்தன்மையற்ற ஒரு பரிமாணம் நிகழும். இந்த உயிர் அதற்காகத்தான் ஏங்குகிறது. அது ஒரு இயல்பான குறிக்கோள். ஆனால் வழியில் மிக அதிகமான திசைதிருப்பல்கள் வருகின்றன. ஒவ்வொரு முறை திசை திரும்பும்போதும், எப்படி இது ஒரு நல்ல திருப்பம் என்பதற்கு ஆழமான தத்துவங்களை மக்கள் உதிர்க்கிறார்கள்.

ஒரு குரு என்பவர் வெற்று அறை. நீங்கள் அங்கு நுழைந்தால், அன்று என்ன நாடகம் தேவைப்படுகிறதோ அதை அவர் உருவாக்குவார். ஆனால் அவர் உண்மையிலேயே ஒரு வெற்று அறைதான் - நான்கு சுவர்கள், உள்ளே எதுவும் இல்லை

நீங்கள் நண்பர்களுடன் எங்கோ பயணம் செல்கிறீர்கள், வழக்கமாக செல்லும் பாதையில் ஏதோ தடை ஏற்படுகிறது, இப்போது நீங்கள் வழிமாறிப் போக வேண்டும், வண்டியிலுள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வழி சொல்கிறார்கள், அதற்காக வாதமும் செய்கிறார்கள். அப்படி நடக்காதா? தெளிவான வழிகாட்டுதல் இல்லையென்றால், ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்ததை சொல்ல ஆரம்பிப்பார்கள். ஒவ்வொருவரும் நான் சொல்லும் வழிதான் சரியானது என்று வாதிடுவார்கள். புகைக்கும் ஒரு மனிதர் சொல்கிறார், இதுதான் வாழ்க்கை என்று. மது அருந்தும் ஒரு மனிதர் சொல்கிறார், இதுதான் வாழ்க்கை என்று. வேறெதோ இன்பத்தில் இருக்கும் மனிதர் சொல்கிறார், இதுதான் வாழ்க்கை என்று. போதை மருந்து எடுத்துக் கொள்ளும் மனிதர் சொல்கிறார், இதுதான் வாழ்க்கை என்று. அதிகமாக உணவருந்தும் மனிதர் சொல்கிறார், இதுதான் வாழ்க்கை என்று. அவர்கள் அனைவருமே ‘இதுதான் வாழ்க்கை’ என்று சாதிக்கிறார்கள். அதனால்தான் திசை மாறுதல்கள் நிகழ்கின்றன. இதுதான் வாழ்க்கை என்று நீங்கள் ஏதோ ஒன்றை குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள்.

அப்படியானால், நீங்கள் அதை தொடர்ந்து செய்யசெய்ய, அது உங்களுக்கு நன்மைதானே தரவேண்டும், ஆனால் இதில் அப்படி நடக்கவில்லை. நீங்கள் அதிகமாக உண்டால், அதிகமாக மதுவருந்தினால், அதிகமாக புகைத்தால், அதிகமாக சிற்றின்பத்தில் ஈடுபட்டால், வாழ்க்கை மேலும் சிறப்பாக ஆவதில்லை. மக்கள் அவை அனைத்தையும் பயன்படுத்திப் பார்த்து விட்டார்கள். அவை வேலை செய்யவில்லை. எனவே நீங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து செய்யக்கூடிய ஒரே விஷயம், ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான். அந்த ஒரு விஷயம்தான் குரு என்பதும். ஏனெனில் குரு என்பவர் ஒரு வெற்றிடம் மட்டுமே. ஒரு வெற்றிடம் மட்டுமே இருளை அகற்றமுடியும். அது இருளாக இருப்பதால், அங்கு எதுவும் நிகழ்வதில்லை. எங்கு எதுவும் நிகழ்வதில்லையோ, நீங்கள் விரும்பினால், அங்கு எதை வேண்டுமானாலும் நீங்கள் நிகழ்த்தமுடியும்.

ஒரு குரு என்பவர் வெற்று அறை. நீங்கள் அங்கு நுழைந்தால், அன்று என்ன நாடகம் தேவைப்படுகிறதோ அதை அவர் உருவாக்குவார். ஆனால் அவர் உண்மையிலேயே ஒரு வெற்று அறைதான் - நான்கு சுவர்கள், உள்ளே எதுவும் இல்லை. நீங்கள் அதனுள் கால் எடுத்து வைத்தால் நீங்களும் ஒன்றுமில்லாததாக ஆவீர்கள். வேறு வழியே இல்லை. நீங்கள் அவரைப் பார்ப்பதோ அவரைக் கவனிப்பதோ எதற்கும் பயன்தராது. அவருள் நீங்கள் நுழைய வேண்டும். அப்போதுதான் அவர் உங்கள் குரு. அதுவரை, அவர் உங்களை வெறுமனே மகிழ்விப்பார், ஏனெனில் சரியான நாடகத்தை, அன்றைக்கான நாடகத்தை அவர் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்.

 

அதற்குள் நுழைந்துவிட்டால், மீண்டும் வந்து உட்கார்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுபோன்று நடக்காது. அப்படி நீங்கள் நுழையாவிட்டால், தூரத்திலிருந்து வெறுமனே முகர மட்டும் செய்தால், ஒருவேளை குருமார்கள் மீது உங்களுக்கு போதை ஏற்பட்டிருக்கலாம், அதனால்தான் அவரைத் தொடர்கிறீர்கள். ஆனால் உடல் மற்றும் மனத்தை விட ஆழமான ஒன்று உங்களுக்கு நிகழ்ந்தால், பிறகு மீண்டும் வந்து உட்கார்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.