சத்குரு: இன்றைக்கும் கூட, கோரக்கநாதர் இந்தியாவின் மிக நன்றாக அறியப்பட்ட யோகிகளுள் ஒருவராக இருக்கிறார். அவரைப் பின்பற்றுபவர்கள் பொதுவாக கான்ஃபட் – காதுகளில் பெரிய துளை உள்ளவர்கள் – என்றே எப்போதும் அறியப்படுகிறார்கள்.

கோரக்கநாதருடைய குரு மத்ஸ்யேந்திரநாதர். சிவனின் அவதாரமாகவே மக்களால் போற்றப்பட்ட மத்ஸ்யேந்திரநாதர், ஒரு யோகியாகவும், அளவிட முடியாத பரிமாணங்களை உடைய ஞானியாகவும் திகழ்ந்தார். வெறும் மனிதராக மட்டும் அவர் இல்லை; அனைத்தையும் கடந்த நிலையில் அவர் இருந்தார். கோரக்கநாதரைப் போன்ற ஒருசில மிகத் தீவிரமான சீடர்களைத் தவிர மற்ற மக்களிடமிருந்து விலகி ஓர் தனிமையான வாழ்க்கையை அவர் மேற்கொண்டிருந்தார். கோரக்கநாதர் இந்தியாவின் மேற்குக் கடற்கரையை ஒட்டிய பகுதியிலிந்து வந்தவர்; மத்ஸ்யேந்திரநாதரும் அந்தப் பிரதேசத்திலிருந்து வந்தவர்தான். இன்றும்கூட ஒரு மலை அவரது பெயராலாயே அழைக்கப்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இது நிகழ்ந்தது:

ஒருநாள், கோரக்கநாதர், யாரோ ஒருவரைக் காண்பதற்காக அஸ்ஸாம் சென்ற தனது குரு மத்ஸ்யேந்திரநாதர், அதன் பிறகு திரும்பி வராததைக் கண்டார். தனது திருஷ்டியில், அவரது குரு, உடல் இன்பங்களில் திளைத்திருப்பதாகக் கண்டார். “என்னுடைய குரு இந்த நிலையில் எப்படி இருக்கக்கூடும்?” என்று திகைப்புற்றார். எனவே மேற்குக் கரையிலிருந்து அஸ்ஸாமுக்கு, மூன்றாயிரம் கி.மீ. தொலைவுக்கும் அதிகமான தூரத்தையும் நடந்தே கடந்து செல்லத் துவங்கினார். அஸ்ஸாம் வரை நடந்து சென்ற அவர், தனது குரு, ஒரு விலைமாதுவின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தனது மடியில் இரண்டு பெண்களுடன் கொஞ்சியவாறு, உடல் இன்பத்தில் திளைத்துக்கொண்டிருப்பதைக் கண்டார். கோரக்கநாதரால் இதை நம்பவே முடியவில்லை. “மத்ஸ்யேந்திரநாதருக்கு இந்நிலை எவ்வாறு நிகழமுடியும்? அவர் சிவனின் உருவாகவே இருப்பவராயிற்றே!” என்று எண்ணினார். எத்தனையோ பல ஆற்றல்மிக்க விதங்களில் மத்ஸ்யேந்திரநாதரை, கோரக்கர் உணர்ந்திருக்கிறார், ஆனால் இங்கே இந்த மனிதர் இரண்டு விலைமாதர்களுடன் வீற்றிருக்கிறார்.

அதன்பின் கோரக்கநாதர் , “நீங்கள் என்னுடன் வரவேண்டும்”, என்று குருவிடம் கூறி, அந்த விலைமாதரிடம் கடுமை காட்டி விரட்டினார். அவர் தனது குருவை வெளியில் இழுத்துவந்து, தன்னுடன் அழைத்துச் சென்றார். வரும்வழியில், மத்ஸ்யேந்திரநாதர் நீராடச் சென்றார். அப்போது தனது கைப்பையை கோரக்க நாதரிடம் கொடுத்து, “இதை கவனமாகப் பார்த்துக்கொள். அதற்குள் விலைமதிப்பில்லாத ஒன்று உள்ளது” என்று கூறிவிட்டு நதியில் குளிக்கச் சென்றார். அந்தப் பையானது மிகவும் கனமாக இருந்ததால், கோரக்கநாதர் அதைத் திறந்து பார்த்தார். அதில் இரண்டு பெரிய தங்கக் கட்டிகள் இருப்பதைக் கண்டார். இதயம் நொறுங்கிப்போனார் – “எனது குருவுக்கு என்னதான் நிகழ்ந்துள்ளது? முதலில் விலைமாதருடன் இருந்தார், இப்போது தங்கத்தை சேகரிக்கிறார்! அவர் விரும்பினால், ஒரு பாறையின் மீது சிறுநீர் கழித்து, பாறை முழுவதையும் தங்கமாகவே மாற்றமுடியும்; அந்த அளவுக்கு அவர் மாந்திரீக சக்தி கொண்டிருக்கிறார். ஆனால் இந்த மனிதர் இரண்டு தங்கக் கட்டிகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறாரே? இது ஏன்?“ என்று எண்ணி, அந்த இரண்டு தங்கக் கட்டிகளையும் எடுத்து காட்டுக்குள் வீசியெறிந்துவிட்டார். அதன் பிறகு அவர்கள் திரும்பி நடந்துசென்றனர்.

தனது குரு தன்னை மறந்த நிலையில் தொலைந்து போகிறார் என்ற பெரும் வேதனையில் இருந்த கோரக்கநாதர், இப்போது தன் குருவைக் காக்க மூன்றாயிரம் கிலோமீட்டர் நடந்து சென்றதைப் பெருமிதமாக உணர்ந்தார். இந்தப் பெருமிதம் அவருக்குள் வந்தபோது, மத்ஸ்யேந்திரநாதர் தமது கையை கோரக்கநாதரின் தலை மீது வைத்தார். திடீரென்று, கோரக்கநாதர் தாம் இருந்த இடத்திலேயே உட்கார்ந்திருப்பதை உணர்ந்தார். அவர் அஸ்ஸாமுக்கு நடந்து செல்லவுமில்லை, விலைமாதர்களைப் பார்க்கவுமில்லை, தங்கத்தையும் பார்க்கவில்லை – ஒன்றுமேயில்லை. இவை அனைத்தும் அவரது மனத்தில் நிகழ்ந்தவையாகவே இருந்தன. ஆனால் அவை எல்லாமே அவருக்கு நிதர்சனமாகவே தென்பட்டன – அவர் உண்மையாகவே நடந்து, அங்கே சென்று அதைப் பார்த்திருந்தார். இவை அனைத்தும் அவர் குருவின் மாந்திரீக சக்தியின் காரணமாகவே நிகழ்ந்திருந்தன. மத்ஸ்யேந்திரநாதர் அவரைச் சுற்றி ஒவ்வொன்றையும் உண்மையாக உருவாக்கியிருந்தார். கோரக்கநாதர் முழுமையாக உடைந்துபோனார் – “ இவை எல்லாவற்றையும் நான் செய்தேனா... என் குரு விலைமாதருடன் இருப்பதாக நான் கற்பனை செய்தேன். என் குரு தங்கத்தின் மீது மோகம் கொள்வதாக நான் கற்பனை செய்தேன்”. அவர் வலியின் உச்சத்திற்குச் சென்றார். பின்னர் மத்ஸ்யேந்திரநாதர் கூறினார், “பரவாயில்லை, என்னைக் காப்பாற்றுவதற்காக மூன்றாயிரம் கிலோமீட்டர் நடப்பதற்கு குறைந்தபட்சம் நீ விருப்பம் கொண்டிருக்கிறாய். அது உன்னைக் குறித்த மகத்தான விஷயமே; அந்த உணர்வை உனக்குள் அப்படியே தக்க வைத்துக்கொள்”.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.