சத்குரு: கடந்த சில வாரங்களாக நமது புதிய புத்தகத்தில் மூழ்கியிருந்தேன் என்றே சொல்லலாம். மஹா‌சிவராத்திரி அன்று வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் தலைப்பு "Death; An Inside Story". இந்தப் புத்தகம், யாரெல்லாம் மரணத்தை சந்திக்க இருக்கிறார்களோ, அவர்களுக்கானது மட்டுமே!

புத்தகத்தை நான் முழுவதுமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். பொதுவாக மக்கள், புத்தகத்திலிருந்து விஷயங்களை சூழ்நிலைக்குத் தொடர்பில்லாமல் எடுத்துகொள்வார்கள். அதனால், உயிரின் ஆழமான பரிமாணங்களைப் பற்றி பொதுவெளியில் கூறப்படவிருக்கும் எல்லா முட்டாள்தனமான விஷயங்களையும் நான் ஆராய்ந்துகொண்டிருக்கிறேன்.

ஆனால், அப்படி நடந்தாலும் பரவாயில்லை. அரசியல் ரீதியாக நான் சரியாக இருக்கவேண்டிய தேவையில்லை என்ற நிலையை என் வாழ்க்கையில் நான் அடைந்துவிட்டேன், நான் என்ன கூற விரும்புகிறேனோ அதனைக் கூறுவேன். என் ஆரம்பகால வாழ்க்கையில் நான் எல்லா விஷயங்களைப் பற்றியும் பட்டவர்த்தனமாகவே பேசினேன், ஆனால் தியானலிங்கம் நம் மனதில் இருந்ததால், சிறிது சாதுர்யம் அடைந்து, அதே விஷயங்களை அலங்கரித்து, அழகிய ஆடை அணிவித்துப் பேச நேர்ந்தது. நானும் நன்றாக ஆடையணிந்துகொள்ளத் தொடங்கினேன்!. இல்லையென்றால், எல்லா விதத்திலும் நாம் வெளிப்படையாகவே இருந்தேன். இந்தப் புத்தகத்தின் பெரும்பாலான விஷயங்கள் மிகவும் வெளிப்படையாகவும், நேரடியாகவும் இருந்த அந்த காலகட்டத்திலிருந்து வந்தவை.

நான் இப்போது இந்தத் தளத்தில் இருப்பது ஏனென்றால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உலகம் நேரடித் தாக்குதலுக்குத் தயாராக இருப்பதை நான் உணர்கிறேன்.

மீண்டும் ஒருமுறை, சாதுர்யமாக இருப்பதற்கான காலம் முடிவுக்கு வருகிறது. ஒருவேளை, இன்னும் ஒரு வருடத்திற்கு நாம் சற்று அதிகமாக தந்திரம் செய்யக்கூடும். ஆனால் அதற்குப் பிறகு நாம் எல்லா சாத்தியமான முயற்சிகளிலும் முழு வீச்சில் இறங்கப்போகிறோம், ஏனென்றால் சமூகத்தின் யதார்த்தங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன, ஆனால், யாரோ ஒருவர் உண்மை என்னவென்பதைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. தங்களுக்குள் ஆழமான பரிமாணங்களை உணர்ந்த பெரும்பாலான உயிர்களும், இந்த பூமியில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், பொதுவாகவே அவர்களைப் புரிந்துகொள்ளக்கூட இயலாத நிலையே இருந்திருக்கிறது. நமக்கு அப்படிப்பட்ட மோசமான‌ நிலை இல்லை. நாம் நன்றாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். குறைந்தபட்சம் சிலராவது அதைப் புரிந்து கொள்கின்றனர். சிலர் அதை விரும்புகின்றனர்,, சிலர் அதை வெறுக்கின்றனர். ஆனால் பெரும்பாலான உயிர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் புரிந்து கொள்ளப்படவே இல்லை. பொதுவாக, மக்கள் அவர்களைக் கொல்வதற்கு முயன்றனர். அவர்களை வேட்டையாடினார்கள், விஷம் கொடுத்தார்கள், சிலுவையில் அறைந்தார்கள். இதுதான் இந்த உலகத்தின் வரலாறாக இருந்திருக்கிறது. அந்த கோணத்திலிருந்து பார்த்தால் நாம் மிக நன்றாகவே செயல்படுகிறோம். சில இன்டெர்நெட் வல்லுனர்களின் கருத்துப்படி, இதுவரையில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் நமது வீடியோக்களை பார்த்திருக்கிறார்கள். ஆனால் எனது இலக்கின்படி அது வெறும் 16 சதவிகிதம்தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதிரடி ஆட்டத்திற்கான நேரமிது

தன்னை உணர்ந்த ஒருவர் எப்போது வந்தாலும், உண்மையான சூட்சும புத்தியுடன் இருந்த அவர்கள் தங்கள் வாயைத் திறக்கவே இல்லை. என்னைப்போல அதீத ஆர்வமிகுதியில் இருந்தவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டார்கள், அதன் விளைவாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களுள் சிலர் போதிய புத்திசாலித்தனத்துடன் அதை வித்தியாசமான வழிகளில் மூடி மறைத்து, சமூக வழிமுறைகளின் ஒரு பகுதியாக்கிவிட முயற்சித்தார்கள். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, அவர்கள் கூறிச்சென்ற ஒவ்வொன்றும் ஆயிரம் விதமான வழிகளில் தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டதில், மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு அதை வளைத்துக் கொண்டார்கள்.

இன்றைக்கு நாம் என்ன பேசினாலும், அது அப்படியே பதிவு செய்யப்படுகின்ற ஒரு சாதகமான சூழல் நமக்கு இப்போது இருக்கிறது‌. மக்களால் எளிதில் அதைத் தவறாகப் புரிந்து கொள்ளமுடியாது ஏனென்றால் நம்மால் உடனே வீடியோவை மறுஒலிபரப்பு செய்துவிட முடியும். கடந்த காலங்களில் நாம் பேசத் தயங்கினோம் என்பது கிடையாது, ஆனால் நெருக்கமான வட்டங்களைத் தவிர, சில நேரங்களில் ஒரு சில விஷயங்களைப், பேசுவதைத் தவிர்த்து வந்தோம். ஆனால் ஒரு நூறு கோடி மக்கள் நமது வீடியோக்களை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது ஒட்டுமொத்த உலகமும் நமக்கு நெருக்கமான வட்டமாக இருக்கிறது. இனி இது ஆசிரமவாசிகளுக்கு மட்டும் உரித்தானது அல்ல.. உலகின் பல பகுதிகளிலும், இதுவரையில் தங்கள் வாழ்க்கையில் என்னை நேரில் பார்த்திராத மக்கள் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் எனக்கு மிக நெருக்கமானவர்களாகவும், அந்தரங்கமானவர்களாகவும் இருக்கின்றனர்.

எனது இதயத்திலும் மனதிலும் அவர்கள் ஏற்கனவே நெருக்கமானவர்களாகவே இருந்தார்கள், ஆனால் இப்போது, அவர்களின் இதயத்திலும் மனதிலும்கூட, நான் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறேன். இனி மேலும் இங்கே அமர்ந்திருப்பவர்களிடம் மட்டும் நேரடியான, கடினமான விஷயங்களை நாம் பேச முடியாது. அனைவரிடமும் நாம் பேசுவதற்குத் துவங்க வேண்டும். ஜீரணிக்க முடியாமல் இருப்பவர்களுக்கு அது கழிப்பறைக்குச் செல்லவேண்டியிருக்கும்!

தங்களுக்குள் ஆழமான பரிமாணங்களை உணர்ந்த பெரும்பாலான உயிர்களும், இந்த பூமியில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், பொதுவாகவே அவர்களைப் புரிந்துகொள்ளக்கூட இயலாத நிலையே இருந்திருக்கிறது.

நான் இப்போது இந்தத் தளத்தில் இருப்பது ஏனென்றால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உலகம் நேரடித் தாக்குதலுக்குத் தயாராக இருப்பதை நான் உணர்கிறேன். சிறுவயதிலிருந்தே எல்லாவிதமான விஷயங்களையும் அளவுக்கதிகமாக பார்த்ததில் மக்கள் இப்போது எதற்கும் அசைந்துகொடுக்காதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பதினான்கு வயதை அடைவதற்குள் நன்றாக இறுகிவிடுகிறார்கள். உங்களது பதினான்கு வயதில், நீங்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அந்த எல்லா விஷயங்களையும் இன்றைக்கு ஒரு எட்டு வயது பையனோ, பெண்ணோ அறிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் கடினமானவர்களாக இருக்கின்றனர், ஆகவே அவர்களிடம் மென்மையான விஷயங்களைப் பேசுவதில் பயனில்லை.

Death book ஒரு வலிமை மிகுந்த வாக்குமூலமாக இருப்பதுடன், அந்த மொழியை மெருகேற்றாமல், அது எப்படிச் சொல்லப்பட்டதோ அதை அதன் போக்கிலேயே ஆக்கப்படுத்தியிருக்கிறோம். ஏனென்றால், அந்தக் கணத்தில் ஒரு உண்மையான கேள்வியைக் கேட்டிருந்த, ஒரு உண்மையான சாதகருடன் அது பேசப்பட்டது. இப்போது உலகத்திடம் நாம் அதே விதத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம்.. இது பெருத்த சலசலப்பை ஏற்படுத்தப்போகிறது.

ஆனால் மனிதகுலத்தின் வாழ்வில், இது மிக முக்கியமான‌ நேரம். இந்த அளவுக்கான தொடர்புக் களம் மற்றும் வெளிப்பாட்டை மனித குலம் ஒருபோதும் பெற்றிருந்ததில்லை. இது நமக்கு கிடைத்திருக்கும் 'சூப்பர் ஓவர்.'. நாம் சந்திக்கும் ஒவ்வொரு பந்தும் ஆறு ரன்களைக் குவிக்கும்படி நாம் அடித்து விளயாடத் தேவைப்படுகிறது சிலர் இதை விரும்பமாட்டார்கள். விழிப்புணர்வில்லாமல் இருக்கும் யாரோ ஒருவர் பந்தினால் தாக்கப்படக்கூடும், ஆனால் மிச்சமிருக்கும் கூட்டம் இதை விரும்பும்.

இது மக்கள் விரும்புவார்களா, இல்லையா என்பதைப்பற்றியது அல்ல. அவர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல.. அவர்கள் காதல், பாலுறவு என்று தேடிக்கொண்டிருக்கலாம், அமேசானில் எதையாவது வாங்குவதற்குக்கூட முயற்சி செய்துகொண்டிருக்கலாம், அல்லது அவர்கள் ஞானமடைதலுக்காகத் தேடிக்கொண்டிருக்கலாம் - அவர்கள் தேடிக்கொண்டிருப்பது என்னவாக இருந்தாலும், அவர்கள் உணர்த்தப்பட வேண்டும். நாம் பெற்றிருக்கும் மக்கள் தொகைக்கும், நாம் அடைந்திருக்கும் இந்த அளவுக்கான வல்லமைக்கும் உள்முகமாக , இப்போது நாம் திரும்பாவிட்டால், இதுவரை மனித குலம் பார்த்திராத மிகப்பெரும் சீரழிவாகத்தான் நாம் இருக்கப்போகிறோம்.

ஒரே பிரச்சினை

இந்த உலகில் இருப்பது ஒரே ஒரு பிரச்சினைதான் - மனிதர்கள். மனிதரிடம் இருக்கும் ஒரே பிரச்சினை அவர் விழிப்புணர்வு இல்லாமலும் நிர்ப்பந்தமான நிலையில் இருப்பதும்தான். இந்த விழிப்புணர்வற்ற நிலையும், நிர்ப்பந்தமும் ஒரு யுத்தமாகவோ அல்லது ஒரு வீட்டுச் சூழலின் வடிவிலோ தன்னை வெளிப்படுத்திக்கொள்வது என்பது ஒரு பொருட்டில்லை. இவை மனிதர்களின் நிர்ப்பந்தமான நடத்தையின் வெவ்வேறு வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. உங்களுக்கு இந்த அளவுக்கான புத்திசாலித்தனமும், விழிப்புணர்வும், திறனும் வழங்கப்பட்டிருப்பது ஏனென்றால் நீங்கள் தன்னுணர்வான‌ ஒரு செயல்முறையாக உருவெடுப்பீர்கள்‌ என்று இயற்கை எதிர்பார்த்தது. அதை நீங்கள் தன்னுணர்வுடன் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் ஒரு முழுமையான வளர்ச்சியடைந்த மூளை உங்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் பூமியின் மாபெரும் சக்திகளாகிய விஞ்ஞானம், தொழில்நுட்பம், அரசியல், மதம், தொழில்துறை, வர்த்தகம் என்று நீங்கள் பார்க்கும் அனைத்தும் கட்டாயத்திலும், விழிப்புணர்வு இல்லாமலும் செயல்படுகிறது. எனவே இங்கு வழங்கப்படும் போதனை அதிர வைப்பதாக இருக்கவேண்டியது முக்கியமானதாகிறது, இல்லையென்றால் அதை எப்படி அலட்சியப்படுத்துவது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இது மாற்றத்திற்கானது மட்டுமல்ல. எப்படியிருப்பினும், உண்மை அப்படித்தான் இருக்கிறது. உண்மை அதிர்ச்சியாக உள்ளது.. தாங்கள் நேசிப்பவர்களிடம்கூட மக்கள் பொய் பேசுவது ஏனென்றால், ஒவ்வொரு சிறிய விஷயம் குறித்த உண்மையும் அதிச்சியாக இருக்கிறது. உண்மையை விழுங்கி, நலமாக இருக்கும் ஒரு ஜீரண மண்டலம் வெகு சில மனிதர்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.. அவர்களைப் பற்றிய உண்மைகளையே நீங்கள் அவர்களிடத்தில் பேசினால் அவர்கள் அசாதாரணமாகிவிடுவார்கள்,. ஏனென்றால், நல்லவிதமாக இருப்பதற்கு, நாகரிகம் மற்றும் மதம் எனறு கூறப்படுபவைகளால் அவர்களுக்கு எப்போதுமே கற்றுக் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. நீங்கள் ஒரு முழுமையான மனிதராக மலர்ந்தால், நல்லவிதமாக இருக்கவேண்டியதில்லை. அது நல்லவிதமாகத்தான் இருக்கிறது, அவ்வளவுதான். ஒரு மலர் மலர்திருக்கிறது. அது உங்களிடம் நல்லவிதமாக இருக்க முயற்சிப்பதில்லை. அது நன்றாக இருக்கிறது. அதற்கே உரிய இயல்பினால் அது அற்புதமாக இருக்கிறது.

உங்களை உறுதியாகத் தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள்!

உங்களையே நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் ஏனென்றால் பல செயல்முறைகள் நடந்துகொண்டிருக்கின்றன.. பல இடங்களிலும் நாம் நெருப்பைத் தயார் நிலையில் வைத்திருக்கிறோம்., மெதுவாக நாம் தீப்பற்றச் செய்வோம்.. எதிர்பாராத விதமாக சுற்றுச்சூழலையும் நாம் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருக்கிறது. அது நமக்கானதாக இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஆனால், எனக்கு விருப்பமில்லை என்றாலும், மக்கள் என்னை மரம் நடுபவராக குறிப்பிடும் அளவுக்கு அது பிரம்மாண்டமான ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இப்போது, இலட்சம் கோடி மரங்கள் நடும் இந்தப் பிரச்சாரத்துடன், நான் மரம் நடுபவர் என்ற பட்டப்பெயருக்கு ஆளாகி விடுவேன்‌. என்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்ள‌, ஆன்மீக அம்சத்தை சற்று கூடுதலான வலிமையுடன் நான் கூறத் தேவைப்படுகிறது. இல்லையென்றால், நான் மரம் நடுபவன் என்றே மக்கள் என்னை நினைப்பார்கள். மரம் நடுபவராக இருப்பது மோசமான தொழில் அல்ல,. ஆனால் நான் செயல்படுவது, மரம் நடுவதற்காக அல்ல, மக்களை மலரச்செய்வதற்காக,

ஒரு முறை இப்படி நடந்தது,. ஆர்வமிக்க ஒரு விற்பனைப் பிரதிநிதி புதிதாக உருவாகிக் கொண்டிருந்த ஒரு குடியிருப்புப் பகுதிக்கு சென்றார். ஒருசில வீடுகளில் மக்கள் குடியேறி இருந்ததைக் கண்டதும், அந்தப் பகுதிக்குச் சென்றார். அவரது 'வாக்குவம் கிளீனரை' விற்கும் முதல் நபர் அவராகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினார். அவர் ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். ஒரு பெண்மணி கதவைத் திறந்தார். அந்த வீட்டுக்குள் நுழைந்த விற்பனைப் பிரதிநிதி, ஒரு பையிலிருந்து மொத்தமாக குதிரைச் சாணத்தை எடுத்து, அங்கே புதிதாக விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்பு முழுவதிலும் அதனை வீசினார். பிறகு அந்த வீட்டுப் பெண்மணியிடம், "அம்மா, எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த வாக்குவம் கிளீனர் அற்புதமானது. எல்லாவற்றையும் இருந்த இடமே தெரியாமல் மிகச் சுத்தமாக மாற்ற வல்லது, எந்தக் கறையும்,, சிறிதளவு துர்வாசனையும் கூட இல்லாமல்,உங்கள் தரை விரிப்பை நறுமணம் கமழச் செய்துவிடும். ஐந்தே நிமிடங்களில் இந்த சாணக் குப்பையை நான் சுத்தம் செய்துவிடுவேன். என்னால் அப்படிச் செய்ய முடியாவிட்டால் இந்த குதிரைச் சாணம் முழுவதையும் நானே விழுங்கிவிடுவேன்", என்றார். அந்தப் பெண்மணியும், "சற்று காத்திருங்கள்,. நான் சிறிதளவு "தக்காளி சாஸ்" எடுத்து வருகிறேன்", என்றார். "ஏன்?" என்று கேட்டார் விற்பனை பிரதிநிதி. "ஏனென்றால். இந்தப் புதிய வீட்டுக்கான மின்சார இணைப்பு இன்னமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை”, என்றார் அப்பெண்மணி.

நீங்கள் சாணத்தைச் சாப்பிடக் கட்டாயப்படுத்தப்பட்டால், தக்காளி சாஸ் உதவுகிறது. ஆனால் இந்த தக்காளி சாஸ் இருக்கும் காரணத்தால், உலகத்தில் அதிகளவு சாணம் விழுங்கப்படுகிறது. தக்காளி சாஸ் இல்லாமல் இருந்திருந்தால், இது, அது அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிடும். ஒரு சிறிதளவு தக்காளி சாஸ் இருக்கும் காரணத்தாலேயே, எது சாணம், எது உண்மையான‌ சத்துணவு என்பதை உங்களால் பிரித்தறிய முடியவில்லை. எனவே நாம் தக்காளி சாஸை எடுத்து விடுவோம்.