சத்குரு : மனிதர்களாகிய நாம் பலவிதமான செயல்களைச் செய்ய முடியும். ஆனால், நம்முடைய செயல்பாட்டின் தன்மை என்னவாக இருந்தாலும், இன்றைய உலகில் லாப நோக்கம் கொண்ட மிகப்பெரிய வணிகர்கள் கூட மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதைப் பற்றி பேசுகிறார்களே தவிர, லாபம் குறித்து பேசுவதில்லை. தாக்கம் என்பது பக்குவமில்லாத முறையில் கூறப்படுவது. உண்மையில், “நாம் யாரோ ஒருவரது வாழ்க்கையைத் தொட விரும்புகிறோம்.” தாக்கத்தைப் பற்றி பேசுபவர்கள் வியாபாரம் செய்பவர்களாக இருக்கலாம் அல்லது யாரோ ஒருவருடன் தனிப்பட்ட உறவுநிலையை உருவாக்குவதாக இருக்கலாம். முக்கியமாக ஏதோ ஒரு கட்டத்தில், சிறிது நேரத்துக்கு அடுத்தவருடனான எல்லையை உடைப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள்.

ஒரு யோகியாக இருப்பது என்னவென்றால், உங்கள் தனிப்பட்ட தன்மையின் எல்லைகளை அழிக்கும் உறுதியுடன் இருப்பது. ஏதோவொரு வகையில், பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளிலிருந்து உங்களைத் தனிமைப்படுத்தும் கோடுகளை அழிக்க விரும்புகிறீர்கள். யோகா என்றால், அதை அறிவியல்பூர்வமான வழியில் அணுகுவது. நீங்கள் பெரிய அளவில் எந்தச் செயலையும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் பாலுறவில் ஈடுபட வேண்டியதில்லை; நீங்கள் எதிலும் சிக்கிக்கொள்ள வேண்டியதில்லை. உங்கள் எல்லைகளை நீங்கள் உணர்வுபூர்வமாக அழித்துவிட்டு, வெறுமனே இங்கே உட்கார்ந்தால், எந்தவொரு செயலையும் செய்யாமல் அதைவிட இலட்சோபலட்சம் மடங்கு அதிகமாக நீங்கள் உணர முடியும், அது அவ்வளவு அற்புதமானது. யோகா என்றால் உங்கள் எல்லைகளை அழிப்பது என்பது பொருள்.

இறுதிகட்ட முயற்சிகள்

உலகில் நீங்கள் காணும் அனைத்து மனித முட்டாள்தனங்களுக்கும் உங்கள் இறுகிப்போன எல்லைகள்தான் காரணம். மக்கள் தங்கள் எல்லைகளை எவ்வளவு வலிமையாக்கி வைத்துள்ளனர் என்றால், இரண்டு பேர் சந்தித்தாலே அவர்கள் மோதிக்கொள்வார்கள். யோகா என்றால், உங்கள் உடம்பை முறுக்குவது அல்லது திருப்புவது என்று அர்த்தமல்ல; இது எடைக் குறைப்புத் திட்டம் அல்லது மன அழுத்த நிவாரணத் திட்டம் அல்ல. அதாவது, "நான் என்ற தனிநபரும்-பிரபஞ்சமும்" என்ற முட்டாள்தனத்தை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்று அர்த்தம். உங்கள் உயிரின் மூலமாக இருக்கும் ஒன்றுடன் நீங்கள் போட்டி போடுவது முற்றிலும் முட்டாள்தனமான ஒன்று. அதை உணர ஆரம்பிக்கும்போது, யோகாவை நோக்கி நீங்கள் நகர்கிறீர்கள்.

ஒரு யோகியாக இருப்பது என்னவென்றால், உங்கள் தனிப்பட்ட தன்மையின் எல்லைகளை அழிக்கும் உறுதியுடன் இருப்பது

நீங்கள் அதை எப்படி செயல்படுத்துகிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. அதனை நீங்கள், தாக்கம் என்று அழைக்கலாம் மற்றும் சேவை என்று அழைக்கலாம், நீங்கள் அதை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அடிப்படையில், “நான் மற்றும் பிரபஞ்சம்” என்ற இந்த இரட்டை நிலைப்பாடு, ஒரு முட்டாள்தனமான போட்டி என்பதை உணரும்போது, நீங்கள் உங்கள் எல்லைகளைத் தளர்த்தத் தொடங்குகிறீர்கள் - இதுதான் யோகா. அதாவது காயப்படாமல்-பாதுகாப்பான வழியில் அதை அணுகுவது என்று பொருள். இரண்டு பேர் காதலிக்கும்போது அல்லது திருமணம் செய்து கொள்ளும்போது, அவர்கள் தங்கள் எல்லைகளை உடைத்தார்கள். அப்போது அவர்கள் யோகாவில் இருப்பதாக நினைக்கிறார்கள், ஆனால், சிறிது காலம் கழித்து, அது காயம்படாத-பாதுகாப்பான உறவு அல்ல என்று புரிகிறது.

அரிதான தருணங்களில், அவர்கள் எல்லைகளை அழித்திருக்கலாம். மீதமுள்ள நேரம், அது ஒரு பரஸ்பர ஆதாயத் திட்டமாகத்தான் இருக்கிறது. அது எந்த வடிவத்தில் இருந்தாலும், அடிப்படையில் யோகா என்பது இதுதான்: நீங்கள் முதலில் உங்களுக்கே உரிய எல்லைகளை உடைப்பதில் ஆர்வம் கொள்கிறீர்கள். அதனால் கிடைக்கப்பெறும் சந்தோஷத்தை நீங்கள் உணர்ந்துவிட்டால், அதன்பிறகு உங்களைச் சுற்றிலும் அது நிகழ்வதற்கு விரும்புகிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாழ்க்கையின் முரண் நகை

வாழ்வின் அடிப்படையான முரண் நகை என்னவென்றால் – வாழ்வின் ஆதார கருவிகளே நமக்கு எதிராகத் திரும்புகின்றன. இந்த உடல் இல்லாமல், இங்கே எப்படி வாழ்வது என்று நமக்குத் தெரியாது. இந்த மனம் இல்லாமல், இங்கே எப்படி வாழ்வது என்று நமக்குத் தெரியாது. உடலும் மனமும் வாழ்வின் மிக அடிப்படையான இரண்டு கருவிகள். ஆனால், இந்த இரண்டுமே இப்போது மக்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளன. நீங்கள் அதை துன்பம், கவலை, நோய் அல்லது எத்தனை பெயர்கள் கொண்டும் அழைக்கலாம். அடிப்படையில், வாழ்க்கையின் இரண்டு அடிப்படை கருவிகள் உங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளன.

இந்த இரண்டு விஷயங்களையும் உங்களுக்கு எதிர்ப்பாக இல்லாமல், உங்களது நலனுக்காக வைத்திருப்பதுதான் நமது மிக அடிப்படையான பொறுப்பு. உடலும் மனமும் நமக்கு எதிராக திரும்பினால், மனித ஆற்றல் உணரப்படாது. உங்களுக்கு தலைவலி இருப்பதாக வைத்துக்கொள்வோம். பெரியதாக ஒன்றுமில்லை, புற்றுநோய் அல்ல. ஒரு தலைவலியேகூட உங்கள் வாழ்க்கையை அழித்துவிடும். அல்லது உங்கள் நாசி எப்போதுமே அடைப்பாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பெரிதாக எதுவுமில்லை, ஒரு ஜலதோஷம் அவ்வளவுதான். முதலில் நீங்கள் சொல்வீர்கள், “என்ன பெரிய விஷயம்” என்று. ஆனால், அது சில வருடங்கள் நீடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டதைப் பார்ப்பீர்கள். புற்றுநோயின் காரணமாக அல்ல, உங்கள் இதயம் உடைந்த காரணத்தினால் அல்ல, ஒரு சாதாரண ஜலதோஷத்தினால் உங்கள் வாழ்க்கை இழக்கப்படுகிறது. இந்த உடல், இந்த மனம் உங்களுக்கு எதிராக மாறினால், அதன்பிறகு, மனிதராக இருப்பதென்றால் என்ன என்பதன் முழு ஆழத்தையும் பரிமாணத்தையும் நீங்கள் கண்டறிய முடியாது.

எல்லாவற்றையும் உங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்வது

சிலருக்கு இந்தப் பிரச்சினை உள்ளது - அவர்கள் இருக்கும் முறையின் காரணத்தினாலேயே பிரபஞ்சமே இவர்களுக்கு எதிர்ப்பாக இருக்கிறது. உங்களுக்கு அப்படிப்பட்ட எதிர்ப்பு இருக்கும்போது, நீங்கள் வாழ முடியாது. யோகா என்றால் எல்லாவற்றையும் - உடல், மனம், இருப்பு - நம்முடன் இணைத்து செயல்படுவது; அல்லது அதனுடன் நாம் இணைந்து செயல்படுவது இன்னும் மேலானது. இப்போது, ஏதாவது நிகழ்ந்தால், அது அற்புதம்; எதுவும் நிகழவில்லை என்றால், அது மிகவும் அற்புதம். இன்று செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருந்தால் - அற்புதம்! செய்வதற்கு எதுவும் இல்லை என்றால் மிக அற்புதம்!. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு, ஏதாவது நிகழ்ந்தால், அது ஒரு பிரச்சினை; எதுவும் நிகழவில்லை என்றால், அது ஒரு மிகப்பெரிய பிரச்சனை.

யோகா என்றால் நீங்கள் எல்லாவற்றிலும் ஒரு பகுதியாகிவிடுகிறீர்கள். அதன்பிறகும் நீங்கள் ஒரு தனிப்பட்ட இருப்பைக் கொண்டிருந்தாலும், திறந்த, நுண்துளையுடைய எல்லைகளுடன் இருக்கிறீர்கள். இதன் காரணமாக, ஏதோ ஒரு வகையில், நாம் அனைத்துமாகிவிட்டோம் என்பதுடன், எல்லாவற்றுடனும் நாம் ஒத்திசைவுடன் இருக்கிறோம். உங்கள் எல்லைகளையும், உங்கள் இருப்பையும் உண்மையாகவே திறந்த நிலையில் வைத்தால், படைப்பின் மூலம் உங்களுடன் செயல்பட்டு, நிகழத்தேவையானது என்னவோ அது நிகழும். யோகா என்பதன் பொருள் இதுதான் - உங்கள் எல்லைகளை நீங்கள் தளர்த்திவிட்ட காரணத்தால், எல்லாவற்றுடனும் ஒத்திசைவாக இருக்கிறீர்கள். நீங்கள் எல்லைகளைத் துளைகளாக்கிவிடுவதால், உயிர் கசிந்து உள்ளிறங்குகிறது, அப்போது உங்கள் உடலிலும், மனதிலும் நீங்கள் ஒரு கைதியாக இருப்பதில்லை.

 

பெரும்பாலான மக்கள் தங்கள் உடல் மற்றும் மனதின் கைதிகளாக இருக்கின்றனர். உங்கள் உடலும் மனமும் உயிர் குடிகொண்டிருக்கும் மேடைகளாக இருப்பதற்குப் பதிலாக, அவை உள்ளே இருக்கும் உயிருக்குச் சிறைச் சுவர்களாக இருக்கின்றன. அதுவே, வாழ்வதற்குத் தகுதியானதை போல் உணர்வதற்காக நீங்கள் எப்போதும் அதை அந்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டியுள்ளது; அதற்கு நீங்கள் மட்டும் அல்ல, உடனிருக்கும் ஒரு சிலரும் அதனுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். யோகிகள் தனிமையிலேயே இருந்ததன் காரணம், அவர்கள் அசட்டையினால் அல்ல, மாறாக அவர்கள் தாங்களாகவே சுகமாக இருந்தனர். அவர்களின் சமகால சமூகம் சரியானபடி ஆர்வம் காட்டியிருந்தால், அவர்கள் அநேகமாக சமூகத்துக்குள் வந்திருப்பார்கள்.

வெளிப்படையான தலைமுறை

இன்றைக்கு, நாம் மிக வெளிப்படையான ஒரு தலைமுறையாக இருக்கக்கூடிய, வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இருக்கிறோம். உதாரணமாக, என் தந்தையின் தலைமுறையில், அவர்களது வாழ்க்கையில் நிகழும் தனிப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் அதைப் பற்றி யாரிடமும் பேசவில்லை; அதைத் தங்களுக்குள்ளேயே கையாண்டுகொண்டு, தங்கள் வாழ்வைத் தொடர்ந்தனர். பின்னர் என் தலைமுறை வந்தது. நான் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, வெளியிலேயே தோட்டத்தில் அமர்ந்திருப்பேன். ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவர் வந்து, அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக் கதையையும் என்னிடம் கூறுவார். அது ஒன்றும் சுவாரஸ்யமான வாழ்க்கை அல்ல, ஆனால் அவர்கள் சொல்ல விரும்பினர்: எல்லா முட்டாள்தனமான விஷயங்களும் - அவர்கள் பெற்றோர், கல்வி, வறுமை, பெண் சினேகிதி அல்லது ஆண் சினேகிதன் போன்றோருடன் எப்படி துன்பம் அனுபவித்தனர் என்று கூறுவார்கள். அந்த நேரத்தில், இந்த எல்லா விஷயங்களையும் நான் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தேன் - அனைவருக்கும் ஒரு பிரச்சனை இருந்தது. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாததால், நான் அசாதாரணமாக இருந்ததுபோல் தோன்றியது.

எனது தந்தையின் தலைமுறையினர் தினசரிக் குறிப்புகள் எழுதுவது வழக்கம். எனது தலைமுறையிலும்கூட, நிறைய பேர் தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றி தினசரிக் குறிப்புகள் எழுதினர். மேலும், மற்றவர்கள் அதைப் பார்ப்பதை அவர்கள் விரும்பவில்லை. எப்போதாவது யாரேனும் மேலட்டைப் பக்கத்தைத் திறந்துவிட்டாலே, அவர்கள் மிக மோசமாக நிலைகுலைந்து போவார்கள், “எனக்குத் தெரியாமல், நீங்கள் எனது நாட்குறிப்பை திறந்தீர்கள்” என்று, அது ஒரு குற்றமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய தலைமுறையினர், அவர்களது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார்கள். ஒருவரும் அதைப் பார்க்காவிட்டால்தான் அவர்கள் மிகவும் நிலைகுலைந்து போவார்கள். “நான் எனது காலை உணவை சாப்பிடுகிறேன்” - ஒரு படம்! “நான் என் ஐஸ்கிரீமை சாப்பிடுகிறேன்” - ஒரு படம். இவ்வாறு எதையும், எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றனர்.

ஒருவகையில், இது ஒரு வெளிப்படையான தலைமுறை. இதுபோன்று ஒரு தலைமுறை வெளிப்படையாக இருக்கும்போது, தற்போது மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது - இது மிகச்சிறந்த நேரம். என்னால் இப்போது தெளிவுபடுத்த முடியாத பல்வேறு விஷயங்கள் உள்ளன. இந்த கிரகத்தில் நாம் உண்மையில் மனிதர்களை மாற்ற வேண்டுமானால், இன்னும் பதினைந்து முதல் அதிகபட்சம் முப்பது ஆண்டுகளுக்கு மட்டுமே பெரிய அளவில் அவர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள். அதன் பிறகு, அவர்களைத் தொடுவது மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும், விருப்பமுள்ள மக்களும் மற்றும் விருப்பமில்லாதவர்களும் எப்போதும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். ஆனால் பொதுவாக, இந்த பதினைந்து முதல் முப்பது ஆண்டுகளுக்கு, மக்கள் மிகுந்த விருப்பத்துடன் இருப்பார்கள். அதற்குப் பிறகு, பல்வேறு காரணங்களால், இதைச் செய்வது கடினமாக இருக்கும்.

வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே சாத்தியம்.

எனவே, நாம் ஒரு பொருத்தமான காலகட்டத்தில் இங்கே இருக்கிறோம். நாம் சரியான விஷயங்களைச் செய்தால், அதிகபட்ச எண்ணிக்கையில் மக்களைத் தொடலாம். ஆனால் காலம் கடந்துவிட்டால், இந்தத் தலைமுறை கடந்துவிட்டால், அவர்கள் பேஸ்புக் மற்றும் எல்லாவற்றையும் விட்டுவிட்டால், பிறகு அது கடினமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, உலகில் நாம் யோகாவை போதுமான வலிமையுடன் வழங்காவிட்டால், இன்னும் இருபத்தைந்து முதல் முப்பது ஆண்டுகளில், உலக மக்கள்தொகையில் தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஏதோ ஒருவித ரசாயனத்தில் இருப்பார்கள். அவர்கள் ரசாயனங்களின் தாக்கத்திற்கு ஆளாகிவிட்டால், நீங்கள் அவர்களுடன் பேச முடியாது. உலகம் வேகமாக அந்தப் புள்ளியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. வெறுமனே இங்கே உட்கார்ந்திருக்கும்போது, எல்லையை அகற்றுவதற்கு அவர்களுக்கு வேறொரு வழியை நீங்கள் காண்பிக்கவில்லை என்றால், நிரந்தரமில்லாத ஒரு வழியில் அவர்கள் தங்கள் எல்லைகளை தற்காலிகமாக அகற்றுவார்கள். அது ஒரு சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களுக்கு மட்டுமானதாக இருக்கிறது - அதற்குப் பிறகு, தனிமனித எல்லையானது அவர்களை ஆட்கொண்டுவிடும்.

இது சரியான நேரம் என்பதுடன், இந்த கிரகத்தில் இது நமக்கான நேரம். நாம் பொறுப்புடனும், உறுதியுடனும் இருந்தால், மனிதகுல வரலாற்றில் என்றென்றைக்கும் இதை நம்மால் மிகச் சிறந்த நேரமாக்க முடியும். ஏனென்றால், முன்பு ஒருபோதும் இல்லாததைப் போன்று நாம் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறோம். குறைந்தபட்சம் மனிதர்களுக்கு முன்பு எப்போதும் இருந்ததை விட உயிர்வாழ்வது தற்போது நன்றாக நிகழ்ந்துவருகிறது – துரதிர்ஷ்டவசமாக, மற்ற உயிரினங்களுக்கு அல்ல. இதற்கு முன்பு மனிதர்களுக்கு இவ்வளவு வசதியும், வாய்ப்பும் இருந்ததில்லை. இப்போது நாம் சரியான விஷயங்களைச் செய்யாவிட்டால், பிறகு அது மிகவும் தாமதமாகிவிடும். ஏனெனில், எதிர்காலத்தில் சூழ்நிலைகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியின் காரணமாக, அநேகமாக அடுத்த எழுபது ஆண்டுகளில், மக்கள்தொகையின் நாற்பது முதல் ஐம்பது சதவீதம் வரை தற்கொலை செய்துகொள்ளக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, அவர்கள் செய்வதற்கு எந்தச் செயலும் இல்லையென்றால், அவர்கள் வாழ்க்கை வாழத் தகுதியற்றது என்ற நிலைப்பாடுக்குத் தள்ளப்படுவார்கள்.

யோகா: உருமாற்றும் வினையூக்கி

எனவே, யோகாவை மக்களுக்கு வழங்குவது என்பது உலகில் நாம் செய்யும் மற்றொரு வேலை மட்டுமல்ல - இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயலாகும். எல்லோரும் இப்போது இதைப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் போதுமான தீவிரத்துடன், சரியானதைச் செய்தால், இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில், உலகில் யோகா எவ்வளவு முக்கியமானதாக இருக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள். ஏற்கனவே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று குறிப்பிடத்தக்க அளவு அதன் தேவை அதிகரித்துள்ளது. ஒரே விஷயம் என்னவென்றால், ஏதோ ஒன்று இவ்வளவு தேவைப்படும்போது, திடீரென்று, எல்லா வகையான போலித்தனமான விஷயங்களும் முளைத்தெழும். ஏனென்றால், அதற்கு ஒரு சந்தை இருக்கிறது. தரமான பொருள் இல்லையென்றால், மக்கள் மேற்பூச்சு செய்து, எல்லா வகையான விஷயங்களையும் உருவாக்கிவிடுகின்றனர்.

யோகாவின் பாரம்பரிய அமைப்பு தனித்துவமானது. ஒருவேளை இது ஸும்பா அல்லது வேறு ஏதாவது செய்வது போல் பொழுதுபோக்கு அம்சத்துடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் யோக செயல்முறைக்கு தங்களையே முழுமையாகக் கொடுத்தால், அது அவர்களுக்கு சாத்தியம் என்று கற்பனையில்கூட பார்த்திருக்காத விஷயங்களைச் செய்யும். யோகா ஒரு அதி அற்புதமான செயல்முறை - நீங்கள் யார் என்ற ஒட்டுமொத்த கலவையையும் அது மாற்றும் வல்லமை கொண்டது. நான் பன்னிரெண்டாவது வயதில் யோகாவின் எளிய அம்சங்களைப் பயிற்சி செய்யத் தொடங்கியபோது, அது என்னைப் பற்றிய எல்லாவற்றையும் உடலியல் ரீதியாக மாற்றியது. அதனை நீங்கள் அணுகும் தீவிரத்தை பொறுத்தே அது செயல்படுகிறது.

யோகாவை வழங்குதல்: யார் மற்றும் எப்படி?

யோக விஞ்ஞானம் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதை யார், எப்படிக் கொண்டு செல்கிறார்கள் என்பதில்தான் உலகளவு வித்தியாசம் இருக்கிறது. யோகாவை செய்முறைக் குறிப்புகளுடன் கற்பிக்கும் முறையில் வழங்குவதைத் தவிர்த்து, அதை வழங்குவதற்கான வேறு வழிகளும் உள்ளன. உதாரணத்திற்கு, நீங்கள் தியானலிங்கத்தில் இருந்திருந்தால் - அங்கே ஒரு யோகி அமர்ந்திருக்கிறார்; யோகாவைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் அவர் தன்னகத்தே கொண்டிருக்கிறார். அவரால் பேச முடியாது, ஆனால் அதற்காக அவர் எந்த விதத்திலும் குறைந்த திறன் கொண்டவர் என்று அர்த்தமல்ல.

நான் விரும்பும் எதையும் செய்யத் தேவையான சக்தி அனைத்தும் என்னிடம் உள்ளது, ஆனால் சில நேரங்களில் உடல் பின்தங்கிவிடுகிறது. நீங்கள் எழுந்து நின்று, உங்களையும் கடந்த ஏதோ ஒன்றைச் செய்வதற்கான விருப்பத்துடன் இருந்தால், குறிப்பாக இளைஞர்கள், நீங்கள் தயாராக இருந்தால், அதற்கான சாத்தியங்கள் உள்ளன. உங்களில், அந்த திசையில் செல்ல விரும்புவோர், உங்கள் நோக்கத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். என்ன செய்வது என்பதை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.