பாலுணர்வு... காதல்... கடவுள்! பகுதி 2

காமம் என்பது தவிர்க்க இயலாதது என பலரும் பேச, சிலரோ அதெல்லாம் அற்ப விஷயம் என்று வெறுக்க நினைக்கிறார்கள்! உண்மையில் பாலுணர்வு, காமம் என்பதெல்லாம் அற்பமா... அல்லது அவசியமா...? சத்குருவின் இந்த உரை உண்மையை உணர்த்துகிறது.

சத்குரு:

பாலுணர்வு ஈர்ப்பு என்பது உயிர்கள் உருவாக்கத்திற்காக இயற்கை கையாளும் உத்திகளில் ஒன்று. அந்த ஈர்ப்பு இல்லையென்றால், இந்த உயிரினங்களே அற்றுப் போகும். ஆனால் இன்று நாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுத்தியிருக்கிற பேதம் எத்தகையது என்றால் இரண்டும் தனித்தனி உயிரினங்கள் என்பது போன்ற பிரமையை உருவாக்கியுள்ளோம். இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எந்த உயிரினத்திற்கும் பாலுணர்வு என்பது இத்தனை பெரிய சிக்கலாக இருந்ததில்லை. அவற்றுக்கு உடலில் இந்த இச்சை நேர்கிறபோது உறவு கொள்கின்றன. மற்ற நேரங்களில் அதிலிருந்து விடுபட்டு இருக்கின்றன. ஆனால் மனிதர்களுக்கோ எப்போதும் அது மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கடந்த காலத்தில் சமயங்கள், குறிப்பாக மேற்கத்திய உலகின் சில சமயங்கள் பாலியலை மறுத்தன. மனித உடலின் இயற்கையான ஒரு அம்சத்தைக் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடலுடனான உங்கள் அடையாளம் குறையும்போது பாலுறவுக்கான தேவையும் குறைவதை நீங்கள் பார்க்க முடியும்.

சமயம் என்றால் சுதந்திரம். மனிதனின் உடற்கூறு சார்ந்த ஓர் அம்சத்தைக்கூட ஏற்றுக்கொள்ளாத நிலையில் சுதந்திரம் எவ்வாறு சாத்தியம்? அவர்கள் உடல்சார்ந்த எல்லைகளைக் கடந்துசெல்லும் வாய்ப்பில்லாமல் உடல் சார்ந்த அம்சங்களை மறுக்கத் தொடங்கிவிட்டார்கள். எனவே, புனிதமானவர்கள் என்றால் பாலுணர்வு முறைப்படி பிறந்திருக்க முடியாது என்கிற கருத்து ஏற்படத் தொடங்கிவிட்டது. இந்த எளிய உடல்கூறு சார்ந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ளாத போதுதான் பிணைப்பு ஏற்படுகிறது. அங்கேதான் பெண்ணினத்தைத் தவறாக பயன்படுத்துதல் தொடங்குகிறது. உடலியல் அடிப்படையில் பாராதபோது இவர், அவர் என்கிற பேதம் ஏற்பட வாய்ப்பில்லை. அனைவரும் தகுதியின் அடிப்படையிலேயே மதிக்கப்படுவார்கள். ஒருவர் கன்னிக்குப் பிறந்தால் உங்களுக்கென்ன? கணிகைக்குப் பிறந்தால் உங்களுக்கென்ன? அந்த மனிதர் கொண்டிருக்கும் தகுதிகள்தான் முக்கியம். எனவே, உடலியல் சார்ந்த உண்மைகள் ஏற்கப்படாதபோது பேதங்கள் ஏற்படுகின்றன. ஏமாற்றுதல்கள் நிகழ்கின்றன. துரதிருஷ்டவசமாக சில சமயங்கள் இதனை உணரவில்லை. உடலியல் சார்ந்த ஒன்றை நீங்கள் தெய்வீகம் என்று போதிக்கவும் வேண்டாம், ஆபாசம் என்று ஆமோதிக்கவும் வேண்டாம். அது வாழ்வின் ஒரு அம்சமாக இருக்கிறது. அதன் வழியாகவே நீங்கள் வாழ்கிறீர்கள். அதற்கு அலங்காரங்களையோ அசிங்கங்களையோ நீங்கள் புகட்டாதிருந்தால், அது அதற்கே உரிய அழகோடு திகழும்.

நீங்கள் பாலுணர்வு என்று குறிப்பிடும் இப்போதைய உடல் சார்ந்த செயல்பாடு, உயிர்களின் உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், பாலின வேறுபாடு மட்டும் இல்லையென்றால், பாலின அடிப்படையிலான பரஸ்பர ஈர்ப்பு இல்லாமல் போயிருந்தால், இதற்குள்ளாக எல்லாப் பெண்களையும் ஆண்கள் கொன்றிருப்பார்கள். ஒரு பெண் கூட இருந்திருக்கமாட்டாள். இந்த ஆழமான தேவை இருப்பதனால்தான் ஆண்கள் பெண்களை விட்டு வைத்து இருக்கிறார்கள். ஆணுக்கு இருக்கும் உடல் வலிமை உடல்ரீதியாக பெண்ணை அழிக்கிற வலிமையை அவனுக்குத் தருகிறது. அந்தத் தேவை மட்டும் இல்லாதிருந்தால் நெடுங்காலம் முன்பே பெண்ணை அழித்திருப்பான். தன்னைவிட உடல்ரீதியாய் பலவீனமானவற்றை மனிதன் அழித்திருக்கிறான். பெண்ணைமட்டும் விட்டு வைத்திருக்கிறான். அதுவும் ஒரு தேவை கருதி.

இந்த இரு பாலினங்களுக்கும் இடையிலான, ஒரே உயிரினத்தின் இரு வேறு அடையாளங்களுக்கும் மத்தியிலான தேவை என்பது இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரை சரிதான். ஆனால் அதைக் கடந்து உங்கள் தேடல் இருக்குமேயானால் அது போதாது. இதில் பல்வேறு நிலைகளில் தீவிரமான ஈடுபாடு காட்டும் மனிதர்கள்கூட அதில் உணர்வுரீதியான அடையாளங்கள் இல்லாதபோது அதில் ஈடுபட விரும்பமாட்டார்கள். குறிப்பாக மேலைநாடுகளில் துரதிருஷ்டமான நிலை என்னவென்றால், அவர்களிடம் உறவுகள் என்ற சொல்லை சொன்ன மாத்திரத்திலேயே பாலுணர்வு உறவுதான் அவர்கள் நினைவுக்கு வருகிறது. வேறெந்த உறவையும் அவர்கள் உறவாக நினைப்பதில்லை. ஏனென்றால், உடலுடனான உங்கள் அடையாளம், அவ்வளவு உறுதிப்பட்டுள்ளது. உடலுடன் உங்கள் அடையாளம் மேலும் மேலும் வலுப்படத் தொடங்கும்போது, பாலுணர்வும் பாலுறவும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. உடலுடனான உங்கள் அடையாளம் குறையும்போது பாலுறவுக்கான தேவையும் குறைவதை நீங்கள் பார்க்க முடியும்.

உங்கள் சமூகத்திலேயே சிலர் அறிவுரீதியான ஆற்றலில் தீவிரமாக இயங்கி அப்படியொரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்வார்கள். அத்தகைய மனிதர்களுக்கு பாலுறவின் தேவை குறைந்துவிடும். உடல்ரீதியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு அந்தத் தேவைகள் அதிகரிக்கும். நீங்கள் உங்களை எதனுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களோ, அதைச் சார்ந்து தான் அதிகம் செயல்படுவீர்கள். எனவே, பாலுணர்வு சார்ந்த உறவுகளில் உங்களுடன் ஈடுபட்டிருக்கும் இன்னொருவர் அதில் உணர்வுப்பூர்வமாக இல்லை என்று உங்களுக்குத் தெரியவந்தால் அது வெறுமனே உடல் சார்ந்ததுதான் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வதாக நினைக்கத் தொடங்குவீர்கள். பாலுணர்வு என்பது உடலியல் சார்ந்ததுதான். ஆனால், உணர்வுகளின் அலங்காரமில்லாத போது அதை உங்களுக்கு இழைத்த அவமானமாகக் கருதுகிறீர்கள்.

அடுத்த வாரம்...

பாலுணர்வு சரி என்பதற்கும், தவறு என்பதற்கும் நாம் சமூகத்தில் கட்டமைத்திருக்கும் தத்துவங்கள் சரியானதா? அறிந்துகொள்வோம்...

'பாலுணர்வு... காதல்... கடவுள்!' தொடரின் பிற பதிவுகள்