முழு தீவிரத்தில் துடிக்கும் உயிர்
இந்த வார ஸ்பாட்டில், உணவு, தங்குமிடம், இனப்பெருக்கம் என்று மற்ற உயிரினங்கள் போல் நாமும் வாழ்வது, பரிணாம வளர்ச்சிக்கும் படைப்பிற்கும் எதிராக நாம் செய்யும் குற்றம் என்று சொல்கிறார் சத்குரு. “ஒவ்வொரு நொடியிலும் உங்கள் உயிர் தீவிரமாகத் துடிக்க வழிசெய்யுங்கள். வலுவற்று நலிவடைந்தால், அது எங்கும் போகாது.” வருடத்தின் இந்நேரத்தில் செடிகளும் மரங்களும் தங்கள் வேர்களை உறுதிசெய்து வசந்தகாலத்திற்குத் தயாராவது போல், நாமும் நம் உயிரை வலிமை கொண்டதாக மாற்ற செயல்படவேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறார். “தக்ஷிணாயனத்தின் இந்தக் கடைசி 3 மாதங்களில் நீங்கள் முழு தீவிரத்துடன் இருக்கவேண்டும்” என்கிறார்.
இந்த வார ஸ்பாட்டில், உணவு, தங்குமிடம், இனப்பெருக்கம் என்று மற்ற உயிரினங்கள் போல் நாமும் வாழ்வது, பரிணாம வளர்ச்சிக்கும் படைப்பிற்கும் எதிராக நாம் செய்யும் குற்றம் என்று சொல்கிறார் சத்குரு. “ஒவ்வொரு நொடியிலும் உங்கள் உயிர் தீவிரமாகத் துடிக்க வழிசெய்யுங்கள். வலுவற்று நலிவடைந்தால், அது எங்கும் போகாது.” வருடத்தின் இந்நேரத்தில் செடிகளும் மரங்களும் தங்கள் வேர்களை உறுதிசெய்து வசந்தகாலத்திற்குத் தயாராவது போல், நாமும் நம் உயிரை வலிமை கொண்டதாக மாற்ற செயல்படவேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறார். “தக்ஷிணாயனத்தின் இந்தக் கடைசி 3 மாதங்களில் நீங்கள் முழு தீவிரத்துடன் இருக்கவேண்டும்” என்கிறார்.
முழு உத்வேகத்துடன் சாதனா செய்யவேண்டிய தக்ஷிணாயனத்தின் இரண்டாம் பாகத்தில் இருக்கிறோம். சாதனா செய்து உங்களை தயார் செய்துகொள்ள இதுதான் சரியான நேரம். இச்சமயத்தில் வாழ்வின் இயற்கையான சுழற்சிகளின் மீது, உங்கள் எண்ணம், உணர்வுகளின் சுழற்சி தாக்கம் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொண்டால் உங்களின் பல அம்சங்களை தீவிரப்படுத்திக் கொள்வது இயல்பாகவே நடக்கும். உலகின் எல்லா கலாச்சாரத்திலும் வருடத்தின் இந்நேரத்தில் மக்கள் தம் செயல்களை தீவிரப்படுத்த முயற்சி மேற்கொள்கிறார்கள். தூரக் கிழக்கத்திய கலாச்சாரங்கள் சமஇரவு நாளின் சந்திரன் என்றும், எகிப்திய கலாச்சாரம் டிசம்பரில் உதிக்கும் புது சூரியன் என்றும், இப்போது ஒழுங்குபடுத்தப்பட்ட மதத்தை பெருமளவில் பின்பற்றும் மேற்கத்திய கலாச்சாரமும் கூட இதைப் பின்பற்றுகிறது. இன்று பெரும்பாலும் விருந்துகள், மதுபானம், நிதி திரட்டும் முயற்சிகள் என்றாகி விட்டாலும், “நன்றி வெளிப்படுத்துதல்” (Thanksgiving), கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள், உங்கள் சாதனாவை தீவிரப்படுத்துதல் அல்லது வெளித் தொடர்புகளை குறைத்து உள்நோக்கித் திரும்பவேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்கும் நேரமாகவே இருந்தது.
வருடத்தின் இந்த நேரத்தில் நம் உடலமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதை மிக ஆழமாகக் கண்டறிந்துள்ள நம் யோக விஞ்ஞானம், இந்நேரத்தில் யோகப் பயிற்சிகளை எப்படித் தீவிரப்படுத்தினால் வசந்தகாலம் வரும்போது பூக்களும், பழங்களுமாய் நாம் மலரலாம் என்று வகுத்திருக்கிறது. பருவமழையில் நனைந்து ஈரத்தில் ஊறியிருக்கும் நிலத்தில், செடிகளும் மரங்களும் தம் வேரை இன்னும் பரவலாக, ஆழமாக செலுத்த கடினமாக உழைத்துக் கொண்டிருக்கின்றன. மேற்புரத்தில் பெரிதாக வித்தியாசம் தெரியாது, ஆனால் கீழே தம் ஜீவாதாரத்தை உறுதி செய்துகொள்ள செடிகளும் மரங்களும் அதிகளவில் வேலை செய்து கொண்டிருக்கின்றன. மிகக் கடினமாக செயல்படுபவரின் உழைப்பு, வசந்தகாலத்தில் அதிகளவிலான பூக்களோடு வெளிப்படும். நீங்கள் மனிதராகி இங்கும் அங்கும் நகர முடிவதால், நிலத்தில் இருந்து வெகுதூரம் விலகி இருக்கிறீர்கள். உங்களுக்கும் வேர் இருந்திருந்தால், நீங்கள் இப்பூமியின் அங்கம் என்பது உங்களுக்குத் தெள்ளத்தெளிவாக புரிந்திருக்கும்.
நீங்கள் நடப்பதற்கு உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதங்கள் ஒரு பரிணாம உயர்வு. உங்கள் மொபைல் ஃபோனில் தினசரி அதிகரிக்கும் சிறப்பு அம்சங்கள் இப்போது உங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லாததுபோல், இந்தப் பரிணாம உயர்வையும் பலர் மதிப்பதில்லை. இப்பூமியில் நடக்கமுடிவது ஒரு பெரும் வரம், ஆனால் இன்று பலரும் அதை அவர்கள் நல்வாழ்விற்கு பயன்படுத்திக் கொள்வதில்லை. அவர்களின் நல்வாழ்வு வேறெங்கோ இருக்கிறது என்று மேலே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இக்கிரகத்திலும் சூரியமண்டலத்திலும் ஏற்படும் சுழற்சிகள், உங்கள்மீதும் தாக்கம் ஏற்படுத்துகின்றன. அதை உங்கள் நன்மைக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளமுடியும். அவற்றின் உதவி இல்லாமலும் நீங்கள் வளரலாம், ஆனால் இலக்கை அடைவதுதான் நோக்கம் என்றால், கிடைக்கும் உதவிகளை பயன்படுத்தி அதை சுலபமாக நடத்திக் கொள்ளலாமே, ஏன் தேவையேயின்றி அதை கடினமாக்கிக் கொள்ளவேண்டும்?
Subscribe
இது நல்லநேரம், அதிலும் இவ்வருடம் பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு நொடியிலும் உங்கள் உயிர் தீவிரமாகத் துடிக்க வழிசெய்யுங்கள். வலுவற்று நலிவடைந்தால், அது எங்கும் போகாது. சாதாரணமாக ஆசை, தீவிரமான பற்று, ஏக்கம், குறிக்கோள் ஆகியவைதான் மக்களைச் செலுத்தும். “நிர்வாணா” என்றால் உத்வேகத்திற்கு அவசியமின்றி, நீங்கள் இயல்பாகவே தீவிரமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எங்கேனும் செல்வதற்கோ, எதையேனும் சாதிக்கவோ உருவாக்கும் தீவிரமல்ல. சும்மாவே, காரணமேயின்றி தீவிரமாக இருப்பது! உயிரின் நோக்கம் உயிர் மட்டுமே. உயிர் தன் உச்சத்தை தொடவேண்டும். அப்படியென்றால் நீங்கள் தடைகள் ஏதுமின்றி முழுவீச்சில் திறந்தநிலையில் இருக்கவேண்டும். எதுவும் நடந்துவிடக் கூடாது என்று தன்னைத் தானே “பாதுகாத்துக்” கொள்ளும் முயற்சியில் முடங்கிப் போகிறவர்களை யாரும் காப்பாற்ற முடியாது. இந்த வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வது என்றால் செயல்படுவது என்று அர்த்தமல்ல. “வாழ்வது” என்பது நமக்குள் நடந்துகொண்டிருக்கும் பிரம்மாண்டமான நிகழ்வு.
“என் வாழ்க்கை” என்று சொல்லும்போது பலரும் அவர்கள் வேலை, குடும்பம், அவர்களால் வாங்கமுடியாத கார் அல்லது தங்கள் வாழ்வையே அடமானம் வைத்து வாங்கிய வீட்டை பற்றித்தான் பேசுகிறார்களே தவிர்த்து, அவர்களுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் “உயிர்” பற்றிப் பேசுவதில்லை. உங்கள் வாழ்வில், “வாழ்க்கை” என்பது உங்கள் உணவோ, உடையோ, வேலையோ அல்ல. உங்களுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் உயிர்தான் உங்கள் வாழ்க்கை. அந்த உயிரை முழு தீவிரத்தில் துடிக்கச் செய்வதுதான் உங்கள் வாழ்வின் ஒரே நோக்கம். “வாழ்வை முழு தீவிரத்தில் வாழ்வது” என்பதற்கு அதுதான் அர்த்தம். செயல் என்பது அந்நேர அவசியத்தைப் பொறுத்து செய்வது. அந்நேரத்தில் என்ன தேவையோ அதை நிச்சயம் செய்வோம். ஆனால் உயிர் முழு தீவிரத்தில் இருப்பதுதான் முக்கியம், ஏனெனில் எப்படியும் அதைப் பாதுகாக்கவோ, நீட்டவோ முடியாது. அதைப் பாதுகாக்க முயல்கிறவர்களுக்கு வாழ்வென்பதே இல்லாமல் போய்விடும்.
முழுத்தீவிரமான உயிராய் இருப்பதற்கு பல கருவிகள் உள்ளன. இந்த யோக செயல்முறைகளை தீவிரப்படுத்த வேண்டும். இந்த உயிர் முழு தீவிரமாக இருந்தால், மற்றவர்கள் உங்களை அசாதாரண மனிதர் என்று நினைப்பர், ஏனெனில் அவர்கள் முழுமையான மனிதர்களாக இருந்ததில்லை. எண்ணம், உணர்வுகள், கருத்துக்கள், தீர்மானங்கள், முன்முடிவுகள் ஆகியவற்றின் கலவையாகத்தான் அவர்கள் இருந்திருக்கிறார்களே அன்றி, “முழு உயிராக” அவர்கள் இருந்ததில்லை. நீங்கள் முழு உயிராக இருக்கும்போது, இப்பிரபஞ்சம் உங்களுக்கு இசைந்து கொடுக்கும். இதை யோக மரபில் மிக வேடிக்கையாக வெளிப்படுத்துவர்: உங்கள் தன்மையின் ஆழத்தையும் அதன் அனைத்துப் பரிமாணங்களையும் நீங்கள் உணர்ந்துவிட்டால், “கடவுள் உங்களுக்கு அடிமையாவார்” என்று. அதுதான் மனிதன் எனும் பிரம்மாண்டம். மற்ற உயிரினங்கள் போல் மனிதர்கள் கட்டி வைக்கப்படவில்லை. நமக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.
மரங்கள் அழகாக இருக்கின்றன; பறவைகள் கலகலப்பாக நன்றாக இருக்கின்றன, அவற்றால் பறக்கமுடியும் உங்களால் முடியாது; என்றாலும் உண்பது, இனப்பெருக்கம் செய்வதைப் பற்றி மட்டும்தான் அவற்றால் சிந்திக்கமுடியும். இறப்பு எப்படியும் எல்லோருக்கும் நிகழ்வதுதான். இதைவிடப் பெரிதாக வேறெதற்கும் அவை ஆசைப்பட முடியாது, ஏனெனில் அது அவற்றின் இயல்பில் இல்லை. இதுபோன்ற தடைகளை இயற்கை உங்களுக்கு நீக்கிவிட்டது. ஆனால் பழக்கதோஷத்தில், நீங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்ததை உணராமல், இன்னும் அத்தடைகள் இருப்பதாக நினைத்து நீங்கள் கட்டுண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு மரமாகவோ, வேறேதோ உயிரினமாகவோ வாழ்ந்த காலத்தின் ஞாபகங்கள் இன்னும் உங்களை ஆழ்கின்றன. குழந்தைப்பருவ ஞாபகங்கள் ஏதேதோ விதத்தில் இன்னும் உங்களிடம் இருப்பதுபோல், பரிணாம வளர்ச்சியின் ஞாபகங்களும் உங்களிடம் இருக்கின்றன. அவற்றிற்கு இடம் கொடுத்துவிட்டால், அவை உங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துவிடும். அதுதான் இன்றும் உங்களை ஒரு குரங்கைப் போல் சிந்திக்கச் செய்கிறது.
இயற்கை நமக்கு அளித்திருக்கும் அந்த அற்புதமான வரத்தை உணர நாம் முயற்சி எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அதை நாம் உணரமுடியாது. நாமும் மற்ற உயிரினம் போல்தான் என்று நினைத்து, அதே அற்ப விஷயங்களுக்காக காலம்காலமாக போராடிக் கொண்டிருக்கிறோம். நம் உலகில் குறைந்தது 90% பேர் தம் வாழ்க்கை முழுவதையும் உணவு, பிழைப்பு என்ற சிந்தனையிலேயே கழிக்கின்றனர். மற்ற உயிரினங்களைவிட பரிணாம வளர்ச்சியில் உயர்ந்திருப்பதை அவர்கள் உணர்வதே இல்லை. இந்தளவிற்கு மூளை வளர்ச்சியோடு, இந்தளவிற்கு புத்திசாலித்தனத்தோடு, இந்தளவிற்கு மேம்பட்ட விழிப்புணர்வின் சாத்தியத்தோடு, நாம் குறைந்தபட்சமாக “பிழைப்பைத்” தாண்டியேனும் வந்திருக்க வேண்டும்.
இன்று மக்களின் வாழ்க்கை, பணம் சம்பாதிப்பது, வீடு கட்டுவது, குழந்தை பெற்றுக் கொள்வது என்பதைச் சுற்றியே அமைக்கப் பட்டிருக்கிறது. நிலத்தில் ஊர்ந்துசெல்லும் ஒரு பிராணியாக இல்லாமல், எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய திறம்படைத்த உயிரினமாக நம்மை பரிணாம வளர்ச்சி உயர்த்தியிருக்கிறது. “மனிதன்” எனும் இப்பேர்பட்ட பிரம்மாண்டமான வளர்ச்சியை உணராமல் இருப்பது, படைப்பிற்கும், உயிருக்கும் எதிரான மாபெரும் குற்றம். இவ்விடத்தை அடைவதற்கு கோடானுகோடி வருடங்கள் ஆனது. ஆனால் இன்றும் அன்று சிந்தித்தது போலவே ஏன் சிந்திக்கிறீர்கள்? நமக்குள் ஏற்கெனவே நிகழ்ந்திருக்கும் இந்தப் பரிணாம வளர்ச்சியை உணர்ந்து, அதை இன்னும் மேம்படுத்துவதற்காகத்தான் இந்த யோக விஞ்ஞானம் உருவானது. இன்றிருக்கும் நிலைக்கு மேல் நீங்கள் வளரவேண்டும் என்றில்லை, தேவையான பரிணாம வளர்ச்சி ஏற்கெனவே நடந்துவிட்டது. இப்போது நீங்கள் செய்யவேண்டியது, நடந்திருக்கும் அந்த வளர்ச்சியை உணர்ந்து, அந்த வளர்ச்சிக்கு சான்றாக நடந்துகொள்வது, அதைவிடக் குறைவாக இருப்பது அல்ல.
பிழைப்புதான் மனித வாழ்வின் உச்சபட்சம் என்பதுபோல், அதைச் சுற்றி பற்பல தத்துவங்களும், அரசியல் கருத்தாய்வுகளும், சித்தாந்தங்களும் உருவாக்கப் பட்டிருக்கிறது. தம் வாழ்வில் வெகு சீக்கிரமே நன்றாக சம்பாதித்து, திறம்பட பிழைப்பு நடத்திக் கொள்பவர்கள், எதற்காக இதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம், எதற்காக வாழ்கிறோம் என்ற கேள்வியை எதிர்நோக்குகின்றனர். அப்போதுதான் மனம் போன போக்கில் ஏதேதோ செய்யத் துவங்குகின்றனர். வளமான சமூகங்களில் விபரீதமான, சுய-அழிவு பழக்கங்களில் மனிதர்கள் ஈடுபடுவதற்குக் காரணமும் “ஏன் வாழ்கிறோம்?” என்பது புரியாமல் போனதால்தான். பிழைப்பே கேள்விக்குறியாக இருக்கும்போது, “கடவுளின் நோக்கத்தை” நிறைவேற்றுவது போன்ற முனைப்பில் மக்கள் செயல்படுகின்றனர். இந்த வேலை கிடைக்கவேண்டும்; இப்படிப்பை படிக்கவேண்டும்; இந்தளவிற்கு பணம் சம்பாதிக்க வேண்டும்; ஒரு வீட்டைக் கட்டவேண்டும் என்று. ஆனால் பிறக்கும்போதே தேவையான அனைத்தும் உங்களுக்குக் கிடைத்துவிட்டால், ஏதோவொரு கட்டத்தில் சுய-அழிவில் இறங்க முனைகிறீர்கள். ஏனெனில் இவையெதுவும் உங்களை எங்கும் கொண்டு செல்லவில்லை என்பது உங்களுக்குப் புரிகிறது.
தக்ஷிணாயனத்தின் இந்தக் கடைசி 3 மாதங்களில் நீங்கள் முழு தீவிரத்துடன் இருக்கவேண்டும். இது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது பற்றியல்ல. உங்களுக்குள் இருக்கும் உயிர் முழு தீவிரத்தோடு துடிக்கவேண்டும். “நான் இறந்துவிட்டால் என்ன செய்வது?” எப்படியும் இறப்பதற்குத் தானே வாழ்கிறீர்கள். ஒருநாள் எப்படியும் இறப்பீர்கள். ஆனால் இறப்பதற்கு முன் உங்கள் உயிர் முழு தீவிரத்தோடு இருக்கவேண்டும். இப்போதிருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே, நமக்கு மிக அதிகமாக முக்கியத்துவத்தை நாமே கொடுத்துக் கொண்டுவிட்டோம் என்பதுதான். நம் தலைமுறையும் மறைந்துபோகும் என்பது நமக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. இப்பூமியில் நமக்கு முன் எத்தனையெத்தனையோ கோடானுகோடி மக்கள் வாழ்ந்து, மடிந்து, மக்கி மண்ணாகி விட்டார்கள். ஆனால் நாம் இங்கு வாழும்போது, நாம்தான் நிரந்தரம் என்பதுபோல் இருமாந்து இருக்கிறோம். இது நிச்சயமாக நிஜமில்லை. உங்கள் உயிர் முழு தீவிரத்தோடு இருக்கும்போது, “உயிர் என்பது என்ன? வாழ்வென்பது என்ன?” என்று அதன் தன்மை உங்களுக்கு முழுதாகப் புரியும். வெளிச்சம் மிகப்பிரகாசமாக இருந்தால்தான், அங்கு என்ன இருக்கிறது என்பது தெரியும். அதேபோல் உங்கள் உயிர் முழு தீவிரத்தோடு இருந்தால்தான், அதன் தன்மை என்னவென்று புரியும். இல்லையெனில் உங்கள் எண்ணங்களும், உணர்வுகளும், செயல்களும் உங்கள் பார்வையை மறைத்து, அவற்றிலேயே உங்களை அமிழ்த்திவிடும்.
இதை இளைஞர்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். “யாரை திருமணம் செய்துகொள்வது? எங்கு சாப்பிடச் செல்வது? எங்கு வேலை பார்ப்பது?” என்று சிந்திப்பதிலேயே உங்கள் வாழ்க்கையை செலுத்தாதீர்கள். நீங்கள் யாரை மணந்து கொண்டாலும் சரி, சிறிது காலத்தில் அதை ஒரு பிரச்சினையாக எப்படியும் மாற்றிக் கொள்வீர்கள். இது அந்த நபர் தவறானவர் என்பதால் அல்ல. சும்மாவே அப்படித்தான் ஆகும், ஏனெனில் அது வெற்றிகரமாக நடப்பதற்கு அன்பும் காதலும் மட்டும் போதாது, திறமையான நிர்வாகமும் தேவைப்படும். டிசம்பர் 22 வரை, “அப்ப நான்? எனக்கு என்ன ஆகும்?” என்ற எண்ணத்திலோ, உணர்விலோ ஒரு நொடியைக்கூட செலுத்தாதீர்கள். உங்கள் வாழ்வின் முடிவு மரணம்தான். அதில் எவ்வித மர்மமும் கிடையாது. இப்போது நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் உயிரின் தீவிரத்தை அதிகரிப்பதுதான். “எனக்கு என்ன ஆகும்?” என்ற கவலையிலேயே வாழ்க்கை நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறது - ஒன்றுமே நடக்காமல். ஏதேனும் நடக்கவேண்டும் என்றால், உங்களுக்குள் இருக்கும் உயிருக்கு ஊட்டம் கிடைக்கவேண்டும். அதைப் பற்றி சிந்தித்தால் போதாது. ஊட்டம் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
நீங்கள் வலிமையான உயிராக வாழவேண்டும். உடற்கட்டில் இல்லை, வாழ்வை வாழும் விதத்தில். வலிமை என்பது வேறெதையோ, வேறு யாரையோ நீங்கள் எந்தளவிற்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள் என்பது பற்றியல்ல. “உங்களுக்குள்” நீங்கள் எவ்வளவு வலிமையாக இருக்கிறீர்கள் என்பது பற்றியது. மனவலிமையோ, உடல் வலிமையோ அல்ல - ஒரு உயிராக நீங்கள் எவ்வளவு வலிமையாக இருக்கிறீர்கள் என்பது பற்றியது. உங்களுக்குள் உயிர் மிகத் தீவிரமாக, உறுதியாக, வலிமையாக துடித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் ஏதேனும் செய்தால், உலகில் அது பிரமாதமாக வெளிப்படும். எதுவும் செய்யாவிட்டாலோ, அது பிரம்மாண்டமான அற்புதமாக வெளிப்படும்.