யோகா என்ற பழமையான தொழில் நுட்பத்தை தற்காலத்திற்கு உகந்ததாக மாற்றி வழங்குவதே தன்னுடைய அடிப்படை நோக்கம் என்று கூறுகிறார் சத்குரு……

Question: யோகா ஒரு தொழில்நுட்பம் என்று நீங்கள் சொல்கிறீர்களே, எதனால் அப்படி சொல்கிறீர்கள்?

சத்குரு:

இன்று ‘யோகா’ என்ற வார்த்தை மக்களின் மனத்தில் தவறான ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கியுள்ளது. இன்று பெரும்பான்மையான மக்களுக்கு யோகா என்றால் உடம்பை வளைத்து ஏதோ செய்வது என்பதுதான். இது அமெரிக்காவிலிருந்து நமக்குத் திரும்பிவந்த யோகா. அது ‘கொலம்பஸ் யோகா’. அவர் கூட தவறான இடத்தில்தான் கரையேறினார். ஆதியிலிருந்து எல்லாம் தவறாகவே நடக்கிறது!

யோகா என்பது உடல் பயிற்சியோ அல்லது உடலை வருத்திக்கொள்வதோ இல்லை. யோகா என்பது ஆயிரக்கணக்கான வருடங்களாக உள்ள ஒரு ஆழ்ந்த விஞ்ஞானம். இன்று நவீன விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் சேர்த்து நமக்கு ஏற்றவாறு தட்ப வெட்ப நிலைகளை மாற்றிக்கொள்கிறோம். வெளியில் மிகவும் வெயிலாக இருந்தால் குளிர் சாதன பெட்டியை வைத்து தட்பவெப்ப நிலையை சௌகரியமாக மாற்றிக் கொள்கிறோம். ஆனால் நம் உள்நிலை சமநிலையாகவும் உற்சாகமாகவும் இல்லையென்றால் வெளியில் என்னதான் மாற்றி அமைத்தாலும் எதுவுமே சந்தோஷத்தைக் கொடுக்காது. யோகாவின் மூலம் உள்நிலையை சரியாக அமைக்க முடியும். அப்படி செய்வதற்கு நீங்கள் யாரையும் நம்பவோ அல்லது பின்பற்றவோ தேவையில்லை. சில விஷயங்களை சரியாகச் செய்யத் தெரிந்து கொண்டால் போதும். இரண்டு பங்கு ஹைட்ரஜனையும் ஒரு பங்கு ஆக்சிஜனையும் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல, ஒரு முட்டாள் சேர்த்தாலும் தண்ணீர் தான் வரும். அதே மாதிரிதான் யோக விஞ்ஞானமும். மஹா யோகியோ அல்லது ஒரு முட்டாளோ, யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், குறிப்பிட்ட சில விஷயங்களை செய்தால், சில பலன்கள் தானாக கிட்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: தொழில் நுட்பம் என்று சொல்வதாலேயே யோகா என்பது தற்காலத்திற்கு ஒத்து வருமா?

சத்குரு:

பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னோ அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகோ, எப்பொழுதுமே தொழில்நுட்பம் என்பது செயல் புரியும் ஒன்று. ஒரு எண்ணமாகவோ, ஒரு கருத்தாகவோ அல்ல, ஒரு தத்துவமாகவோ இருந்தால் அது தற்காலத்தில் மட்டுமே வேலை செய்யும். ஆனால் அதே ஒரு விஞ்ஞானமாகவோ தொழில்நுட்பமாகவோ இருந்தால், அது எந்தக் காலத்திற்கும் பொருந்தும்.

Question: நீங்கள் வழங்குவது பாரம்பரியத்திலிருந்து மாறுபட்டதா?

சத்குரு:

பாரம்பரியம் என்பது கடந்த தலைமுறைகளிடமிருந்து கற்றுக் கொள்வது, அதை அப்படியே காப்பி அடிப்பதில்லை. மரபு சார்ந்த ஆன்மிகம் என்பது முறையாக வளர வேண்டும். அடிப்படையிலே மாற்றம் இல்லாமல் அதன் வெளிப்பாடுகள் தேவைக்கேற்ற மாதிரி மாற வேண்டும். ஒவ்வொரு தலைமுறையிலும் மக்களின் புரிந்துகொள்ளும் தன்மை, புத்திசாலித்தனம் எல்லாமே வேறுபடும்.

இன்று எங்கெல்லாம் ஈஷா யோகா சொல்லித்தரப் படுகிறதோ - வடஅமெரிக்காவோ, ஐரோப்பாவோ, மத்திய கிழக்கு நாடுகளோ, அல்லது இந்தியாவோ - எல்லா இடங்களிலும், இது ஒரு விஞ்ஞானமாக இருப்பதால் ஒரு மகத்தான ஏற்புத்தன்மை இருக்கிறது. இதனாலேயே நவீன மூளை அதை ஏற்றுக்கொள்கிறது. இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஈஷா யோகாவில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் எல்லோருமே ஏற்கனவே கற்றுக்கொண்டவர்களிடமிருந்து அதன் ஆற்றலைப் பற்றி வெறும் வாய் வார்த்தையாகவே அறிந்து பயிற்சிக்கு வந்தவர்கள். நாம் இதை ஒரு தூய்மையான விஞ்ஞானமாக கையாள்வதாலேயே பல்லாயிரக்கணக்கானவர்களிடம் இது பரவியுள்ளது.

Question: அப்படியானால் ஈஷா யோகா இன்றைய நவீன மனிதனுக்காக கட்டமைக்கப் பட்டது என்று சொல்லலாமா?

சத்குரு:

நிச்சயமாக. ஏனென்றால் இன்றைய மனிதர்களுக்காக அதைக் கற்றுக்கொடுக்கிறோம். நேற்றைய மனிதர்களுக்கோ, நாளைய மனிதர்களுக்கோ என்னால் சொல்லிக்கொடுக்க முடியாது. காலத்தால் மனிதர்களின் பழக்கவழக்கங்கள் மாறினாலும் உள்நிலையில் மனிதன் அப்படியேதான் இருக்கிறான். எனவே உள் தொழில்நுட்பம் என்பது காலத்தால் மாறாதது. யோகா என்பது உங்களுடைய அடிப்படைத் தன்மையை மாற்றுவது. உங்கள் அடிப்படைத் தன்மையே மாறிவிட்டால் வெளியில் நடப்பதைக் கையாள்வது பெரிய விஷயமல்ல. உதாரணமாக மக்கள் மன அழுத்தம் என்பது ஏதோ புதிதான ஒன்று போல பேசிக்கொள்கிறார்கள். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், குகையில் வாழ்ந்த காட்டுவாசி கூட உணவு கிட்டவில்லை என்றால் மன அழுத்தம் அடைந்திருப்பான்.

ஆகையால், ஈஷா யோகாவானது, நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறை மற்றும் வேறு பல துறைகளிலும் செயல் புரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது குகைவாசிகளுக்குள்ளும் வேலை செய்யும், ஏனென்றால் இது நமது உள்நிலையை சரி செய்வது. உள்நிலை சரியாகிவிட்டால், வெளிப்புறத்தை கையாள்வது மிகவும் உயர்வடையும். உங்கள் வாழ்க்கையின் தரம் பொருள்வளத்தால் நிர்ணயிக்கப்படுவதில்லை, வாழும் விதத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. வாழும் விதத்தை நீங்கள் மாற்றிக்கொண்டால், உடனே, உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் அழகாகிவிடுகிறது. அதைத்தான் நாம் செய்ய முயற்சிக்கிறோம்.