யோகா கற்றுக்கொள்ளலாம் என்று ஏதோவொரு புத்தகத்தையோ, டி.வியையோ பார்த்தால் அதில் முதலில் வலியுறுத்தப்படுவது நாம் மறக்க வேண்டிய உணவுப் பழக்கங்களைப் பற்றிதான். இதனால், தான் சுவைத்து உண்ணும் அசைவ உணவையும் விட்டுவிட வேண்டுமோ என்ற அச்சத்தில் பலர் யோகாவை புத்தகத்துடன் மூடி விடுகிறார்கள். யோகா செய்தால் என்ன உணவு உட்கொள்ளலாம் என்பதை சத்குரு இக்கட்டுரையில் நமக்கு தெளிவுபடுத்துகிறார்...

Question: யோகப்பாதையில் செல்ல உணவுப் பழக்கவழக்கங்களில் ஏதேனும் மாற்றம் கொண்டு வரவேண்டுமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையில்லை. ஆனால் சில உணவுக்குறிப்புகளைத் தருகிறோம். எப்படிப்பட்ட உணவை உட்கொள்வது சிறந்தது என்ற உணவுக்குறிப்புகளைத் தருகிறோம். இது யோகாவிற்காக மட்டுமல்ல. நன்றாக வாழ்வதற்காக. மிகவும் கடினமான உணவுப்பழக்கம் என்றெல்லாம் எதுவுமில்லை. ஆனால் தங்கள் உடலைப்பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு அதிகரிப்பதற்காக சில குறிப்புகளைத் தருகிறோம்.

உணவு என்பது உடலைப் பற்றியது. உடல் எப்படி விரும்புகிறதோ அப்படிபட்ட உணவை நீங்கள் உட்கொள்ளவேண்டும். உங்கள் சமூகம் எப்படி விரும்புகிறதோ, உங்கள் மனம் எப்படி விரும்புகிறதோ, உங்கள் மருத்துவர் எப்படி விரும்புகிறாரோ அப்படிப்பட்ட உணவை நீங்கள் உண்ணக்கூடாது. உடல் விரும்பும் உணவைத்தான் நீங்கள் உண்ண வேண்டும்.

எனவே நாம் மக்களுக்கு கற்றுத்தருவதெல்லாம், அவர்களுடைய உடல் எப்படிப்பட்ட உணவை சௌகரியமாக உணருகிறதோ அப்படிப்பட்ட உணவை உண்பதைப் பற்றி மட்டுமே. அவர்கள் அதைப் பரிசோதனை செய்து தங்களுக்கு தேவையான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். ஆனால் மிகவும் கடினமான குறிப்புகளோ அல்லது நீங்கள் இதைத்தான் உண்ண வேண்டும் என்ற உத்தரவுகளோ இங்கு கிடையாது.

Question: ஆனால் நமது புராணங்களில் சாத்வீக உணவு என்றும், தாமச உணவு என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதைப்பற்றி நீங்கள் பரிசோதனை செய்திருக்கிறீர்களா? அதைப்பற்றி சொல்ல முடியுமா?

சத்குரு:

சில உணவுகள் உங்கள் உடலியக்க அமைப்பில் ஒரு மந்தத்தன்மையை ஏற்படுத்தும். அவற்றை நீங்கள் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள முடியும். சில உணவுகள் உங்களை மிகவும் விழிப்பாய் இருக்கச் செய்யும். எனவே தேர்ந்தெடுப்பது நீங்கள்தான்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் உறங்கிக்கொண்டிருக்கவே நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லது மிகவும் விழிப்போடு செயல்பட விரும்புகிறீர்களா என்பதுதான் கேள்வி. நீங்கள் விழிப்போடும், உயிர்ப்போடும் இருக்க வேண்டுமானால் அதற்கேற்ற உணவை உண்ண வேண்டும். உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் மந்தமாக உறங்கிக் கொண்டிருக்க விரும்பினால் வேறுவிதமான உணவை நீங்கள் உண்ணலாம்.

எனவே ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்து, தனக்கு விருப்பமானதை உண்ணுவதைப் பற்றியது இது. எனவே இதைப்பற்றி மிகவும் கடினமான குறிப்புகளையெல்லாம் நாம் தருவதில்லை. நீங்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும், அதைத்தான் சாப்பிட வேண்டும் என்று நிர்பந்திப்பதில்லை. அப்படிச் செய்வது காலப்போக்கில் பலனளிக்காமல் போகக்கூடும். எனவே ஒவ்வொரு தனிமனிதரும் அவர் எதைச் சாப்பிட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவேண்டும். அதுதான் சிறந்தது.

ஒவ்வொரு விதமான உணவும் எத்தகைய தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் நாம் நம் யோக வகுப்புகளில் பங்கேற்பவர்களிடம் சொல்கிறோம்.,. அதை அவர்கள் பரிசோதித்துப் பார்த்து எது அவர்களுக்குத் தேவையோ அதை அவர்களே தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.