கேள்வி : யோகாவைக் குறித்து மிக அதிகமாக பேசப்படுகிறது. ஆனால், அதன் உண்மையான தன்மையில் யோகத்தின் பாதையை ஒருவர் எப்படி பின்பற்றமுடியும்?

சத்குரு: பொதுவாக இன்றைக்குத் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதைப்போல, யோகா என்பது உடற்பயிற்சிக்கான ஒன்றல்ல. “யோகா” என்ற சொல்லுக்கு ஒருமை என்பது பொருள். ஆனால் தற்போது உங்களுடைய அனுபவத்தில், நீங்கள் தனியாகவும் மற்றும் பிரபஞ்சம் தனியாகவும் இருப்பதாக உணர்கிறீர்கள். ஏதோ ஒரு காரணத்தினால், வாழ்க்கை சற்றே சிக்கலாகிவிடும்போது, நீங்களும், பிரபஞ்சமும் எதிரெதிர் முனையில் இருக்கிறீர்கள். அது மோசமான போட்டிக்களமாகிவிடுகிறது. மனிதர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணமான அவர்களது பயம், அவர்களது பாதுகாப்பற்ற தன்மைகள் ஏன் வருகிறது என்றால், இது நான் அது பிரபஞ்சம்” என்பதைப்போல் அவர்கள் வாழ்கின்றனர். யோகா என்றால், நீங்கள் விழிப்புணர்வுடன் உங்களது தனிமனிதத் தன்மையின் எல்லைகளை முற்றிலுமாக இல்லாமல் செய்வது. வெறும் சிந்தனை அளவிலும், உணர்ச்சி அளவிலும் மட்டுமில்லாமல், அனுபவரீதியாக உண்மையிலேயே தனிமனித எல்லைகளை மறையச் செய்வது. அப்போது உங்கள் தனிப்பட்ட தன்மையையும், பிரபஞ்சத்தையும் நீங்கள் ஒன்றாக்கிவிடுகிறீர்கள்.

 

ஆகவே, யோகா என்பது காலையிலும் – மாலையிலும் செய்வதற்கான ஒரு பயிற்சியல்ல. அந்த ஒரு அம்சமும் உள்ளது தான். ஆனால் அது ஒன்று மட்டுமே அதன் அம்சமல்ல. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும், நீங்கள் நடக்கும் விதம், சுவாசிக்கும் முறை, மற்றவர்களுடன் நீங்கள் பழகும் விதம் போன்ற எல்லா விஷயங்களும், ஒருமையை நோக்கிய ஒரு வழிமுறையாக இருக்கமுடியும். இதிலிருந்து எதுவும் விலக்கல்ல. யோகா ஒரு செயல் அல்ல, அது ஒரு தன்மை. ஒரு குறிப்பிட்ட அளவுக்கான முதிர்ச்சியை அடைவதற்கு உங்களது உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்தி நிலைகளை நீங்கள் பண்படுத்தினால், உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட தன்மை எழுகிறது. அதுவே யோகா.

யோகா ஒரு செயல் அல்ல, அது ஒரு தன்மை. ஒரு குறிப்பிட்ட அளவுக்கான முதிர்ச்சியை அடைவதற்கு உங்களது உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்தி நிலைகளை நீங்கள் பண்படுத்தினால், உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட தன்மை எழுகிறது. அதுவே யோகா.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களது தோட்டத்தில் நீங்கள் சிறந்த கவனம் செலுத்தினால், அது பூத்துக் குலுங்குகிறது. அதே விதமாக, “நான்" என்று நீங்கள் அழைத்துக்கொள்வது என்னவோ அதில் நீங்கள் நன்றாக கவனம் செலுத்தினால், பூக்கள் மலரும். அதாவது, அமைதியாக, மகிழ்ச்சியாக அல்லது ஆனந்தமாக இருப்பது உங்களுக்கு வெளியில் இருக்கும் எதனாலும் முடிவு செய்யப்படுவது கிடையாது, அது உங்களால் முடிவு செய்யப்படுகிறது.

கேள்வி : நமது உலகத்தில் பெண்தன்மையின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சத்குரு: ஆண்தன்மையும், பெண்தன்மையும் இயற்கையில் இரண்டு அடிப்படையான தன்மைகளாக இருக்கின்றன. பிரபஞ்சத்தின் பொருள்சார்ந்த அம்சங்கள் இரு துருவங்களுக்கிடையே இயங்குகின்றன. இந்த இருமைத்தன்மையின் ஒரு பரிமாணம், ஆண்தன்மை - பெண்தன்மை. ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை என்று நான் கூறும்போது, ஆண் மற்றும் பெண் குறித்து நான் பேசவில்லை. நீங்கள் ஒரு பெண்ணாக இருக்கலாம், ஆனால் பெரும்பாலான ஆண்களைக் காட்டிலும் நீங்கள் உங்களுக்குள் அதிகமான ஆண்தன்மையைக் கொண்டிருக்கலாம். நீங்கள் ஒரு ஆணாக இருக்கலாம், ஆனால் பெரும்பாலான பெண்களைக் காட்டிலும் நீங்கள் உங்களுக்குள் மிக அதிகமான பெண்தன்மையைக் கொண்டிருக்கலாம்.

பிழைப்புக்கான உந்துதல் மிகப் பலமாக இருக்கும்போது, ஆண்தன்மை மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஏனெனில் அது எல்லா வகையிலும் பிழைப்பைக் குறித்தது. ஒரு நீண்ட நெடுங்காலத்துக்கு பிழைத்திருத்தல் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால், மனிதகுலம் ஆண்தன்மைக்கு அதீத முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. மனித சமுதாயங்கள் தங்களது பிழைப்பை நன்கு கையாண்டு, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நிலையான கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தை அடைந்திருக்கும்போது மட்டும்தான் பெண்தன்மையானது தனக்குரிய மிகச் சரியான இடத்திற்கு வர முடியும்.

இன்றைய தலைமுறை மக்களாக, நமது பிழைப்பு முன்பு எப்போதையும் விட மேலானதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், உலகத்தில் பொருளாதாரம் இன்னமும் ஆதார சக்தியாக இருப்பதுடன், மீண்டும் இப்போது "survival-of-the-fittest" என்றே இருக்கிறது. ஆண்தன்மையின் மனோபாவங்களும், மதிப்பீடுகளும் பரவலாக ஆதிக்கம் செலுத்துகின்றன. பொதுவாகவே, பெண்தன்மையான எந்த விஷயமும் இன்னமும் பலவீனமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆனால் ஒரு முழுமையான மனிதராக இருப்பதற்கு நீங்கள் விரும்பினால், உங்களுக்குள் ஆண்தன்மை, பெண்தன்மை இரண்டுமே சரிசமமான விகிதத்தில் இருப்பது மிகவும் முக்கியமானது. இசை, கலை, காதல் மற்றும் மென்மைத்தன்மை ஆகியவைகளும், பொருளாதாரம் போன்றே முக்கியமானதாக இருந்தால் மட்டும்தான், பெண்தன்மை செழிப்பாகும். இது நிகழவில்லையென்றால், உலகத்தில் பெண்தன்மைக்கு இடமிருக்காது. நீங்கள் பெண்ணாக இருக்கலாம், ஆனால் ஆண்தன்மையுடையவராக நீங்கள் இருப்பீர்கள்.

கேள்வி : மிகுந்த ஆனந்தமாக உணரத் தொடங்குவதற்கு, ஒருவர் இன்றிலிருந்து செய்யக்கூடிய ஒரு விஷயம் என்ன?

சத்குரு: காலையில் கண் விழிக்கும்போது நீங்கள் செய்யவேண்டிய முதல் விஷயம், புன்னகைப்பது! ஏனென்றால் நீங்கள் உறக்கத்திலிருந்து எழுந்துவிட்டது ஒன்றும் சிறிய விஷயமல்ல. நேற்றிரவு உறங்கச் சென்ற எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள் இன்று கண் விழிக்கவில்லை, ஆனால் நீங்கள் எழுந்துவிட்டீர்கள். ஆகவே நீங்கள் கண் விழித்துவிட்டதன் காரணமாக, புன்னகை செய்யுங்கள். பிறகு சுற்றுமுற்றும் பார்த்து, யாராவது அருகில் இருந்தால், அவர்களைப் பார்த்து புன்னகையுங்கள். பல இலட்சக்கணக்கானவர்களுக்கு, அவர்களது அன்புக்குரிய யாரோ ஒருவர் இன்று காலை கண் விழிக்கவே இல்லை. ஆனால், உங்களது அன்புக்குரிய அனைவரும் எழுந்துவிட்டனர் – அடடே! இது எப்படிப்பட்ட ஒரு மகத்தான நாள், அப்படித்தானே? பிறகு வெளியில் சென்று, மரங்களை ஒரு பார்வை பாருங்கள். அவைகள் நேற்றிரவு இறந்துபோகவில்லை.

இதை அபத்தமானதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்களுடைய அன்புக்குரியவர் கண் விழிக்கவில்லை என்றால், அப்போது அதன் உண்மைத்தன்மையை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அதனுடைய மதிப்பை உணர்வதற்கு, அந்தத் தருணம் வரை காத்திருக்காதீர்கள். அது அபத்தமானதல்ல. இது – அதாவது நீங்கள் உயிருடன் இருப்பதுடன், உங்களுக்கு முக்கியமான அனைத்தும் உயிருடன் இருப்பது என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். அதைப் பாராட்டி, குறைந்தபட்சம் புன்னகை செய்யுங்கள். சிலரையாவது அன்புடன் பார்ப்பதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.

இதையெல்லாம் ஒரு மணி நேரத்தில் மறந்துவிடுவதோடு, வெகுவிரைவில் உங்களுடைய ஊர்வன மூளை யாரையாவது கடித்துக் குதற விரும்பும் மனிதர்களுள் ஒருவராக நீங்கள் இருந்தால், அப்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள் – உயிர்த்திருப்பது மிகுந்த மதிப்பு வாய்ந்தது.

 

 

tamapp