கேள்வி : நமஸ்காரம். என் பெயர் தன்யா ரவி. ஆஸ்டியோஜெனிஸிஸ் இம்பர்ஃபெக்ட்டா எனும் அரிய மரபியல் சார்ந்த நோயால் நான் பிறவியிலிருந்து பாதிக்கப்பட்டுள்ளேன். இந்நோய் இருப்பவர்களுக்கு எலும்பு மிகவும் மிருதுவாக, கண்ணாடியைப் போல சுலபமாக உடைந்து விடுவதாக இருக்கும். எவருடைய உடலிலும் உள்ள எலும்புகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், எனக்கு ஏற்பட்டுள்ள எலும்புமுறிவுகளின் எண்ணிக்கை அதிகம். இன்று ஒரு கேள்வியைக் காட்டிலும் எனக்கு ஒரு பணிவான வேண்டுகோள் இருக்கிறது. எதிர்காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில், நீங்கள் உடல் ஊனம் குறித்து தெளிவு தந்தால் நன்றாக இருக்கும். இந்த வாய்ப்பு, உடல் ஊனமுற்ற மக்களுக்கு தேவையான கவனத்தை கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

சத்குரு: எங்கள் மத்தியில் நீங்கள் இன்று இருப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை. உயிர் பல வடிவங்களில் வருகிறது, ஆனால் இது சாதாரணம் அது மிக சாதாரணம் என்று சமுதாயங்கள் முத்திரை குத்தி உள்ளார்கள். ஆனால் உண்மையில் கை கால்கள் எல்லாம் நன்றாக இருக்கும் ஒரு மனிதரை நாம் பார்த்தால், இன்னொரு மனிதர் உடன் ஒப்பிடும்போது, வாழ்க்கையில் ஏதோ ஒரு அம்சத்தில் அவர் சற்றே ஊனமுற்றவராக இல்லையா? திரு. போல்ட் அவர்களுடன் நீங்கள் ஓடினால், இரு கால்களும் நலமாக இருந்தாலும் ஊனமுற்றவரைப் போல நீங்கள் உணர்வீர்கள் அல்லவா?

சாதாரணமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள பலர் தங்கள் மூளையை தினமும் உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இதை மன அழுத்தம், பதற்றம் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள், ஆனால் ஏதோ ஒரு விதத்தில் தங்கள் மூளையை உடைக்கிறார்கள்.

எனவே நாம் நம்மையும் வேறு எவரையும் முத்திரை குத்த வேண்டாம், ஏனென்றால் உயிர் பல வடிவங்களில் வந்துள்ளது. அதை நீங்கள் மதித்து அதைப்பற்றி உங்களால் செய்ய முடிந்ததை சிறப்பாக செய்ய வேண்டும். ஏனென்றால் இது ஒரு அதிசயம், அதாவது இன்று காலை நீங்கள் உண்ட இட்லி அல்லது தோசை நாம் நடமாடும் மண்ணிலிருந்து உணவானது, அந்த உணவு இன்று சதையாகவும் எலும்பாகவும் மாறியுள்ளது. இவ்வளவு நுட்பமான சிக்கலான ஒரு செயல்முறையை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டோம், துரதிர்ஷ்டவசமாக சில விஷயங்கள் சில சமயங்களில் நாம் விரும்பும் விதமாக நடப்பதில்லை.

எனவே உங்களை நீங்களே ஊனமுற்றவர் என்று சொல்லாதீர்கள். நீங்கள் ஒரு விதமாக இருக்கிறீர்கள், நான் வேறுவிதமாக இருக்கிறேன். எந்த ஒரு மனிதரும் தனக்கு முற்றிலும் சரியாக இருக்கும் உடல் அல்லது மனம் இருக்கிறதென சொல்ல முடியாது. எனக்கு ஒருவித ஊனம் உங்களுக்கு வேறு வித ஊனம். நம்மை நாமே இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஏதோ ஒரு விதத்தில் நாம் அனைவருமே ஊனமுற்றவர்களாகவே இருக்கிறோம்.

உங்கள் எலும்புகள் உடைவது மிகவும் வலியானது, துரதிர்ஷ்டவசமானது. ஆனால் சாதாரணமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள பலர் தங்கள் மூளையை தினமும் உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இதை மன அழுத்தம், பதற்றம் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள், ஆனால் ஏதோ ஒரு விதத்தில் தங்கள் மூளையை உடைக்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனக்குள் நான் எப்படி வாழ்கிறோம் என்பதை வேறு எவராலும் நிர்ணயிக்க முடியாது. அந்த விதத்தில் எவரும் ஊனமுற்றவர் இல்லை.

உடல் வடிவம் என்பது யந்திரம் போன்ற ஒரு செயல்முறை. சில சமயங்களில் சில விஷயங்கள் தவறாக கூடும். இது சாதாரணமாக வரலாம், ஆனால் பிற்காலத்தில் தவறாகலாம். அல்லது கருவறையிலேயே இதை உருவாக்கும் சமயத்திலேயே ஏதோ ஒன்று தவறாகிப் போகலாம். இது அந்த மனிதரை எந்த விதத்திலும் சார்ந்ததில்லை. இது பல விஷயங்களை சார்ந்தது, ஏனென்றால் இது மிகவும் சிக்கலான ஒரு செயல்முறை, அது சில சமயங்களில் தவறாகிவிடலாம்.

ஆனால், நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதை அது நிர்ணயிக்கக் கூடாது. நாம் உடலளவில் எப்படி வாழ்கிறோம் என்பதைப் பல விஷயங்கள் நிர்ணயிக்கலாம். ஆனால் நமக்குள் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை நம்மை தவிர வேறு எவரும் முடிவு செய்யக்கூடாது. எனக்குள் நான் எப்படி வாழ்கிறோம் என்பதை வேறு எவராலும் நிர்ணயிக்க முடியாது. அந்த விதத்தில் எவரும் ஊனமுற்றவர் இல்லை.

உண்மையான சமநிலையை அடைவது

ஆன்மீக செயல்முறை என்றால் மேலே பார்ப்பதோ கீழே பார்ப்பதோ அல்ல. உள் முகமாகத் திரும்பி உடல் மற்றும் மனதின் கட்டமைப்புகளை கடந்த ஒரு பரிமாணத்தைத் தொடுவதே ஆன்மீகம்

மனோரீதியான மற்றும் உடல்ரீதியான பரிமாணங்களைக் கடந்தால், அனைத்து உயிர்களும் ஒன்றே. இதற்குத்தான் இன்று மிகவும் தவறாக பயன்படுத்தப்படும் “ஆன்மீகம்” எனும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆன்மீக செயல்முறை என்றால் மேலே பார்ப்பதோ கீழே பார்ப்பதோ அல்ல. உள் முகமாகத் திரும்பி உடல் மற்றும் மனதின் கட்டமைப்புகளை கடந்த ஒரு பரிமாணத்தைத் தொடுவதே ஆன்மீகம்.

இதனால்தான் ஆன்மீகம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.சரிநிகர் சமானமாக இருப்பது குறித்து நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் நம் உடலையோ மனதையோ முன்னிறுத்தும்போது அங்கு சமநிலை இருக்க முடியாது.உடல் மற்றும் மனம் - எனும் இரு குவியல்களை கடந்த இந்தவொரு பரிமாணத்தை நாம் பயன்படுத்தினால், அனைத்தும் ஒன்றே.

இந்த ஒரு அனுபவம் மனிதகுலத்திற்கு வந்துவிட்டால், இங்கு அனைத்தையும் இணைத்துக் கொள்ளும் ஒரு அற்புதமான இருப்பைக் காண்பீர்கள். யார் எப்படிப்பட்ட திறமைகளுடன் வந்திருக்கிறார் என்பது ஒரு பொருட்டாக இருக்காது, ஒவ்வொரு உயிருக்கும் உரிய இடம் இருக்கும். ஆனால் இப்போது உடல்ரீதியான மற்றும் மனோரீதியான திறமையை நாம் அளவுகோலாக வைத்துக் கொண்டு, “ இது சராசரி, இது சராசரியைவிட கீழானது” என்றெல்லாம் சொல்கிறோம். இப்படிச் செய்யாதீர்கள்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு உயர்ந்தால், பிற உயிர்கள் தெரிந்தோ தெரியாமலோ உங்களை உயர்வாகப் பார்த்தால், இது அனைவரையும் இணைத்துக் கொண்டு அனைத்துடனும் கலந்து விடுவதற்கான நேரம். இது ஆதிக்கம் செலுத்துவதற்கான நேரமல்ல.

ஒரு வாழைப்பழம், அல்லது வெட்டுக்கிளி, உயிர்த் தன்மையில் உங்களைவிட குறைவானது என்று சொல்ல முடியுமா? நீங்கள் இல்லாமல் அவற்றால் வெகு சுலபமாக உயிர் வாழ்ந்திட முடியும், ஆனால் உங்களால் அவை இல்லாமல் உயிர் வாழ இயலாது. இயற்கை நமக்கு இந்த சாத்தியத்தை வழங்கியுள்ளது, இந்த உயிர்கள் அனைத்துக்கும் மேலான நிலையில் இருப்பதற்கான புத்திசாலித்தனம் நம்மிடம் இருக்கிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு உயரும்போது, நீங்கள் முரட்டுத்தனமாக, அபத்தமாக இருந்தால், அது ஆதிக்கம் செலுத்துவதற்கான நேரம் என்று நினைப்பீர்கள். இல்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு உயர்ந்தால், பிற உயிர்கள் தெரிந்தோ தெரியாமலோ உங்களை உயர்வாகப் பார்த்தால், இது அனைவரையும் இணைத்துக் கொண்டு அனைத்துடனும் கலந்து விடுவதற்கான நேரம். இது ஆதிக்கம் செலுத்துவதற்கான நேரமல்ல, ஏனென்றால் நீங்கள் ஆதிக்கம் செலுத்தினால், மற்ற எல்லாவற்றிலிருந்து தனிமைப்படுத்தப்படுகிறீர்கள்.

பெரிய அளவில் நடக்கும் உயிராக மாறுவது

உங்களுக்குள் எவ்வளவு உயிரை பற்றிக்கொண்டீர்கள்? இது மட்டும்தான் முக்கியம், உங்கள் உடல் எவ்வளவு பெரிது அல்லது மூளை எவ்வளவு பெரிது என்பது முக்கியம் அல்ல.

இந்த இணைத்துக் கொள்ளும் தன்மை வர வேண்டும் என்றால், மனிதர்களுக்கு உடல் மற்றும் மனம் தாண்டிய ஒரு உள் அனுபவம் சிறிதளவேனும் வந்திருக்க வேண்டும். உங்கள் உடல் வேறு, என் உடல் வேறு. நாம் உயிருடன் இருக்கும் வரை அது வெவ்வேறு என்றே நினைப்போம். நம்மை புதைக்கும்போதுதான் எல்லாம் ஒரே மண் என்பதை அறிவோம். என் மனம் வேறு, உங்கள் மனம் வேறு. ஆனால் இந்த உயிரைப் பார்த்தீர்களானால், என்னுடைய உயிர் உங்களுடைய உயிர் என்று எதுவும் இல்லை. இது உயிருள்ள ஒரு பிரபஞ்சம். கேள்வி இதுதான், உங்களுக்குள் எவ்வளவு உயிரை பற்றிக்கொண்டீர்கள்? இது மட்டும்தான் முக்கியம், உங்கள் உடல் எவ்வளவு பெரிது அல்லது மூளை எவ்வளவு பெரிது என்பது முக்கியம் அல்ல. எவ்வளவு பெரிய வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்பது, எந்த அளவு உங்களுக்குள் உயிரை பற்றி கொண்டீர்கள் என்பதைச் சார்ந்தது.

உங்களிடம் தற்போது இருப்பதைவிட அதிக உயிரைப் பற்றிக் கொள்ள விரும்பினால், உங்கள் தனிப்பட்ட எல்லைகளை நீங்கள் திறந்திட வேண்டும். உங்கள் தனித்துவம் என்பது, மெதுமெதுவாக, எவரும் ஊடுருவ முடியாத கான்கிரீட் கூடாக மாறிக்கொண்டு வருகிறது. உங்கள் தனிப்பட்ட தன்மையின் எல்லைகளை நீங்கள் அழித்துவிட்டால், அதைத்தான் நாம் யோகா என்கிறோம்.

யோகா என்றால் உடலை முறுக்குவதும் தலைகீழாக நிற்பதும் அல்ல. யோகா என்றால் சங்கமம். சங்கமம் என்றால் உங்கள் தனித்தன்மையின் எல்லைகளை நீங்கள் விழிப்புணர்வாக அழித்து விட்டீர்கள் என்று அர்த்தம். இப்போது எவரும் கற்பனை செய்து பார்த்திராத அளவு பிரம்மாண்டமாக உங்களுக்குள் உயிர் நிகழ்கிறது. பெரிய அளவில் நடக்கும் உயிராக இருப்பதால், இயல்பாகவே எல்லாம் உங்கள்வழி வந்தடையும்.