விவசாயமே அடுத்த பொருளாதாரப் புரட்சிக்கு மூலமாக முடியும்
இந்தியாவில் இன்றைய விவசாயத்தின் நிலை என்ன என்பதை ஆராயும் சத்குரு, விவசாயத்தை பெருக்கி, அதன் வருமானத்தின் மூலம் நம் நாட்டின் பொருளாதாரத்தை எப்படி அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது என்பதை பற்றி விளக்குகிறார்.
![Sadhguru threshing wheat stalks | Agriculture Can Fuel the Next Economic Revolution Sadhguru threshing wheat stalks | Agriculture Can Fuel the Next Economic Revolution](https://static.sadhguru.org/d/46272/1633492974-1633492972950.jpg)
துரதிருஷ்டவசமாக, நமக்கு உணவளிக்கும் விவசாயியின் குழந்தைகள் பட்டினி கிடக்கின்றனர். பிழைக்க வழி இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையை முடித்துகொள்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில், 3,00,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நான்கு முறை இந்தியா சந்தித்த போரில் கூட இவ்வளவு மக்கள் இறக்கவில்லை. இது நமக்கு பெருத்த அவமானம்.
உலகத்தின் "அன்னதத்தா"
வானிலை, மண், காலநிலை, தேவையான நிலப்பரப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக நம் விவசாயிகளின் உள்ளார்ந்த அறிவு காரணமாக இந்த உலகத்திற்கே உணவை அளிக்கும் "அன்னதத்தா" வாக மாற நம் நாட்டிற்கு வாய்ப்பு உள்ளது. இந்த ஆசீர்வாதங்களைக் கொண்ட ஒரே நாடு நம் நாடு மட்டும்தான். ஆனால், இந்தத் துறையை மிகவும் இலாபகரமான செயற்பாடாக மாற்றாவிட்டால், அடுத்த தலைமுறை விவசாயத்திற்குள் போகாமலேயே இருக்கலாம். இதன் மூலம்தான் நாம் கிராம மக்களை கிராமத்திலேயே நிலைத்து இருக்க செய்ய முடியும். விவசாயத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று அதன் லாபத்தை பெருக்காவிட்டால், கிராமப்புற இந்தியாவை நகரமயமாக்குதல் என்பது ஒரு கனவாகவே போய்விடும்.
விவசாயத்தில் மிக அதிக லாபம் ஈட்டக்கூடிய வெற்றியைக் கொண்டுவருவதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது மிக சிறிய அளவில் உள்ள நிலங்கள்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் மற்றும் விளை நிலங்களை பிரித்தெடுத்தலில் பிரச்சனை இருக்கிறது. இன்று இந்தியாவில் சராசரியாக ஒரு விவசாயி ஒரு ஹெக்டேர் நிலம் மட்டுமே வைத்துள்ளார், அதில் எதை முதலீடு செய்தாலும் அதில் நஷ்டம்தான் ஏற்படும். இன்று விவசாயிகளை அழித்து, வறுமைக்கு அழைத்து செல்வது இரண்டு பிரச்சனைகள்தான். ஒன்று நீர்ப்பாசனத்தில் முதலீடுகள் மற்றும் சந்தையில் சாமர்த்தியமாக பேசி விற்பனை செய்யும் திறன் இல்லாதது. பெரும் பரப்பு நிலங்கள் இல்லாமல், இந்த இரண்டு முக்கிய அம்சங்களையும் நாம் அடைய முடியாது.
வேளாண்மையை மேம்படுத்துதல்
அனைத்து விவசாயிகளையும் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் ஒன்றிணைத்து, குறைந்தபட்சம் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயத்தை உயர்த்துவதன் மூலம், இதில் மாற்றம் கொண்டுவர முடியுமா என்று பார்க்கிறோம். விவசாயிகள் தங்கள் நிலத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக சட்ட கட்டமைப்புகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இது அவர்களுக்கு நூறு சதவிகிதம் பாதுகாப்பானதாக இருக்கும். விவசாயிகள் தங்களது நிலங்களை தனித்தனியாக பயிரிடலாம், ஆனால், நுண்ணுயிர் நீர்ப்பாசனம் மற்றும் விளைபொருட்களின் சந்தைப்படுத்துதல் ஆகியவை திறமையான நிறுவனங்கள் மூலம் பார்த்துகொள்ளப்படும்.
Subscribe
இப்பொழுது ஒவ்வொரு விவசாயியும், தனி பம்பு செட், தனி போர்வெல், தனி மின் இணைப்பு வைத்துள்ளனர். இதை பராமரிக்க அவர்களுக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி கடன் வாங்கி அதை திரும்ப செலுத்த ஒன்று நிலத்தை விற்கிறார்கள் அல்லது ஊரை விட்டு சென்றுவிடுகிறார்கள். இதில் எதுவும் முடியவில்லை என்றால் தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கிறார்கள். இதை எல்லாம் மீறி அவர் அறுவடைக்கு வரும்போது அங்கே மறுபடியும் பிரச்சனை. விளைபொருட்களை எடுத்து செல்ல போதிய போக்குவரத்து, சேமிப்புக் கிடங்கு, வலுவான சந்தை போன்ற வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்.
எனவே, தனியார் துறையினர் நுண்ணுயிர் பாசனங்களை அவர்கள் பணத்தில் நிறுவி வைத்துகொள்வார்கள். குழுக்களாக இயங்கும் விவசாயிகள் தனியாரிடம் வேண்டும் அளவிற்கு மட்டும் தண்ணீரை வாங்கிக்கொள்ளலாம். இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் முதலீடு செய்யும் தேவை இருக்காது. அரசு இதற்கு முன்னுரிமை கொடுத்து சட்ட வரையறைகளை உருவாக்கி, முதலீட்டாளர்களை ஊக்கமளித்து அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். ஒரு FPO இல் 10,000 விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்க செய்ய முடிந்தால், அவர்கள் சிறந்த சந்தை விலைக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம். இதன் பயனை விவசாயி மற்றும் நிறுவனத்திற்கு இடையில் பகிர்ந்துகொள்ளலாம். நம் விவசாயிகளுக்கு இந்த ஆதரவை நாம் உருவாக்கினால், அவர்கள் உற்பத்தியை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்க தேவை இருக்காது. இதன் மூலம் இந்தியா உலகில் அட்சய பாத்திரமாக விளங்கும்.
இந்திய மண்ணுக்கு புத்துயிரளித்தல்
உணவை எப்படி உருவாக்குவது என்பதை பற்றி விவசாயிகளிடையே ஒரு பெரிய அளவு அறிவு உள்ளது. அவர்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருப்பதால், அதை பெரிதாக நாம் எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறோம். ஆனால், இது மிக நுட்பமானது மற்றும் கவனமாக செய்யப்பட வேண்டிய ஒன்று. நம் விவசாயிகள் தலைமுறை தலைமுறைக்கு இதை பின்பற்றி வருவதால் அவர்களுக்கு அந்த திறமை உள்ளது.
தென்னிந்தியா 12000 ஆண்டுகளாக ஒழுங்கமைக்கப்பட்ட வேளாண்மையினைக் கொண்டிருக்கிறது. இன்று துரதிர்ஷ்டவசமாக நம் நிலங்களில் இரசாயனங்களை கொட்டி சீரழிக்கிறோம். இதனால் இந்த நிலங்கள் அனைத்தும் ஒரு தலைமுறையிலேயே பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டன. நம் விவசாயிகள் நல்ல மகசூலைப் பெறவும், விவசாயத்தை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என்றால், மண்ணுக்கு ரசாயன உரங்களை உபயோகிப்பதை நிறுத்தி, இயற்கை உரங்களுக்கு மாற வேண்டும். நிலத்தில் மரங்களும், மாடுகள் போன்ற விலங்குகளும் இருக்கும் பட்சத்தில், அதன் கழிவுகளை மண் உள்வாங்கி எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்தியாவில், ஒரு சில இடங்களில் இயற்கை முறையில் மரப்பயிர் விவசாயத்தை உருவாக்கி அதன் மூலம் விவசாயிகளுக்கு மூன்று முதல் எட்டு சதவிகிதம் வரை வருமானத்தை உயர்த்திக் காட்டியுள்ளோம். ஏனெனில், அவர்களின் சாகுபடி செலவுகள் கடுமையாக குறைக்கப்படுவதுடன், இப்போது உலகெங்கிலும் இயற்கை முறையில் விளையும் பொருட்களுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது. வியட்நாம் போன்ற சில நாடுகளில் இந்த மாற்றத்தை ஒரு பெரிய அளவில் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். வியட்நாமிய வல்லுநர்களுடன் நாங்கள் உரையாற்றியபோது, இந்த முறையின் மூலம் அந்த நாட்டின் விவசாயிகளின் வருமானம் இருபது மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளனர்.
மேலும், பால், மீன் வளர்ப்பு மற்றும் கைவினைகளிலிருந்து வரும் வருவாயை இதனுடன் சேர்த்தால் கிராமப்புற வளர்ச்சி பன்மடங்கு உயரும். நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும், அதைப் பங்கிட்டுக் கொள்ளவும் வேண்டும். முழு பொருளாதாரமே மரத்துடனான பொருட்களை சுற்றி செயல்பட பல வழிகள் உள்ளன. தேக்கு, பழம் மற்றும் சுற்றுலாவின் உலக சந்தை பல கோடியில் உள்ளது என்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
கழிவை காசாக்கும் வழிமுறை
மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் கழிவை காசாக்கும் வழிமுறையில் இறங்கலாம். இப்போது, நம் நகரங்களில் உருவாகும் கழிவுப்பொருட்களில் பெரும்பாலானவை நம் நதிகளிலும், கடல்களிலும்தான் வீசப்படுகின்றன.இது நம் சுற்றுசூழலுக்கு நாம் ஏற்படுத்தும் ஒரு பெரிய ஆபத்து மட்டுமல்ல, இது ஒரு பெரிய பொருளாதார இழப்பும் கூட. எனவே கழிவை காசாக்கும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும். சிங்கப்பூர் அசுத்தநீரை குடிநீராக மாற்றி இதை நிரூபித்து காட்டியுள்ளது. இந்தியாவின் நகரங்கள் வெளியேற்றும் 36 பில்லியன் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தினால் சுமார் 6 முதல் 9 மில்லியன் ஹெக்டேர் நிலங்களுக்கு நுண்ணுயிர் பாசன வசதி செய்துகொள்ள முடியும்.
இதுபோன்ற அம்சங்களுக்கு அரசால் திறம்பட நிதியளிக்க முடியாது. அரசாங்க நிதியின் இயல்பு சில நேரங்களில் சரியான நேரத்தில் அது கிடைப்பதில்லை. குறிப்பாக மரங்கள் சார்ந்த விவசாயத்திற்கு, குறிப்பிட்ட காலங்களில் நிதியுதவி மிக அவசியம். இதில் அரசை விட பெருநிறுவனத் துறைதான் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க முடியும்.
பெருநிறுவனங்கள் இதில் முதலீடு செய்து ஒரு செயல்முறை விளக்கத்தை செய்துகாண்பிக்க வேண்டும். உதாரணத்திற்கு 25,000 விவசாயிகளுக்கு மற்றும் 100,000 ஹெக்டேர் நிலத்திற்கு, ஒழுங்கமைக்கப்பட்ட நுண்ணிய நீர்ப்பாசனம் மற்றும் உற்பத்தியை சந்தைப்படுத்துதலில் துணை நின்று, ஒரு பொருளாதார தளத்தில் வெற்றியை உருவாக்கிக் காட்டினால், அதன்பின் இந்த வழிமுறை நாடு முழுவதும் சென்றடைந்துவிடும்.
பொருளாதாரம் பற்றி நாம் சிந்திக்கையில், பங்குச்சந்தை மற்றும் ஒரு சில விஷயங்களைத்தான் நாம் பார்க்கிறோம். ஆனால், நமது மக்கள்தொகையில் அறுபத்து ஐந்து சதவிகிதம் கிராமப்புறங்களில் உள்ளது. நாம் அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கினால் நமது பொருளாதாரம் கூரையை கிழித்துக் கொண்டு கொட்டும்.
இன்று இந்தியா ஒரு செழிப்பான வாசலில் உட்கார்ந்து இருக்கிறது. அடுத்த பத்து வருடத்திற்கு நாம் சரியான செயல்களை செய்தால், ஒரு மிகப்பெரிய ஜனத்தொகை மக்களை தற்போதைய நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும். பெருநிறுவனங்களுக்கு அவர்களின் நிபுணத்துவம் மற்றும் திறன்களைப் பயன்படுத்தி இந்த மாற்றத்தைக் கொண்டுவரும் பெரும் பொறுப்பு உள்ளது. இது தொண்டு அல்ல. இது மிகுந்த கணிசமான வருவாய்க்கான முதலீடு மற்றும் பல கோடி மக்கள் கௌரவமான, செழிப்பான வாழ்க்கை வாழ்வதற்கு உதவுவதும் ஆகும்.
ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!