சஞ்சீவ் கோயங்கா:

ஒரு தீவிரமான கிரிக்கெட் ரசிகனாக இருப்பதோடு, நானும் இந்த விளையாட்டில் ஓரளவு ஈடுபட்டிருப்பதால், விராட் கோலி மேலும் மேலும் வளர்வதை பெருமிதத்தோடு பார்க்கிறேன். கிரிக்கெட் களத்தில் அவருடைய உற்சாகத்தைப் பார்க்கிறேன். களத்துக்கு வெளியிலும் அவருடைய உற்சாகத்தைப் பார்க்கிறேன். அவர் விளையாட்டையும் அதன் விதிகளையும் மாற்றி எழுதுவதைப் பார்க்கிறேன்.

T20 ஆட்டத்தில் 140 – 160 ரன் தான் முதலில் நல்ல ஸ்கோர். அதை அவர் மாற்றிவிட்டார். இப்போது 190 குறைவான ஸ்கோர்.

சத்குரு:

250!

சஞ்சீவ் கோயங்கா:

250, 240!

மற்றவர்களைப் போல் இல்லாமல் அவருக்கு வேறு ஏதோ ஊக்கமிருக்கிறது.

ஒருவருக்கு, தான் இன்னும் கொஞ்சம் செய்யமுடியும், இன்னும் கொஞ்சம் ஊக்கமடைய முடியும், இன்னும் சாதனை படைக்க முடியும், புதிய உயரங்களை எட்டமுடியும் என்று உணர்த்துவது எது?

ஒருவருக்கு உள்ளேயே ஏதோ இருக்கிறதா அல்லது அது வெளியே இருந்து வருகிறதா? இது எப்படி நடக்கிறது?

சத்குரு:

நானும் ஆர்வத்தோடு விராட் கோலியை கவனித்து வந்திருக்கிறேன். ஏனென்றால் கடந்த 40 – 45 வருஷத்தில் மகத்தான பேட்ஸ்மேன் எல்லோரையும் நான் பார்த்திருக்கிறேன். அவர் அடிப்பது போல் பந்தை அடிப்பவர்கள் வெகுசிலர் தான். அப்படி அடித்தவர் என்றால் எனக்கு விவியன் ரிச்சார்ட்ஸ் மட்டும்தான் நினைவுக்கு வருகிறார். அவர்தான் இப்படி அடிப்பார், இந்த பையன் இன்றைக்கு அடிப்பது மாதிரி! அவர் மட்டும்தான் பந்தை அடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இது மிகவும் அரிது.

கிரிக்கெட் எப்படிப்பட்ட விளையாட்டு…

நிறையபேர், கிரிக்கெட்டை டிவியில் மட்டுமே பார்த்தவர்கள், எனவே இதை புரிந்துகொள்ள மாட்டார்கள். இது உலகிலேயே மிக ஆபத்தான விளையாட்டுகளில் ஒன்று. கல்லைப் போன்ற பந்து, மணிக்கு 130 – 140 கிலோமீட்டர் வேகத்தில் உங்களை நோக்கி வருகிறது. இந்த விளையாட்டில் தான், பந்து தரையில் பிட்ச் ஆகி இந்தப்பக்கம் அந்தப்பக்கம் ஸ்விங்க் ஆகிறது.

அதை எப்படி அடிப்பது என யோசிக்க ஒரு வினாடியை விட குறைவான நேரம்தான் இருக்கிறது. இது மிக ஆபத்தான விளையாட்டு.

பந்து வீசுகிற பவுலிங்க் இயந்திரங்கள் இருக்கிறது. கொல்கத்தாவில் அது இருக்கலாம். இந்த பந்து வீசும் இயந்திரங்கள் இருக்கிறது. இளைஞர்கள், நீங்கள் 140 கிலோமீட்டர் வேகத்தை கூட வைக்காதீர்கள். வெறும் 80 – 90 கிலோமீட்டர். அந்த இயந்திரத்தை, 90 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசுவதற்கு Set செய்துவிட்டு, அங்கே நின்று பந்து உங்களை நோக்கி எப்படி வருகிறதென்று பாருங்கள்.

அது பைத்தியக்காரத்தனம்!

வீசப்படும் ஒவ்வொரு பந்தும் வித்தியாசப்படும். அது உங்களை நோக்கி வருகிறது, அதை நீங்கள் அடிக்கவேண்டும். அங்கு நிற்கிற எல்லோருமே சிறந்தவர்கள் என நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் கோமாளித்தனமாகத் தெரியலாம்; டக்-அவுட் ஆகலாம். ஆனால் அவர்கள் செய்வதை சிறப்பாக செய்யக்கூடியவர்கள்.

ஆனால், இதில் யாரோ சிலர் தான் இப்படி தனித்துவமாக தெரிகிறார்கள்.

 விராட் கோலி, Virat Kohli in Tamil

கென்னி ராபர்ட்ஸின் பைக் ஓட்டும் திறமை

இது எனக்கு நினைவுக்கு வருகிறது, இப்படி ஒரு பைக் ஓட்டுனர் இருந்தார். அவர் பெயர் கென்னி ராபர்ட்ஸ். அவர் வரிசையாக 5 முறை உலக சாம்பியன்ஷிப்பில் ஜெயித்தார்.

மக்களால் நம்பமுடியவில்லை, ஏனென்றால், அதில் ஜெயிக்க நாடுமுழுவதும் நடக்கும் 16 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும். இயந்திரங்கள் எல்லாவற்றையும் தலைசிறந்த கம்பெனிகள் தயாரிக்கிறது, போட்டியாளர்களும் சிறந்த திறமையுடைவர்கள். ஆனால், வரிசையாக 5 முறை ஜெயிப்பது நடந்ததே இல்லை. அது முடியாததாக கருதப்பட்டது.

அவரிடம் கேட்டார்கள், “இதை எப்படி செய்கிறீர்கள்?”

அவர் சொன்னார், “நான் control-உடன் control இல்லாமல் போவேன்.”

எனக்கு இது மிக நன்றாகவே தெரிந்தது. நான் என் வாழ்க்கையில் ஒவ்வொரு அடி எடுக்கும்போதும் அப்படித்தான் வாழ்கிறேன். எப்போதும் control இல்லாத வேகம், ஆனால் control-ஆக இருப்பேன்.

இதைத்தான் எல்லோரும் தேடுகிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் கொஞ்சம் பைத்தியம் வேண்டும். ஆனால் முழு பைத்தியமாக போகக்கூடாது. ஆனால், பாதுகாப்புக்கான ஏக்கமானது அந்த கொஞ்ச பைத்தியக்காரத்தனத்தில் இருந்து அவர்களை விலக்கிவிடுகிறது.

அவர்கள் நினைப்பார்கள்,

“என் வாழ்க்கைக்கு என்ன ஆயிற்று? ஒரே போராகவும் பிரயோஜனமில்லாமலும் இருக்கிறதே.”

வெளியே வரப் பார்ப்பார்கள், ஆனால் ஏதோ அடிவாங்கிவிடுவார்கள். மறுபடியும் தங்களைச் சுற்றி சுவர்களை எழுப்பிவிடுவார்கள்.

இப்படியே தொடரும்.

17 வயதில் விராட் கோலியைப் பார்த்தபோது

இப்படி ஒரு உதாரணத்தை எடுக்கும்போது, ஒரு விஷயம் உற்சாகம்; இன்னொன்று நீங்கள் செய்வதன்மேல் பிரியமாக இருப்பது.

உண்மையாகவே நீங்கள் செய்வதை நேசிப்பது. அதைத்தான் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள்! இப்போது, சமீபத்தில் தொலைக்காட்சியில் விராட் கோலி இதை சொன்னார் என நினைக்கிறேன், “என்னுடைய ஒரே பிரச்சனை எனக்கு கோபம் வருவதுதான். நான் ஒரு சந்நியாசியைப் போல இருக்க விரும்புகிறேன்.”

இப்படி ஏதோ அவர்சொன்னார். நிதானமாக இருக்க விரும்புவதாகச் சொன்னார். அவரிடம் இருக்கிற திறமையை வைத்துப் பார்த்தால், அவர் ஒரு ஜாம்பவானாக ஆகமுடியும்.

அவர் கிரிக்கெட்டில் புதிய உலக வரலாறு படைப்பார், இன்னுமொரு ஆட்டக்காரராக இருக்கமாட்டார். அதற்குத் தேவையான எல்லாம் அவரிடம் இருக்கிறது.

அவருக்கு 17 வயதாக இருந்தபோது நான் அதைச் சொன்னேன். அவரை, சிங்கப்பூரில் 18 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கான ஆட்டத்தில் பார்த்தேன். அவர் அந்த சமயத்தில் கேப்டனாக இருந்தார்.

இந்த பையன் விளையாடுவதைப் பார்த்ததும், “இந்த பையன் ரொம்ப தூரம் போவான்” என்று அப்போதே சொன்னேன்.

பிறகு கிட்டத்தட்ட 5 – 6 வருடங்களுக்கு அவர் என் கண்ணில் படவில்லை. பிறகு திடீரென்று டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணியில் தோன்றினார். இப்போது இந்த மாதிரி ஆடிக் கொண்டிருக்கிறார்.

அவர் குளிர்ந்த நெருப்பாக இருக்க கற்றுக்கொண்டால், அவரையே எரித்துவிடக்கூடிய நெருப்பாக இல்லாமல் இருந்தால், அவர் நீண்ட காலத்தில் நடக்காத சாதனைகளை செய்ய வாய்ப்பிருக்கிறது.