கேள்வியாளர்: சத்குரு, நீங்கள் 25 வருடங்களாக வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள், ஏன் நான் அப்போதே வகுப்பில் கலந்துகொள்ளவில்லை. அல்லது கடந்த 4, 5 வருடங்களில் கூட இந்த வகுப்பு பற்றி நான் தெரிந்து கொள்ளவில்லை. இப்போதுதான் வகுப்பில் கலந்துகொள்ள முடிந்தது. இதுவும் கூட என் கர்மவினைப் பயன்தானா?

சத்குரு:

அனேகமாக 23 வருடங்கள் முன்பு நீங்கள் என்னைக் கடந்து சென்றீர்கள். ஆனாலும் என்னைக் கண்டுகொள்ளாமல் சென்றீர்கள் (அனைவரும் சிரிக்கின்றனர்). கர்மா என்று சொல்லும்போது நீங்கள் அதை முழு அர்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டும். கர்மா என்றால் செயல். செயல் என்பது பல நிலைகளில் இருக்கிறது. செயல்களை நீங்கள் உடல், மனம், உணர்ச்சி, சக்தி ஆகிய பல நிலைகளில் செய்யமுடியும். முதல் மூன்று நிலைகளில் செய்யும் செயல்களை கர்மா என்கிறோம். சக்திநிலையில் செய்யும் செயலை க்ரியா என்கிறோம். ஒவ்வொரு செயலும் தனது பதிவை உங்கள்மீது விட்டுவைக்கிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் யோசிக்கும்போது, அது ஒரு குறிப்பிட்ட பதிவை உங்கள் மீது விட்டுவைக்கிறது. உடல், மனம் திறந்திருக்கிறது. படைப்பும், படைத்தவரும் உங்களுக்கு கிடைப்பவராகிறார்கள். ஏனென்றால் இது முழுமையான விடுதலை நிலைக்கு வந்திருக்கிறது. மற்றும் உணர்ச்சியைப் பயன்படுத்தி உங்களால் செய்யப்பட்ட செயல்களில் விளைந்த சிக்கலான பதிவுகள்தான் இப்போதைய நீங்கள்.  நீங்கள் நினைப்பதும், நீங்கள் உணர்வதும், நீங்கள் செயல்படுவதும்தான் உங்களுடைய ஆளுமையாக இருக்கிறது, இல்லையா? உங்கள் ஆளுமைக் குணங்களே, உங்கள் இயல்புகளே உங்கள் கர்மாவாக இருக்கிறது. உங்கள் இயல்புகளை நீங்கள்தான் உருவாக்கினீர்கள். அப்படியானால் உங்கள் வாழ்க்கையும் நீங்களே உருவாக்குவதுதான் என்று நாம் சொல்கிறோம்.

எனவே 23 வருடங்கள் முன்பு நீங்கள் எதில் ஆர்வமாக இருந்தீர்கள் என்பதைப் பாருங்கள். நீங்கள் குறிப்பிட்ட சில செயல்களில் ஆர்வமாக இருந்தீர்கள். எனவே அது சம்பந்தமான செயல்கள்தான் உங்களைச் சுற்றி நடந்து கொண்டிருந்தன. அப்படியானால் பல வருடங்கள் முன்பே வகுப்பிற்கு வராதது கர்மாதானா? ஆம், அது கர்மாதான். நீங்கள் எந்த மாதிரி கர்மாவைச் சேர்த்து வைத்திருக்கிறீர்களோ அவற்றின் உந்துதலுக்கு ஏற்ப நீங்கள் ஈர்க்கப்படுகிறீர்கள். குறிப்பிட்ட கர்மாவைப் பொறுத்து குறிப்பிட்ட உந்துதல் பிறக்கிறது. இந்த உந்துதல் காரணமாகத்தான் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட பாதையில் நகர்கிறீர்கள். இந்த உந்துதலுக்குப் பொருத்தமானவையே உங்கள் பாதைக்கு வரும்.

ஆனால் இவையெல்லாமே நீங்கள் செய்பவைதான். இதை நீங்கள் மறக்கக்கூடாது. நீங்கள் அதை மறந்துவிட்டால் அந்த ஷணமே அது உங்களுக்கு அழிவைத்தரும். அனைத்துமே நீங்கள் செய்பவைதான். உங்கள் கர்மா என்றால் உங்கள் செயல் என்றுதான் அர்த்தம். சில குறிப்பிட்ட பதிவுகளின் குவியலை நீங்கள் உருவாக்கினீர்கள். இப்போது, ‘நான் என்ன செய்ய முடியும்? இப்படித்தான் என் வாழ்க்கையில் நடந்தது’ என்று கூறுகிறீர்கள். இது சரியல்ல. ஒரே சூழ்நிலையில் இருவர் இருக்கிறார்கள். ஆனால் இருவரும் வேறுவேறான செயல்களைச் செய்யமுடியும். இப்போது இந்த சத்சங்கத்தில்கூட சிலருக்கு பசி எடுக்கிறது, சிலருக்கு தூக்கம் வருகிறது, சிலர் இன்னும் சிறிது நேரம் சத்சங்கம் நடக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள், சிலர் எழுந்து போக நினைக்கிறார்கள், சிலருக்கு கால் வலிக்கிறது. இங்கேயே பலவித கர்மாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரே சூழ்நிலையில் இருந்தாலும் ஒவ்வொருவரும் வெவ்வேறு கர்மாவை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே கர்மா என்பது உங்களுக்கு என்ன நடந்தது என்பதல்ல. ஒரு சூழ்நிலைக்கு நீங்கள் எப்படி பதில் கொடுத்தீர்கள் என்பதுதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு வீட்டில் இரட்டையர்கள் இருந்தார்கள். அதில் ஒரு சிறுவன் முழுக்க முழுக்க எதையும் நன்மையாகக் கருதுபவன். இன்னொருவன் எதிலும் சந்தேகம் கொள்பவன். ஒருவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தான். மற்றொருவன் ஏதோ காரணம் வைத்து எப்போதும் துன்பத்திலேயே இருந்தான். ஆனால் இருவரும் இரட்டையர்கள். எனவே அவர்களின் 14 வது பிறந்த நாளின்போது அவர்களின் தந்தை இருவரின் மனப்போக்கையும் மாற்ற நினைத்தார். எப்போதும் துன்பத்திலேயே இருப்பவனை சிறிது மகிழ்ச்சியானவனாகவும், எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவனை விளையாட்டுத்தனம் இல்லாமல் இன்னும் சிறிது அக்கறை செலுத்துபவனாகவும் மாற்ற  நினைத்தார். எனவே பிறந்த நாளன்று, துன்பப்படுபவனின் அறையில், அவன் வயது பையன் என்னவெல்லாம் விரும்புவானோ, பொம்மைகள், விளையாட்டுச் சாமான்கள் என பரிசுப் பொருட்களாக நிறைத்தார். எதிலும் மகிழ்ச்சி காண்பவனின் அறையில் தன் பரிசுப் பொருளாக குதிரை சாணத்தை நடுவில் குவித்து வைத்தார். பிறகு இருவரையும் அழைத்து, “உங்கள் அறையில் பரிசுப் பொருட்கள் வைத்திருக்கிறேன், சென்று பாருங்கள்” என்று கூறினார்.

அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களைக் குறித்து என்ன நினைக்கிறார்கள், தங்கள் மனநிலையை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்று அறிய மிகவும் ஆவல் கொண்டார். எனவே அரை மணி நேரம் கழித்து எதற்கும் துன்பப்படுபவனின் அறைக் கதவில் காது வைத்துக் கேட்டார். அந்தச் சிறுவன் துக்கத்தில் மிகவும் அழுது கொண்டிருந்தான். என்ன தவறாகிப் போய்விட்டது, நீண்ட நாட்களாக அவன் கேட்டுக் கொண்டிருந்த பரிசுப் பொருட்களை எல்லாம்  வைத்திருந்தோமே, பின்னர் ஏன் அழுகிறான் என்று அதிசயித்தவாறு அந்த கதவைத் திறந்து அவனிடம் சென்று அன்பாக, ‘ஏன் அழுகிறாய்? நல்ல நல்ல பொருட்களாகப் பார்த்துதானே உனக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறேன்’ என்று கேட்டார். அவன் மேலும் அழுதுகொண்டே, “நான் இந்த பொம்மைகளை எல்லாம் திறந்து பார்த்தேன். சிலவற்றின் குறிப்புகள் புரியவேயில்லை. சிலவற்றில் எப்படி விளையாடுவது என்ற குறிப்புகளே இல்லை. அந்த பொம்மையில் பேட்டரியே இன்னும் வைக்கவில்லை. நாளை என் நண்பர்கள் அனைவரும் வர இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்த பொம்மைகளை வைத்து விளையாட ஆரம்பித்து விடுவார்கள். பின்னர் சிலவற்றை உடைத்து விடுவார்கள். எனக்குத் தெரியும், விஜய் எப்படியும் உடைத்து விடுவான்...” என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்து விட்டான்.

சரி என்று அவனை அப்படியே விட்டுவிட்டு, என்னென்னவோ செய்தும் இவன் இப்படிப் புலம்புகிறானே, அடுத்தவன் என்ன செய்கிறான் என்று பார்ப்போம் என்றவாறு அடுத்தவனின் அறைக்குச் சென்று கதவில் காது வைத்துக் கேட்டார். அவனோ விசிலடித்துக் கொண்டு ஜாலியாக பாடிக் கொண்டிருந்தான். ‘ஓ, இது மிகவும் அதிகம், குதிரை சாணத்திற்குப் போய் இவன் இவ்வளவு குதூகலமாக இருக்கிறானே’ என்று நினைத்தவாறு கதவைத் திறந்து, ‘ஏய், முட்டாள், என்ன செய்கிறாய்! உனக்கு குதிரை சாணம்தானே கொடுத்திருந்தேன், நீ என்ன குஷியாக பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாய்!’ என்று கேட்டார். அதற்கு அவனோ, ‘ஆமாம், குதிரை சாணம் இங்கிருக்கிறதென்றால், நீ எனக்காக குதிரைக்குட்டி வாங்கி வைத்திருப்பாய், குதிரைக்குட்டி எங்கோ பக்கத்தில்தானே இருக்கிறது’ என்றவாறு நடனமாட ஆரம்பித்து விட்டான் (அனைவரும் சிரிக்கின்றனர்).

உங்கள் கண்ணோட்டத்தின்படிதான் எதுவும் உங்களுக்கு நடக்கிறது. உங்கள் கர்மா அப்படித்தான் நடக்கிறது. குறைந்தபட்சம் அந்த கண்ணோட்டம் இப்போதாவது உங்களுக்குக் கிடைத்ததே என்று மகிழ்ச்சியடையுங்கள். ஏனெனில் பெரும்பான்மையோர் தாங்கள் எதற்காக இருக்கிறோம், தங்கள் இருப்பின் அடிப்படை என்ன என்று தெரியாமலேயே வெறுமனே சாப்பிடுவது, தூங்குவது, இனப்பெருக்கம் செய்வது பின்பு இறப்பது என்று முழு வாழ்க்கையையும் இதிலேயே வாழ்ந்து போகிறார்கள். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அவை மிகவும் குறுகிய எல்லையைக் கொண்டவை. அது எப்போதும் உங்களுக்கு நிறைவைத் தராது. அவை தேவைதான், ஆனால் அவையே உங்கள் முழு வாழ்க்கையாகிவிடக் கூடாது. அவை உங்கள் வாழ்க்கையின் பகுதியாக வேண்டுமானால் இருக்கலாம், இல்லையா?

இப்படி ஒருமுறை நடந்தது. ஒருவருக்கு ஆன்மீக தாகம் அதிகரித்தது. இப்போது உங்களுக்கு ஆன்மீக தாகம் அதிகரித்தால் ஈஷா யோக மையத்திற்கு வருகிறீர்கள் அல்லது வேறு யோகாவிற்குப் போகிறீர்கள், ஆனால் கடந்த காலத்தில் உங்களுக்கு ஆன்மீக தாகம் ஏற்பட்டால் நீங்கள் முதலில் செய்வது காட்டிற்குச் செல்வதுதான். எனவே அந்த மனிதர் காட்டுக்குச் சென்றார். அவர் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று ஒரு குகை கண்டுபிடித்து அதன் முன்பு உட்கார்ந்தார். அப்போதுதான் கவனித்தார், சிறிது தூரத்தில் ஒரு குள்ளநரி உட்கார்ந்திருந்தது. அதன் முன்னங்கால்கள் துண்டிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை அது வேடனின் பொறியில் சிக்கியிருந்திருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் விபத்தில் சிக்கியிருக்கலாம். ஆனால் அந்த நரி நன்றாகச் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இயற்கைச் சூழ்நிலையில் இப்படி நடப்பது மிகவும் அதிசயம். ஊனமாக இருப்பவர்களுக்கு இயற்கை கருணை காண்பிப்பதில்லை. சமூக சூழ்நிலையில் நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம். ஏனெனில் நீங்கள் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் இயற்கையைப் பொறுத்தவரையில் அது ஊனத்திற்கு கருணை காண்பிப்பதே கிடையாது. அவர்கள் விழுங்கப்பட்டு விடுவார்கள்.

எனவே முன்னங்கால்கள் இல்லாத இந்த நரி இவ்வளவு ஆரோக்கியமாக இருப்பது அவருக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. ஏனெனில் காட்டில் இப்படி நடக்கவே முடியாது. எனினும் சிறிது நேரம் கழித்து தியானத்தில் அமர்ந்தார். சில மணிகள் கழித்து அருகிலேயே சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டார். அவருக்கு மிகவும் பயமாகிவிட்டது. பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு மரத்தில் ஏறி தப்பித்து விடலாம் என்று பரபரத்தார். மெதுவாகக் கண் திறந்து பார்த்தார். அருகிலேயே ஒரு சிங்கம் வாயிலேயே மாமிசத் துண்டை வைத்துக் கொண்டு நடந்து வந்தது. ஆனால் அவரே ஆச்சரியப்படும்படியாக அந்த சிங்கம் தனது வாயில் இருந்த மாமிசத் துண்டை நரியின் முன்னே போட்டுவிட்டு அப்பால் போய்விட்டது. நரியும் தனக்குக் கிடைத்த மாமிசத்தை ருசிக்க ஆரம்பித்தது. அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை... அவர் ஆன்மீகப் பாரம்பரியத்தில் இருப்பதால் உடனே இப்படி நினைக்கத் தொடங்கினார், ‘ஓ, இது எனக்கு கடவுளால் தரப்பட்டிருக்கும் ஒரு செய்தி, வேறுவிதமாக இருக்க முடியாது. ஒரு காட்டுச் சிங்கம் வந்து ஊனமான ஒரு நரிக்கு உணவளிக்கிறது என்றால் இது கடவுள் எனக்கு தரும் ஒரு செய்திதான், அது என்ன செய்தியாக இருக்கமுடியும்? என்ன செய்தியாக இருக்கமுடியும்?’ என்று கடுமையாக யோசிக்கலானார். அடுத்தநாள் மாலையும் அதே சிங்கம் வந்து மீண்டும் ஒரு இறைச்சித் துண்டை நரிக்கு கொடுத்துச் சென்றது.

இப்போது அந்த மனிதருக்கு சந்தேகமே வரவில்லை. ‘இது கண்டிப்பாக கடவுளின் குறிப்புதான், கடவுள் எனக்கு என்ன சொல்ல முயற்சிக்கிறார்?’ உடனே அவருக்கு மூளையில் பொறி தட்டியது. ‘ஓ, கடவுள் எனக்கு சொல்கிறார், என்னுடைய ராஜ்ஜியத்தில் ஊனமான நரிக்குக் கூட உணவு கிடைக்கும். நீ ஆன்மீகப் பாதையில் இருக்கிறாய். நீ ஏன் உன் உணவுக்காக கஷ்டப்பட்டு சென்று பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாய்? வெறுமனே இங்கு உட்கார். உணவு உனக்கு தானே வந்து சேரும்.’ கடைசியில் கடவுளின் செய்தியைக் கண்டுபிடித்ததாக நினைத்தார். எனவே, இனி உணவுக்காக அலைய வேண்டியதில்லை எனத் தீர்மானித்து வெறுமனே உட்கார்ந்து கொண்டார்.

ஒரு நாள், 2 நாள், 3 நாள், உணவு ஏதும் தானாக வரவில்லை. வயிறு பிசைய ஆரம்பித்தது. நான்காவது நாள் சுருண்டுபடுக்க ஆரம்பித்தார். நாட்கள் போய்க்கொண்டே இருந்தன. 18 நாட்கள் கழிந்தது. மனிதர் செத்துக் கொண்டிருந்தார், வெறும் முனகல் சத்தம் மட்டும் கேட்டது. அப்போது அந்த வழியாக ஒரு யோகி வந்தார், என்ன ஏதோ மனிதனின் முனகல் சத்தம் போல் கேட்கிறதே, என்று இவர் படுத்திருந்த இடம் நோக்கி வந்தவர், இந்த மனிதரின் நிலை பார்த்து, “என்னப்பா, என்ன ஆனது உனக்கு” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதரும், “ஒரு அதிசயம் நடந்தது, அந்த அதிசயத்தில் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. ஊனமான நரிக்கு காட்டுச்சிங்கம் ஒன்று உணவளிக்கிறது என்றால், அது எனக்கும் ஒரு செய்திதானே, இல்லையா?” என்றார். யோகி எல்லாவற்றையும் புரிந்து கொண்டார். பிறகு சொன்னார், “ஆமாம், நிச்சயமாக இது கடவுளின் செய்திதான். சந்தேகமே இல்லை. ஆனால் ஊனமான நரியைப் போல இருக்கவேண்டும் என நினைத்ததற்குப் பதிலாக பெருந்தன்மையான சிங்கத்தைப் போல இருக்கவேண்டும் என்று ஏன் நினைக்கவில்லை?”

எனவே இது உங்கள் கர்மாதான். உங்கள் முன் ஒவ்வொரு ஷணமும் இருக்கிறது. ஒவ்வொரு சூழ்நிலையும் வருகிறது. அவற்றைப் பயன்படுத்தி உங்களை உயர்த்திக் கொள்ளலாம், அல்லது அவற்றைப் பயன்படுத்தி தாழ்த்திக் கொள்ளலாம். ஒவ்வொரு ஷணமும் அப்படியிருக்கிறது, இல்லையா? எப்படிப்பட்ட மனிதர்களை சந்தித்தாலும் சரி, எப்படிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும் சரி, வாய்ப்பு உங்கள் கையில்தான் உள்ளது. உங்கள் வாழ்க்கையில் அழகான சூழ்நிலைகளை சந்தித்தாலும் சரி, கொடுமையான சூழ்நிலைகளை சந்தித்தாலும் சரி, உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான். அந்த சூழ்நிலைகளைப் பயன்படுத்தி நீங்கள் மேலும் சிறந்தவராக, வலிமையானவராக மாறலாம் அல்லது உடைந்து போய் நொறுங்கிப் போகலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு ஷணத்திலும் இந்த வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. அதுதான் உங்கள் கர்மா.

அதனால்தான் இந்த ஷணம் முக்கியம், இந்த ஷணம் முக்கியம் என்று யோகா வகுப்பில் மந்திரம் போல் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்த ஷணத்தின் கர்மா மிகவும் முக்கியம். அதுதான் ‘உங்கள்’ கர்மா. கர்மா என்பதை நான் அடிக்கோடிட வில்லை. ‘உங்கள்’ என்பதைத்தான் நான் அடிக்கோடிடுகிறேன். அது உங்கள் கர்மா. நாம் எப்போதுமே தவறான வார்த்தையைத்தான் அடிக்கோடிடுகிறோம். கர்மாவை நாம் அடிக்கோடிடுகிறோம். உங்கள் என்பதை மறந்துவிடுகிறோம். உங்கள் என்பதை அடிக்கோடிடுங்கள். அது உங்கள் கர்மா, உங்கள் செயல். கர்மா என்பது என் செயல்தான் என்று நீங்கள் எப்போது உணர்கிறீர்களோ அப்போது அதை நீங்கள் சரிசெய்து  கொள்ளவும் செய்வீர்கள். உங்கள் துன்பம் உங்களின் கர்மாதான். தவறான பாதையில் செல்லும்போது அது உங்கள் கர்மாதான் என்று நீங்கள் உணர்ந்துவிட்டால் நீங்கள் சரி செய்துகொள்ள மாட்டீர்களா? நீங்கள் ஏன் சரிசெய்து கொள்ளவில்லை என்றால், அதற்கு ஒரே ஒரு காரணம்தான், நீங்கள் இது உங்கள் செயல் என்பதை மறந்து விடுகிறீர்கள், வேறு எதுவோ யாரோ காரணம் என்று நினைக்கிறீர்கள்.