இன்று பலர் தங்கள் உளவியலில் சிக்கி மனநோய்க்கு ஆளாகும் நிலையைப் பார்க்கிறோம். ஆனால், உணர்நிலை என்பதில் அன்பு, பக்தி, கவிதை என அற்புதமான தன்மைகளும் இருக்கத்தானே செய்கின்றன என்ற கேள்வி எழுகிறது. உளவியலை ஒரு படிக்கலாக மாற்றுவது எப்படி என்பதை ஆராய்கிறது சத்குருவின் இந்த உரை.

சத்குரு:

இந்த இருப்பில் எல்லாமே சக்திநிலைகளின் தன்மைகள்தான் என்று சொல்லும்போது உணர்வு சார்ந்த அம்சங்களுக்கு என்ன இடமென்று சிலர் கேட்பதுண்டு. அன்பு, கவிதை, பித்துத்தன்மை போன்றவற்றுக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் இருப்புக்கும் தொடர்பே இல்லையா என்று சிலர் கேட்பதுண்டு.

உங்கள் ஐம்புலன்கள் வழியாக நீங்கள் திரட்டிய எந்தத் தகவலும் உண்மைத் தன்மைக்கு தொடர்புடையவை அல்ல. நவீன நரம்பியல் மருத்துவம் வாழ்க்கை பற்றிய உங்கள் கோட்பாடுகளைத் தகர்க்கிறது.

தம்மைச் சுற்றி இருப்பவற்றுடன் சிலர் நெருக்கமாக உணர்ந்தால் அதை நான் ஏன் பாழ்படுத்த வேண்டும்? உங்கள் வாழ்வை நீங்கள் வெகுவாக நேசித்தால் நான் அதனை உங்களிடமிருந்து பிடுங்கப் போவதில்லை. ஆனால், மரணம் அவற்றை உங்களிடமிருந்து பிடுங்கிக்கொள்ளும். நான் மரணம் அல்ல. ஆனால், மரணம் குறித்த நினைவூட்டல் மட்டுமே. எப்படியும் அது நிகழப் போகிறது என உங்களுக்கு நினைவூட்டுகிறேன். அது குறித்த விழிப்புணர்வுடன் நீங்கள் இருப்பது நல்லது.

அன்பு பற்றி நான் சில விஷயங்களைச் சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது. கவிதை பலராலும் வாசிக்கப்படுவதில்லை. அது பரவாயில்லை. பித்துத்தன்மை இன்று உலகளாவிய அம்சமாக மாறிவிட்டது. கோபம்கூட அப்படியொரு குணம்தான். பலராலும் கோபம் கொள்ள முடியாது. ஏனெனில், அதற்கு மிகுந்த சக்தி தேவையாயிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சேகுவேரா பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரின் உருவம் பொறித்த பனியன்கள் இன்று உலகெங்கும் கிடைக்கின்றன. அவர் ராக் பாடகர் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு புரட்சியாளர்; 1950 மற்றும் 60களில் உலகெங்கும் ஒரு மகத்தான புகழோடு திகழ்ந்தார்.

அவர் ஒருமுறை, “நீங்கள் கோபக்காரர் என்றால், நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள்,” என்று சொன்னாராம். இதை அவருடைய அபிமானி ஒருவர் என்னிடம் சொன்னார். “நீங்கள் கோபத்தை விட்டவர் என்றால் என்னுடன் இருக்கிறீர்கள்” என்று நான் சொன்னேன்.

எவற்றால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அவற்றோடுகூட நீங்கள் பிணைப்புக் கொண்டுள்ளீர்கள். உங்கள் பித்துத் தன்மை நீங்கள் மகிழ்வடையக் கூடிய ஒன்றல்ல. மிதமாக இருக்குமேயானால் அது உங்கள் ஆளுமையின் இன்னொரு பரிமாணம். அதை வைத்தே பலர் உங்களை அடையாளம் காண்பதால் அந்தப் பித்துத்தன்மை உங்களை மேம்படுத்துவதாக எண்ணுகிறீர்கள். ஆனால், அது பெரிதாக வளர்கிறபோது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த உலகிலேயே மிகப் பெரிய பாதிப்பு மனநோய்தான். மிதமான அளவில் இருக்கும் ஒன்று வளர்ந்துவிட்டால் அது நோயென அறியப்படுகிறது.

இவை எல்லாமே ஆடைகள் போலத்தான். ஒன்று அவை உங்கள் உடலை மூடுகின்றன. அப்புறம் அலங்கரித்துக் கொள்ள பயன்படுகின்றன. இப்படி எத்தனையோ விதங்களில் பயன்பட்டாலும் நீங்கள் அவற்றையெல்லாம் செய்ய விரும்பாவிட்டால் அகற்றிவிடலாம்.

நாளொன்றுக்கு ஐந்து நிமிடங்கள் ஒரு விதமான பித்துத்தன்மையில் இருந்து மீண்டால் அது உங்கள் ஆளுமைக்கு அழகு சேர்ப்பதாய் நினைக்கிறீர்கள். ஒருநாள் அதிலிருந்து மீளாமல் இருப்பீர்களேயானால் அது மனநோய் என அறியப்படும். இப்போது உங்கள் ஆளுமையை ரசிக்க மாட்டார்கள். பைத்தியம் என்று பழிப்பார்கள்.

எனவே அன்பு, கவிதை, பித்துத்தன்மை போன்றவையெல்லாம் உங்கள் உளவியல் சார்ந்த அம்சங்கள். அவற்றுக்கும் இருப்பின் தன்மைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையா என்பது உங்கள் கேள்வி. உங்கள் ஐம்புலன்கள் வழியாக நீங்கள் திரட்டிய எந்தத் தகவலும் உண்மைத் தன்மைக்கு தொடர்புடையவை அல்ல. நவீன நரம்பியல் மருத்துவம் வாழ்க்கை பற்றிய உங்கள் கோட்பாடுகளைத் தகர்க்கிறது.

ஒருமுறை சங்கரன் பிள்ளை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அது ஐந்தாண்டுகளுக்கான கல்வி. அவருக்கு முன்பே எல்லாம் தெரிந்திருந்தன. நூலகத்தில் மனித உடற்கூறு சார்ந்த புத்தகத்தைப்பிரித்து வைத்துக்கொண்டு சலிப்புடன், “நாற்பது ஐம்பது ஆண்டுகளாக இந்த நூலையே படிக்கிறார்கள், புதிதாக எதுவுமே சேர்க்கப்படுவதில்லை.” என்றார்.

நூலகர் சொன்னார், “நீங்கள் பிறந்தது முதல் உங்கள் உடலில் புதிதாக ஓர் எலும்புகூட சேர்க்கப்படவில்லை. எனவே, புதிதாக எதுவும் எழுதப்படவில்லை.”

உங்கள்மனம் ஒவ்வொரு நாளும் புதிதாக எதையேனும் உருவாக்க விரும்புகிறது. ஆனால், இருப்பின் தன்மைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனெனில், இருப்பு எப்போதும் இருப்பது போலவே இருக்கிறது. இதனால், உளவியல் சார்ந்த சிந்தனையில் இந்த இருப்பு சலிப்பூட்டுவதாக உங்களுக்குப் படுகிறது.

உளவியல் என்பது உங்கள் உருவாக்கம். இருப்பு என்பது படைத்தவனின் உருவாக்கம். உளவியலை அனுபவிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதிலேயே தொலைந்துவிட்டால் நீங்கள் இருப்பை இழந்து விடுவீர்கள்.

“என் பித்துத்தன்மை, அபத்தமானதென்றால் என் அன்பும் அபத்தமானதுதானே. என் கோபம் அபத்தமானதென்றால் என் பக்தியும் அபத்தமானதுதானே,” என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம், அவை அபத்தம்தான். ஆனால், உங்களிடம் அவைதான் இருக்கின்றன. அபத்தங்களிலேயே அற்புதமான அபத்தங்களை உருவாக்குங்கள் என்கிறேன். அப்படியானால் இருப்பின் தன்மைக்கு உளவியல் சார்ந்த அம்சங்களால் பயன் இல்லையா என்று நீங்கள் கருதக்கூடும். அவை பயன் தருபவையாக இருக்குமேயானால் உங்களில் ஒரு பாகமாகவே அவை இருந்திருக்கும். நீங்கள் தனியாகத் தேட வேண்டிய தேவை இராது.

ஆனால், உங்களிடம் இருக்கும் உளவியல் அம்சங்கள் அனைத்துமே எங்கிருந்து எல்லாமோ சேகரித்தவையாக மட்டுமே இருக்கின்றன. அப்படியானால் உளவியல் தன்மைக்கு அர்த்தமே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியல்ல. இவை எல்லாமே ஆடைகள் போலத்தான். ஒன்று அவை உங்கள் உடலை மூடுகின்றன. அப்புறம் அலங்கரித்துக் கொள்ள பயன்படுகின்றன. இப்படி எத்தனையோ விதங்களில் பயன்பட்டாலும் நீங்கள் அவற்றையெல்லாம் செய்ய விரும்பாவிட்டால் அகற்றிவிடலாம்.

உண்மைக்கும் உளவியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லைதான். ஆனால், உங்கள் ஆடைக்கென எப்படி முக்கியத்துவம் உண்டோ அதுபோல் சூழலுக்கேற்ற வகையில் அவற்றுக்கும் முக்கியத்துவம் உண்டு. எல்லோரும் இருக்கும் இடத்தில் ஆடை அவசியமாகிறது. யாருமே இல்லாத இடத்தில் ஆடை இருந்தாலும் ஒன்றுதான். இல்லையென்றாலும் ஒன்றுதான். அதேபோலத்தான் உங்கள் பித்துத்தன்மை உங்கள் அன்பு உங்கள் கவிதை, எல்லாமே. அர்த்தமுள்ள உளவியல் வளர்ச்சியை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்கள் எப்போது என்ன செய்ய வேண்டுமென்பதை யார் யாரோ முடிவு செய்வார்கள்.

உளவியல் என்பது உங்கள் உருவாக்கம். இருப்பு என்பது படைத்தவனின் உருவாக்கம். உளவியலை அனுபவிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதிலேயே தொலைந்துவிட்டால் நீங்கள் இருப்பை இழந்து விடுவீர்கள். இருப்பு உங்கள் உருவாக்கமல்ல. அதில் நீங்கள் எதையும் செய்யஇயலாது. ஆனால், உளவியல் உங்கள் உருவாக்கம். நீங்கள் விரும்பும் விதத்தில் அதனை அமைக்கலாம். 100% விழிப்புணர்வுள்ள ஒன்றாக நீங்கள் அதனை வடிவமைக்கலாம். ஒருவிதமாகவும் இன்னொரு நாள் வேறு விதமாகவும் உங்கள் உளவியல் செயல்படுவதை நீங்கள் காணலாம். இன்று ஒருவரை ஆழமாக நேசிக்கிறீர்கள், நாளை அதனை மூட்டைகட்டி வைத்து விடுகிறீர்கள்.

உங்கள் உளவியலில் நிகழ்பவை எல்லாம் விழிப்புணர்வுடன் நிகழ்ந்தால் அது ஓர் அழகிய நந்தவனம் போன்றது. அது உங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விலகிவிட்டால் அதற்கு அன்பென்றும் கோபமென்றும் கவிதையென்றும் எத்தனையோ பெயர்கள் தருகிறீர்கள். ஒரே சொல்லில் சொல்வதென்றால் அது ஒரு பித்துத்தன்மை.

உளவியல் உங்களுக்கொரு படிக்கல். அதில் ஏறி நீங்கள் பித்துத் தன்மைக்குள்ளும் நுழையலாம். விடுதலைக்குள்ளும் நுழையலாம். உங்கள் உளவியல் அம்சத்தை விழிப்புணர்வுடன் நீங்கள் உருவாக்கினால் அதனை ஆனந்தமானதாக மட்டுமே உருவாக்குவீர்கள். அதுவே உங்கள் இயல்பான தன்மையாகும்போதுதான் இருப்பினோடு நீங்கள் தொடர்புக்கு வரமுடியும். உங்கள் மனம் ஏற்ற இறக்கங்களிலிருந்து விடுதலை பெறும்போதுதான் அதனால் உண்மையை உள்ளது உள்ளபடி பிரதிபலிக்க முடியும்.