உலகில் எது உயர்ந்த மதம்?
உலகின் மதங்களால் மக்களுக்கு பல நன்மைகள் நடந்திருந்தாலும், கொஞ்சம் ஆழமாக கவனித்துப் பார்த்தால், உலகில் நடந்த, நடக்கும் போர்கள், கலவரங்கள் போன்றவைக்குக் காரணம் மதங்கள்தான் என்பது புரியும்... இப்படி இருக்கையில், "உலகில் எது உயர்ந்த மதம்?" என்று ஒருவர் சத்குருவிடம் கேட்டபோது...
உலகின் மதங்களால் மக்களுக்கு பல நன்மைகள் நடந்திருந்தாலும், கொஞ்சம் ஆழமாக கவனித்துப் பார்த்தால், உலகில் நடந்த, நடக்கும் போர்கள், கலவரங்கள் போன்றவைக்குக் காரணம் மதங்கள்தான் என்பது புரியும்... இப்படி இருக்கையில், "உலகில் எது உயர்ந்த மதம்?" என்று ஒருவர் சத்குருவிடம் கேட்டபோது...
சத்குரு:
"உலகில் எந்த மதம் உயர்ந்தது?" என்று என்னிடம் கேட்டார்கள்.
உண்மையில், இப்போது மதங்கள் எங்கே இருக்கின்றன? மதங்களின் பெயரால் நடத்தப்படும் கட்சிகள்தானே இருக்கின்றன?
ஒவ்வொரு மதமும் தனி மனிதன் தன்னை உணர, அவன் கவனத்தை உள்நோக்கித் திருப்புவதற்காக உருவானது. ஆனால், மனிதனை மேன்மையுறச் செய்வதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் செய்வதுதானே இன்று மதக்கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது?
தனித்துவிடப்படக்கூடாது என்று நீங்களும், அப்படியொரு கட்சியைச் சேர்ந்தவராகிவிடுகிறீர்கள். அது பிறப்பால் இருக்கலாம். அல்லது நீங்கள் விரும்பித் தேர்ந்தெடுத்ததால் இருக்கலாம்.
எப்படியானாலும், ஒரு பிரிவினரோடு உங்களை அடையாளப்படுத்திக் கொண்டதும், 'உன் கட்சி பெரிதா, என் கட்சி பெரிதா?' என்ற தகராறுக்கு நீங்களும் தயாராகிவிடுகிறீர்கள்.
உண்மையில், மதம் என்பது உலகுக்கு எந்தத் தீங்கையும் சொல்லித் தரவில்லை. எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபட்டு, உண்மையான சுதந்திரத்துடன் வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறைகளைத்தான் எல்லா மதங்களும் சொல்ல முற்படுகின்றன.
ஆனால், அதற்கு நேர்மாறாக அல்லவா நடக்கிறது! மதம் என்ற பெயரால், ஒரு குறிப்பிட்ட கட்சியோடு உங்களை விலங்கிட்டுக் கொண்டு சுதந்திரத்தை அல்லவா இழக்கிறீர்கள்?
Subscribe
சங்கரன்பிள்ளை சேர்ந்த மதம்
சங்கரன்பிள்ளைக்கு ஆன்மீகப் பாதையில் போக ஆசை வந்தது. இருப்பதிலேயே எந்த மதம் உயர்ந்தது என்று கண்டுபிடித்து, அந்த குருவிடம் சீடராகச் சேர முடிவு செய்தார். நண்பர்களிடம் விசாரித்தார்.
ஒரு நண்பர், தன் மதகுருவிடம் அனுப்பினார். அங்கே போனதும், முதலில் தலைமுடியை மழித்துவிட்டு வரச் சொன்னார்கள். வலது காதில் வலிக்க வலிக்க ஓர் ஓட்டை போட்டு, பெரிய வளையம் ஒன்றை மாட்டினார்கள். ஆரஞ்சு நிற உடைகளை அணியச் சொன்னார்கள். அங்கே ஒரு மாதம் தங்கியிருந்தும், தனக்குள் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை என்பதை சங்கரன்பிள்ளை உணர்ந்தார்.
இடம் மாற விரும்பி, அடுத்த நண்பரிடம் போனார். அவர் சங்கரன்பிள்ளையைக் காட்டுக்குள் அழைத்துப் போய், அங்கே தன் மதகுருவிடம் விட்டார். "இங்கே பச்சைத் துணிகளை மட்டுமே அணிய வேண்டும். முடியை வெட்டவே கூடாது. எவ்வளவு நீண்ட தாடி வளர்கிறதோ, அவ்வளவு நல்லது. அப்புறம் ஆபரணங்களே கூடாது!" என்றார் அந்த மதகுரு.
காதில் பழைய புண்ணே ஆறவில்லை. அங்கிருந்த வளையம் நீக்கப்பட்டது. அவர்கள் மத வழக்கப்படி, வேறு இடத்தில் சதையைக் கீறி எடுத்தார்கள். அங்கேயும் புண்ணானது. அந்த மதகுருவிடமும் ஒரு மாதத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
"மலை மேலே இருக்கும் ஆசிரமத்துக்குப் போ. அங்கே இருப்பவர்தான் சிறந்த குரு!" என்று அடுத்த நண்பர் சொன்னார். சங்கரன்பிள்ளை அந்தப் புதிய மதகுருவைக் காண, கால் வலிக்க மலை ஏறினார். ஆசிரமத்தை அடைந்தார்.
அங்கே சீடர்கள் மொட்டை அடித்திருந்தார்கள். தாடி மட்டும் வளர்த்து, இரண்டு காதுகளிலும் வளையங்கள் மாட்டி மூக்கிலும் துளையிட்டிருந்தார்கள். சங்கரன்பிள்ளை மயங்கி விழுந்தார்.
மதங்கள் மாறினால், ஒவ்வொரு மதகுருவும் உங்கள் உடம்பில் ஒரு துளையிட்டு விட்டுப் போவதுதான் நிகழும். வேறெந்த உயர்வும் கிடைக்காது. மதங்களால் பிரச்சனை இல்லை. மதக்கட்சிகளை நடத்துபவர்களால்தான் அத்தனை பிரச்சனையும்!
அரசியல் கட்சி நடத்துபவர்களுக்குத்தான் எத்தனை ஆட்கள் தங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியம். மதத்துக்கு எங்கே அந்த அவசியம் வந்தது?
மதம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு, தன் அகங்காரத்தை நிலை நிறுத்திப் பார்க்கும் மனிதர்களுக்குத்தான் எண்ணிக்கைகள் அவசியமாகின்றன.
உள்நோக்கித் தன்னைக் கவனிக்காமல், வெளியே எத்தனை எண்ணிக்கை கிடைத்தது என்று எப்போது கவனம் போகிறதோ, அப்போதே அந்த மதம் செத்துப் போகிறது.
உங்கள் கடவுள் மேன்மையானவர் என்பதை உலகுக்கு நிரூபிக்க, உங்களை நீங்களே ஏன் நியமித்துக் கொள்கிறீர்கள்? உங்கள் கடவுளுக்கு அதிக சக்தி இருக்கிறது என்று நீங்கள் மனதார நம்பவில்லையா?
உங்கள் பலத்தையும், வற்புறுத்தலையும், வன்முறையையும் சார்ந்துதான் அவருடைய புகழ் பரவும் என்றால், அவர் உங்களைவிடப் பலவீனமானவராக, உங்களை விடத் தாழ்ந்தவராக அல்லவா ஆகிவிடுகிறார்?
உங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள, அவரை ஏன் உங்கள் கட்சி வேட்பாளராக முன்னிறுத்தப் பார்க்கிறீர்கள்?
நீங்கள் கடவுள் பெயரில் நடத்தும் ரசிகர் மன்றங்களுக்கு அவர் துணை இருப்பார் என்று எதிர்பார்ப்பது கேவலம் இல்லையா?
ஆன்மீகம் உன்னதமானது. மனிதனை உய்விக்கப் பிறந்தது. தனக்குப் பின்னால் ஒரு கோடி ஆட்கள் இருந்தால் என்ன, ஒரு ஆள்கூட இல்லாவிட்டால் என்ன?
உண்மையான ஆன்மீகத்தை நினைப்பவனுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது.
உண்மையில், உங்கள் மதத்தின் அடிப்படை நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அது, உங்களைத்தான் முதலில் கவனிக்கச் சொல்கிறது.
உங்கள் மாற்றத்துக்கு வழி தேடாமல், மற்றவர்களை உங்கள் பக்கம் மாற்றுவதற்கு முயற்சி செய்வது, உங்கள் மதத்தின் குறிக்கோளையே அவமதிப்பதாகும்!
ஒவ்வொரு தனிமனிதனும் மேன்மையானவனாக மாறினால் மட்டுமே ஒட்டுமொத்த உலகமும் மேன்மையடைய முடியும்.
அதனால், எந்தக் கட்சியிலும் சிக்கிக் கொள்ளாமல், உங்கள் மதம் மூலம் உண்மையை உணருங்கள். உயர்வடையலாம்!