திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய 5 டிப்ஸ்!
பருவகாலத்தை எட்டினாலே பலருக்கும் கண்களில் கல்யாணக் கனவுகள் மின்னிடும். ஆசை ஆசையாய் காத்திருந்து திருமணம் செய்தாலோ, திருமணம் முடிந்த மூன்றே மாதங்களில் அந்த உறவு கசந்து போகிறது. அவ்வாறு முறிந்துபோகாமல் இந்த உறவின் தித்திப்பு நிலைத்திட, இதோ சத்குரு வழங்கும் டிப்ஸ்...
பருவகாலத்தை எட்டினாலே பலருக்கும் கண்களில் கல்யாணக் கனவுகள் மின்னிடும். ஆசை ஆசையாய் காத்திருந்து திருமணம் செய்தாலோ, திருமணம் முடிந்த மூன்றே மாதங்களில் அந்த உறவு கசந்து போகிறது. அவ்வாறு முறிந்துபோகாமல் இந்த உறவின் தித்திப்பு நிலைத்திட, இதோ சத்குரு வழங்கும் டிப்ஸ்...
சத்குரு:
1. ‘ஃபால் இன் லவ்’ (Fall in love)
காதல் வயப்படுவதை, ஆங்கிலத்தில் ‘ஃபாலிங் இன் லவ்’ என்பார்கள், (அ) ‘காதலில் விழுகிறேன்’ என்று பொருள்படும். இது ஒரு அற்புதமான வெளிப்பாடு... ஏனெனில், காதலில் நீங்கள் உயர்வதில்லை, பறப்பதில்லை, நடப்பதில்லை, நிற்பதும் இல்லை. காதலில் விழமட்டுமே முடியும்... காரணம், அப்போது ‘நான்’ என்ற உங்கள் அகங்காரத்தில் இருந்து ஏதோ ஒன்று உடைய வேண்டும். அதாவது, உங்களை விட வேறொருவர் உங்களுக்கு அப்போது முக்கியமாகிப் போகிறார். உங்களைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திராமல் இருந்தால் மட்டுமே, உங்களால் இன்னொருவரை காதலிக்க முடியும். ‘நான்’ என்ற எண்ணம் விழுந்தால்தான், அங்கு காதல் என்ற உன்னதமான ஒன்று மலரமுடியும்.
Subscribe
2. புரிந்துகொள்ளும் முயற்சியில் கஞ்சத்தனம் வேண்டாமே!
ஒருவருடன் எந்த அளவிற்கு நெருக்கமான உறவு வைத்துக் கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களோ, அந்த அளவிற்கு அவரை புரிந்துகொள்ளவும் நீங்கள் முயற்சி செய்யவேண்டும். அவரை நன்றாக புரிந்துகொள்ளும் போதுதான் அவர் உங்களுக்கு இன்னும் நெருக்கமான, அன்பான உறவாக ஆகிறார். அவர் உங்களை நன்றாக புரிந்து கொண்டிருந்தால், இந்த உறவின் அழகை, நெருக்கத்தின் ஆனந்தத்தை அவர் உணர்வார். இதுவே நீங்கள் அவரை நன்றாக புரிந்து வைத்திருந்தால், நீங்கள் அந்த நெருக்கத்தின் இன்பத்தை உணர்வீர்கள். உங்கள் துணைவரின் தேவைகளை, தடைகளை, திறன்களை அறிய முயற்சி செய்யாமல், அவர் உங்களைப் புரிந்துகொண்டு நீங்கள் விரும்புவது போலவே எப்போதும் நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால், பின் பிரச்சினைகள் மட்டும்தான் மிஞ்சும்.
ஒவ்வொருவரிலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். இதைப் புரிந்துகொண்டு அரவணைத்தால், அந்த உறவை உங்களுக்கு வேண்டியது போல் நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். ‘இல்லை... அவருக்குப் புரிந்ததுபோல் செயல்படட்டும்’ என்று விட்டுவிட்டால், நடப்பவை அவ்வப்போது தற்செயலாக மட்டும்தான் உங்களுக்கு வேண்டிய வகையில் நடக்கும். உங்கள் துணைவர் பெருந்தன்மையோடு இருந்தால், உங்களுக்கு எல்லாம் சாதகமாக இருக்கும். இல்லையென்றால், அந்த உறவு முறிந்து போகும். இதற்கு அர்த்தம், உங்கள் துணைவருக்குப் புரிந்து கொள்ளும் திறன் அறவே இல்லை என்பதல்ல. ஆனால் அவர் உங்களை நன்றாக புரிந்துகொள்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உங்களின் ‘புரிதலை’க் கொண்டு நீங்கள் உருவாக்க முயற்சி செய்யலாமே!
3. கொஞ்சம் பிரயத்தனம் வேண்டும்
ஒருமுறை கல்யாணம் செய்தால், அவ்வளவுதான்... அதற்குமேல் வேறெதுவும் தேவையில்லை என்று மறந்து போகும் விஷயமல்ல இது. அன்றாடம் உயிர்ப்போடு நிகழ வேண்டிய கூட்டு முயற்சி இது. தனித்தனி நபர்களாக இருக்கும் இருவர், சேர்ந்து வாழ முடிவுசெய்து, இருவருக்குமாய் ஒரு வாழ்வை உருவாக்கி, அதில் சந்தோஷமாக வாழ்ந்து நல்வாழ்வை உருவாக்கிக்கொள்வது. இப்படி இருவர் சேர்ந்து தங்கள் வாழ்வை ஒன்றாக பிணைத்துக்கொள்வதே தனிஅழகு.
இந்திய கலாச்சாரத்தில், தங்கள் வாழ்வை இருவர் இணைத்துக் கொண்டதற்கான காரணத்தை அவர்களுக்கு நினைவூட்டும் விதமாக, திருமண பந்தத்தை வருடாவருடம் புதுப்பித்துக்கொள்வார்கள். ‘அந்தநாள்’ மீண்டும் புதிதாய் திருமணம் நிகழ்ந்ததாக கொள்ளப்படும். இல்லையென்றால் காலத்திற்கும் அதில் சிக்கிக் கொண்டுவிட்டது போன்ற உணர்வு வந்துவிடும். இது அப்படியல்ல... இது தெரியாமல் சிக்கிக் கொண்டுவிட்ட உறவல்ல.., விழிப்புணர்வோடு நீங்கள் ஏற்படுத்திக்கொண்டது, அதை அவ்வாறே விழிப்புணர்வோடு நடத்திக் கொள்ளுங்கள்.
4. சந்தோஷத்தால் உறவை மெருகேற்றுங்கள்.
உண்மையிலேயே அழகான உறவுகள் மலரவேண்டும் என்றால், அடுத்தவரை நோக்கும் முன், ஒரு மனிதன் முதலில் உள்முகமாய்த் திரும்பி தன்னைத் தானே ஆழமாய் அறிந்துகொள்வது அவசியம். நீங்கள் சந்தோஷ ஊற்றாக மாறி, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியே உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், எப்படிப்பட்டவருடனும் உங்களுக்கு அற்புதமான உறவு உருவாகிடும். உங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதற்குதான் செல்கிறீர்கள் என்றால், இவ்வுலகில் யாருக்கேனும் உங்களுடன் பிரச்சினை உண்டாகுமா என்ன? நிச்சயம் இல்லை. இன்னொரு மனிதருடன் சேர்ந்து வாழ்வதன் ஆழமான உணர்வை, உன்னதத்தை நீங்கள் உணர வேண்டுமென்றால், அந்த உறவு உங்களைப் பற்றியதாக இருக்கக் கூடாது - அது எப்போதும் உங்கள் துணைவரைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். நீங்கள் இருவருமே இவ்விதமாக எண்ணினால் அப்போது கல்யாணம் என்பது ஒரு ‘அமைப்பு’ என்பதைத்தாண்டி, அது ஒரு சங்கமமாய் உருவெடுக்கும்.
5. ஒருவருக்கு மற்றவர் அர்ப்பணமாக இருந்திடுங்கள்.
உங்கள் சுகம், சவுகர்யம், சந்தோஷம் என எல்லாவற்றிற்குமான ஆதாரமாக உங்கள் துணைவரை நியமித்து, உங்கள் சொர்க்கத்தை உருவாக்க அவரை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்ற கணக்கோடு நீங்கள் திருமணம் செய்திருந்தால், உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’ என்பார்கள்... காரணம் பலரும் தங்கள் திருமணத்தை நரகமாக மாற்றிக் கொண்டுவிட்டார்கள்! அடுத்தவரிடம் இருந்து ‘எதை, எப்படி’ப் பெறலாம் என்ற கணக்கின் அடிப்படையில் உங்கள் உறவை உருவாக்கி இருந்தால், அதை எவ்வளவு நுணுக்கமாக நீங்கள் கையாண்டாலும், உழைச்சலும் பிரச்சினையும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் உங்கள் உறவை அடுத்தவருக்கு அர்ப்பணமாக நீங்கள் உருவாக்கினால், எல்லாம் அற்புதமாக இருக்கும்.