எங்கோ ஒரு கிராமத்தின் மூலையிலோ அல்லது நாம் அன்றாடம் கடந்துபோகும் தெருக்களிலோ பல திறமைசாலிகள் தங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஏதோ ஒரு வேலையை செய்துகொண்டு முடங்கிக் கிடப்பது கவனித்துப் பார்ப்பவர்களுக்குப் புரியும். ஏன் இவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவில்லை? நமது திறமை முழுதாய் மிளிர செய்ய வேண்டியவை என்ன? இங்கே அதற்கான விடை!

சத்குரு:

பல திறமையாளர்களை நீங்கள் கவனித்திருக்கலாம். கிடுகிடுவென்று உயர்ந்து வருவார்கள். சடாரென்று ஒரு கட்டத்தில் நிலைகுத்தி நின்றுவிடுவார்கள். அதன்பின் அவர்களிடம் புதிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது!

ஏன்?

உங்களைச் சுற்றி நீங்களே பின்னிக் கொண்டு இருக்கும் வலைகளிலிருந்து விடுபட்டால்தான் வளர்ச்சி என்பது சாத்தியம்!

அதற்குப் பிறகும் வளர வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்காதா என்ன? இருக்கும். ஆனாலும், கிடைத்திருப்பதை விட்டுவிடக்கூடாது என்று அச்சத்துடன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடுவார்கள்.

அதற்கு அப்புறம் எப்படி வளர்ச்சி இருக்கும்?

குட்டி மண் தொட்டியில் வேரோடு வைத்து விற்கப்பட்ட ஒரு செடியை வாங்குகிறீர்கள்.

பத்திரமாக நிழலில் வைத்தப் பார்த்துக் கொண்டால், தொட்டியில் செடி வேகமாக ஓரளவுக்கு வளரும். பிறகு ஒரு கட்டத்தில் போதிய இடமின்றி, அது தன் வளர்ச்சியைக் குறுக்கிக் கொள்ளும்.

அதே செடியை பூமியில் எடுத்து நட்டிருந்தால், அது பெரிய விருட்சமாக வளர்ந்திருக்கும். கடைசி வரை புதிது புதிதாகக் கிளைகளை எல்லாத் திசைகளிலும் அனுப்பிக் கொண்டு இருக்கும்.

உங்கள் வாழ்க்கையும் அப்படித்தான்!

வளர வேண்டும் என்ற முனைப்பு உங்களுக்குள் தகதகத்துக் கொண்டு இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இப்போதிருக்கும் மண் தொட்டியை உடைத்துப் போட நீங்கள் தயங்குவதால், வளர முடியாமல் தவிக்கிறது.

உங்களைச் சுற்றி நீங்களே பின்னிக் கொண்டு இருக்கும் வலைகளிலிருந்து விடுபட்டால்தான் வளர்ச்சி என்பது சாத்தியம்!

அரசனைத் தேடி ஓர் இளைஞன் அவ்வப்போது அரண்மனைக்கு வருவான். அவனுக்கு ராஜ மரியாதை தந்து நிறைய செல்வங்கள் கொடுத்து அனுப்புவான் அரசன்.

அத்தனையையும் தொலைத்துவிட்டு அவன் மீண்டும் வந்து நிற்பான். அரசனும் முகம் கோணாமல் மறுபடி அவனுக்கு வாரி வழங்குவான்.

ஒருமுறை தலைமை அமைச்சர் அரசனிடம் மெள்ளக் கேட்டார்....

திறமைகளையும் தோக்கி வைத்திருக்காதீர்கள். அவற்றைப் பயன்படுத்திக் கொண்டே இருந்தால்தான் பலன்!

"மன்னா, நீங்கள் கொடுக்கும் செல்வத்தை இவன் பொறுப்பில்லாமல் தவறான நண்பர்களோடு சேர்ந்து வீணடித்துவிட்டு வருகிறான். எதற்காக மீண்டும் மீண்டும் அவனுக்கு வழங்குகிறீர்கள்"

"அமைச்சரே! நான் பிறந்தபோதே என் தாய் இறந்து போனாள். அரண்மனைப் பணியில் இருந்த இவன் தாய்தான் இவனுடன் சேர்த்து எனக்கும் தாய்ப்பால் கொடுத்து வளர்த்தாள். அதனால், இவனை என் சகோதரனாகவே நினைக்கிறேன்" என்றான் அரசன்.

அடுத்த முறை அந்த முட்டாள் பையன் வந்தபோது, வேறொரு விபரீத கோரிக்கையை முன் வைத்தான்.

"உன்னைச் சுற்றி புத்திசாலிகள் இருப்பதால்தான் என்னைவிட மேன்மையாக இருக்கிறாய். உன் அமைச்சர் என்னுடன் இருந்தால், என்னாலும் ராஜ்யத்தை ஆள முடியும். அவரை என்னுடன் அனுப்பு!" என்று மன்னனிடம் கேட்டான். என்ன செய்வது என்று புரியாமல் அரசன் திணறினான்.

"மன்னா... உங்களுடன் பால் குடித்து வளர்ந்த சகோதரனுக்கு உதவ, என்னுடன் பால் குடித்து வளர்ந்த என் சகோதரனை அனுப்புகிறேனே!" என்றார் அமைச்சர்.

மறுநாள், அரசவைக்கு அமைச்சர் வந்தபோது, ஒரு எருமைக் கடாவைக் கயிற்றில் கட்டி இழுந்து வந்தார்.

"ஏன் சிரிக்கிறீர்கள்? இவனும், நானும் ஒரே எருமைத்தாயின் பாலைத்தான் குடித்தோம். மன்னனின் சகோதரனுக்கு அமைச்சராக இருக்க இந்தச் சகோதரனை அனுப்புகிறேன்" என்றார்.

நாம் ஒரே தாயிடம் பால் குடித்து வளர்ந்திருக்கலாம். ஆனால், நம் உடலை, மனதை, உணர்ச்சிகளை, சக்தியை எப்படித் திறம்படப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துதானே நம் வளர்ச்சி அமையும்!

பொதுவாக, உங்கள் நண்பர்களைச் சந்திக்கும்போது என்னவெல்லாம் பேசுவீர்கள்?

பட்ஜெட்டில் வரிகளை எப்படி விதிக்க வேண்டும்.... எந்தெந்தக் கட்சிகள் கூட்டணி வைத்துக் கொண்டால் தேர்தலில் வெற்றி பெற முடியும்... அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் விவாதிப்பீர்கள்.

முஷ்ரப் பற்றியும், பின்லேடன் பற்றியும், ஜார்ஜ் புஷ் பற்றியும் எல்லா விவரங்களும் வைத்திருப்பீர்கள்.

இப்படி உலக நடப்புகள் எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே, உங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

உங்களுடைய திறமையின் வீச்சு பற்றி உங்களுக்கு முழுமையாகத் தெரியுமா?

கண்ணாடி அணிபவர்களுக்கு முதல் முதலாக அதை அணியும்போது, வேண்டாத பாரமாக இருக்கும். பழக்கமான பின் அதைப் பற்றிய கவனமே இருக்காது. கவனிக்கப்படாவிட்டாலும், அது தன் வேலையைத் திறம்படச் செய்துகொண்டு இருக்கும்.

அதேபோலதான் உங்கள் திறமையும்!

இருபத்தி நான்கு மணி நேரமும் அதனைக் கூர்மையாக வைத்திருக்க, முதலில் கவனத்துடன் பயிற்சி செய்யுங்கள். பழக்கவசத்தால், அது உங்கள் இயல்பான குணமாகிவிடும். பிறகு, எந்தச் சந்தர்ப்பத்திலும் அது பயன்படத் தயாராக இருக்கும்.

சாலையில் வண்டி ஓட்டிப் பழகும்போது, உங்கள் மொத்த கவனமும் அதிலேயே இருக்கும். நல்ல பயிற்சி பெற்ற பிறகு அது பற்றிய பயமோ, பதற்றமோ இல்லாமல் மிக இயல்பாக வண்டியில் பயணம் செல்ல ஆரம்பிப்பீர்களே, அது போல!

மோட்டார் வாகனத் தொழிலில் பெரும் சாதனை புரிந்த ஹென்றி ஃபோர்டு பற்றித் தெரியும்தானே!

"நீங்கள் பெரிய ஜீனியஸ்" என்று புகழப்பட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?

"அதிமேதாவித்தனமாவது, மண்ணாங்கட்டியாவது! உங்களிடம் இருக்கும் அதே புத்திசாலித்தனம்தான் என்னிடமும் இருக்கிறது. விடாமுயற்சியுடன் உழைத்து, நான் அதைப் பயன்படுத்தினேன். அவ்வளவுதான்!" என்றார்.

கிடங்கில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் தானியம் விநியோகம் செய்யப்படாத வரை, யாருக்கும் உபயோகம் இல்லை. வீணாக மக்கி குப்பைக்குத்தான் போய்ச் சேரும்.

திறமைகளையும் தோக்கி வைத்திருக்காதீர்கள். அவற்றைப் பயன்படுத்திக் கொண்டே இருந்தால்தான் பலன்!

புதிய வாய்ப்புகளைத் துணிச்சலோடு எதிர் கொள்ளப் பழக்கினால்தான், உங்கள் திறமையும் முழுமையாகப் பரிமளிக்கும். அது உங்களை அடுத்தடுத்த தளங்களுக்கு உயர்த்திக் கொண்டே இருக்கும்!