யோகத்தில் எப்போதும் சுவாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நம் சுவாசமும் நம் ஆயுளும் நேரடித் தொடர்புடையவை... இதைப் பற்றி விரிவாக இங்கே காண்போம்...

Question: யோகத்தில் சுவாசத்திற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு நிமிடத்திற்கு நாம் எடுக்கும் சுவாசமும் நம் ஆயுளும் நேரடித் தொடர்புடையவை. உதாரணத்திற்கு, ஒரு நாய் ஒரு நிமிடத்திற்கு 70திலிருந்து 72 முறை சுவாசம் செய்கிறது, 12-14 வருடங்கள் வாழ்கிறது. ஒரு குதிரை 30 முறை சுவாசம் செய்கிறது, 25-30 வருடங்கள் வரை வாழ்கிறது. ஒரு யானை 15-18 முறை சுவாசம் செய்கிறது 80-100 வருடங்கள் வரை உயிர் வாழ்கிறது. ஒரு மனிதன் 12-15 முறை சுவாசம் செய்கிறான் அதனால் 160 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடிய திறனுடன் இருக்கிறான். ஒரு சில கடல் ஆமைகள் 5-8 முறை சுவாசம் செய்கின்றன அவை 500 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன. வேறு சில கடல் பாம்புகளோ நிமிடத்திற்கு 2, 3 முறை மட்டுமே சுவாசம் செய்கிறது 1000 வருடங்கள் வரைக்கும் கூட அவை உயிர் வாழ்வதை பார்க்க முடியும்.

இதைத்தான் சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் ‘கடவுள் அத்தனை பேருக்கும் ஒரே அளவில் தான் சுவாசம் கொடுத்துள்ளான், வேக வேகமாக சுவாசித்தால் வேகமாக போய் விடுவோம்,” என்று அழகாக சொல்கிறது. எனவே உங்கள் சுவாசத்திற்கும் உங்கள் ஆயுளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளமையால் யோகம் அதனை கருவியாய் பயன்படுத்திக் கொள்கிறது. ஈஷாவில் கற்றுத் தரும் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்பவராய் இருந்தால், உங்கள் ஆயுள் விருத்தி அடையும்.

Question: சத்குரு, நான் கட் அடிக்காமல் யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டு வந்தேன், ஆனால் இடையில் இடைவெளி வந்துவிட்டது, மீண்டும் விடாப்பிடியாய் எப்படி யோகா செய்வது?

சத்குரு:

நீங்கள் யோகத்தை விடாப்பிடியாய் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விடாப்பிடியாய் செய்ய வேண்டும் என்று நாம் நினைத்துச் செய்யும் செயல்கள் நம் வாழ்வில் பெரும்பாலும் வேலை செய்யாது. அதனால் நான் என் வாழ்க்கை முழுவதும் யோகாவை நிச்சயமாக செய்வேன் என்றெல்லாம் உங்களுக்குள் நீங்கள் சூளுரைத்துக் கொள்ள வேண்டாம். இன்று மட்டும் யோகா செய்யுங்கள் அதுபோதும். வாழ்க்கை வெகு சுலபமாய் இருக்கும் போது, ஏன் இப்படி உங்களை சங்கடப்படுத்திக் கொள்கிறீர்கள். “என் வாழ்க்கை முழுவதும் நான் யோகா செய்வேன்,” என்று உங்களை நீங்களே சிரமப்படுத்திக் கொள்ள வேண்டாம். ஆனால் நான் இன்று யோகா செய்வேன் என்ற உறுதியை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். யோகம் இயல்பாய் நடக்கும்.

Question: யோகப் பயிற்சிகளை விடாமல் செய்யும் மனோ உறுதியை எனக்குள் எப்படி கொண்டு வருவது?

சத்குரு:

இதற்கு உங்கள் மனோதிடத்தை பயன்படுத்தாதீர்கள். உங்கள் வாழ்க்கையைப் பற்றின தெளிவு சற்றே உங்களுக்கு ஏற்பட வேண்டும். மிக மிக அற்புதமானவை, திருப்தி தருபவை என்று நீங்கள் நினைத்ததெல்லாம் கொஞ்ச காலம் கழிந்தபின் இல்லாமல் போய்விடும். உங்களுக்குள் இருந்து சதா சர்வகாலமும் விரிவடைந்துக் கொண்டேயிருக்கும் படியான பரிமாணத்தை நீங்கள் உருவாக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில், “நான் ஏன் உயிர் வாழ்கிறேன்?” என்னும் கேள்வி உங்களை நச்சரிக்கத் துவங்கும். அதனால் வாழ்வின் யதார்த்தங்களை கொஞ்சம் கண் திறந்து பாருங்கள், அதை நீங்கள் பார்க்கும் பட்சத்தில் உங்கள் ஆன்மீகப் பயிற்சிகளை செய்வதற்கு தீவிரமான தூண்டுதல் உங்களுக்குள் தானாகவே எழும்.