கே: சத்குரு, சஹஸ்ரஹாரத்தின் பாதை என்ன என்பதை எங்களுக்குக் கூறமுடியுமா? அது எப்படிப்பட்டதாக இருக்கும்? அந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்த யாராவது அதற்கான ஒரு உதாரணமாக இருக்கிறாரா?

தொலைந்து போவதற்கு ஓரிடம்

சத்குரு: "பாதை" என்ற சொல்லை நாம் பயன்படுத்தும்போது, அது ஒரு எல்லை வரையறுக்கப்பட்ட வழியை, கட்டமைக்கப்பட்ட வழியையே குறிக்கிறது. வரையறுக்கப்பட்ட ஒரு எல்லை இருக்கவேண்டும் என்றால், அதற்கு பருப்பொருளாலான ஒரு இடம் உங்களுக்குத் தேவைப்படுகிறது. சஹஸ்ரஹாரம் பருப்பொருளாலான ஒரு இடம் அல்ல. உடலின் பூகோள அமைப்பில் அதற்கு ஒரு இருப்பு உள்ளது. ஆனால், ஒரு பருப்பொருள் இடத்தை அது குறிப்பதாக இல்லை. இந்தக் காரணத்தினால், பாரம்பரியத்தில் சஹஸ்ரஹாரத்தின் பாதை என்று எதுவும் இல்லை.

பாரம்பரியத்தில் இதைப்பற்றி எண்ணற்ற குறிப்புகள் இருக்கின்றன ஆனால் வியக்கத்தக்கவகையில் சஹஸ்ரஹார நிலையில் இருந்த ஒருவரை உதாரணமாக குறிப்பிட வேண்டுமென்றால், அநேகமாக அவர் இராமகிருஷ்ண பரமஹம்சராகவே இருக்க முடியும். சஹஸ்ரஹாரத்திற்குள் சற்று அதீதமாகவே சஞ்சரித்த இராமகிருஷ்ணர், நீண்ட காலம் தங்கியிருந்திருக்க வாய்ப்பின்றிப் போனது, ஏனென்றால், பொருள் உடலுடன் பொருந்தியிருந்தபடி, ஒருவரால் வாழக்கூடிய இடம் அது அல்ல. மிகுதியான பரவசமும், அற்புதமும் இணைந்திருக்கும் ஒரு நிலையில், அது வாழ்வதற்கான ஓரிடம் அல்ல, அது “செல்வதற்கான” ஒரு இடமாகத்தான் இருக்கிறது. அவ்வப்போது, நீங்கள் அதைத் தொட்டுவிட்டுத் திரும்பிவிட வேண்டும். ஒருவர் நீண்ட காலம் அதில் தங்கியிருக்கும்போது, அதற்குரியவை நிகழும் - உடல் அதை தாங்காது.

சஹஸ்ரஹாரம் பருப்பொருளாலான ஒரு இடம் அல்ல. உடலின் பூகோள அமைப்பில் அதற்கு ஒரு இருப்பு உள்ளது. ஆனால், ஒரு பருப்பொருள் இடத்தை அது குறிப்பதாக இல்லை.

வெறுமனே பரவசத்தில் மிதந்து கொண்டிருப்பதைவிட, தெளிவு மற்றும் அறிதலை நோக்கி இராமகிருஷ்ணரை கீழே கொண்டுவருவதற்காக ஒரு கண்ணாடித் துண்டினால் இராமகிருஷ்ணரின் ஆக்ஞாவில் கீறல் ஏற்படுத்திய தோத்தாபுரியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படியானால் பரவசத்தில் மிதந்துகொண்டிருப்பது சிறப்பில்லையா? அது மகத்தானதுதான். ஆனால் அந்த நிலையில் உங்களால் செயல்படவோ, எதையும் உருவாக்கவோ இயலாது. பித்தேறிய போதை போன்றது அந்த நிலை. அது அற்புதமானது, உங்களது இருப்பைப் பொருத்தமட்டில் அபாரமானது, ஆனால் மனித செயல்பாட்டைப் பொருத்தவரை, அது மகத்தானதல்ல. ஏனென்றால் அந்த நிலைகளில் நீங்கள் செயல்பட முடியாது. நீங்கள் செயல்பட்டாலும், அது மிக திறனுடன் இருக்காது. பொருள் தன்மைக்கும், பொருளற்ற தன்மைக்கும் இடையேயான ஒரு தெளிவில்லாத உலகமாக அது இருக்கிறது.

ஆகவே, சஹஸ்ரஹாரம் பற்றி எவ்வளவு குறைவாக நாம் கூறுகிறோமோ அவ்வளவுக்கு அது நல்லது, ஏனென்றால் தற்போது நாம் ஒரு நோக்கத்தோடு இருக்கிறோம் - இப்போது தெளிவின்மைக்கு நாம் இடம் கொடுக்கமுடியாது. அவ்வப்போது, நாம் சிறிது கொண்டாடிக்கொள்கிறோம் - நமக்கான பாவ ஸ்பந்தனா மற்றும் சத்சங்கங்கள் இருக்கின்றன, ஆனால் அதற்குப் பிறகு, நாம் செய்யவேண்டியது என்னவோ அதில் கவனமாக இருக்க விரும்புகிறோம். எல்லோருமே சஹஸ்ரஹாரத்தில் இருந்தால், செயல்படுவது சாத்தியப்படாது. மேலும் அனைவரும் அங்கேயே குடியிருக்கத் துவங்கிவிட்டால், அவர்களால் நீண்ட நாட்களுக்கு இங்கே இருக்க முடியாது, அவர்கள் மறைந்துவிடுவார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பரவசமான நிலைகளில் இருக்கும்போது, சிவன், காணக்கிடைக்காதவராகவும் அவரை அணுகமுடியாமலும் இருப்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதீத முனைப்புடனும், தீவிரத்துடனும் இருக்கும் ஒருவர், சட்டென்று கிறங்கி, நினைவு வழுவி தொடர்புகொள்ள முடியாதவராக இருக்கிறார். இது ஏனென்றால், இவை “சஹஸ்ரஹார் தருணங்கள்”எனப்படுகின்றன. சிவனைப் போன்று தீவிரத்துடனும், முனைப்புடனும் இருக்கும் ஒருவர்கூட, பித்தேறி செயல்பட இயலாத பரவச நிலையில் இருக்கிறார்.

தெய்வீகத்தன்மை உடைய அனைவரிலும் கட்டுக்கோப்பான கச்சிதமான உடலமைப்புடன் இருப்பவர் என்றால், சிவன்தான். அதாவது, அவர் தீவிர செயல்பாட்டின் அடையாளமாக இருக்கிறார். ஆனால் சில நேரங்களில் அவருக்கும் பித்தேறுகிறது, ஏனென்றால் அவர் சஹஸ்ரஹாரத்தில் இருக்கிறார். ஆகவே அது ஒரு பாதை அல்ல. நீங்கள் சஹஸ்ரஹாரத்துக்குச் செல்வது, தொலைந்து போகும் விருப்பதினால்தானே தவிர, உங்களை நீங்களே கண்டுணர வேண்டும் என்ற விருப்பத்தினால் அல்ல. தொலைந்து போகவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா - சஹஸ்ரஹாரம் இருக்கிறது. உங்களை நீங்கள் கண்டுணர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் ஏதோ ஒரு பாதையில் இருக்கத் தேவைப்படுகிறது. காணாமல் போவதற்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறதா? ஆமாம் இருக்கிறது, ஆனால் அதிலிருந்து நீங்கள் ஒரு வடிவத்தை உருவாக்க முடியாது.

கே: உங்களது உரைகளுள் ஒன்றில், சோம ரேகையை நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த ரேகையின்(கோடு) இயல்பு, அதன் முக்கியத்துவம் மற்றும் அனுபவரீதியான பரிமாணம் குறித்து தயைகூர்ந்து உங்களால் விளக்கமுடியுமா?

ஆதியோகி, சந்திரன் மற்றும் அமிர்தம்

சத்குரு: நம் பாரத தேசத்தில், சமுத்திரத்திலிருந்து அமிர்தம் வெளிப்படுவதாக ஒரு குறியீடு இருக்கிறது. அப்போது வெளிப்பட்ட விஷத்தன்மையை சிவன் அருந்த, மற்ற அனைவரும் அமிர்தம் அல்லது வாழ்வின் அமுதத்தை அருந்தி சாகாவரம் பெற விரும்பினார்கள். அடிப்படையாக, அமிர்தம் என்பது மரணமில்லாத நிலை, அதாவது உங்களது வாழ்வை உணரும் அனுபவமானது உடல்தன்மையைத் தாண்டி உயர்கிறது. உடல்தன்மை கடந்து உங்கள் வாழ்வின் உணர்தல் உயரும்போது, ஏதோ ஒரு விதத்தில் நீங்கள் மரணமில்லாதவராக இருக்கிறீர்கள். மரணமின்மை என்றால், என்றென்றைக்கும் நாங்கள் உங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை, அதாவது உங்களது உடல்தன்மை ஏறக்குறைய இல்லாமல் போகிறது. இந்தக் காரணத்தால், நாம் உங்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய தேவையே கிட்டத்தட்ட இருப்பதில்லை.

சஹஸ்ரஹாரத்திலிருந்து வெளிப்படும் சிறு துளியைத்தான், மூன்றாம்பிறைச் சந்திரனாக நீங்கள் பார்க்கிறீர்கள். சிவனின் சஹஸ்ரஹாரத்திலிருந்து மூன்று துளி அமிர்தம் வழிய, அதை அடைவதற்கு அனைவருமே முயற்சிக்கின்றனர்.

சக்கரங்களின் அடிப்படையில் கூறவேண்டுமென்றால், இது சஹஸ்ரஹாரம். சஹஸ்ரஹாரத்திலிருந்து வெளிப்படும் சிறு துளியைத்தான், மூன்றாம்பிறைச் சந்திரனாக நீங்கள் பார்க்கிறீர்கள். சிவனின் சஹஸ்ரஹாரத்திலிருந்து மூன்று துளி அமிர்தம் வழிய, அதை அடைவதற்கு அனைவருமே முயற்சிக்கின்றனர். அவர் பிறை சந்திரனை ஒரு ஆபரணமாக அணிந்திருக்கிறார். இதுதான் முக்கியமானது. அவர் தனது சிரசின் மீது பிறையை ஒரு ஆபரணமாகவே சூடியுள்ளார். இதன் பொருள், அங்கே பரவசத்தின் துளி எப்போதுமே இருக்கிறது, ஆனால் அவர் அதில் மூழ்கியிருக்கவில்லை. சில நேரங்களில் சிவன் அதற்குள் செல்கிறார், ஆனால் மற்றபடி, அங்கே எப்போதும் பரவசத்தின் துளி ஒரு அடிநாதமாகவே இருந்துகொண்டிருக்கிறது.

இந்த பரவசத்தின் துளி அடிநாதமாக இல்லையென்றால், ஒருவர் அமர்ந்திருக்க முடியாது. பரவசம் ஒரு அடிநாதமாக இருக்கும் காரணத்தால், வெளியில் எந்தச் செயலையும் செய்யவேண்டிய தேவை இல்லாமல், இன்பத்தை அல்லது நிறைவைத் தேடவேண்டிய அவசியம் இல்லாமல், ஒருவரால் வெறுமனே இங்கே அமர்ந்திருக்க முடியும். அதாவது, நீங்கள் இலேசான பரவசத்தில் இருக்கிறீர்கள் என்பது இதன் பொருள். அதிலேயே நீங்கள் முழுமையாக மூழ்கி பித்தேறிவிட்டால், பிறகு நீங்கள் உபயோகமற்றவராகிவிடுவீர்கள். உபயோகமற்றவர் என்று நாம் கூறும்போது, அது உயிர்த்தன்மையைப் பொறுத்தது அல்ல, உலகியலைப் பொறுத்த நிலையையே நாம் குறிப்பிடுகிறோம். உயிர்த்தன்மையைப் பொறுத்த அளவில், அதுகூட சரியானதுதான். ஆனால், உலக செயல்பாட்டைப் பொறுத்த அளவில், நீங்கள் திறனற்றவராகிவிடக்கூடும். ஆனால் பரவசத்தின் ஒரு துளி அடிநாதமாக இருந்தால், நீங்கள் முடிவில்லா அடிமைத்தனத்துக்குள் இருக்கமுடியும் - நீங்கள் எவ்வளவு செயல்களை செய்தாலும், நீங்கள் எதுவுமே செய்யாததுபோல் உணர்வீர்கள், ஏனென்றால் ஒரு பரவசத்துளி அடிநாதமாக இருக்கிறது. இது சிறிதளவு மது உண்டவர்கள் இருப்பதைப் போன்றது - பரவசத்தின் ஒரு துளி இருப்பதால் கால்கள் ஓய்ந்து கீழே விழும்வரை அவர்கள் நடனமாடிக்கொண்டே இருப்பார்கள். மற்ற நேரங்களில் அவர்களால் அப்படிச் செய்ய இயலாது.

ஆகவே பரவசத்தின் ஒரு துளி இருக்கும் காரணத்தால், நீங்கள் ஆடலாம் அல்லது செயல் செய்யலாம் அல்லது களைப்பூட்டும் சுமையின் உணர்வு துளியும் இல்லாமல் எதையும் செய்யமுடியும். ஆதியோகி இதன் பிரதிநிதியாகவே இருக்கிறார், எப்போதும் அவரில் ஒரு துளி பரவசம் இருக்கிறது.

கோவில்களில் பரவசத்தின் துளி

நாம் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை உருவாக்கும்போது - எல்லா லிங்கங்களும் அல்ல, ஆனால் பெரும்பாலானவை - அவைகள் சரியானபடி செய்யப்பட்டிருந்தது என்றால், அங்கே பரவசத்தின் ஒரு துளி இருக்கிறது. இந்தப் பரவசத்தின் துளியை நீங்கள் உங்களது வடிவத்திற்குள்ளும், மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட வடிவங்களிலும் கொண்டு வரவில்லையென்றால், பிறகு அங்கே உத்வேகம் என்பது இருப்பதில்லை. அகத்தூண்டுதல் அல்லது உத்வேகம் இருப்பதில்லை என்று நாம் கூறுவது, ஒரு வடிவத்தினுடைய தாக்கத்தின் கீழ் மக்களால் வரமுடியாது என்பதையே - அவர்களுக்கு என்ன வேண்டுமோ, அதைப் பற்றி மட்டுமே அவர்கள் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.

தென் பகுதி மக்கள் மட்டும் எப்படி இது குறித்த விழிப்புணர்வுடன் இருக்கின்றனர் என்பதற்கு அகத்திய முனிவர்தான் காரணமாக இருப்பார் என்று நாம் கருதுகிறோம்.

இந்தியாவில் சிறப்பான முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல கோவில்களிலும் இது நிகழ்கிறது. மக்கள் பிரார்த்தனை செய்து எல்லாவித முட்டாள்தனமான விஷயங்களையும் கேட்கும் நோக்கத்துடன் அங்கே செல்கின்றனர், ஆனால் அவர்கள் அங்கே சென்றதும், இந்த அற்பமான விஷயங்களையெல்லாம் மறந்துவிட்டு, வெறுமனே நிற்கின்றனர். பரவசத்தின் ஒரு துளி அங்கே இருப்பதால் இது நிகழ்கிறது.

பிரதிஷ்டை செய்யப்பட்ட வடிவத்தின் நிழலோட்டம் - நாம் நிழல் என்று கூறுவதை வெளிச்சம், நிழல் என்ற சொற்களின் பொருளில் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம் - ஏதோ ஒருவிதத்தில், பிரதிஷ்டை செய்யப்பட்ட வடிவின் சக்தி நிழலோட்டம் இயல்பாகவே அங்கே தரையில் படிந்திருக்கும். நாம் அதை கோடிட்டுக் குறித்தால், மக்கள் அதில் நடக்கமுடியும். இன்னமும் தென்னிந்தியாவில் மட்டும்தான் மக்களிடம் மூன்றாம் பிறை குறித்த தெளிவான அறிதல் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். சோமா என்றால் சந்திரன் அல்லது போதையூட்டும் ஒரு வடிவம் என்பது பொருள். சோம ரேகை என்றால், மூன்றாம் பிறையின் பாதையை அவர்கள் அடியொற்றி நடக்கிறார்கள்.

தென் பகுதி மக்கள் மட்டும் எப்படி இது குறித்த விழிப்புணர்வுடன் இருக்கின்றனர் என்பதற்கு அகத்திய முனிவர்தான் காரணமாக இருப்பார் என்று நாம் கருதுகிறோம். மக்களிடம் சற்று கூடுதலாகவே அளவளாவியதில், மிகப் பல விஷயங்களையும் அவர் வெளியே கூறிவிட்டார் போலும்! மக்கள் மீதான அதீத அன்பில், நீங்கள் தொட்டாலே பரவசமளிக்கும் பிரத்யேகமான இடங்கள் இருக்கின்றன என்பதை அவர் கூறிவிட்டார். ஆகவே மக்கள் அதன் அடிப்படையில் ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி, அதன் மீது நடக்க விருப்பம் கொண்டனர். தென்னிந்தியக் கோவில்களில் - ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலப் பகுதிகளில் - இது இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது. இந்த இடங்களில் மட்டுமே இதைப் பற்றி அறிந்திருக்கும் மக்கள் இருக்கின்றனர் - தனிப்பட்ட முறையில் அவர்கள் அறியாமல் இருக்கலாம், ஆனால் பாரம்பரியத்தில் இது இருக்கிறது.

மக்கள் தாங்களாகவே இதைக் கண்டுபிடித்திருப்பார்கள் என்று நாம் எண்ணவில்லை. யாரோ ஒருவர் இதைப் பற்றி பேசியிருக்கவேண்டும். இதற்கு நாம் அகத்தியரைக் காரணம் காட்டலாம் அல்லது வேறொரு யோகி அதைப் பற்றி பேசியிருக்கலாம். ஏனென்றால், திருவுருவத்தை உருவாக்கும் ஒருவர் பொதுவாக இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேசமாட்டார். ஏனென்றால், திருவுருவின் மற்ற எல்லா அம்சங்களும் வீண்போவதை அவர் விரும்பமாட்டார். இது எப்படியென்றால், ஒரு குழந்தைக்கு உணவையும், கூடவே ஒரு இனிப்பையும் பரிமாறுவதைப் போன்றது. குழந்தை இனிப்பை மட்டும் சாப்பிடக்கூடும். இதனால்தான் இந்தியாவில் இனிப்புகளை நாம் உணவின் நிறைவாக பரிமாறுகிறோம். விருந்தின் ஆரம்பத்தில், அரை ஸ்பூன் அளவு பாயசம் இனிப்பு ருசிக்காக மட்டும் பரிமாறுவார்கள். விருந்தின் முடிவில் மீண்டும் பாயசம் பரிமாறப்படும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் நன்றாக உண்ணுவீர்கள்! சத்து மிகுந்த மற்ற எல்லா வகை உணவையும் நீங்கள் சாப்பிடவேண்டும், முடிவில் மீண்டும் பாயசம் பரிமாறுவார்கள். ஆனால் அதற்குள் உங்கள் வயிறு முழுவதும் நிரம்பிவிடும், உங்களால் அதிக இனிப்பை சாப்பிட முடியாது!

அதேபோல, பரவசத்தின் துளி எங்கே இருக்கிறது என்பதை மட்டும் மக்களிடம் நீங்கள் காட்டினால், மக்கள் அதை மட்டுமே நுகரத் துவங்கி, மற்ற அனைத்தையும் தவறவிட்டுவிடக்கூடும். நாம் முன்னரே குறிப்பிட்டுள்ளதைப்போல, நீங்கள் உறுதியானவராக நிலைப்பெற்றிருக்கையில், பரவசத்தின் ஒரு துளி இருந்தால், அது அற்புதமானது. நீங்கள் அதை மட்டும் தேடினால், அப்போதும் அது அற்புதமானதுதான், ஆனால் அது சற்று அதி அற்புதமாக இருப்பதால், நீங்கள் யதார்த்தத்திலிருந்து விலகி “லாலா உலகம்" சென்றுவிடக்கூடும். நீங்கள் சிறிதளவு லாலா-வென இருக்கலாம் - அது உங்களுக்கு அற்புதம் - ஆனால் இந்த உலகோடும் வேரூன்றி இருக்கவேண்டும், ஏனென்றால் இங்கேயும் செய்யவேண்டிய செயல்கள் இருக்கின்றன.