"பாவஸ்பந்தனா வகுப்பில் கலந்து கொண்டதிலிருந்து, என் ஹடயோகப் பயிற்சிகள் இன்னும் தீவிரமாக இருக்கிறது. ஒவ்வொரு 'ஆசனா'வை செய்துமுடித்து வெளிவரும்போதும், ஒருவித ஆனந்த மயக்கத்தில் திளைக்கிறேன். ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை செய்யும்போதும் இதே நிலைதான். எனக்குள் என்ன நடக்கிறது?" என்ற தியான அன்பரின் கேள்விக்கு சத்குரு வழங்கிய பதில், இன்றைய ஸ்பாட்டில்...

சத்குரு:

ஆனந்தத் தித்திப்பின் போதை இல்லாமல் 'வாழ்க்கை'க்கு அர்த்தம் ஏது? விழிப்புணர்வு இல்லாத வாழ்வை, வாழ்வென்று சொல்வதும் முறைதானா? நீங்கள் உயிருடன்தான் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிவதே ஏதோ ஓரளவிற்கு விழிப்புணர்வு உங்களுள் செயல்படுவதால்தான். உங்கள் வாழ்வின் அடிப்படையே இந்த விழிப்புணர்வுதான். அது இல்லையெனில் வாழ்வென்று எதுவுமில்லை. எவ்வித உணர்வும் இல்லாமல், ஆனால் விழிப்புணர்வோடு இருக்கும் நிலை கூட பரவாயில்லை... அந்நிலையிலும் நீங்கள் ஏதோ அறியமுடியும். ஆனால் ஆனந்தத் தித்திப்பில், அதே நேரம் முழு விழிப்புணர்வோடு இருக்கமுடியும் என்றால், அது அற்புதமான விஷயமில்லையா?

இதுதான் பாவஸ்பந்தனா. உங்களுக்கு ஆனந்தமயக்கத்தை அளித்திடும், அதுவும்... முழு விழிப்புணர்வில், எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி. தேவையான போது 'ஆன்' செய்துகொள்ளலாம், இல்லையெனில் 'ஆஃப்' செய்துவிடலாம். எத்தனை நல்லது பாருங்கள், இதற்கு செலவுசெய்யக்கூடத் தேவையில்லை. 24 மணி நேரமும் முழு போதையில் திளைத்திடலாம், அதுவும் முழு விழிப்புணர்வோடு.

Sign Up for Monthly Updates from Isha

Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.

No Spam. Cancel Anytime.

இன்று மக்கள் பலரால் மதுபானத்தின் மயக்கத்தில் மட்டுமே பாடவும், ஆடவும் முடிகிறது. இதுதான் இன்றைய நிதர்சனம். அவர்களின் மனதிலும், ஆளுமையிலும் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை, இந்த மயக்கம் மட்டுமே தளர்த்துகிறது. வாழ்வை வாழும் விதத்திலேயே இந்த மயக்கத்தை உருவாக்கிக்கொள்ள உங்களுக்குத் தெரிந்திருந்தால், தெய்வீகத்தை பருகி அதில் இந்தமயக்கத்தை உருவாக்கிக்கொள்ள நீங்கள் அறிந்திருந்தால், இந்த ஆனந்தத் தித்திப்பின் போதை எல்லா நேரங்களிலும் அளவின்றி உங்களுக்கு கிடைக்கும். அப்போது மதுபானங்களுக்கு அவசியம் இருக்காது. அதுமட்டுமல்ல மதுபான மயக்கங்கள் பாட்டிலில் வருகிறது, சீக்கிரமே தீர்ந்தும் போய்விடும்.

நீங்களே உள்ளிருந்து உருவாக்கிக் கொள்ளும் இந்த போதையோ என்றும் தீராது... உங்களையும் முழு விழிப்புணர்வில் திளைத்திடச் செய்யும். இது மூளையில் இருக்கும் 'பீனியல்' சுரப்பி (Pineal Gland) சுரக்கும் ரசாயனத்தால் கிடைக்கிறது. இதை 'அமிர்தம்' என்போம். இந்த அமிர்தத்தை சுரக்கச் செய்ய, ஹடயோகத்தில் தனிப்பயிற்சிகள் உள்ளன. முன்பெல்லாம் 2-நாள் ஹடயோக வகுப்புகளை நான் நடத்தியிருக்கிறேன். வெள்ளி மாலை துவங்கி, ஞாயிறு மாலை இவ்வகுப்புகள் முடிவடையும். இவ்வகுப்புகள் நடக்கும்போது, சனிக்கிழமை மதியம்பொழுதிலேயே 70% பேர் முழு போதையில் தள்ளாடிக் கொண்டிருப்பர். இது பாவ ஸ்பந்தனா கூட இல்லை. வெறும் ஹடயோகா மட்டுமே. சாதாரணமாக ஹடயோகா செய்தால் இப்படித்தான் இருக்கவேண்டும்... ஆனால் அதற்கு உங்கள் உடலமைப்பு பற்றி முற்றிலும் வேறு வகையான புரிதல் உங்களுக்குத் தேவைப்படும்.

பாவஸ்பந்தனா என்றால் அது இந்த வகுப்பிற்கு வந்துதான் நிகழவேண்டும் என்றில்லை. எண்ணத்தின் அளவிலும், உணர்வளவிலும் மக்கள் மிக மோசமான அளவில் இறுகிப்போய் இருப்பதால், அவர்கள் தப்பிக்க வழியே இல்லாத இது போன்ற ஓரிடத்தில் அவர்களை கடைந்தெடுக்க வேண்டியநிலை வந்துவிட்டது. இந்த வகுப்பிற்கு, தப்பிக்க வழியே இல்லாமல் இருப்பது மிகமிக அவசியம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் 'கழுவும் மீனில் நழுவும் மீனாக' இருப்பவர்கள், இந்த மூன்று நாட்கள் மட்டும் தப்பிக்காமல் இருக்க நினைப்பார்களா என்ன?

இன்னொரு உயிருடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள எத்தனை எத்தனை வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைத்திருக்கும்? ஒவ்வொரு நாளிலும் கூட ஆயிரமாயிரம் வாய்ப்புகள் இருக்கும்... ஆனால் அது எதையுமே அவர்கள் பயன்படுத்திக் கொள்ளமாட்டார்கள். இதுபோன்றவர்களை கதவிருக்கும் இடத்தில் எப்படி நம்பி விடுவது? அதனால் தப்பிக்க வழியின்றி அனைத்து வழிகளையும் அடைத்துவிடுவோம்... அப்போது திடீரென விழித்தெழுவார்கள். இந்த உடல், மன எல்லைகளைத் தாண்டி வாழ்வை வேறு பரிமாணங்களிலும் உணரமுடியும் என்பதை அவர்கள் உணர்வார்கள்.

பாவஸ்பந்தனா என்பது ஏதோ மூன்றுநாட்கள் வந்தோம், சென்றோம் என்பது போலில்லை. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஆனந்தத் தித்திப்பாய் மாற்றக்கூடிய வல்லமை அதற்குண்டு. இது மிகவும் எளிமையான ஒரு வகுப்பு. எனக்குத் தெரிந்து, கடந்த சில நூற்றாண்டுகளில் இந்த அளவிற்கு சக்திவாய்ந்த ஒன்று, இத்தனை எளிமையாய் வழங்கப்படவில்லை. இது மிகமிக எளிமையானது! ஏதோ இவ்வகுப்பில் கலந்துகொண்டதால் உங்களுக்கு முதுகுவலி ஏற்பட்டிருக்கலாம்... அதற்கு தேவையான ஹடயோகப் பயிற்சி இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். மற்றபடிக்கு, பாவஸ்பந்தனாவில் கையாளப்படும் யுக்தி மிகமிக எளிமையானது... சிறுபிள்ளைத்தனமானது என்று சொல்லும் அளவிற்கு அது எளிமையானது. அதுதான் இதன் சிறப்பம்சமும் கூட.

Love & Grace