சத்குரு டிவி பார்ப்பாரா?
டிவி பார்க்கவில்லையென்றால் எதையோ இழந்த மனநிலைக்குச் செல்லும் அளவுக்கு இன்று தொலைக்காட்சிப் பெட்டி மக்கள் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. டிவி பார்ப்பதைப் பற்றி சத்குருவின் கருத்து என்ன? அவரது வாழ்வில் இது எந்த இடத்தைப் பெறுகிறது? இதோ சத்குருவின் வார்த்தைகளில்...
டிவி பார்க்கவில்லையென்றால் எதையோ இழந்த மனநிலைக்குச் செல்லும் அளவுக்கு இன்று தொலைக்காட்சிப் பெட்டி மக்கள் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. டிவி பார்ப்பதைப் பற்றி சத்குருவின் கருத்து என்ன? அவரது வாழ்வில் இது எந்த இடத்தைப் பெறுகிறது? இதோ சத்குருவின் வார்த்தைகளில்...
சத்குரு:
அவ்வப்போது தொலைக்காட்சி மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில் நான் நுழைந்து கொண்டு இருக்கிறேன். என் வாழ்க்கையில் தொலைக்காட்சி நுழைந்ததா என்று யோசித்துப் பார்க்கிறேன்.
இல்லை. சிறு வயதிலிருந்தே வாழ்க்கை என்னைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. அதனால் தொலைக்காட்சி நம் தேசத்தில் அறிமுகமான ஆரம்ப வருடங்களில் கூட என்னைப் பெரிதாக வசீகரித்ததில்லை.
ஜவஹர்லால் நேருவின் 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா'வை அடிப்படையாக வைத்து, மிக நன்றாகத் தயாரிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியை மட்டும் சிறு வயதில் தொடர்ந்து பார்த்தேன். மற்றபடி, தொலைக்காட்சி என் வாழ்க்கையில் குறுக்கிட்டதில்லை. இப்போதும் நள்ளிரவு நேரத்தில், சில செய்திச் சேனல்களையும், விளையாட்டுச் சேனல்களையும் சற்று நேரம் பார்ப்பதோடு சரி.
வாழ்க்கையில் எதுவும் உருப்படியாக நடக்காதவர்கள்தாம் தொலைக்காட்சியே கதி என்று இருப்பார்கள். அதில் காணும் வேறு யார் மூலமோ தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ள முற்படுவார்கள்.
பசுமையான மலையையோ, அழகான நீரோடையையோ பார்த்து ரசித்துவிட்டு வந்த பிறகும், அந்த அதிர்வுகள் வெகுநேரம் உங்கள் மனதில் தங்கியிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? தொலைக்காட்சியின் அதிர்வுகளும் அப்படித்தான் உள்ளே இறங்கும். பார்த்த ஒவ்வொரு பிம்பத்தையும், ஒலியையும் மனம் அசைபோடும்.
குடிகாரர்கள், கொலைக்காரர்கள், போதை மருந்துக்கு அடிமையானவர்கள், மற்றவர் வாழ்க்கையை கெடுக்க சூழ்ச்சி செய்பவர்கள், இன்னும் யார் யார் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டுவிடக்கூடாது என்று கவனமாக இருக்க ஆசைப்படுவீர்களோ, யார் யாருடன் எந்தவித சகவாசமும் வைத்துக் கொள்ளவே கூடாது என்று தீர்மானமாக நினைக்கிறீர்களோ, அவர்களைத் தொலைக்காட்சி மூலம் உங்கள் வீட்டுக்குள் சுதந்திரமாக நுழைய அனுமதிக்கிறீர்கள். அவர்களால், உங்கள் வீட்டுக் குழந்தைகளின் புத்திசாலித்தனம் பெரிதளவு சிதைக்கப்படுகிறது. அவர்களின் மூளை வளர்ச்சி பெரிதும் தடை செய்யப்படுகிறது.
Subscribe
தொலைக்காட்சி என்ற கண்டுபிடிப்பு அபாரமானது. ஆனால், அளவுக்கு அதிகமாக அதற்கு இடம் கொடுத்ததால், அது புத்தகங்கள் படிக்கும் வழக்கம், விளையாட்டில் ஈடுபடும் ஆர்வம் இவற்றைக் குழந்தைகளிடமிருந்து பறித்துவிட்டது. கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை ஒருநிலையாக உட்காரச் சொன்னால், வெகு இயல்பாகச் செய்கிறார்கள்.
அதே நேரம், நகரத்து மாணவர்களை உடைந்த பம்பரங்கள் போல் ஒரு புறமாகச் சாய்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய உடல்நலம், விளையாட்டை மறந்து, அலட்சியப்படுத்தப்பட்டு இருக்கிறது.
தொலைக்காட்சி முன் உட்கார்ந்து, யாரோ மலையேறுவதைப் பார்த்து, நீங்களே மலையேறிவிட்ட திருப்தி கொள்கிறீர்கள். யாரோ நடக்கிறார்கள். யாரோ ஓடுகிறார்கள். யாரோ நீந்துகிறார்கள். யாரோ காதலிக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையையே அந்த நபரின் பிம்பம் மூலம் வாழப் பார்க்கிறீர்கள்.
வாழ்க்கையின் நேரடி அனுபவங்களைச் சந்திக்காமல், யாருடைய பிம்பம் மூலமாகவோ பொய்யாக வாழ்வது புத்திசாலித்தனமா? நாளைக்குத் தொலைக்காட்சித் திரையைப் பொருத்திவிட்டால், கல்லறையில் கூட உட்கார்ந்திருக்க நீங்கள் தயார். அப்படித்தானே?
மக்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி அவர்களை மேம்படுத்தி, சமூகக் கட்டுக்கோப்பை மாற்றி அமைக்கக்கூடிய மிகச் சக்தி வாய்ந்த ஓர் ஊடகம், பயனற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டும் தயாரித்து வழங்கிக் கொண்டு இருப்பது, எவ்வளவு அபத்தமான விஷயம்!
பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்களைப் பற்றித்தான் கவலையாக இருக்கிறது. அவர்கள் முதலில் தங்கள் ரசனையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.
ஆற்றங்கரைக்குத் தன் மகனை அழைத்துப் போயிருந்தார் ஒருவர். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார். பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.
"இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு" என்றார். மகன் நிரப்பி எடுத்து வந்தான். "இதற்கு மேல் நிரப்ப முடியாது" என்றான். அப்பா கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார். அதே பையில் போட்டுக் குலுக்கினார். அவை கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின. ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.
"இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?" கேட்டான் மகன்.
தந்தை அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார். பையை மேலும் குலுக்கினார். கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது. "இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?"
"இருந்திருக்காது" என்று ஒப்புக் கொண்டான் மகன்.
"வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை. வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை. கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.
முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடு. அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். ஆனால், உன் சக்தியை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது."
பொழுதுபோக்கு அம்சங்களே இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை மனதை அமைதிப்படுத்தி, புத்துணர்சசி ஊட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால், இன்று பெரும்பாலான தொடர்களின் உள்ளடக்கமும், தரமும் பார்ப்பவரின் புத்திசாலித்தனத்தின் மீது தொடுக்கப்படும் போராகவே இருக்கிறது.
தொழில்நுட்பங்களில் மற்ற எந்தத் தலைமுறையை விடவும் நாம் முன்னணியில் இருக்கக்கூடும். ஆனால் உடல்ரீதியாக, மனரீதியாக மக்கள் தொகையில் பெரும் பகுதி மிகவும் பலவீனமாகவே விளங்குகிறோம்.
உருப்படியாகச் செய்வதற்கு எவ்வளவோ இருக்க, பகல் நேரங்களில்கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு ஜனத்தொகையில் ஒரு பெரும் பகுதி உட்கார்ந்திருந்தால், அந்த நாடு அழுகிக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.
தொலைக்காட்சியோ, செல்போனோ, புதிதாக எது கிடைத்தாலும், சரியான பக்குவமின்றி, தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவிடுகிறோம். பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், வாழ்க்கையையே அவற்றின் மீது எழுப்ப முயற்சிக்கிறோம்.
தவறான திசையில் வெகு தொலைவுக்குப் போய்விட்டால், விருப்பப்பட்டால்கூட நம்மால் சரி செய்ய முடியாத அளவு எல்லாம் சிடுக்காகி இருக்கும். வாழ்க்கை எல்லா சமயங்களிலும் நம்மைப் பொறுத்துக் கொள்ளாது. அது மன்னிக்க மறுத்துவிடும் நேரங்களும் உண்டு என்பதை மறக்காதீர்கள்.