"கடந்த பிறவியில் சத்குரு ஸ்ரீபிரம்மாவாக இருந்த போது நீலகிரிக்கு வந்ததற்கும், இந்தப் பிறவியில் இங்கே இருப்பதைக் காண்பதற்கும் என்ன வேறுபாடு?" என்று நீலகிரியில் நடந்த ஒரு சத்சங்கத்தில் கேட்ட கேள்விக்கு சத்குருவின் பதில் இங்கே...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

அப்போது வேறு மாதிரி செயலில் இருந்தேன். இவ்வளவு கூட்டமெல்லாம் சேர்க்க முடியவில்லை. மைக் கிடையாது, அப்போது. மிகவும் சத்தம் போட்டுத்தான் பேசவேண்டும். இப்போது போல காரில் போக முடியாது. நடந்துதான் போக வேண்டும். எனவே அப்போது என்ன செய்தோமோ அதை விட ஆயிரம் மடங்கு அதிக செயல் செய்ய வேண்டும் அல்லவா? ஏனென்றால் இப்போது திறமை அதிகமாகி விட்டதே!

உங்கள் அனைவரின் வீடுகளையே ஆசிரமமாக மாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறேன்.

அப்போது அவர் ஏதோ முடிந்த அளவிற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆசிரமங்களை உருவாக்கினார். ஆனால் நமக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆசிரமங்களை உருவாக்கும் நோக்கம் இல்லை. உங்கள் அனைவரின் வீடுகளையே ஆசிரமமாக மாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறேன். செய்துவிடலாமா அப்படி? எந்த வீட்டில் போய் உட்கார்ந்தாலும் அது ஒரு ஆசிரமம் போல இருக்க வேண்டும். எப்போதும் நாம் ஆசிரமத்தை தேடிப் போயே இருக்க முடியுமா? எனவே வீட்டு சூழ்நிலையையே அப்படி மாற்றிவிட்டால் நமது வாழ்க்கையும் மாறுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

ஆசிரமம் என்றால் அது ஒரு தனி உலகம் இல்லை. அங்கிருப்பவர்கள் எல்லாம் மாயசக்தி நிறைந்தவர்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம். அங்கிருப்பவர்களுக்கு வளர்ச்சி பற்றிய ஒரு கவனம் எப்போதும் இருக்கும். அந்த ஒரு வசதி அங்கே இருக்கிறது. நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, அல்லது எங்கிருந்தாலும் சரி, வளர்ச்சி குறித்த நோக்கத்துடனேயே எப்போதும் இருக்க வேண்டும் அல்லவா? நம் வளர்ச்சி தொடர்ந்து நடக்கும்போது, சூழ்நிலை நமக்கு சாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வரக்கூடிய பிரச்சினைகள் பிரசாதமாகத்தான் இருக்கும். அது நன்மையாகத்தான் மாறும்.

மனிதன் புத்திசாலியாக இருக்கும்போது, எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை நன்மைக்காக உபயோகப் படுத்திக் கொள்ள முடியும். சூழ்நிலை நாம் நினைத்த மாதிரி அமையவில்லையென்றால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. நீங்கள் நினைத்த மாதிரி வாழ்க்கை நடக்கவில்லை. அவ்வளவுதானே, அது ஒன்று தானே பிரச்சினை? நீங்கள் நினைப்பது என்பது உங்கள் எண்ணம்தானே? உங்கள் எண்ணம் என்பது உங்கள் கையில்தானே இருக்கிறது? எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாமே? யாரோ மற்றவர்களை நம்மால் மாற்ற முடியவில்லை, ஆனால் நாம் உருவாக்கிக் கொண்ட எண்ணத்தை நம்மால் மாற்றிக் கொள்ள முடியுமல்லவா? நம் எண்ணத்தையே நம்மால் மாற்றிக் கொள்ள முடியவில்லை என்றால் உலகத்தை எங்கே நாம் மாற்றப் போகிறோம்? எனவே நீங்கள் வீட்டு சூழ்நிலையையே ஆசிரமத்து சூழ்நிலை போல மாற்றிக் கொள்ள முடியும்.

சத்குரு ஸ்ரீபிரம்மா அப்போது இந்தப் பகுதிக்கு அவ்வப்போது வந்து சென்றார். ஏதேதோ செயல்கள் செய்தார். நீங்கள் அவர் போட்டோ வைத்து வெறுமனே பூஜை செய்வதில் பயன் ஒன்றும் இல்லை. அவர் வாழ்ந்தது போல நீங்களும் ஒரு அம்சத்திலாவது வாழ வேண்டும், அல்லவா? அவருடைய வாழ்க்கையின் ஒரு அம்சத்தையாவது உங்கள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், இல்லையா? செய்வீர்களா? அதைத்தான் நான் இந்தப்பிறவியில் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.