சத்குரு:

வாழ்க்கையில் உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது. நோக்கத்தில் உறுதியாக இருப்பதே உங்களை இலக்கிற்கு கொண்டுசேர்க்கும். மக்களின் வாழ்க்கை நடக்கும் விதத்தை நீங்கள் பார்த்தால், அவர்களின் சந்தோஷம், அமைதி, ஆனந்தம், நல்வாழ்வு, ஞானோதயம் என்று எல்லாவற்றிலும் சிலர் ஆசிர்வதிக்கப்பட்டது போலத் தெரிகிறார்கள், சிலர் சபிக்கப்பட்டவர்கள் போலத் தெரிகிறார்கள். இதன் அடிப்படை காரணம், தங்கள் மனம் தொடர்ந்து ஒன்றை தேர்வு செய்து, பிறகு வேறொன்றை மறு-தேர்வு செய்ய அனுமதிப்பவர்கள், தற்செயலாக மட்டுமே வாழமுடியும். அவர்கள் வாழ்க்கையில் எல்லாம் நல்லபடியாக நடந்தால், அது யாரோ ஒருவரின் ஆசிகளால், அல்லது அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் அற்புதமாக இருப்பதால்தான். ஒவ்வொரு முறை நீங்கள் தேர்வு செய்து மறு-தேர்வு செய்யும்போதும், உங்களை நீங்கள் உருவாக்கி அழிக்கிறீர்கள். இப்படி இருக்கும் ஒருவர் வாழ்க்கையில் ஒரு நோக்கத்துடன் வாழவோ, தான் விரும்புவதை அடையவோ வழியில்லை.

நீங்கள் உண்மையில் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?

நோக்கத்தில் பிறழாமல் இருக்கும் ஒருவருக்குமுக்தி மறுக்கப்பட முடியாது. நிச்சலனம் இல்லாவிட்டால் முக்தி கிடையாதுகுழப்பம் மட்டுமே மிஞ்சும்

சில வாரங்கள் இதற்கென ஒதுக்கி, தெளிவாக ஆழமாகப் பாருங்கள். உங்கள் உடல் மற்றும் மனதில் கட்டாயங்களைக் கடந்து நீங்கள் உண்மையில் செய்ய விரும்புவது என்னவென்று பாருங்கள். மிகத் தெளிவாக நீங்கள் இருக்கும்போது நீங்கள் முடிவெடுக்க வேண்டும், அதன்பிறகு அதை அப்படியே செய்யவேண்டும். ஒருமுறை தேர்ந்தெடுத்துவிட்டால், அதன்பிறகு நரகமாக இருந்தாலும் ஆகாயத்தில் மிதப்பது போல இருந்தாலும் அதிலிருந்து பிறழாமல் இருப்பவர்களுக்கு, வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் நடக்கிறது. வாழ்க்கையில் நாம் அடிப்படையாக தேர்ந்தெடுத்த விஷயங்களில் எந்த அளவு உறுதியாக இருக்கிறோம் என்பதைப் பொருத்தே நம் வாழ்க்கையும் நடக்கிறது.

"நிஷ்ச்சல தத்வே ஜீவன் முக்தி" என்று ஆதிசங்கரர் சொல்லும்போதும் இதைத்தான் சொல்கிறார். நோக்கத்தில் பிறழாமல் இருக்கும் ஒருவருக்கு, முக்தி மறுக்கப்பட முடியாது. நிச்சலனம் இல்லாவிட்டால் முக்தி கிடையாது, குழப்பம் மட்டுமே மிஞ்சும். தன் வாழ்வின் நோக்கத்தை ஒரு நாளுக்கு பத்து முறை மாற்றுபவர் எங்கும் போய்ச்சேருவார் என்று எதிர்பார்க்க முடியாது. தினமும் உங்கள் பயணப்பாதையை மாற்றிக்கொண்டே இருந்தால், அதே வட்டத்தில் சுற்றிக்கொண்டு இருப்பீர்கள், "புனரபி ஜனனம், புனரபி மரணம்".

ராமரும் நாய் கேட்ட நீதியும்

ராமாயணத்தில் ஒரு அழகான கதை உள்ளது. ராமர் நீதி தவறாத, அன்பான அரசராக ஆட்சிசெய்தார். அவர் தினமும் நீதிமன்றத்தில் அமர்ந்து மக்களின் பிரச்சனைகளைக் கேட்டு நீதி வழங்குவார். ஒருநாள், அவர் அன்றைய பிரச்சனைகள் அனைத்தையும் கேட்டு முடித்து நீதிமன்றத்தின் பணிகளை அன்றைய தினத்திற்கு முடித்துக்கொள்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டு இருந்தார். அப்போது அவரின் அன்பான சகோதரர் லட்சுமணரை அழைத்து வெளியில் சென்று இன்னும் யாராவது காத்திருக்கிறார்களா என்று பார்த்துவரச் சொன்னார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

லட்சுமணர் வெளியில் சென்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுத் திரும்பிவந்து, "வேறு எவரும் இல்லை. இன்றைய நீதிவிசாரணைகள் முடிந்துவிட்டன" என்றார். ராமர் சொன்னார், "திரும்பவும் சென்று பார்த்து வா. எவரேனும் காத்திருக்கக்கூடும்." இது சற்று வினோதமாக இருந்தது. லட்சுமணர் அப்போதுதான் பார்த்துவிட்டு வந்திருந்தார், ஆனால் ராமர் மீண்டும் பார்த்துவரச் சொன்னார். அதனால் மீண்டும் சென்று பார்த்தார், எவருமில்லை.

உள்ளே வருவதற்காக திரும்பும்போது, மிகவும் வாடிய முகத்துடன் ஒரு நாய் அங்கு அமர்ந்திருந்ததைக் கண்டார். அதன் தலையில் ஒரு காயம் இருந்தது. லட்சுமணர் அந்த நாயைப் பார்த்து, "நீ இங்கு காத்திருக்கிறாயா?" என்று கேட்டார். நாய் பதில் பேசியது, "ஆம், எனக்கு ராமனிடமிருந்து நீதி வேண்டும்." என்றது. லட்சுமணர் அந்த நாயிடம், "சரி, உள்ளே வா." என்று நீதிமன்றத்திற்குள் அழைத்துச் சென்றார்.

அந்த நாய் ராமரைக் கண்டு தலைவணங்கிய பிறகு, "ராமா! எனக்கு நீதி வேண்டும். காரணமே இல்லாமல் என்மீது வன்முறை நடந்திருக்கிறது. நான் சும்மா உட்கார்ந்திருந்தபோது, சர்வார்த்த சித்தர் என்ற ஒருவர் வந்து என் தலையில் குச்சியால் அடித்துவிட்டார். எனக்கு நீதி வேண்டும்." என்றது.

உடனே ராமர் சர்வார்த்த சித்தர் என்ற பிச்சைக்காரரை அழைத்துவரச் சொன்னார். ராமர் கேட்டார், "உன் பக்கம் உள்ள கதை என்ன? இந்த நாய் காரணமே இல்லாமல் நீ அடித்ததாகச் சொல்கிறது." அதற்கு சர்வார்த்த சித்தர், "ஆம், நாம் இந்த நாய் சுமத்தும் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன். என்னை பசியும் கோபமும் எரிச்சலும் ஆட்டிப்படைத்தது. இந்த நாய் நான் செல்லும் வழியில் அமர்ந்திருந்தது. அதனால் காரணமே இல்லாமல், என் எரிச்சலாலும் கோபத்தாலும் அதன் தலையில் அடித்தேன். நீங்கள் விரும்பும் தண்டனையை எனக்கு வழங்கலாம்." என்றார்.

ராமர் இதனை தனது அமைச்சர்களுக்கும் அவைக்கும் முன்பு வைத்து, "இந்த பிச்சைக்காரருக்கு என்ன தண்டனை வழங்கலாம்?" என்று கேட்டார். அவர்கள் இதைப் பற்றி சிந்தித்துவிட்டு, "இது ஒரு மனிதரும் ஒரு நாயும் சம்பந்தப்பட்ட மிகச்சிக்கலான வழக்கு. அதனால் சாதாரணமாக நமக்கு இருக்கும் சட்டங்கள் இதற்கு பொருந்தாது. அரசராக இதற்கான தீர்ப்பை வழங்குவது உங்கள் கடமை." என்றனர்.

ராமர் அந்த நாயைப் பார்த்து, "என்ன சொல்கிறாய்? நீ ஏதாவது ஆலோசனை தர விரும்புகிறாயா?" என்று கேட்டார். உடனே அந்த நாய், "ஆம், என்னிடம் இவருக்கு ஏற்ற ஒரு தண்டனை இருக்கிறது. இவரை களிஞ்ஜர் மடாலயத்தின் மடாதிபதி ஆக்கிடுங்கள்." என்றது. அந்த காலத்தில் களிஞ்ஜர் மடாலயம் வட இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற மடாலயமாக இருந்தது. "அப்படியே ஆகட்டும்" என்று ராமர் சொன்னார். அந்த பிச்சைக்காரர் மடாலயத்தின் மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். ராமர் அவருக்கு ஒரு யானையைத் தந்தார். தண்டனையினால் குளிர்ந்துபோன அந்த பிச்சைக்காரர் யானையின்மீது ஏறினார். மிகுந்த சந்தோஷத்துடன் மடாலயம் நோக்கி யானை சவாரியில் பயணமானார்.

இதைக் கண்ட அமைச்சர்கள் ராமரிடம், "இது என்னமாதிரியான தீர்ப்பு? இதெல்லாம் ஒரு தண்டனையா? அந்த மனிதர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறாரே!" என்றார்கள். ராமர் அந்த நாயைப் பார்த்து, "இப்படியொரு தண்டனை கொடுத்ததன் காரணத்தை விளக்கமாகச் சொல்லமாட்டாயா?" என்று கேட்டார். அதற்கு அந்த நாய், "என் முற்பிறவியில் நான் களிஞ்ஜர் மடாலயத்தின் மடாதிபதியாக இருந்தேன். ஆரம்பத்தில், எனது ஆன்மநலனுக்கும் மடாலயத்துக்கும் எனக்கு இருந்த உண்மையான அர்ப்பணிப்புணர்வால்தான் அங்கு சேர்ந்தேன். இதனால் பலருக்கு ஆன்மநலன் பரிமாறுவதில் நானும் ஒரு கருவியாக இருந்தேன்.

இதை எனக்கும் எல்லோருக்கும் கிடைக்கும் விதமாகச் செய்யும் உறுதியுடன் நான் அங்கு சென்றேன், பாடுபட்டேன், என்னால் இயன்ற அளவு சிறப்பாக செயல்பட்டேன். ஆனால் நாட்கள் போகப் போக, மெதுவாக, என் மனதிலிருந்த மற்ற விஷயங்கள் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. பெரும்பாலும் என் நோக்கத்தில் பிறழாமல் இருந்தேன், ஆனால் அங்கும் இங்கும் என்னை வேறு விஷயங்கள் ஆட்டிப்படைத்தன. மடாதிபதியாக இருக்கும்போது உடன்வரும் பேரும் புகழும் என்னை பாதித்தது. பல சமயங்களில் நான் இயங்கவில்லை, என் அகங்காரமே இயங்கியது. பல சமயங்களில், என்னை மக்கள் அங்கீகரித்ததை நான் இரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

மக்கள் என்னை ஒரு புனிதமான மனிதராக நடத்தத் துவங்கினர். எனக்குள் நான் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்பதை அறிந்திருந்தேன், ஆனால் அந்நிலையை அடைந்துவிட்டது போலவே நடந்துகொள்ளத் துவங்கினேன். சாதாரணமாக ஒரு புனிதமான மனிதருக்கு வழங்கப்பட வேண்டிய எல்லாவற்றையும் எனக்காக நான் கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். என்னுடைய முழுமையான தன்னிலை மாற்றத்திற்காக உறுதியுடன் இருக்காமல், புனிதராக நடிக்க ஆரம்பித்தேன், மக்களும் அதில் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். மெதுவாக எனது ஆன்மநலன் மீது இருந்த ஆர்வமும் என்னைச்சுற்றியுள்ளவர்கள் மீது இருந்த ஆர்வமும் குறைய ஆரம்பித்தது. பல சமயங்களில் என்னை நான் மீட்டுக்கொள்ள முயற்சித்தேன், ஆனால் என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னை அதிகப்படியாக அங்கீகரித்ததால், எங்கோ என்னை நானே தொலைத்துவிட்டேன்.

இந்த பிச்சைக்காரர், சர்வார்த்த சித்தர், தன்னுள் கோபமும் அகங்காரமும் வைத்திருக்கிறான். அவனால் எரிச்சலடையவும் முடியும், அதனால் எனக்கு நானே செய்துகொண்டது போல அவனும் தன்னைத்தானே தண்டித்துக்கொள்வான். அதனால் இதுதான் அவனுக்கு சிறந்த தண்டனை. அவன் களிஞ்ஜர் மடாலயத்தின் மடாதிபதியாக இருக்கட்டும்." 

தேர்வுசெய்யும் நிலையில் இருந்து தேர்வற்ற நிலைக்கு

 நீங்கள் தேர்வு செய்து மறு-தேர்வு செய்யும் ஒவ்வொரு முறையும்உங்கள் இலக்கு போகும் பாதையை நீங்கள் உருக்குலைக்கிறீர்கள்

மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே தாளாத தண்டனை, வலி மற்றும் வேதனை உருவாக்கிக் கொள்வதற்குக் காரணம், அவர்கள் தீமைக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்கள் என்று கிடையாது. அவர்கள் வாழ்க்கை ஆன்மநலனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கலாம், ஆனால் தினமும் அவர்கள் தேர்வு செய்து மறு-தேர்வு செய்கிறார்கள். அவர்களின் ஊழ் உருவெடுக்க அனுமதிப்பதில்லை. தங்களைத் தாங்களே மீண்டும் மீண்டும் கலைத்து உருவாக்கி, கீழே விழுவதும் எழுந்து மீண்டும் வருவதுமாக இருக்கிறார்கள். இதை நீங்கள் செய்யும்போது, வாழ்க்கையை நீங்கள் உருப்பெற அனுமதிப்பதில்லை, உருவெடுத்துவரும் ஒன்றை தொந்தரவு செய்வது போன்றது இது.

நீங்கள் தேர்வு செய்து மறு-தேர்வு செய்யும் ஒவ்வொரு முறையும், உங்கள் இலக்கு போகும் பாதையை நீங்கள் உருக்குலைக்கிறீர்கள். நீங்கள் இன்று எரிச்சலாகி, நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையை வேண்டாம் என்று நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நாளை நீங்கள் மீண்டும் அதே பாதைக்கு வந்திருந்தாலும், சில மணி நேரமே நீங்கள் மறு-தேர்வு செய்திருந்தாலும், நீங்கள் போகும் பாதையை வலுவிழக்கச் செய்துவிட்டீர்கள்.

ஒவ்வொரு திருப்பத்திலும் தேர்வு செய்துவிட்டுப் பின்வாங்கும் குரங்கு போன்ற மனம், எப்போதுமே "இது எனக்கு சரியானதா அல்லது சரியில்லாததா? " என்று சிந்திக்கும். இப்படியொரு மனத்தால் தான் விரும்பும் விதியை உருவாக்கவே முடியாது. அது சென்றடையும் இடமென்பது எப்போதும் குழப்பமாகவே இருக்கும். ஒருமுறை தேர்ந்தெடுத்துவிட்டால் அதற்குப் பிறகு தேர்வுகளற்ற நிலையில் உங்களை வைத்துக்கொண்டால் மட்டுமே, தனது உறுதியும் தேர்வும் நிரந்தரம் என்றிருக்கும் உறுதியான மனதால் மட்டுமே, தான் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்திற்கு விதி இட்டுச்செல்ல அனுமதிக்க முடியும்.