பாலுணர்வு சரியா? தவறா?
பாலுணர்வை சரி என்றும் தவறு என்றும் பிரிக்கும் நம் மனமானது எப்படி அதிலேயே நிலைகொண்டுள்ளது என்பதை இதில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு...
பாலுணர்வு... காதல்... கடவுள்! பகுதி 3
பாலுணர்வை சரி என்றும் தவறு என்றும் பிரிக்கும் நம் மனமானது எப்படி அதிலேயே நிலைகொண்டுள்ளது என்பதை இதில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு...
சத்குரு:
பாலுறவு சார்ந்த உறவுகளைப் பொறுத்தவரை அது காதல் என்று அழைக்கப்பட்டாலும்கூட அடிப்படையில் அது பரஸ்பர உதவித்திட்டமாகவே இருக்கிறது. உங்களுக்கு அவர் ஒன்றைத் தந்தால் நீங்கள் ஒன்றைத் தருவீர்கள். அவர் தராவிட்டால் நீங்களும் தரமாட்டீர்கள்.
Subscribe
சங்கரன்பிள்ளையின் மந்திரச் சொல்
சங்கரன்பிள்ளை ஒருநாள் மாலை பூங்காவுக்கு போனார். அங்குள்ள மரப்பலகை ஒன்றில் ஓர் அழகிய பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அவரும் அதே பலகையில் சென்று அமர்ந்தார். சில நிமிடங்கள் கழித்து கொஞ்சம் நெருங்கி அமர்ந்தார். அந்தப் பெண் தள்ளிப்போனாள். இன்னும் நெருங்கினார், இன்னும் தள்ளிப்போனாள். இது தொடர்ந்தது. இப்போது அப்பெண் பலகையின் விளிம்பிற்கே வந்துவிட்டாள். ஒன்று அவள் எழுந்து போகவேண்டும் இல்லையென்றால் வேறேதாவது செய்யவேண்டும். இப்போது சங்கரன்பிள்ளை அவளை நெருங்கியதும், அவரைப் பிடித்துத் தள்ளினாள்.
அந்தி மயங்கிக் கொண்டிருந்த நேரம். சங்கரன்பிள்ளை சில நிமிடங்கள் காத்திருந்தார். அந்த நேரத்தில்தான் நீங்கள் ஏதாவது சொல்லி மற்றவர்களை நம்பவைக்க முடியும். காலையில் கதிரவன் உதித்துவிட்டால் யாரும் உங்களை நம்பப்போவதில்லை. உடனே, அவர் முழங்காலிட்டு அந்தப் பெண்ணை நேசிப்பதாகச் சொன்னார். "உன்னளவுக்கு இந்த உலகில் நான் யாரையும் நேசித்தது இல்லை" என்று சொன்னார். எப்போதுமே ஒரு பெண் அன்புக்கு ஏமாந்து போய்விடுவாள். உள்ளம் உருகினாள். இயற்கையாக அவர்களுக்குள் நிகழவேண்டியதெல்லாம் நிகழ்ந்தது. இரவு 7.45 ஆனது. சங்கரன்பிள்ளை எழுந்து, "சரி புறப்படுகிறேன்" என்றார். "எங்கே போகிறீர்கள்?" என்றாள். அவளைப் பொறுத்தவரையில் காதலில் அவர்கள் ஒன்றாகிவிட்டார்கள். சங்கரன்பிள்ளை சொன்னார், "நான் வீட்டுக்குப் போக வேண்டும், என் மனைவி காத்திருப்பாள். எங்கள் வீட்டில் இரவு 8 மணிதான் உணவு நேரம்" என்றார். எனவே, உன்னை நேசிக்கிறேன் என்பதே ஒரு மந்திர வார்த்தையாகிவிட்டது, "திறந்திடு சீசேம்" என்பது போல. பாலுணர்வு உறவில் இந்த மந்திரச்சொல்லை சொல்லாமல் எதிர் பாலினத்திடம் இருந்து எதையும் பெற முடியாது.
தெய்வீகம் எங்கே இருக்கிறது?
இருமைத்தன்மையின் குறுகிய எல்லைகளை மனிதன் கடந்துபோகிறபோது இருமையின் போராட்டங்கள் அவனைவிட்டு அகல்கின்றன. அதன் பிறகுதான் தெய்வீகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அந்தச் சொல் மிகவும் ஆபாசப்படுத்தப் பட்டுவிட்டது. ஆனால், நீங்கள் தெய்வீகம் என்று எதைக் குறிக்கிறீர்கள்? அது எங்கே இருக்கிறது?
நான் தத்துவங்களையோ கோட்பாடுகளையே தருவதாக இல்லை. சிலவற்றை உணர்வதற்கு உதவுகிறேன். மனிதர்களின் பாலுணர்வு தன்மைக்கு உறுதுணை செய்வதற்கென்றே பல தத்துவங்கள் உருவாகியிருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். பாலுணர்வுக்கு உடலியல் போதுமே, தத்துவங்கள் எதற்கு? எனவே, நமக்குத் தத்துவங்கள் வேண்டாம். அது என்னவென்று பாருங்கள், வெறுமனே பாருங்கள். அதிலிருந்து எந்த தத்துவத்தையும் ஏற்படுத்தாதீர்கள்.
பாலுணர்வு சரியா? தவறா?
முதலாவதாக, மிக அடிப்படையானதும் எளிமையானதுமான ஒன்றை சரியென்றும் தவறென்னும் இனம் பிரிக்கிறீர்கள். உங்களுக்கு பாலுறவை தவறென்று சொல்வதற்கு ஒரு தத்துவமும் வேண்டும், அதைத் தொடரவும் வேண்டும். இந்த சிக்கல்களெல்லாம் அவசியமில்லை. அதன் எளிமையான தன்மைகளை நீங்கள் பார்ப்பீர்களானால், அது உங்கள் வாழ்வில் ஒரு சிறிய அம்சம். அதைப் பெரிதுபடுத்தினீர்களானால், அதுவே உங்கள் வாழ்வின் முக்கிய அம்சமாகிறது. தெய்வீகம் என்கிறீர்களே, அது எங்கே இருக்க முடியும்? எல்லா இடங்களிலும் இருப்பதுதான் தெய்வீகம். உங்களுக்குள் மட்டுமோ அல்லது எனக்குள் மட்டுமோ இருந்தால் அதற்குப் பெயர் தெய்வீகம் இல்லை. அப்படியிருக்குமேயானால் எதன் வழியாக அந்த தெய்வீகத்தை உங்கள் அனுபவத்திற்குள் கொண்டு வருவீர்கள்? இப்போதைக்கு அந்த அனுபவத்தைப் பெற உங்கள் ஐம்புலன்கள் தான் உங்களுக்கிருக்கும் வழி.
ஒப்பிடுவதற்கு ஒன்றுமில்லாத பட்சத்தில் ஐம்புலன்களால் எதையும் உணர இயலாது. இருள் என்ற ஒன்று இருப்பதால்தான் வெளிச்சம் என்பது உங்களுக்குத் தெரிகிறது. இல்லையென்றால் வெளிச்சத்தை நீங்கள் அனுபவிக்கமாட்டீர்கள். உங்கள் விழிகளின் அமைப்பு அத்தகையது. மௌனம் என்ற ஒன்று இருப்பதால்தான் ஓசையை உங்களால் உணரமுடிகிறது. இல்லையென்றால் உங்கள் செவிகளால் உள்வாங்கமுடியாது. எப்போதுமே ஏதோ ஒன்றோடு ஒப்பிட்டு உங்கள் புலன்கள் ஒவ்வொன்றையும் துண்டு துண்டாகவே உணர்கின்றன. எதையும் முழுமையாக உணர்வதில்லை.
அடுத்த வாரம்
தெய்வீகத்தை எப்படி தேடுவது? உடலுறவு என்பது இன்பத்திற்காகவா இல்லை பாதுகாப்பிற்காகவா? தெரிந்துகொள்வோம்...