சத்குரு:

 

மந்திரம் என்பது ஒரு ஒலி, ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது பதம்பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை. இன்றைக்கு, நவீன விஞ்ஞானம் ஒட்டுமொத்த படைப்பையும் சக்தியின் எதிரொலிகளாக, வெவ்வேறு நிலைகளிலான அதிர்வுகளாகக் காண்கிறது. எங்கே ஒரு அதிர்வு இருக்கிறதோ, அங்கே கட்டாயமாக ஒரு ஒலி இருக்கிறது. அதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு படைப்பும் ஒருவிதமான ஒலியாக அல்லது படைப்பு என்பது ஒலிகளின் கூட்டுக் கலவையாக இருக்கிறது – அதாவது படைப்பு எண்ணற்ற மந்திரங்களின் கலவையாக இருக்கிறது. இவற்றுள், ஒரு சில மந்திரங்கள் அல்லது ஒரு சில ஒலிகள், சாவிகள் போல் செயல்படக்கூடியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட விதமாக நீங்கள் அவற்றைப் பயன்படுத்தினால், வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைத் திறப்பதற்கும் உங்களுக்குள் உணர்வதற்கும் அவை ஒரு திறவுகோலாகின்றன.

 

மந்திரம் – படைப்புக்கு ஒரு திறவுகோலாக மாறுவது

மந்திரம்

 

மந்திரம் என்பது நீங்கள் உச்சரிக்கும் விஷயமல்ல. நீங்கள் அதுவாகவே மாறுவதற்கு முயற்சிக்கும் ஒன்று! ஏனென்றால், நீங்கள் திறவுகோலாக மாறினாலே தவிர, படைப்பு உங்களுக்காகத் திறக்காது. மந்திரமாக மாறுவது என்றால் நீங்கள் திறவுகோலாக மாறுவது. நீங்கள் திறவுகோலாக இருந்தால் மட்டுமே, உங்களால் பூட்டைத் திறக்க முடியும். இல்லையென்றால் வேறொருவர் உங்களுக்காகத் திறக்கவேண்டும். அவரின் வழிகாட்டுதலை நீங்கள் பின்தொடர வேண்டும்.

 

மந்திரம் என்பதற்கு விழிப்புணர்வு இல்லை, ஆனால் மந்திரம் மிகச்சரியான விதத்தில் சூழலை உருவாக்குகிறது. இந்த உடல்ரீதியான, மனோரீதியான கட்டமைப்புக்குள்ளும் மற்றும் சுற்றுப்புறத்திலும் கூட, ஒலியானது சரியான சூழலை அமைக்கும்.

 

மந்திரங்கள், அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான மிகச்சிறந்த படிநிலையாக இருக்கமுடியும். ஒற்றை மந்திரமே மக்களிடம் அந்த அளவுக்குப் பிரம்மாண்டமான விஷயங்களை செய்துவிட முடியும். ஏதோ ஒன்றை உருவாக்குவதில் மந்திரங்கள் ஆற்றல் வாய்ந்த சக்தியாக இருக்கமுடியும். ஆனால் அத்தகைய மந்திரங்கள், ஒலியாக இருக்கின்ற அத்தனை குறித்தும் முற்றிலுமான புரிதல் கொண்ட ஒரு மூலகர்த்தாவிடமிருந்து எழுந்தால் மட்டும்தான், இது நிகழும். “ஒலியாகிய அனைத்தும்” என்று நாம் கூறும்போது, நாம் ஒட்டுமொத்த படைப்பைப் பற்றி பேசுகிறோம். ஒரு மந்திரம் அந்த விதமான மூலத்திலிருந்து எழுந்து, ஆழ்ந்த புரிதலுடன் தூய்மையாக பரிமாறப்படும்போது, மந்திரங்கள் ஆற்றல்வாய்ந்த சக்தியாக இருக்கமுடியும்.

 

விழிப்புணர்வுடன் மந்திரங்களை அணுகுதல்

 

மந்திரங்களில் பல விதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மந்திரமும், உடலின் வெவ்வேறு பகுதியில், குறிப்பிட்ட விதமான ஒரு சக்தியைச் செயல்படுத்துகிறது. அதற்குத் தேவையான விழிப்புணர்வு இல்லாமல், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஒலியை எழுப்புவது மனதிற்கு மந்தத்தன்மையை ஏற்படுத்துகிறது. திரும்பத் திரும்ப எழுப்பப்படும் எந்த ஒலியும் உங்கள் மனதை எப்போதும் மந்தமடையச் செய்கிறது. ஆனால் முறையான விழிப்புணர்வோடும், அதன் தன்மை என்ன என்கிற துல்லியமான புரிதலோடும் உச்சரிக்கப்பட்டால், ஒரு மந்திரம் மிகவும் சக்திவாய்ந்த கருவியாக இருக்கமுடியும். ஒரு விஞ்ஞானம் என்ற வகையில் அது மிகவும் சக்திவாய்ந்த ஒரு பரிமாணம். ஆனால் அதற்குத் தேவையான அடிப்படை இல்லாமலும், தேவைப்படும் சூழலை உருவாக்காமலும் அது வழங்கப்பட்டால், பெரும் பாதிப்புகளை அது உண்டாக்க முடியும், ஏனெனில் அது தற்சார்புடைய விஞ்ஞானம். பொதுவாக வழக்கத்தில் இருக்கின்ற காயத்ரி மந்திரத்தை முறைப்படி உச்சரிக்காத ஒரே காரணத்தினால் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திக்கொண்ட மக்களை நாம் அறிந்திருக்கிறோம்.

 

மந்திரமும் சமஸ்கிருதமும் – என்ன தொடர்பு?

 

மந்திரங்கள் எப்போதும் சமஸ்கிருதத்தின் அடிப்படையிலிருந்து வருகின்றன என்பதுடன், சமஸ்கிருத மொழியின் அடிப்படையான அம்சங்கள், ஒலியை அதிகம் பிரதிபலிப்பதாக உள்ளன. ஆனால் அதைப் பலதரப்பட்ட மனிதர்கள் பேசும்போது, ஒவ்வொருவரும் அவரவருக்கே உரிய விதத்தில் கூறுகின்றனர். ஒரு மந்திரத்தை பெங்கால் இனத்தவர் கூறினால், அவர்கள் அதனை அவர்களுக்கே உரிய முறையில் கூறுவார்கள். அதே மந்திரத்தை தமிழ் மக்கள் கூறினால், அவர்கள் அதை வேறொரு விதத்தில் கூறுகிறார்கள். அதையே அமெரிக்கர்கள் கூறினால், முற்றிலும் வித்தியாசமான விதத்தில் அவர்கள் கூறுவார்கள். இதேபோல், வெவ்வேறு மொழி பேசும் வெவ்வேறு மக்களும், அவர்களுக்குப் பழக்கமான மொழிக்கு ஏற்றபடி கூறுவார்கள். முறைப்படியான பயிற்சி வழங்கப்பட்டாலொழிய, பல்வேறு மந்திரங்களை அவர்கள் சிதைத்துவிடக்கூடும். அப்படிப்பட்ட பயிற்சி பூரணத்துவம் மிக்கதாக இருக்கவேண்டியிருப்பதுடன், இப்போதெல்லாம் மக்களிடம் அந்த அளவுக்கான பொறுமையோ அல்லது அர்ப்பணிப்போ இருப்பதில்லை. ஏனென்றால், அதற்கு அளவற்ற கால அவகாசமும், ஈடுபாடும் தேவைப்படுகிறது.

 

நாத யோகம் – ஒலி மற்றும் வடிவத்திற்கு இடையிலான இணைப்பு

 

சமஸ்கிருத மொழியானது ஒரு சாதனமாக இருக்கிறது. அது தொடர்பு கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. மற்ற பெரும்பாலான மொழிகளும், நாம் ஏதோ ஒன்றைக் குறிக்கவேண்டியிருந்த காரணத்திற்காக உருவாக்கப்பட்டன. ஆரம்பகட்டத்தில் சொற்ப எண்ணிக்கையிலான வார்த்தைகளோடு மட்டும் மொழிகள் தொடங்கினாலும், பிறகு பல்வேறு வடிவங்களாக அவை பெருகிவிட்டன. ஆனால் சமஸ்கிருதம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மொழி ஏனெனில், எந்த ஒரு ஒலியையும் நீங்கள் ஒலி அலைமானி (ஆஸிலாஸ்கோப்) கருவியினுள் செலுத்தினால், ஒவ்வொரு ஒலியுடனும் இணைந்துள்ள அந்தக் குறிப்பிட்ட வடிவத்தை, கருவியானது வெளிப்படுத்துகிறது. அதே விதமாக, ஒவ்வொரு வடிவத்துக்கும் அதனுடன் தொடர்புடைய ஒலி ஒன்று இருக்கிறது. படைப்பிலுள்ள ஒவ்வொரு வடிவமும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் எதிரொலித்துக் கொண்டிருப்பதுடன், ஒரு குறிப்பிட்ட ஒலியையும் உருவாக்குகிறது.

நீங்கள் ஒரு ஒலியை உச்சரிக்கும்போது, ஒரு வடிவம் உருவாக்கப்படுகிறது. மிகச் சரியானதொரு வடிவத்தை உருவாக்குவதற்காக, ஒரு குறிப்பிட்ட முறையில் ஒலிகளை உபயோகப்படுத்துவதற்கென்றே ஒரு முழுமையான விஞ்ஞானம் உள்ளது. அதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சூழலில் ஒலிகளை உச்சரிப்பதனால், சக்திவாய்ந்த வடிவங்களை நாம் உருவாக்க முடியும். இதுவே நாதயோகம், அதாவது ஒலியின் யோகம் என்று அறியப்படுகிறது. ஒலியின் மீது உங்களுக்கு ஆளுமை இருந்தால், அதனோடு இணைந்துள்ள வடிவத்துடனும் உங்களுக்கு ஆளுமை உள்ளது.

இது எனது குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது: நான் யார் பேசுவதையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பேன். ஆரம்பத்தில், அவர்களது வார்த்தைகளை நான் கேட்டேன். பிறகு ஒலிகளை மட்டும் கேட்டேன். சிறிது காலம் கழித்து, அவர்களைச் சுற்றிலும் வினோதமான வடிவங்கள் மட்டும் நிகழ்வதை நான் கண்டேன். அது என் கவனத்தை ஈர்ப்பதாகவும், வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருந்ததால், வார்த்தைகளுக்கு கவனமே கொடுக்காமல் ஒற்றை வார்த்தையைக்கூட புரிந்துகொள்ளாத போதும், என்னால் அவர்களை வெறுமனே வெறித்துப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருக்க முடிந்தது.

வடிவமும், ஒலியும் தொடர்பு கொண்டுள்ள ஒரே மொழியாக சமஸ்கிருதம் இருக்கிறது. உதாரணமாக, தமிழில் “கருத்து” என்ற வார்த்தையில், “கருத்து” அல்லது “கறுத்து” என்ற இரண்டு பொருளில் குறிக்கப்பட்டாலும், ஒரே உச்சரிப்பை உடையது, எழுத்துக்கள் மட்டும் வெவ்வேறானவை. நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்பது அளவை அல்ல. இங்கே ஒலி என்பது அளவையாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குத் தொடர்புடைய ஒலியை நீங்கள் உணர்ந்தறியும்போது, அந்த வடிவத்திற்கு இந்த ஒலியை நீங்கள் பெயராகத் தருகிறீர்கள். இப்பொழுது ஒலியும், வடிவமும் இணைக்கப்படுகின்றது. நீங்கள் ஒலியை உச்சரித்தால், வடிவத்துடன் நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்கள் – மனதளவில் மட்டுமல்ல, படைப்பின் நிலையிலும், நீங்கள் அதற்குரிய வடிவத்துடன் தொடர்புகொள்கிறீர்கள். சமஸ்கிருதம், படைப்பின் அச்சுப் பிரதியைப் போன்றது. வடிவத்தில் என்ன இருக்கிறதோ, அதை நாம் ஒலியாக உருமாற்றினோம். காலப்போக்கில், பல மாறுபாடுகள் நிகழ்ந்துள்ளன. இன்றைக்கும் கூட அதற்குரிய சரியான வடிவத்தில் அதனை எப்படிப் பாதுகாப்பது என்பது ஒரு சவாலாகவே இருக்கிறது. ஏனென்றால் அதற்குத் தேவையான அறிவும் புரிதலும் விழிப்புணர்வும் பெருமளவு தொலைந்துவிட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

 

அர்த்தத்தைக் காட்டிலும் ஒலி மிக முக்கியமானது

 

சமஸ்கிருதம் கற்றுத்தரப்படும்போது, அதை ஏன் நெட்டுரு மனப்பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணம் அதுதான். அவர்கள் முடிவில்லாமல் மொழியை உச்சாடனம் செய்துகொண்டே இருக்கின்றனர். நீங்கள் அறிந்திருக்கிறீர்களா, இல்லையா என்பது ஒரு பொருட்டில்லை. ஒலிதான் முக்கியமே தவிர அர்த்தம் இல்லை. அர்த்தங்கள் உங்கள் மனதில் உருவாகின்றன. தொடர்பு கொள்வது ஒலி மற்றும் வடிவம்தான். நீங்கள் தொடர்பு கொள்கிறீர்களா இல்லையா? – அதுதான் கேள்வி. அதனால்தான் அது தமிழைத் தவிர, ஏறக்குறைய எல்லா இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளின் தாயாக உருவாகியுள்ளது. தமிழானது சமஸ்கிருதத்திலிருந்து பிறக்கவில்லை. அது தன்னிச்சையாக உருவாகியது. மற்ற எல்லா இந்திய மொழிகளும், பெரும்பாலும் எல்லா ஐரோப்பிய மொழிகளும் சமஸ்கிருதத்தை மூலமாகக்கொண்டுள்ளன.

 

மந்திரங்கள் மூலம் எப்படி பலனடைவது?

 

இசை என்பது இனிமையை உண்டாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒலிகளின் கோர்வை. இசையானது நுணுக்கமான கோர்வையாக இருந்தாலும், அது நீரோட்டம் போன்றதுதான். ஒரு மந்திரம் என்பது அந்த அளவுக்கு ரசிக்கக்கூடிய அழகுடையது அல்ல! ஆனால் அது மிக அதிகமான பலனளிக்கவல்லது. நீங்கள் இதனை முயற்சிசெய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்: வைராக்யா எனப்படும் குறுந்தகடு ஒன்றை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து மந்திரங்கள் உள்ளன: நிர்வாண ஷடகம், குரு பாதுகா ஸ்தோத்ரம், ப்ரஹ்மானந்த ஸ்வரூபா, அ-உ-ம் நமஹ் க்ஷிவாய மற்றும் ஷம்போ (“மங்களகரமான ஒன்று”). இது குறிப்பிட்ட ஒரு நோக்கத்தோடு வெளியிடப்பட்டது. குறுந்தகடில் உள்ள மந்திரங்கள் ஒவ்வொன்றையும் மீண்டும் மீண்டும் கவனித்துக் கேளுங்கள் – ஒவ்வொரு மந்திரமும் பத்து நிமிடங்களுக்கு நீளுகிறது. எந்த மந்திரம் உண்மையிலேயே உங்களை ஈர்க்கிறது என்று கண்டுபிடியுங்கள். “இந்த மந்திரம் எனக்கு விருப்பமானது. நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்? சரி, நானும் அதையே தேர்வு செய்கிறேன்.”- என்றெல்லாம் கலந்தாலோசித்துச் செய்வதல்ல இது. வெறுமனே கவனமாகப் பல முறைசெவிமடுத்துக் கேளுங்கள். அவற்றுள் ஒன்று உண்மையிலேயே உங்களை கவர்ந்திழுப்பதாக நீங்கள் உணரும்போது, அதையே பற்றிக் கொள்ளுங்கள். எல்லா நேரங்களிலும் அதைக் கேட்டபடி இருங்கள் – உங்களது வீட்டில், உங்களது காரில், உங்களது ஐபேட், ஐபோட், கைப்பேசி, எங்கெங்கும். ஒவ்வொரு மந்திரமும் ஒருமணி நேரத்திற்கு ஓடக்கூடியதும் உள்ளது. சிறிது காலத்திற்கு அதையே கேட்டவாறு இருங்கள்.

அதற்குப் பிறகு, அது உங்களின் ஒரு பகுதியாகவே மாறிவிடுவதுடன், உங்களுக்காக அது ஒரு குறிப்பிட்ட சூழலை உருவாக்கும். மந்திரம் என்பதற்கு விழிப்புணர்வு இல்லை, ஆனால் மந்திரம் மிகச்சரியான விதத்தில் சூழலை உருவாக்குகிறது. இந்த உடல்ரீதியான, மனோரீதியான கட்டமைப்புக்குள்ளும் மற்றும் சுற்றுப்புறத்திலும் கூட, ஒலியானது சரியான சூழலை அமைக்கும். இதை எவரும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

 

வைராக்யா மந்திரங்கள்

இந்த ஆல்பம், mp3 பதிவிறக்கமாகவும், இலவச மொபைல்-ஆப் வடிவிலும் கிடைக்கிறது.

 

நாத ப்ரஹ்மா – உலகையே ஒலியாக உணர்வது

“நாத” என்பது “ஒலி”. “ப்ரஹ்மா” என்றால் “தெய்வீகம்”, எல்லாமானது. அடிப்படையில், படைப்பில் மூன்று ஒலிகள் உள்ளன. எந்த ஒலியையும், இந்த மூன்று ஒலிகளிலிருந்து உருவாக்கிவிட முடியும். உங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி பற்றி ஏதேனும் தெரிந்திருந்தால், அதில் அடிப்படையான மூன்று வண்ணங்கள் மட்டும்தான் இருக்கின்றன என்பதை அறிந்திருப்பீர்கள். இந்த மூன்று வண்ணங்களைக் கொண்டு, அத்தனை வண்ணங்களையும் உருவாக்க முடியும். அதைப் போலவே, இந்த மூன்று அடிப்படை ஒலிகளைக் கொண்டு, எத்தனை ஒலிகளை வேண்டுமென்றாலும் உருவாக்க முடியும். எந்தவொரு ஒலிக்கும், நாவைப் பயன்படுத்துவது தேவைப்படுகிறது. மற்ற எல்லா ஒலிகளையும் உண்டாக்க பலவிதமாக இந்த மூன்று ஒலிகளைச் சேர்ப்பதற்குத்தான் நீங்கள் நாவைப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் வாயினால் பல இலட்சக்கணக்கான ஒலிகளை நீங்கள் உருவாக்கமுடியும். ஆனால் பேசும் திறனற்ற ஒருவரால், “ஆ” , “ஊ” ,”ம” என்று மட்டும்தான் கூற முடியும். தனது நாவை உபயோகிக்க முடியாத காரணத்தால், மற்ற எதையும் அவரால் கூற முடியாது.

 

அ-உ-ம் – அடிப்படையான ஒலி

 

இந்தப் பாடலுக்கு நீங்கள் உங்களையே அர்ப்பணித்தால், அதற்கென்று ஒருவிதமான சக்தி உள்ளது. நீங்கள் உண்மையிலேயே அதற்குள் முற்றிலும் மூழ்கிவிட்டால், ஒரு மனிதரைக் கரைக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

 

இந்த மூன்று ஒலிகளையும் ஒருங்கே நீங்கள் உச்சரித்தால், என்ன ஒலி எழுகிறது? ஆஉம். ஆஉம் என்பது ஏதோ ஒரு மதத்தின் சின்னம் அல்ல. அது படைப்பில் இருக்கின்ற அடிப்படையான ஒலி. சிவனின் மூன்று ஆஉம் உச்சரிப்பில் ஒட்டுமொத்தமாக ஒரு புதிய படைப்பையே அவரால் உருவாக்கிவிட முடியும் என்று கூறப்படுகிறது. இது நிதர்சனமான ஒன்று அல்ல, ஆனால் இது ஒரு உண்மை. நிதர்சனமான ஒன்றுக்கும், உண்மைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? நீங்கள் ஒரு பெண் என்றால், உங்களது தந்தையின் பங்களிப்பு உங்களிடம் இல்லை என்று பொருளாகுமா? உங்கள் தந்தை உங்களுக்குள் இல்லை என்பதா அதன் பொருள்? இல்லை. ஆகவே, நீங்கள் ஒரு ஆணாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ இருக்கிறீர்கள் என்பது நிதர்சனம். நீங்கள் இரண்டுமாக இருப்பதுதான் உண்மை. சிவன் எங்கேயோ அமர்ந்துகொண்டு, ஆஉம் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு இருக்கிறார் என்பதல்ல இது. முக்கியமான விஷயம் அதுவல்ல. சொல்லப்பட்டிருக்கின்ற விஷயம் என்னவென்றால், எல்லாமே ஒரு அதிர்வு நிலையில்தான் இங்கு இருந்து கொண்டிருக்கின்றது.

இதைப் பல விதங்களில் காணலாம். பல வருடங்களுக்கு முன்னால், ஒவ்வொரு வருடமும் நான் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தன்னந்தனியாக இமயமலைக்குப் பயணிப்பது வழக்கம். அப்போது கேதார்நாத் செல்ல நேர்ந்தது. கேதார் மிகவும் சக்தி வாய்ந்ததும், அற்புதமானதுமான ஒரு இடம். கேதாருக்குமேலே, காந்திசரோவர் என்ற ஒரு இடம் உள்ளது. அங்கு ஏறிச் செல்வதற்கு யுக்திகள் தேவைப்படுவதால், பொதுவாக மக்கள் செல்வதில்லை. நான் காந்திசரோவர் வரை நடந்துசென்று, அங்கிருந்த ஒரு பாறையின் மீது அமர்ந்தேன்.

இதை வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். ஆனால், சிறிது நேரம் கழித்து, என்னுடைய அனுபவத்தில் எல்லாமே ஒலியாக மாறிவிட்டது. எனது உடல், அந்த மலை, எனக்கு முன்னால் இருந்த ஏரி என்று ஒவ்வொன்றும் ஒலியாக மாறிவிட்டிருந்தது. அது ஒலிவடிவமாக மாறியிருந்ததுடன், முற்றிலும் ஒரு வித்தியாசமான விதத்தில் எனக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது. என்னுடைய வாய் மூடியிருந்தது – அதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன் – ஆனால் என்னுடைய குரல் சத்தமாக, ஒலிபெருக்கியில் கேட்பதைப் போல, ஒரு பாடலைப் பாடியவாறு இருந்ததுடன், அது சமஸ்கிருதத்தில் இருந்தது.

நாத ப்ரஹ்மா விஷ்வஸ்வரூபா

நாத ஹி சகல ஜீவரூபா

நாத ஹி கர்மா நாத ஹி தர்மா

நாத ஹி பந்தன நாத ஹி முக்தி

நாத ஹி ஷங்கர நாத ஹி ஷக்தி

நாதம் நாதம் சர்வம் நாதம்

நாதம் நாதம் நாதம் நாதம்

 

மொழிபெயர்ப்பு: ஒலி பிரம்மனாக, பிரபஞ்சத்தின் வெளிப்பாடாக உள்ளது, ஒலி எல்லா உயிர்களின் உருவிலும் தன்னையே வெளிப்படுத்துகிறது, ஒலி பிணைப்பாக இருக்கிறது, ஒலி விடுதலைக்கான வழியாக இருக்கிறது, இணைப்பதும் ஒலியே, விடுவிப்பதும் ஒலியே, ஒலி அனைத்தையும் வழங்குவதாக இருக்கிறது, ஒலி அனைத்தையும் இயக்கும் சக்தியாக இருக்கிறது, ஒலியே அனைத்துமாக இருக்கிறது.

இந்தப் பாடலுக்கு நீங்கள் உங்களையே அர்ப்பணித்தால், அதற்கென்று ஒருவிதமான சக்தி உள்ளது. நீங்கள் உண்மையிலேயே அதற்குள் முற்றிலும் மூழ்கிவிட்டால், ஒரு மனிதரைக் கரைக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

 

அ-உ-ம் உச்சாடனத்தின் பலன்கள்

aum chanting

 

சில ஆண்டுகளுக்கு முன் டில்லியிலுள்ள லேடி இர்வின் காலேஜில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ஈஷாவில் பயிற்றுவிக்கப்படும் ஆஉம்கார உச்சாடனம் செய்வதால், விளையாட்டு வீரர்களுக்கு உடல் ஈரப்பத நிலை குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு விளையாடும்பொழுது தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை எவ்வளவுதான் எடுத்துச்சொன்னாலும், பல வீரர்கள் விளையாட்டின்போது உடல் நீர்க்குறைபாடால் அவதிப்பட்டார்கள் என்று திருமதி.அகர்வால் அவர்களும் டாகடர்.லால் அவர்களும் கண்டுபிடித்தார்கள். இதனால் அவர்களது விளையாட்டிலும் உடல் திறனிலும் தொய்வு ஏற்படுவது மட்டுமல்லாமல், நீண்டகால ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றது.

டாக்டர்.லால் கூறுகையில், “விளையாட்டு வீர்ர்களுக்கு உடலின் நீர்த்தேவை பற்றி ஏற்கனவே பாடம் நடத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு அனுபவப்பூர்வமாக உணரும் விதமான பயிற்சியும் தகவல்களும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் புரிதலை தெரிந்துகொள்ள அடிப்படையான விஷயங்கள் குறித்து அவர்களை சோதித்துப் பார்த்தபோது, பெரும்பாலானோர் 100% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றார்கள். அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்ற புரிதல் இருந்தது, ஆனால் அதை அவர்கள் செயல்படுத்தவில்லை. இந்த புரிதலுக்கும், அதை நடைமுறையாக்குவதற்கும் ஏதோவொரு இணைப்பு தேவையாக இருந்தது. உடலின் தாகத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்படக்கூடிய விழிப்புணர்வு தேவையாக இருந்தது.” அதற்கு ஆஉம்-கார உச்சாடனம் ஒரு பதிலாக அமைந்ததா?

 

புரிதலுக்கும் நடத்தைக்கும் இடையிலான தூரத்தைக் கடக்கிறது

 

ஆஉம்கார உச்சாடனத்தினால் கிடைக்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பலன்களைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. ஆனால் திருமதி. அகர்வால் மற்றும் டாக்டர்.லால் செய்துள்ள ஆராய்ச்சி, ஈஷாவில் பரிமாறப்படும் ஆஉம்கார உச்சாடனம் மற்ற எல்லாவற்றையும் விட எந்த விதத்தில் வித்தியாசமானது, தனித்தன்மை வாய்ந்தது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. “சமீபத்திய ஓர் இந்திய ஆராய்ச்சி,ஓம் என்பது ஒரெழுத்து என்றது. ஆனால் ஈஷா யோக மையம் அதை ஆஉம் என்று மூன்றெழுத்தாக வழங்குகிறது” என்று திருமதி அகர்வால் கூறுகிறார். ஷாம்பவி மஹாமுத்ராவின் ஆக்கபூர்வமான விளைவுகளைப் பற்றி பேசுகையில் அவர் தொடர்கிறார், “ஆஉம் உச்சாடனத்தை ஒரு பகுதியாக கொண்ட யோகப் பயிற்சிகள், மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது என்று சமீப காலமாக செய்திகள் கூறுகின்றன”. இதனாலேயே உடல் ஈரப்பதம் குறித்த தங்கள் ஆய்விகள்,புரிதலுக்கும் நடத்தைக்கும் இடையிலான தூரத்தைக் கடக்க ஆராய்ச்சியாளர்கள் ஆஉம்கார தியானத்தை ஒரு கருவியாக தேர்ந்தெடுத்தனர்.

பரிசோதனை ஆய்வு காலகட்டத்தில், 30 விளையாட்டு வீரர்கள் குறிப்பான முறை எதுவுமின்றி இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.இதில் ஒன்று கட்டுப்பாட்டுக் குழு, இவர்களுக்கு போதுமான தண்ணீர் பருகுவதன் அவசியத்தைப் பற்றி ஏற்கனவே கொடுக்கப்பட்ட திட்டமிட்ட பாடங்கள் நடத்தப்பட்டன.மற்றொன்று சோதனைக் குழு, இவர்களுக்கு திட்டமிக்க பாடங்களோடு, 21 நிமிட ஆஉம்கார உச்சாடனம் 21 நாட்களுக்கு கொடுக்கப்பட்டது. அந்த 21 நாட்களின் முடிவில், விளையாட்டுக்குப் பிறகு செய்த சோதனையில், ஆஉம்கார தியானப்பயிற்சி செய்த சோதனை குழுவிலுள்ள வீரர்கள், மற்ற குழுவினருடன் ஒப்பிடும்போது, குறிப்பிடத்தக்க அளவு ஆரோக்கியமான நிலையில் உடலின் ஈரப்பதம் இருந்தது தெரிந்தது. இது, விளையாட்டில் அவர்களின் செயல்திறன் மேம்பட்டதை, இருதய துடிப்பு மற்றும் உடல் சுறுசுறுப்பை சோதித்தபோதும் வெளிப்பட்டது. இந்த விளையாட்டு வீரர்கள் முன்பைவிட ஆனந்தமாகவும், அமைதியாகவும், ஒருமுனைபோடும் இருப்பதாககூறினார்கள்.

“பல விளையாட்டு வீரர்கள், விளையாட்டில் செயல்திறன் மேம்பட்டது தவிர, மற்ற பலபலன்களையும் உணர்வதாக என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு விளையாட்டு வீரர், வீட்டிலுள்ளவர்களுடனான உறவு மேம்பட்டுள்ளது என்று என்னிடம் பகிர்ந்துகொண்டார். அவர்கள் எல்லோருமே இந்த ஆராய்ச்சியினால் மிகவும் பண்பட்டவர்களாக தெரிந்தார்கள். இந்த ஆராய்ச்சி பல சாத்தியங்களைத் திறந்துள்ளது. ஈஷா பரிமாறும் தியானங்களினால் ஏற்படும் பயன்களைப் பற்றி மேலும் இரண்டு ஆராய்ச்சிகளுக்கு திட்டமிட்டு இருக்கிறோம்.” என்று டாக்டர்.லால் கூறினார்.

குறிப்பு: “ஞானத்தின் பிரம்மாண்டம்” புத்தகத்தில் ஒலி மற்றும் மந்திரங்களின் சக்தி குறித்து சத்குரு தமது ஆழ்ந்த புரிதலை இன்னும் விரிவாக நம்முடன் பகிர்ந்துள்ளார். இந்தப் புத்தகத்தை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.