நூலினால் ஆன சூத்திரங்கள் கட்டுவது எதற்காக?
நமது கலாச்சாரத்தில் சக்தியூட்டப்பட்ட மங்கள நூல்களை நமது உடல்களில் மணிக்கட்டு, கழுத்து என பல்வேறு இடங்களில் பயன்படுத்துகிறோம். இதன் பின்னாலுள்ள சூட்சும விஷயங்கள் பற்றி சத்குரு இதில் விரிவாக எடுத்துரைக்கிறார். ஜடப்பொருளுக்கு சக்தியூட்டுவதில் உள்ள தொழிற்நுட்பம் பற்றி அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
நமது கலாச்சாரத்தில் சக்தியூட்டப்பட்ட மங்கள நூல்களை நமது உடல்களில் மணிக்கட்டு, கழுத்து என பல்வேறு இடங்களில் பயன்படுத்துகிறோம். இதன் பின்னாலுள்ள சூட்சும விஷயங்கள் பற்றி சத்குரு இதில் விரிவாக எடுத்துரைக்கிறார். ஜடப்பொருளுக்கு சக்தியூட்டுவதில் உள்ள தொழிற்நுட்பம் பற்றி அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
சத்குரு:
சூத்திரம் என்றால் நூல் என்று அர்த்தம். கணித சூத்திரங்கள் எனும் அர்த்தத்திலும் அவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஒரு செம்புத் தட்டினை நான் என் கையில் வைத்திருந்த பிறகு நீங்கள் அதனைத் தொட்டுப் பாருங்கள், ஒருவர் நுண்ணுணர்ச்சியுடன் இருக்கும் பட்சத்தில், அந்தத் தட்டு முழுமையாய் வேறொரு விதத்தில் அதிர்வுருவதை உணர முடியும். ஆனால், உருவாக்கப்படும் சக்தியை தக்கவைத்துக் கொள்ளும் திறன் அந்தத் தட்டிற்கு கிடையாது. அந்தத் தட்டிற்கு குறிப்பிட்ட ஒரு வடிவம் கொடுத்து, அதன்பின் சக்தியூட்டினால், சக்தியை நெடுநாளைக்குத் தக்கவைத்துக் கொள்ளும் திறன் அதற்கு உண்டாகும். ஒரு வடிவமும், அது உருவாக்கப்படும் பொருளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இந்தப் படைப்பின் அடிப்படை டிசைனை (அமைப்பினை) நவீன அறிவியல் உணரத் துவங்கியுள்ளது. ஓடும் நீரிலும், பாலைவன மணலில் ஏற்படும் உருவமைப்புகளையும் ஒரு உதராணத்திற்காக ஒப்பிட்டு பார்த்தால், இரண்டிற்கும் ஒற்றுமை இருப்பதைக் காணமுடியும். மேலும், ஒரு நதி ஓடும் விதமும், மனித உடல் சிருஷ்டிக்கும் விதமும் நேரடி தொடர்புடையவையாக உள்ளன. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அம்சங்களின் உருவமைப்பின் அடிப்படை ஒன்றுதான். அதன் சிக்கலான கட்டமைப்பும், நுணுக்கமும் நுட்பமும் மட்டுமே வேறுபடுகின்றன. ஒரு சில வடிவங்கள், சக்தியினை நீண்டநேரம் பிடித்து வைத்துக்கொள்ளும் திறனுடையவையாக உள்ளன. இதன்படி, ஒரு நீள்வட்ட வடிவம் சிறந்த அமைப்புடையதாய் உள்ளது. மிகச் சரியான ஒரு நீள்வட்ட வடிவத்தால் (ellipsoid) ஐந்தாயிரம், பத்தாயிரம் வருடங்களுக்குக்கூட சக்தியை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
Subscribe
சக்தியை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்கள்
நம்மால் பல பொருட்களுக்கு சக்தியூட்ட முடியும் - உதாரணத்திற்கு, பட்டிற்கு சக்தியூட்டலாம். லிங்கபைரவி தேவிக்கு சாத்தப்பட்ட பட்டுடையை நீங்கள் உடுத்தினால் பரவசமான நிலையை அடைவதற்கான சாத்தியம் மிக அதிகம். ஏனெனில், அந்தப் பட்டு தேவியின் மீது சில காலம் இருக்கிறது. பட்டு, மூலப் பருத்தி, செம்பு ஆகியவை இப்பணிக்கு சிறந்தது. சக்தியை உறிஞ்சி வைத்துக் கொள்வதில் பாதரசம் சிறந்தது. ஆனால், பாதரசத்தை கையாள ஒருவருக்கு போதிய ஆன்மீகப் பயிற்சிகள் அவசியம்.
பரவலாக கிடைப்பதாலும், விலை மலிவாக இருப்பதாலும் பஞ்சு நூலினை சக்தியை தக்கவைப்பதற்காக பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அது சிறப்பாக வேலை செய்யவும் செய்கிறது. அதன் உறிஞ்சும் தன்மையை மேம்படுத்த மஞ்சள் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளின் பரிபூரண மதிப்பினையும், அது செய்யக்கூடிய அதிசயங்களையும் நவீன சமூகம் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. ஜீரண மண்டலத்தில் இருக்கக்கூடிய சிறு தொற்றுகளை நீக்கவல்லது. சிறு அளவு மஞ்சளும் நெய்யும் சேர்த்து சருமத்தில் பயன்படுத்தும்போது தோல் பொலிவு பெறுகிறது. வெறும் அழகு சார்ந்ததாய் இந்தப் பொலிவு இருப்பதில்லை. மஞ்சளால் நம் ஒளிவட்டத்தை (ஆரா) சுத்திகரிக்க முடியும்.
உள்ளும் புறமும் - எதிர்ப்பு சக்தியைக் கூட்டும்
உடலது எதிர்ப்பு சக்தி உள்ளிருந்து மட்டும் செயல்படுவதில்லை. உங்களைச் சுற்றி நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் சக்தியும் அதனை முடிவுசெய்கிறது. உங்களைச் சுற்றி ஒருவிதமான அதிர்வினை மஞ்சளால் உருவாக்க இயலும். இதன்மூலம், உங்கள் ஒளிவட்டத்தின் இயல்பு மாற்றமடைகிறது, ஒளிர்கிறது, எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. மஞ்சளின் மற்றொரு குணம் - அதன்மூலம் நம்மால் சக்தியை சுலபமாய் கடத்த முடியும். ஒரு நூலின், சக்தியை உறிஞ்சும் திறனை மஞ்சள் மேம்படுத்துகிறது. ஒரு கயிற்றினை சூத்திரமாக மாற்றுவது மஞ்சள்தான்.
பணிக்கு ஏற்ப மாறுபடும் தயாரிப்பு முறைகள்
நாம் செய்யும் பணிக்கு உகந்தவாறு வெவ்வேறு வகையான சூத்திரங்களை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். எளிமையானதாய், சிக்கலானதாய், நுட்பமானதாய் அது அமையலாம். அது செயல்பட வேண்டிய முறையினை கருத்தில்கொண்டு தயாரிப்பு முறையினை நாம் நிர்ணயிக்கலாம். திருமாங்கல்யத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இரு உயிர்களை ஓருயிராய் பிணைக்கும் ஒரு செயலினை அது செய்கிறது.
மாதத்திற்கு ஒருமுறை, தங்கள் திருமாங்கல்யத்தில் பெண்கள் மஞ்சள் பூசிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட பொருளினைக் கொண்டு, அதனை தயாரிக்க தெரிந்த ஒருவரால் அந்த மாங்கல்யம் முன்காலத்தில் உருவாக்கப்பட்டது. இன்று புனித நூலினை அணிந்து கொள்வதற்கு பதிலாக, தடிமனான தங்கச் சங்கிலியை அணிந்து கொள்கிறார்கள். எது அறிவியல் முறைப்படி, அர்த்தம் உணர்ந்து உருவாக்கப்பட்டதோ, அது வெறும் அடையாளச் சின்னமாய் மாறியது. எது அடையாளச் சின்னமாய் இருந்ததோ அது இன்று அபத்தமான மடமையாய் மாறிவிட்டிருக்கிறது.
வேறு சில பணிகளுக்கு, தேவைக்கேற்ப செயல்படும் விதத்தில் உருவாக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஈஷா யோக மையத்திலுள்ள ஆதியோகி ஆலயத்தில் உள்ள ஆதியோகி லிங்கத்தில் ஒரு நூல் சுற்றப்பட்டுள்ளது. லிங்கபைரவி தேவி மீதிருந்து நூலினை, பிரதிஷ்டை முடிந்ததும் நாம் அகற்றிவிட்டோம். ஆனால், தியானலிங்கத்தில் உள்ள வனஸ்ரீ சிலை மீது எப்போதுமே ஒரு சூத்திரம் கட்டப்பட்டிருக்கிறது. அது குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றப்படுகிறது. ஒவ்வொரு சூத்திரமும் வித்தியாசமாய் உருவாக்கப்படுகிறது. இதுபோன்ற சூத்திரங்களை உருவாக்க, பொதுவாக, 30, 40 நாட்கள் எடுக்கும்.
சூத்திரம் என்பது ஒரு ஊடகமாய் செயல்படுகிறது. வேறெதோ பொருளை நாம் பயன்படுத்தலாம், ஆனால், ஒரு நூல் பயன்படுத்த சுலபமாய் உள்ளது. யாரோ ஒருவர் 6 மாதம் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தால் அவருக்கு ஒரு குறிப்பிட்ட விதமான சூத்திரத்தினை தயாரித்துக் கொடுப்போம். யாரோ ஒருவரை மூன்று வருட சாதனாவில் நாம் ஈடுபடுத்தினால், அவருக்கு மற்றொரு விதமான சூத்திரத்தினை தயாரித்து வழங்குவோம். ஒரு கயிற்றுக்கு 3 வருட ஆயுள் இல்லாத பட்சத்தில், மற்றொரு பொருளினைப் பயன்படுத்துவோம்.
உதாரணமாக, நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா இல்லையா என்பதை நவீன அறிவியலால் ஆதாரத்துடன் சொல்ல முடியாது. ஒருசில காரணிகளை அவர்கள் கணக்கிற்காக வைத்திருக்கிறார்கள். இதயத்துடிப்பு, சுவாசம், மூளைச் செயல்பாடு இவற்றை சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், உயிரின் ஆதார சுருதி செயல்படுகிறதா என்பதை அவர்களால் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. சில ஆண்டுகளுக்கு முன், "நான் இறந்துவிட்டேன்," என்று மருத்துவர்கள் சொன்னார்கள். நான் உயிரோட்டத்துடன், நலமாகத்தான் இருந்தேன். இருந்தும், நான் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். என்னைப் பார்த்துவிட்டு, ஒருவேளை என் மூளை செயல் இழந்திருக்கலாம் என்று தன் கருத்தினை மாற்றிக் கொண்டார்கள் போல. உண்மை என்னவெனில், நான் சம்மணமிட்டு அமர்ந்து, பரிபூரண ஒன்றுமில்லா தன்மையில் ஆழ்ந்திருந்தேன்.
நாம் காண்பவை நம் உயிர்தன்மை அல்ல
உடல்தன்மை சார்ந்த ஒருசில விஷயங்களை நாம் அளவுறுக்களாக நிர்ணயித்துள்ளோம். இதனால், இந்தப் படைப்பு முழுவதையும் நாம் உணர்ந்த உடல்தன்மைக்குள் மட்டுமே புகுத்திப் பார்க்கிறோம். யோகப் பாரம்பரியத்தில், உடல்தன்மையை அடிப்படை அம்சமாக மட்டுமே பார்க்கிறோம். அதுவே படைப்பின் இயல்பும்கூட. உங்கள் உடல் ஒரு இயங்குதளம் மட்டுமே. அதுவே உண்மையான விஷயமல்ல. அப்படித்தான் இந்த முழு பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திரம் உடல்போல ஒரு இயங்குதளம். அதில் நாம் செலுத்தும் சக்தி என்பது வேறு விஷயம்.
சிவன் வீரபத்திரனை உருவாக்கியது எப்படி?
சிவன் சூத்திரத்தினை பயன்படுத்தி ஒரு உயிரை உருவாக்கினார் என்று யோகப் பாரம்பரியத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. சதியின் தந்தையான தட்சன் ஒரு யாகம் செய்தபோது சிவனை அவமதித்தார். அந்த அவமானத்தை தாங்க இயலாத சிவனின் மனைவி சதி யாகத் தீயில் குதித்தாள். தன் மனைவிக்கு ஏற்பட்ட இழுக்கினை அறிந்த சிவன், சீற்றத்தில் தன் ஜடாமுடியிலிருந்து ஒரு மயிர்காலினை உருவி அதனை ஒரு பாறையின் மீது ஓங்கி அடித்தார். அதிலிருந்து, மாயவீரன் வீரபத்திரன் உருவானார் என்று அந்தக் கதை சொல்கிறது.
சிவன் வீரபத்திரனை விடுவித்தார். யாகத்தில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை வீரபத்திரன் கொன்று குவித்தார். சிவன் சொன்னார், "என் மனைவி தீயில் குதித்தபோது அவரைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றுகூட யாருக்கும் தோன்றவில்லை. வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அனைவரும் இறக்க வேண்டும்," என்றார். சதியின் தந்தையை வீரபத்திரன் கழுவிலேற்றினார்.
வெவ்வேறு வகையான சூத்திரங்கள்
சிவன் தன் தலைமுடியினை பயன்படுத்தி வீரபத்திரனை உருவாக்கினார். ஒரு சூத்திரம் இயற்கையானதாய், ஈரமாய், மஞ்சளுடன் இருந்தால், சில நொடிகளில் அதனை உங்கள் உடலின் அங்கத்தைப் போல் மாற்றிவிட முடியும். சில விஷயங்களை ஒரு சூத்திரம் ஒன்றிணைக்கிறது. பதஞ்சலி எழுதிய யோக சூத்திரங்கள் பிணைக்கும் கயிறாகவே செயல்படுகிறது. அந்தக் கயிற்றினை பயன்படுத்துபவரைப் பொறுத்து, அதில் மணிகளை கோர்க்கலாம், முத்து, வைரம், மண் உருண்டைகள் என எதை வேண்டுமானாலும் கோர்க்கலாம். ஒருவரது உயிர் சக்தியையே அதில் கோர்த்திடலாம். ஒரு நூலில் பல விஷயங்களை கோர்க்க முடியும்.
உடலின் எப்பகுதியில் அணிகிறோம் என்பதைப் பொறுத்து அந்த சூத்திரத்தினை நாம் தயாரிக்கலாம். இடுப்பு, கழுத்து, கை என நாம் அணியும் இடத்தைப் பொறுத்து தயாரிப்பு முறை வேறுபடும், நேர்த்தி கூடும். கைகளில் அணியப்படும் சூத்திரம் மிக எளிமையானது. அதன் நோக்கம் மிகக் குறுகியது. அதன் பணி விஸ்தாரமானதாய் இருந்தால், இன்னும் நுட்பமான தயாரிப்பு முறைகளில் ஈடுபடத் தேவையிருக்கும்.
ஜடப் பொருட்களின் அறிவுத்திறன்
ஜடப்பொருள் என்று நாம் குறிப்பிடும் பொருட்கள்கூட ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்படுகிறது. வெவ்வேறு நிலங்களில் விதை விதைத்துப் பாருங்கள். அந்த மண்ணின் தரம், சுற்றுச்சூழல் இன்னும் பல காரணிகளைப் பொறுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக வளர்வதைக் காண்பீர்கள். மண் ஒரு ஜடப்பொருளாய் இருக்கலாம், ஆனால், அதற்கும் தனிப்பட்ட குணங்கள் உண்டு. அதற்கு எப்படித் தேவையோ அதன்படி அது செயல்படுகிறது.
ஜடப்பொருட்களில் முற்றிலும் வித்தியாசமான அறிவுத்திறன் இருக்கிறது. அறிவுத்திறனை புத்திசாலித்தனம், சிந்தனைத் திறனுடன் மட்டுமே நவீன அறிவியல் ஒப்பிடுகிறது. ஆனால், சிந்தனைத் திறனை வைத்துக் கொண்டு பல விஷயங்களை உங்களால் புரிந்துகொள்ள இயலாது. இயற்கையாக உங்கள் உடலில் நடைபெறும் செயல்கள் உங்கள் சிந்தனை திறனைத் தாண்டியதாய் உள்ளது. ஆனால், அந்தச் செயல்பாட்டில் உள்ள அறிவுத்திறனை நாம் அங்கீகரிப்பதில்லை. ஒரு சில வகையான சிந்தனைத் திறனை மட்டுமே நாம் அறிவுத்திறன் என நினைக்கிறோம். சூத்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட அறிவுத்திறனுடன், ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக செயல்படுகிறது.