நேர்மறையாக சிந்திப்பது என்றால் என்ன?

சத்குரு: உலகத்தில் மிக அதிகமான மக்கள் "நேர்மறையாக சிந்திப்பது" பற்றி எப்போதுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. நேர்மறையாக சிந்திப்பது என்று நீங்கள் கூறும்போது, ஒரு வகையில் நீங்கள் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் வாழ்வின் ஒரு பக்கத்தை மட்டும் காண விரும்பும் நிலையில் மறுபக்கத்தைத் தவறவிடுகிறீர்கள். நீங்கள் மறுபக்கத்தைப் புறக்கணிக்கலாம், ஆனால் அது உங்களைப் புறக்கணிக்காது. உலகத்தில் இருக்கும் எதிர்மறையான விஷயங்களைப் பற்றி நீங்கள் சிந்திக்காவிட்டால், நீங்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாசம் செய்வீர்கள் என்பதுடன், வாழ்க்கை அதற்காக உங்களுக்கு பாடம் புகட்டும். தற்போது வானில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தால், அவற்றை நீங்கள் புறக்கணித்துவிடலாம், ஆனால் அவை உங்களைப் புறக்கணிக்கப் போவதில்லை. மழையாக அது பொழியும்போது, அது பொழிகிறது. நீங்கள் அதில் நனையும்போது, நனைகிறீர்கள்.

நீங்கள் எதைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்தாலும் அது உங்கள் விழிப்புணர்வின் அடித்தளமாகவே மாறிவிடுகிறது.

நீங்கள் அதைப் புறக்கணித்துவிட்டு எல்லாம் நன்றாக நடக்கப்போகிறது என்றே எண்ணிக் கொள்ளலாம் - அது மன ரீதியாக மற்றும் சமூக ரீதியாக ஏற்புடையதாக இருக்கலாம், ஆனால் படைப்பியல் ரீதியாக அதற்கு எந்த மதிப்பீடும் இல்லை. அது ஆறுதலாக மட்டும் இருக்கும். யதார்த்த நிலையிலிருந்து, யதார்த்தமில்லாத நிலைக்கு நகர்வதன் மூலம், உங்களையே நீங்கள் ஆற்றுப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறீர்கள், ஏனென்றால் யதார்த்தத்தை உங்களால் கையாளமுடியாது என்று உங்களுக்குள் எங்கோ நீங்கள் நம்புகிறீர்கள். ஒருவேளை உங்களால் கையாளமுடியாமல் இருக்கலாம். எனவே நீங்கள் நேர்மறையான சிந்தனையுடன் இணக்கமாக இருக்கிறீர்கள். எதிர்மறையை விலக்கிவிட்டு, நேர்மறையை மட்டும் சிந்திக்க விரும்புகிறீர்கள். அல்லது வேறுவிதமாகக் கூறினால், நீங்கள் எதிர்மறையைத் தவிர்க்க முயற்சிக்கிறீர்கள்.

நீங்கள் எதைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்தாலும் அது உங்கள் விழிப்புணர்வின் அடித்தளமாகவே மாறிவிடுகிறது. நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதைவிட, எதைத் தவிர்க்க வேண்டும் என்று முயற்சிக்கிறீர்களோ அது உங்களுக்குள் எப்போதும் வலிமை வாய்ந்ததாக மாறிவிடும். வாழ்வின் ஒரு அம்சத்தைத் தவிர்த்துவிட்டு, மற்றொரு அம்சத்தோடு வாழ்வதற்கு முயற்சிப்பவர் தனக்குத்தானே துன்பத்தைத்தான் தேடிக்கொள்வார்.

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இருமை இயல்பு

ஒட்டுமொத்த படைப்பும் இரண்டு இருமைகளுக்கு நடுவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எதை நேர்மறை, எதிர்மறை என்று குறிப்பிடுகிறீர்களோ, அது: ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை, ஒளி மற்றும் இருள், பகல் மற்றும் இரவு என்றிருக்கிறது. இது இல்லாமல் வாழ்வு எவ்வாறு நிகழும்? இது எவ்வாறெனில், எனக்கு மரணம் வேண்டாம், வாழ்க்கை மட்டுமே வேண்டும் என்று சொல்வதைப் போன்றது – அப்படிப்பட்ட விஷயமே இல்லை. மரணம் இருப்பதனால்தான் வாழ்வும் இருக்கிறது. இருள் இருப்பதால்தான் ஒளி இருக்கிறது. அது என்னவென்றால், எதிர்மறை உங்களை வெற்றி கொள்வதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது. அவை இரண்டும் இருக்கும் நிலையில் அவை இரண்டையும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்று பாருங்கள்.

இந்த வாழ்வைப் பற்றி நாம் அக்கறையுடன் இருக்கிறோம் என்றால், நாம் உண்மையிலேயே எங்கு இருக்கிறோம் என்பதில் நாம் நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியமானது.

வாழ்வை அது எப்படி இருக்கிறதோ அந்த விதமாகவே நீங்கள் பார்த்தால், அது எப்போதும் சம அடிப்படையில் நேர்மறை மற்றும் எதிர்மறையாக இருக்கிறது. அதை உள்ளபடியே நீங்கள் நோக்கினால் நேர்மறையோ அல்லது எதிர்மறையோ உங்களை எதுவும் பாதிக்காது. அவைகள் சமமாக இருக்கும் காரணத்தினால்தான், அனைத்தும் எந்த விதமாக நிகழவேண்டுமோ அந்த விதத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை இரண்டையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, உங்களால் இயன்றதை உருவாக்க வேண்டும். மின்சாரத்தில் நேர்மின்னோட்டம் மற்றும் எதிர்மின்னோட்டம் இருக்கும் காரணத்தினால்தான், ஒரு மின்சார விளக்கு எரிகிறது. ஒரு நேர்மறை விளைவு நடக்கும்போது நாம் எதிர்மறையைப் பொருட்படுத்துவதில்லை. ஒரு ஆணும், பெண்ணும் இருக்கிறார்கள் என்றால், அவர்களிடமிருந்து ஆனந்தம் வெளிப்பட்டால் அந்த ஆண் அல்லது பெண்ணை நாம் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் அதிகமான எதிர்மறை விளைவுகளை உருவாக்க தொடங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது அவர்களை ஒரு பிரச்சனையாக நாம் நினைக்கிறோம். பிரச்சனையாக இருப்பது நேர்மறையும், எதிர்மறையும் அல்ல. நீங்கள் வெளிப்படுத்தும் இறுதி விளைவே பிரச்சனையாக இருக்கிறது.

நேர்மறையோ அல்லது எதிர்மறையோ நீங்கள் இரண்டையும் எதிர்க்க வேண்டியதில்லை. உங்கள் திறனைப் பொருத்து, அதிலிருந்து ஒரு நேர்மறையான விளைவைத்தான் நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த வாழ்வைப் பற்றி நாம் அக்கறையுடன் இருக்கிறோம் என்றால், நாம் உண்மையிலேயே எங்கு இருக்கிறோம் என்பதில் நாம் நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் நம்மால் ஒரு பயணம் செய்யமுடியும். நேர்மறையாக சிந்திப்பது மக்களுக்கான பல சாத்தியங்களை பாழ்படுத்திவிட்டது. நேர்மறை எண்ணம் கொண்டவர் எழுதிய ஒரு கவிதை இதோ:

விண்ணில் பறந்தது ஒரு சின்னப் பறவை
கண்ணில் விழுந்தது அதன் எச்சம் - ஆனால்
என்னால் வருந்தவும் முடியாது,
கண்ணீர் வடிக்கவும் முடியாது,
ஏனெனில் நான் ஒரு நேர்மறை எண்ணத்தினன்.
நன்றி கூறி கடவுளிடம் வேண்டினேன்
வானில் எருமைகள் பறக்காதிருப்பதற்கு.

வாழ்வை அது உள்ளபடியே பார்ப்பதற்கு நீங்கள் விரும்பாவிட்டால், வாழ்வில் ஒரு அடி கூட உங்களால் எடுத்து வைக்க முடியாது. உங்களால் எதுவும் செய்ய இயலாது. மனதளவில் நீங்கள் வேடிக்கையான விஷயங்களை மட்டுமே செய்யமுடியும். சிறிது காலத்திற்கு உங்களுக்குப் பொழுதுபோக்காக இருக்கலாம், ஆனால் அவை உங்களை எங்கும் இட்டுச் செல்லாது.

sadhguru-wisdom-article-positive-thinking-is-bound-to-crash-inside-img

கேள்வியாளர்: ஆனால் சத்குரு, நேர்மறையாக சிந்திப்பது குறித்தும், அது உங்கள் வாழ்வை எப்படி மாற்றமுடியும் என்பது குறித்தும் நிறைய போதனைகள் உள்ளன. நேர்மறையாக சிந்திப்பது கர்மாவிலிருந்து விடுபடுவதற்கு உதவமுடியுமா அல்லது குறைந்தபட்சம் மேன்மேலும் கர்மாவை உருவாக்குவதிலிருந்து விலக்கி வைக்குமா?

சத்குரு: மக்கள் தங்கள் வாழ்வின் ஆழத்தைத் தொலைத்துவிட்டதன் காரணம் என்னவென்றால், நேர்மறை என்ற பெயரில் அவர்களுக்கு வசதியாக உள்ளவற்றில் மட்டுமே அவர்களது கவனத்தைச் செலுத்துவதன் மூலம் அவர்கள் மிக அற்பமானவர்களாக ஆகிவிட்டனர். அவர்களுக்கு எல்லாமே விரைவாக, விரைவாக, விரைவாக வேண்டும். எதற்குமே அர்ப்பணிப்பு இல்லை. ஒருவர் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அவர் அதற்காக வருடக்கணக்காக பயில வேண்டும். அவரின் மனைவி குழந்தையைக் கூட அவர் மறந்துவிடக்கூடும் - எல்லாவற்றையும் மறந்து அவர் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கிறார். அப்போதுதான் அவருக்கு ஏதோ ஒன்று புலப்படுகிறது - பொருள்தன்மையின் தளத்தில் கூட இதுதான் நிகழ்கிறது.

அத்தகைய அசைவில்லாத கவனம் நவீன உலகில் பெரும்பாலும் இல்லை. ஏனெனில், "கவலை வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள். எல்லாம் நன்றாகவே உள்ளன. நீங்கள் ஆனந்தமயமாகவே இருங்கள்!” என்பதைப் போன்ற போதனைகள் மிக அதிகமாக இருக்கின்றன. இந்த விதமான மகிழ்ச்சி சிதறிப்போவதைத் தவிர்க்க முடியாது என்பதுடன், மக்கள் மனரீதியாக நோய்வாய்ப்படும் சூழல்களுக்குத் தள்ளப்படுவார்கள். மேற்கத்திய நாடுகளில் நான் கேள்விப்படுகின்ற, இந்தியாவிலும் பிரபலமாகத் தொடங்கியுள்ள குறிப்பிட்ட ஒரு புகழ்பெற்ற வாக்கியம், "மகிழ்ச்சியாக இருங்கள், இந்தக் கணத்தில் வாழ்ந்திருங்கள்." தயவுசெய்து வேறு எங்கேயோ வாழ்ந்துதான் காட்டுங்களேன்! எப்படியும் நீங்கள் இந்தக் கணத்தில்தான் இருக்கின்றீர்கள். வேறு எங்கு நீங்கள் இருக்க முடியும்? இது குறித்து பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன என்பதுடன், அனுபவமோ அல்லது புரிதலோ இல்லாத மக்களால் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் எல்லோரும் இதை மேற்கோள் காட்டுகிறார்கள்.

கர்மச் சுருள்

"சந்தோஷமாக இரு" என்பதைப் பற்றி எப்போதும் பேசும் மனிதர்களின் வாழ்க்கையை நீங்கள் கவனித்தால், அவர்களின் வாழ்க்கைமுறையைப் பொறுத்து, ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். எப்போதும் இது மிக ஆழமாக உங்களைப் பாதிக்கும். ஏனெனில் உங்களின் கர்மக் கட்டமைப்பைப் பொறுத்து பல்வேறு சாத்தியங்களுக்கும் உங்களது சக்திகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. உங்கள் வலிக்கு, உங்கள் துக்கத்துக்கு, உங்கள் ஆனந்தத்துக்கு, உங்கள் அன்புக்கு என்று பகிர்வுகள் இருக்கின்றன. இது பிராரப்த கர்மா என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் மனதில் மட்டும் இல்லை. கர்மா என்பது தரவு. இந்தத் தரவைப் பொறுத்துதான் உங்கள் சக்தி செயல்படுகிறது. பிராரப்தா என்பது ஒரு சுருள் கம்பியைப் போன்றது. அது விடுபட்டாக வேண்டியுள்ளது. அவை வெளிப்படாவிட்டால் அல்லது அவற்றை நீங்கள் மறுத்தால், அவை முற்றிலும் வேறுவிதமாக வேர்விடத் துவங்கும்.

எந்தவித மனப்பாங்கும் இல்லாமல், எந்தவிதமான தத்துவமும் இல்லாமல், வெறுமனே ஏன் உங்களால் இங்கே இருக்க முடியவில்லை? விழிப்புணர்வோடு, வெறுமனே விழிப்புணர்வுடன் இருங்கள்.

அனைத்தையும் உள்ளது உள்ளபடியே நீங்கள் பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். எதையும் நீங்கள் மறுக்கவேண்டாம். துக்கம் வந்தால் துக்கப்படுங்கள். வருத்தம் வந்தால் வருத்தப்படுங்கள். ஆனந்தம் வந்தால், ஆனந்தம் கொள்ளுங்கள். பரவசம் வந்தால், பரவசமாக இருங்கள். அவ்வாறு நீங்கள் செய்யும்போது, நீங்கள் எதையும் மறுக்கவோ அல்லது தடுக்கவோ முயலவில்லை. அதேசமயம் அனைத்தும் நிகழ்கின்றன, ஆனால் நீங்கள் அதிலிருந்து விடுபட்டு இருப்பீர்கள்.

நேர்மறையாக சிந்திப்பதில் இருக்கும் ஆபத்து

மனதின் இயல்பு என்னவென்றால், "இது எனக்கு வேண்டாம்" என்று நீங்கள் கூறினால், அது மட்டும்தான் உங்கள் மனதில் நிகழும். "எனக்கு எதிர்மறை வேண்டாம்" என்று நீங்கள் கூறினால், அது மட்டும்தான் நிகழும். நேர்மறை அல்லது எதிர்மறைப் பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? எல்லாவற்றையும் இந்த விதமாக ஏன் நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள்? ஒவ்வொரு சூழலையும் அது எப்படி உள்ளதோ அந்த விதமாகவே பார்த்து, அதை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு, அது தொடர்பாக நீங்கள் சிறப்பாக என்ன செய்யமுடியும் என்று ஏன் பார்க்கக்கூடாது? ஒரு சூழ்நிலை நேர்மறையானதும் அல்ல, எதிர்மறையானதும் அல்ல. அது குறித்து எந்த மனோபாவங்களையும், தத்துவங்களையும் வளர்த்துக்கொள்ள முயற்சிக்காதீர்கள். எந்தவித மனப்பாங்கும் இல்லாமல், எந்தவிதமான தத்துவமும் இல்லாமல், வெறுமனே ஏன் உங்களால் இங்கே இருக்க முடியவில்லை? விழிப்புணர்வோடு, வெறுமனே விழிப்புணர்வுடன் இருங்கள்.

ஒவ்வொரு சூழலுக்கும் வெவ்வேறு விதமான எதிர்செயல் தேவைப்படுகிறது. நீங்கள் நேர்மறையாக சிந்திக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொண்டால், ஒரு சூழலில் அது நன்றாக வேலை செய்யக்கூடும். ஆனால் மற்றொரு விதமான சூழலில் நீங்கள் முட்டாள்தனமான விஷயங்களைச் செய்வீர்கள். ஏனெனில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதமாக இருக்க வேண்டும் என்று முன்முடிவான கருத்தைக் கொண்டுள்ளீர்கள். தவறான ஒரு இடத்தில் நேர்மறையாகவே நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு மோசமான விஷயங்கள் நிகழலாம். எதுவானாலும், எதிர்மறையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. வெறுமனே விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால், ஒரு சூழ்நிலையை அது எப்படி இருக்கிறதோ அப்படியே நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். ஒரு சூழலை அது உள்ளபடியே நீங்கள் உணர்ந்து கொள்ளும்போது, உங்களின் திறமை மற்றும் அறிவைப் பொறுத்து சிறந்த முறையில் உங்களால் செயல்பட முடியும். இது அவ்வளவு எளிமையான ஒன்றுதான்.