பொருளாதார துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்தும், நம் எதிர்கால நலனை இரு பாலரும் சேர்ந்து நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதையும் விளக்கும் சத்குருவின் தெளிந்த பார்வை இங்கே...

Question: நான் ஒரு உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறேன். இத்துறையில் பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்க விரும்புகிறேன். ஆனால் சவால்கள் அதிகமாக உள்ளது. உங்கள் அறிவுரை வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

மனிதனை உற்பத்தி செய்ய இயற்கை, ஆணைவிட பெண்ணுக்கே அதிக முக்கியத்துவமும் பொறுப்பும் அளித்துள்ளது. எனவே உற்பத்தி பிரிவில் இயல்பாகவே பெண்கள் சிறப்பாகவே செயல்பட முடியும். ஆணைவிட பெண்கள் எப்போதும் பெரும் "பேறு" பெற்றவர்கள். இந்த தன்மையை நான் பெண்கள் மீது உள்ள உண்மையான மரியாதையுடனே குறிப்பிடுகிறேன். இன்று நாம் ஒன்றுதிரட்டும் மற்றும் உற்பத்திக்கான வாய்ப்புகளை பற்றியே நினைக்கிறோம். ஆனால் இதிலும் புதுமையான முயற்சிகளுக்கு இடமுண்டு. இதில் பெண்கள் சிறப்பாகவே செயல்படமுடியும்.

நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுவதற்கு பதிலாக வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சந்தை பிரிவுகளில் பெண்கள் சிறப்பாக செயல்பட முடியும்.

நேரடி உற்பத்தி பிரிவு ஆண்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. இது கட்டாய தினசரி வருகை அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் பெண்கள் நேரடியாக ஈடுபடும் போது தங்களது வாழ்வியல் பொறுப்பு மற்றும் குடும்ப சூழ்நிலைகளை முழுமையாக கையாள முடியாத நிலை ஏற்படலாம். பெண்களால் வேலை செய்ய முடியாது என்று இதற்கு அர்த்தம் அல்ல. அவர்கள் வாழ்வில் சில நேரங்களில் தேவைப்படும் நீண்ட ஓய்வுகள் உற்பத்தியில் தொய்வு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுவதற்கு பதிலாக வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சந்தை பிரிவுகளில் பெண்கள் சிறப்பாக செயல்பட முடியும்.

பெண்களும் மிருதுவான பொருளாதாரமும்

பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டே இன்று உலகம் முழுக்க செயல்கள் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தொகையில் 50% அல்லது அதற்கு மேலும் அதிகமாக உள்ள மகளிர் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டும். இனி வரக்கூடிய காலங்களில் பொருளாதார தலைமை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் பெற உள்ளது. வியாபாரமானாலும் அல்லது வேறு எந்த துறையாக இருந்தாலும் தொலைநோக்கு பார்வையே ஒரு தலைவனுக்கு முக்கியமான தகுதி. மற்றவர்கள் சிந்திக்காத புதிய கோணங்களில் தலைவராக இருப்பவர் சிந்தித்து செயல்படுவது மிகவும் அவசியம். புதிதாக எதையும் காண தவறும் போது நீங்கள் மற்றவர்களின் கேலிப் பொருளாகி விடக் கூடும். பொதுவாக, தினமும் நடக்கும் பந்தயம் போன்ற வாழ்க்கை முறை, வேறு எதையும் பார்க்க முடியாத ஒரு சூழ்நிலையை ஆணுக்குள் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பெண்கள், எந்த சூழ்நிலையிலிருந்தும் விலகி நின்று, என்ன நடக்கிறது என பார்க்கும் தன்மையை தங்களுக்குள் வளர்த்துக் கொண்டுள்ளனர்.

பொருளாதார செயல்முறையை மிருதுவாக்குவதில் பெண்களால் முக்கிய பாங்காற்ற முடியும். இதனால் நீண்ட கால அடிப்படையில் பொருளாதாரம் மனித குல நலனுக்கு பயனுள்ளதாக அமைந்திடும். மக்கள் நலனுக்காகவே வணிகங்கள் நடைபெற வேண்டுமே தவிர வணிக நலனுக்கு மக்களை அடிமையாக்கி விடகூடாது எனும் நிலையை உலகம் முழுக்க மீண்டும் உருவாக்க வேண்டும். ஒரு பாலினத்தார் மட்டுமே மனித குலத்தை வடிவமைத்திட உரிமை பெற்றவர்கள் அல்லவே. தலைமை பதவிகளில் வியாபாரம், அரசியல் என எதுவாக இருந்தாலும் பெண்களின் பங்களிப்பு அவசியம். ஏனெனில் மனித இனத்தின் நளினமான தன்மை பெண்கள்தான்.

அர்த்தநாரி

உயிர் பிழைத்து இருப்பதே பெரிய போராட்டமாக இருந்த சூழ்நிலைகளால், நீண்ட காலமாகவே மனிதஇனம் ஆண் தன்மைக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. தங்கள் பிழைப்பை உறுதி செய்து கொண்டு பாரம்பரியம், நாகரீகம் என மலரும் சமூகத்தில் தான் பெண்மை தனக்குரிய இடத்தை அடைய முடியும். பரவலாக சமூகங்கள் இன்று இந்நிலையை அடைந்து வருகின்றன. ஆனால் நமது உயிர் பிழைக்க வேண்டும் என்ற உள்ளுணர்வை சற்றே தளர்த்திக் கொள்ளவதற்கு பதிலாக, அதற்கான அளவுகோலை கொடுமையான அளவுக்கு உயர்த்திக் கொண்டே செல்கிறோம். முன்பு பிழைப்பு என்பது மூன்று வேளை உணவாக இருந்தது. ஆனால் இன்று பிழைப்பு என்றால் பென்ஸ், BMW என்றாகிவிட்டது. இது இப்படியே தொடர்ந்தால் சமூகத்தில் பெண்மைக்கான இடமே இருக்காது. பிழைத்திருக்க வேண்டும் என்ற உள்ளுணர்வை நாம் சற்றே தளர்த்திக் கொள்ளும் போது பெண்மை இயல்பாகவே முக்கியத்துவம் பெறுவதை பார்க்க முடியும்.

லட்சியத்தை அடைய வேண்டும் என்று தீ பிடித்தது போல ஓடாமலே வெற்றிகரமாக வாழ வழி உள்ளது. உங்களை சுற்றியுள்ள அனைத்தின் மீதும் உங்களுக்கு அக்கறை இருக்குமானால், நீங்கள் எதற்கும் தயங்க மாட்டீர்கள், இயல்பாகவே உங்களில் சிறப்பாக செயல்படுவீர்கள். இதுவே பெண்கள் செயல் புரியும் விதம். இதுவே இந்த பூமியில் செயல்பட வேண்டிய விதமும் கூட.

ஆண் தன்மை, பெண் தன்மை என்பது உடலளவில் ஆணாகவோ பெண்ணாகவோ இருப்பதை குறித்து அல்ல. பெண்ணிடம் இருப்பது போலவே பெண்தன்மை ஒரு ஆணிடமும் உயிர்ப்புடன் இருக்க முடியும். இவை இரு விதமான தன்மைகள் மட்டுமே. இந்த இரு தன்மைகளும் சமமாக நிகழும் நிலையில் தான் ஒரு மனிதர் பரிபூரணமான வாழ்வை வாழ முடியும். ஆண் தன்மையை ஒரு மரத்தின் வேராக பார்த்தோமானால், மலரும் கனியும் பெண்தன்மை என உருவகம் கொள்ளலாம். வேர் வாழ்வதே மலரும் கனியும் பூத்துக் குலுங்கத்தான். இது நிகழவில்லை என்றால் வேர் இருப்பதே வீணாகும். பிழைத்திருத்தல் மட்டுமே எல்லாமும் ஆகிவிடுவதில்லை. பிழைப்பை பார்த்துக் கொண்டபிறகு வாழ்வின் மென்மையான நளினமான பக்கங்களும் உங்கள் வாழ்வில் நிகழ வேண்டும் தானே.

இன்று, வெற்றிகரமாக இருப்பது என்றால் அவரவரது தனிப்பட்ட லட்சியத்தை அடைவது எனமக்கள் நினைக்கிறார்கள். இது முட்டாள்தனம். லட்சியத்தை அடைய வேண்டும் என்று தீ பிடித்தது போல ஓடாமலே வெற்றிகரமாக வாழ வழி உள்ளது. உங்களை சுற்றியுள்ள அனைத்தின் மீதும் உங்களுக்கு அக்கறை இருக்குமானால், நீங்கள் எதற்கும் தயங்க மாட்டீர்கள், இயல்பாகவே உங்களில் சிறப்பாக செயல்படுவீர்கள். இதுவே பெண்கள் செயல் புரியும் விதம். இதுவே இந்த பூமியில் செயல்பட வேண்டிய விதமும் கூட.

ஆண்தன்மை, இங்கே இப்போது என்ன இருக்கிறது என்பதில் பெரிதும் கவனமில்லாமல் எங்கேயாவது செல்லும் இயல்புடையது. பெண்தன்மை எங்கேயும் செல்ல முயற்சிப்பது இல்லை. இருக்கும் நிலையிலே மகிழ்ச்சியாக இருக்கும் இயல்புடையது. இந்த இரு தன்மைகளும் சமநிலையில் இருக்கும் போது, நாம் எங்கேயாவது செல்ல முடிகிற அதே நேரத்தில், இப்போது இருக்கும் நிலையிலும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். இன்று உலகில் நிகழ வேண்டியதும் இது தான்.