எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடிக்கும் என் மாமியாரால் தினம் தினம் வேதனை அனுபவிக்கிறேன். என் கோபத்தை எங்கே காட்டுவது... என் குழந்தைகள் மீது காட்டுகிறேன். கையில் கிடைத்ததைத் தூக்கி எறிகிறேன். கோபம் அடங்கியதும், நானா இப்படி நடந்து கொண்டேன் என்று எனக்குள்ளே வெட்கப்படுகிறேன். என்ன செய்வது?

சத்குரு:

யாரோ ஒருவனுக்குக் கைகள் இல்லை; வேதனை கொள்கிறான். இன்னொருவனுக்கு இரண்டு கைகளும் இருக்கின்றன. ஆனால், அவற்றை நிரப்பப் போதிய பணம் இல்லை. அவனும் வேதனையால் தவிக்கிறான். வேறொருவன் பணத்திலேயே புரள்கிறான். ஆனால், ஆசைப்பட்டதைச் சாப்பிட முடியவில்லை. வேதனைப்படுகிறான்.

இப்படி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வேதனை கொள்கிறார்கள்; தங்களை வருத்திக் கொள்கிறார்கள். சிலர் உங்களைப் போல குழந்தைகளை வருத்துகிறார்கள். இதுதான் பைத்தியக்காரத்தனம்!

அமைதியாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பலர், உண்மையில் அமைதியாக இல்லை. அவர்களுடைய பைத்தியக்காரத்தனம் கொஞ்சம் ஓய்வெடுத்துத் தூங்கிக் கொண்டு இருக்கிறது. அவ்வளவுதான்!

உங்களுக்கு ஜலதோஷம் வந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது உங்களை முடக்கிப் போடாதவரை அதைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். அதற்காக உங்களுக்கு நோய் இல்லை என்று அர்த்தமில்லை. படபடப்பு, பயம், வக்கிரம், கோபம் என்று எத்தனையோ பைத்தியக்காரத்தனங்களும் அப்படிப்பட்ட நோய்கள்தான்.

அமைதியாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பலர், உண்மையில் அமைதியாக இல்லை. அவர்களுடைய பைத்தியக்காரத்தனம் கொஞ்சம் ஓய்வெடுத்துத் தூங்கிக் கொண்டு இருக்கிறது. அவ்வளவுதான்! ஒரு குண்டூசி கொண்டு குத்தினால் போதும். பட்டென்று வெடித்துவிடும்.

இன்றைக்கு, நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தங்கள் பைத்தியக்காரத்தனம் வெளிப்பட்டுவிடாமல் ஒளித்துவைக்கும் தந்திரம் ஏதாவது உண்டா என்றுதான் தவிக்கிறார்கள். அவற்றை மொத்தமாகக் களைவதுதான் ஆரோக்கியம் என்று யோசிப்பது இல்லை.

சங்கரன்பிள்ளை ஒரு நண்பரை இருபது வருடங்கள் கழித்துச் சந்தித்தார். அவர் இவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போனார். அங்கே, வீடு நிறைய பதினாறு குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். சங்கரன்பிள்ளை ஆச்சர்யமானார்.

"குழந்தைகள் காப்பகம் ஏதாவது நடத்துகிறாயா?" என்று கேட்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"நீ வேற, எல்லாமே என் குழந்தைகள்!"

சங்கரன்பிள்ளை பொறாமையில் பெருமூச்சு விட்டார். "உன் திருமண வாழ்க்கை அவ்வளவு சுகமானது போலிருக்கிறது!!"

"ஐயோ... என் மனைவியைப் பற்றி உனக்குத் தெரியாது. சரியான ராட்சஸி" என்றார் நண்பர்.

"அப்புறம் எப்படியப்பா பதினாறு குழந்தைகள் பெற்றுக் கொள்ள மனம் வந்தது?"

"என் மனைவியைத் தனியாகச் சமாளிக்க எனக்கு துணிச்சல் இல்லை. வீட்டுக்குத் திரும்பினால், இந்தக் கூட்டத்தில் காணாமல் போகலாம் பார்!!" என்றார் நண்பர்.

இப்படித்தான் நீங்களும், உங்களைப் போன்ற பைத்தியக்காரர்களின் கூட்டத்தில் இருக்கும்போது, பாதுகாப்பாக உணர்கிறீர்கள்.

மனநலம் தவறிய ஒருவன் தன்னை ஒரு கயிறு வைத்துத் தூணுடன் கட்டிப் போட்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டான். துணையே சுற்றிச் சுற்றி வந்தான். அவனுடைய பரிதாப நிலைமையைப் பார்த்து வேறொருவன் அவனைத் தள்ளி வரச் சொன்னான்.

"என்னை இந்தத் தூணுடன் பிணைத்திருக்கும் கயிற்றை முதலில் வெட்டி என் கையில் கொடு. அப்புறம்தான் என்னால் நகர முடியும்" என்றான் அவன்.

நீங்களும் அப்படித்தான். கோபம் என்ற தூணுடன் யாரோ வந்து உங்களைப் பிணைக்கவில்லை. இதைப் போன்ற தேவையற்ற பல விஷயங்களுடன் கற்பனைக் கயிற்றால் உங்களை நீங்களேதான் பிணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்களாகத் தயாரித்து விலங்கிட்டுக் கொள்ளப் பயன்படுத்தும் சங்கிலிகளை யாராவது வந்து துண்டிப்பார்கள் என்று காத்திருந்தால், வாழ்நாளே முடிந்துவிடும்.

கோபம் உற்பத்தியாவது உங்களிடமா? அல்லது வேறெங்கோ வெளியிலா? அதை எடுத்துவந்து உங்கள் மாமியார் உங்கள் மீது அணிவிக்கிறார் என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்காதீர்கள்.

கோபம் உற்பத்தியாவது உங்களிடமா? அல்லது வேறெங்கோ வெளியிலா? அதை எடுத்துவந்து உங்கள் மாமியார் உங்கள் மீது அணிவிக்கிறார் என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்காதீர்கள்.

சங்கரன்பிள்ளை டாக்டர் வீட்டுக்குப் போனார்.

"சமீபகாலமாக என் மனைவிக்குக் காது கேட்கவில்லை டாக்டர். எதையும் பத்துத் தடவை சொன்னால்தான் பதில் சொல்கிறாள்,"

"அது எவ்வளவு மோசம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு வீட்டுக்குப் போனதும், பதினைந்து அடி தூரத்தில் நின்று ஏதாவது சொல்லுங்கள். பதில் வரவில்லையென்றால், இன்னும் கொஞ்சம் கொஞ்சமாகக் கிட்டே போய்ச் பேசிப் பாருங்கள். எத்தனை தூரத்தில் நின்று பேசினால் அவளுக்குக் காது கேட்கிறது என்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.

சங்கரன்பிள்ளை வீட்டுக்குப் போனார். பதினைந்து அடி தூரத்திலிருந்து "ஏதாவது போன் வந்ததா?" என்று மனைவியைக் கேட்டார். பதில் வரவில்லை. ஒவ்வொரு அடியாக நெருங்கிப் போய் அதே கேள்வியைக் கேட்டார். பதில் இல்லை. மனைவியிடமிருந்து இரண்டடி தூரத்தில் நின்று கேட்டபோது, அவள் வெடுக்கென்று திரும்பினாள்.

"பத்தாவது தடவையாகச் சொல்கிறேன்... எந்த போனும் வரவில்லை. போதுமா?"

இப்போது சொல்லுங்கள் பிரச்சனை யாரிடம் இருக்கிறது. சங்கரன்பிள்ளையிடமா, அவரது மனைவியிடமா?

உங்களுடைய இன்றைய நிலைக்குக் காரணம் உங்கள் மாமியார் அல்ல. நீங்கள்தான். கோபம் விலகியதும், வெட்கப்படுவதாகச் சொல்கிறீர்கள். கோபம் வருவதற்கே நீங்கள் வெட்கம் கொள்ள வேண்டும்.

குரங்கு ஒன்று ஆர்வமிகுதியால், அசிங்கத்தைத் தொட்டுப் பார்த்தது. தன்னிச்சையாகக் கையைத் தன்மீதே துடைத்துக் கொண்டது. அதன் துர்நாற்றம் தாங்க முடியாமல், அந்த இடத்தை விட்டே ஓடிப்போனது. ஆனால், மணம் வீசும் மலர்த் தோட்டத்துக்குப் போனால் கூட துர்நாற்றம் தொடர்ந்தது. குரங்கு செய்வதறியாது தவித்தது.

அசிங்கத்தை எடுத்துப் பூசிக் கொண்டால், எங்கே போய் ஒளிந்து கொண்டாலும் துர்நாற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது. கோபம், பொறாமை, சந்தேகம் போன்ற பல தவறான குணங்களுக்கு இடம் கொடுத்தால், வேதனைகளிலிருந்து விடுபட முடியாது.

HAROLDO FERRARY-HAROLDO FERRARI-HAROLDO COSTA FERR @ flickr