மோட்சம் என்றால் என்ன?
நம் கலாச்சாரத்தில் முக்தி, மோட்சம், என்ற வார்த்தைகள் அடிக்கடி ஒலிப்பது வழக்கம். "மோட்சம் என்றால் என்ன?" - இந்தக் கேள்வியை சத்குருவிடம் கேட்டபோது...
நம் கலாச்சாரத்தில் முக்தி, மோட்சம், என்ற வார்த்தைகள் அடிக்கடி ஒலிப்பது வழக்கம். "மோட்சம் என்றால் என்ன?" - இந்தக் கேள்வியை சத்குருவிடம் கேட்டபோது...
சத்குரு:
மோட்சம் என்றால் விடுதலை, அனைத்திலிருந்தும் விடுதலை, பிறப்பு-இறப்பில் இருந்தே விடுதலை. இதுதான் எல்லா மதங்களின் குறிக்கோளும் கூட - என்ன ஒன்று, இது நிர்வாணா (அ) மரணம் (அ) மோட்சம் என்று வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. விடுதலை பெறாமல் வாழ்க்கை முழுமையடையாது. உங்களுக்குள் முழுமையான விடுதலை ஏற்படாவிட்டால், உங்கள் வாழ்க்கை முழுமையாகாது. விடுதலைதான் உச்சபட்ச இலக்கு.
மோட்சம் என்பது என்னவென்று நான் உங்களுக்கு சொல்லிவிட்டால், பிறகு அதைத் தேட நீங்கள் விரும்பமாட்டீர்கள். மோட்சம் என்றால் படைப்பில் இருந்து விடுதலை, உங்களிடமிருந்து விடுதலை, ஏன் கடவுளிடமிருந்தும் கூட விடுதலை பெற்றுவிடுவது. மோட்சம் என்றால் கடவுளிடம் செல்வது அல்ல. கடவுளை ஒரு படிக்கல்லாகப் பயன்படுத்தி, நாம் விடுதலையை நோக்கிச் செல்கிறோம். அதனால்தான் கிழக்கத்திய கலாசாரத்தில் மட்டும் விடுதலை என்பது கடவுளை விட உயர்ந்ததாக கருதப்படுகிறது. மோட்சம் அடைவதற்கு கடவுள் ஒரு கருவிதானே தவிர்த்து - கடவுளை அடைவதற்கு மோட்சம் ஒரு வழியாக இங்கு கருதப்படுவதில்லை. ஆம், கடவுள் ஒரு கருவி; நீங்கள் விடுதலை அடைய உங்களுக்கு ஒரு படிக்கல்லாக அவர் இருக்கிறார்.
எப்பொழுது 'நான்' என்பது இல்லாமல் போகிறதோ, அங்கு மோட்சம் இருக்கிறது. 'நான்' இருக்கும்போது, அங்கு மோட்சம் இருக்க முடியாது. காரணம் - 'நான்' என்பதன் இருப்பே எல்லைகளுக்கு உட்பட்டிருப்பதால் தான். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? இந்த அகண்ட வெளியில், நீங்கள் 'நான்' என்று சொல்வதே அதற்கென்று சில எல்லைகள் இருப்பதால் மட்டுமே. அதனால் 'நான்' என்பது இருக்கும் தடம் தெரியாமல் அழிய வேண்டும். இதையே வேறு நல்ல விதமாகவும் சொல்ல முடியும், என்றாலும் நான் இந்த எதிர்மறை வெளிப்பாட்டை தான் பயன்படுத்துவேன். இது நீங்கள் வளமான கற்பனைகளுக்குள் போகாமல் இருப்பதற்குத்தான். மோக்ஷம் என்பது இப்படியா? அல்லது அப்படியா? என்றால், மோட்சம் இது மாதிரியும் அல்ல, அது மாதிரியும் அல்ல. இதுவும், அதுவும், எதுவும் இல்லையென்றால் அதுதான் மோட்சம்.
மோட்சம் என்பதை விட இதை நிர்வாணா என்று தான் சொல்ல வேண்டும் - அது தான் இன்னும் அதிக எதிர்மறை அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. மோட்சம் என்பது மிகநல்ல விதமாக ஒலிக்கிறது. மோட்சம் என்றால் விட்டு விடுதலை பெறுவது. நிர்வாணா என்றால் நீங்கள் இல்லாமல் போவது. இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான்; என்றாலும் எதிர்மறையில் தெரிவிப்பது உங்கள் கற்பனைகளைத் தூண்டுவதில்லை என்பதால் இன்னும் பொருத்தமானதாக இருக்கிறது.
Subscribe