‘மரணம்’ என்ற வார்த்தையைக் கூடப் பலரும் கேட்கத் தயாராக இல்லாத நிலையில், மரணத்தைப் பற்றி குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என்று சத்குரு சொல்வது சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இந்த கட்டுரையின் இறுதியில் அதிர்ச்சி நீங்கி, மரணம் குறித்த தெளிவான பார்வை கிடைப்பது நிச்சயம்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: எனது மகனால் அவனது தாத்தாவின் மரணத்தை ஜீரணிக்க முடியவில்லை. இதை நான் எப்படிக் கையாள்வது?

சத்குரு:

மரணம் ஒரு ஆச்சரியம் அல்ல. நீங்கள் இறப்பீர்களா, இல்லையா என்று தெரிந்துகொள்ள அபாரமான புத்திசாலித்தனமோ, ஆராய்ச்சியோ அல்லது ஆழ்ந்த படிப்போ தேவையில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறந்த அதே கணத்தில் மரணமும் பிறந்துவிட்டது. உங்களுக்கு நான்கு அல்லது ஐந்து வயதாக இருக்கும்போதாவது, நீங்கள் மரணமடைவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? இது தெரிந்திருந்தாலும், நீங்கள் எதுவும் செய்யவில்லை. இறுதி சடங்குகள் முடிந்த பின்னர்தான் நீங்கள் ஏதாவது செய்ய நினைக்கிறீர்கள். மரணத்தை இதைப் போல திடீரென்று கையாள்வது என்பது முடியாத காரியம்.

உங்கள் மரணத்தைப் பற்றி உங்கள் குழந்தைகளிடம் பேசுவது நல்லதுதான்

இது அந்த நொடியில் கையாளக் கூடிய விஷயம் இல்லை. யாரோ ஒருவர் அவருக்கு மிக நெருக்கமான ஒருவரை இழந்துவிட்டால், நீங்கள் அதை தத்துவப்பூர்வமாக அணுகி, உடல் மட்டும்தான் இறக்கிறது, ஆத்மா இறப்பதில்லை, அதனால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உபதேசித்தால், அது அவரை இன்னும் காயப்படுத்தும். இதையெல்லாம் அவர்களுக்கு அந்த நேரத்தில் சொல்லக் கூடாது. இவற்றையெல்லாம், ஒரு மனிதனின் வாழ்வின் ஆரம்ப நிலையிலேயே எடுத்துச் சொல்ல வேண்டும், மரணம் நிகழ்ந்த பிறகு கூறக் கூடாது. மக்கள் மரணம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குத் தெரியாது என்றில்லை, ஆனால் அவர்கள் இதைக் குறித்து பேசினாலே கண்களை மூடிக் கொள்வார்கள். மரணத்தை திறந்த கண்களுடன் பார்ப்பதுதான் நல்லது. அதை உங்கள் வாழ்விலும், உங்கள் குழந்தைகளின் வாழ்விலும் முன்னதாகவே அறிமுகப்படுத்திவிட வேண்டும். "மரணம் என்பது ஒரு இயற்கைச் செயல், அது கண்டிப்பாக நடந்தேதான் தீரும். அது அழிவு அல்ல; இயற்கையின் ஒரு செயல்பாடு" என்பதை குழந்தைகளுக்கு நினைவுபடுத்துங்கள்.

உங்கள் மரணத்தைப் பற்றி உங்கள் குழந்தைகளிடம் பேசுவது நல்லதுதான்; அவர்களது பெற்றோர் ஒரு நாள் இறந்துவிடுவார்கள் என்று அவர்களுக்குத் தெரிவது மிகவும் நல்லது. 25 வருடங்கள் கழித்து இறப்பதற்குப் பதிலாக, நாளையே நீங்கள் இறந்துவிட்டால், குழந்தைகளால் தங்கள் வாழ்க்கையை தாங்களே சமாளித்துக் கொள்ளமுடியும். நாளை நீங்கள் மறைந்துவிட்டாலும், உங்கள் குழந்தைகள் தன்மையான, சமநிலையான வாழ்க்கையை வாழ்வதை நீங்கள் விரும்பவில்லையா? இல்லை நீங்கள் மறைந்துவிட்டால், அவர்களும் அழிந்து விடவேண்டுமா? எந்த வழியில் நீங்கள் குழந்தைகளை வளர்க்க விரும்புகிறீர்கள்? நாளை நீங்கள் காணாமல் போனாலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் தொடர வேண்டும், இல்லையா? அவர்களை மரணத்துடன் பரிட்சயப்படுத்தாவிட்டால், அவர்களால் உங்களுக்குப் பின் ஏதும் செய்ய இயலாது. மரணம் உங்கள் குடும்பத்தில்தான் நடக்க வேண்டும் என்றில்லை. அது ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவருக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அது உங்களுக்கும், எனக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்? அதை நாம் விரும்பாவிட்டாலும், அதை நாம் அழைக்காவிட்டாலும், கண்டிப்பாக அது நடக்கும், ஆனால் அது நடந்தாலும், நாம் சுகமாக முன்னேறிச் செல்லலாம்.

இதனால் வாழ்வில் நீங்கள் மரணத்தை எதிர்கொள்ளும்போது உங்களுக்கு அன்பானவர்களை பிரிந்து வருந்தமாட்டீர்கள் என்றோ அல்லது சாதாரண மனித உணர்ச்சிகள் உங்களுக்கு இருக்காது என்றோ அர்த்தமில்லை. உங்களுக்கு இதெல்லாம் இருந்தாலும், அது உங்களுக்குள் பேரழிவை ஏற்படுத்தாது. அதை நீங்கள் விழிப்புணர்வோடு கையாள முடிந்தால், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லாமும் உங்களை இன்னும் வளப்படுத்தும். நீங்கள் விழிப்புணர்வில்லாமல் இருந்தால், எல்லாமே எப்போதுமே பிரச்சனைதான். அவர்கள் உயிரோடிருந்தாலும், இறந்தாலும் பிரச்சனைதான், இல்லையா? எனவே, நெருக்கமானவர்கள் இறந்தால், நீங்கள் உங்கள் எல்லைகளைத் தாண்டி பிரம்மாண்டமாக வளர்வதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை நீங்கள் உங்களை அழித்துக்கொள்ளப் பயன்படுத்துகிறீர்கள். உங்களுக்கு மிக நெருக்கமானவர் இறக்கும்போது, - நீங்கள் பெரிய விலை கொடுக்கிறீர்கள், ஆனால் அதை உங்கள் நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? கண்டிப்பாக வேண்டும். நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால், அதிலிருந்து நீங்கள் வெகுவாக பயன்பெறுவீர்கள்.