தேடி சோறு நிதந்தின்று... வீழும் வேடிக்கை மனிதர்களாய் பெரும்பான்மையானோர் பிழைப்பிற்காக மட்டுமே மனித உடலைப் பார்க்கும் வேளையில், மனித உடலின் மகத்துவத்தை உணர்த்தும் இந்தப் பதிவு, உடல் வெறும் பிழைப்பிற்கான கருவியல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது!

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்தியாவில் உள்ள சில கைப்பேசி நிறுவனங்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு செய்தன. 97 சதவிகித மக்கள், ஒரு சாதாரண அலைபேசியிலுள்ள மொத்த செயல் திறனில், ஏழு சதவிகித அளவுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக அந்த ஆய்வு கூறியது. நான் ஸ்மார்ட் ஃபோன் பற்றி பேசவில்லை. மிகமிகச் சாதாரண ஆரம்பகால கைப்பேசிகளைப் பற்றித்தான் பேசுகிறேன். அந்த நிறுவனங்கள், அலைபேசியின் தொண்ணூறு சதவிகித செயல்திறனையும் நீக்கி விற்றால்கூட, பெரும்பாலான மக்களுக்கு வித்தியாசம் ஒன்றும் தெரியாது. அவ்வளவு செயல் திறனை நீக்கி ஒரு 500 ரூபாய் தள்ளுபடியில் விற்றால் கூட வாங்குபவர்கள் மகிழ்ச்சியுடன் வாங்குவார்கள், நிறுவனத்திற்கும் இலாபம்! நிலைமை அப்படித்தான் இருக்கிறது.

ஒருகாலத்தில் பிழைத்திருப்பது என்பது ஒரு வேளை அல்லது இரண்டு வேளை உணவைப் பெறுவது என்று இருந்தது. இப்போது பிழைப்பு என்றால் உங்களுக்கு ஒரு கார் இருக்கவேண்டும். பிழைப்பின் அளவுகோலை நாம் உயர்த்திக் கொண்டே செல்கிறோம். அளவுகோலை நாம் உயர்த்தினாலும், அது இன்னமும் பிழைப்பு என்ற அளவில்தான் உள்ளது.

அந்தச்சிறிய கருவியிலேயே நீங்கள் ஏழு சதவிகிதம்தான் பயன்படுத்துகிறீர்கள். பிறகு உங்களது உடலமைப்பைப் பற்றி என்ன சொல்வது? இந்த உடல் ஒரு கருவி. மற்ற ஒவ்வொரு கருவியும் இதிலிருந்துதான் வந்துள்ளது. இந்தக் கருவியில் எத்தனை சதவிகிதம் நீங்கள் பயன்படுத்துவதாக நினைக்கிறீர்கள்? ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் பயன்படுத்துகிறீர்கள். ஏனெனில், உங்களது பிழைப்பை நடத்திக்கொள்வதற்கும், பொருள்மயமான உலகில் உங்கள் வாழ்க்கையை நடத்தவும், உங்களது உடல்திறனில் முழுமையாக ஒரு சதவிகிதம்கூட உங்களுக்குத் தேவையில்லை.

உங்களது உடலானது ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் அறிந்துகொள்ளும் திறன் கொண்டது. நீங்கள் அதை முறையாகத் தயார்படுத்தினால், அது ஒரு ஆன்டெனா போன்று செயல்படும். சரியானபடி அதை நிலைநிறுத்தினால், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றையும் உங்கள் உடலால் கிரகித்துக்கொள்ள முடியும்.

உடல் திறன் என்று வரும்போது, ஒரு விலங்குடன் கூட உங்களால் போட்டியிட முடியாது. ஒரு பூச்சியை எடுத்துக்கொள்ளுங்கள், அதன் உடல் திறனைப் பாருங்கள், சிறிய அளவிலான உயிராக அது இருந்தாலும், அதனுடைய உடலின் நீளத்தில் ஏறக்குறைய ஐம்பதிலிருந்து, நூறுமடங்கு தூரத்தை அது தாண்டிக் குதிக்கும். இந்த அளவுகோலின்படி, ஒரு பூச்சியோடு போட்டியிட்டால், உங்களது ஐந்து அல்லது ஆறு அடி உயரத்திற்கேற்ப நீங்கள், 500 அடிக்குமேல் தாண்டிக் குதிக்க வேண்டும். உடல் திறனைப் பொறுத்தவரை, இயற்கையில், எந்தவிலங்கும் - அது ஒரு புழுவாகவோ, பூச்சியாகவோ, பறவையாகவோ அல்லது விலங்காகவோ இருக்கலாம் - அவை உங்களைக் காட்டிலும் அதிகமான திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மனித உடலானது மற்ற எல்லாவற்றையும்விட வித்தியாசமானதொரு திறனுடன் படைக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் என்ற வகையில் நீங்கள் சில மாறுபட்ட சாத்தியங்களுடன் இந்த உலகிற்கு வந்திருக்கிறீர்கள். பிழைப்பு உணர்வையும் தாண்டி வேறு ஒரு திறன் உங்களுக்கு இருக்கிறது. அந்த திறன்தான் மிகவும் முக்கியமானது. இருப்பினும் பெரும்பாலான மனிதர்கள், சாதாரண பிழைப்பிற்கும் அப்பால் என்ன இருக்கிறது என்று தேடுவதற்குப்பதில், தங்களது பிழைப்பின் தரத்தைத்தான் உயர்த்திக்கொண்டே செல்கின்றனர். ஒருகாலத்தில் பிழைத்திருப்பது என்பது ஒரு வேளை அல்லது இரண்டு வேளை உணவைப் பெறுவது என்று இருந்தது. இப்போது பிழைப்பு என்றால் உங்களுக்கு ஒரு கார் இருக்கவேண்டும். பிழைப்பின் அளவுகோலை நாம் உயர்த்திக் கொண்டே செல்கிறோம். அளவுகோலை நாம் உயர்த்தினாலும், அது இன்னமும் பிழைப்பு என்ற அளவில்தான் உள்ளது.

இது எப்படி இருக்கிறது என்றால், முழுதும் மாறுபட்ட சாத்தியங்களுடன் வந்துள்ள மனிதத் தொழில்நுட்பத்தை (human mechanism) புத்திசாலித்தனமற்ற வகையில் பயன்படுத்துவதாகவே உள்ளது. இந்த உடலானது, உங்களுக்குள் இயற்கையாக எழக்கூடிய உணர்ச்சிகளால் ஆளப்படும் ஒரு சதைப்பிண்டமாக மட்டும் இருக்கமுடியும் அல்லது தெய்வீகத்தை உங்களுக்குள் அனுபவப்பூர்வமான ஒன்றாக மாற்றக்கூடிய ஒரு அற்புதக் கருவியாகவும் இருக்கமுடியும்.