மக்கள் ஏன் காசிக்கு சென்று இறக்க விரும்புகின்றனர்? குறிப்பாக, அங்குள்ள, பிணங்களை எரிக்கக் கூடிய (மணிகர்னிகா படித்துறை) மிகவும் பிரபலமாக பேசப்படுகிறது... இது எதனால்? இதைப்பற்றி சத்குருவிடம் கேட்டறிவோம்...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காசியின் வீதிகளில் ஞானமடைந்த மனிதர்கள்

காசிக்கு சென்றால் ஒவ்வொரு வீதியிலும் ஞானோதயமடைந்த மனிதரை பார்க்கமுடியும். ஒரு காலத்தில் காசியின் சூழ்நிலை அப்படியிருந்தது. எந்த வீதியில் சென்றாலும் ஞானோதயமடைந்த ஒருவர் இருப்பார். எனவே இறக்க வேண்டுமென்றால், அந்த மாதிரி இடத்தில் போய் இறக்க வேண்டும் என்று அங்கே சென்றார்கள். ஞானம் அடையவில்லை என்றாலும் இறக்கும் போதாவது சரியான உதவியுடன் இறக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் இப்போதும் காசி அப்படியிருக்கிறது என்று சொல்ல முடியாது. முழுமையாக அழிந்துவிட்டது என்றும் சொல்ல முடியாது. எனவேதான் கடைசி நேரத்திலாவது அந்த உதவி கிடைக்கும் என்று மனிதர்கள் இன்னமும் செல்கிறார்கள்.

ஒரு காலத்தில் நான் காசியில் பிறந்தவன் என்று கூறினாலே மக்கள் உங்கள் கால் தொட்டு வணங்கிச் செல்வர்.

கடும் துறவிகள் இமாலயத்தை நோக்கிச் சென்றனர். ஆனால் குடும்ப வாழ்க்கையில் இருந்தவர்கள் மலை நோக்கிச் செல்ல இயலவில்லை. ஏனெனில் இன்றுபோல் அன்று போக்குவரத்து வசதியில்லை. அன்று நீங்கள் இமாலயத்திற்கு செல்ல வேண்டுமென்றால் திரும்பி வருவதைப் பற்றி நினைக்கக் கூடாது. உங்களுக்கு மரணம் பற்றிய பயமும் இருக்கக் கூடாது. அன்றைய இமாலயப் பயணம் இன்று நீங்கள் இமயமலைப் பயணம் செல்வது போல் அல்ல. இன்று நீங்கள் பதினைந்து நாட்களிலேயே யாத்திரை சென்று வந்து விடுவீர்கள். இதில் தினந்தோறும் வீட்டில் உள்ளவர்களுடன் மொபைல் போனில் பேசிக் கொள்வீர்கள். இப்படிப்பட்ட தியான யாத்திரை அல்ல அது. நீங்கள் இமாலயத்திற்கு செல்ல வேண்டுமென்றால் திரும்பி வரும் திட்டம் எதுவும் இருக்கக் கூடாது. அதனால், இமாலயம், துறவு பூண்டோருக்கான இடமாகவும், காசி இல்லறத்தார்களின் குறிக்கோளாகவும் விளங்கியது.

அன்னிய படையெடுப்புகள்

இது வெறும் ஓரிரண்டு தலைமுறைகளில் நிகழ்ந்து விடவில்லை. இது நிகழ பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. எங்காவது ஒரு மனிதர் ஞானோதயம் அடைந்திருந்தால், தன் உள்நிலையில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்திருந்தால், அவர் காசியை நோக்கி வந்து விடுவார். ஏனென்றால் ஆன்மீக தேடல் உள்ளோர் எப்படியும் காசியைத் தேடி வருவார்கள் என அவர்கள் உணர்ந்திருந்தனர். மேலும் ஞானோதயம் அடைந்தவர்கள், எங்கிருந்தாலும், தங்கள் உடல் இருக்கும்போதே தனிப்பட்ட மனிதர்களுக்கு உதவுவதோடு, தங்களுக்குப் பின்னரும் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பல சக்தி ரூபங்களை உருவாக்குவார்கள். அதனால்தான் காசியில் இத்தனை விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால் அந்நியர் படையெடுப்புகளின் போது அவை தரை மட்டமாக்கப்பட்டுவிட்டன. படையெடுத்து வந்தோர், காசி, இந்து மதத்தின் மையப்புள்ளி எனத் தவறாக நினைத்தனர். இந்து என்பது ஒரு வாழ்க்கை முறை மட்டுமே, ஒரு மதமல்ல என்பதை அவர்கள் உணரவில்லை. ஏதோ ஒரு தலைவரால் எங்கிருந்தோ ஆளப்படும் ஒரு மத முறை போல அல்ல என்பதை அவர்கள் உணரவில்லை. காசியை அழித்துவிட்டால் இந்து வாழ்க்கை முறை இறந்துவிடும் என எதிர்பார்த்தனர். அதனால் அவர்கள் காசியை பெரிய அளவில் சேதப்படுத்தி, தரை மட்டமாக்கினர். காசி அழிக்கப்பட்டதால் மக்கள் பெருமளவில் துயரமடைந்தனர். காசியின் முக்கிய கோயில் தரைமட்டமாக்கப்பட்டது. இருந்தும் அனைத்தும் மீண்டும் செழித்து வளர்ந்தது.

ஏனெனில் இந்து என்பது ஒரு ‘அமைப்பு’ அல்ல. ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோரிடமிருந்தே பெற்றுக் கொண்ட ஆன்மீக முறை இது. இந்த முறை நிலைத்திருக்க பூசாரியோ, போதனைகளோ, அல்லது ஏதோ ஒருவிதமான அமைப்போ தேவையில்லை. இது தானாகவே நடக்கும். இதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இன்றும் காசிக்கு அதனுடைய பழைய புகழ் நிலைக்கவில்லை என்றாலும், இன்னமும் ஒரு அருமையான இடமாகத்தான் இருக்கிறது.

காசியைப் போல் தமிழ்நாடு

ஒரு காலத்தில் நான் காசியில் பிறந்தவன் என்று கூறினாலே மக்கள் உங்கள் கால் தொட்டு வணங்கிச் செல்வர். இன்றும் கூட அப்படித்தான் உள்ளது. நீங்கள் காசியில் பிறந்தவரென்றால் சிறப்பானவராகத்தான் இருக்க வேண்டும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. அதே போன்ற நிலையை நாம் தமிழ்நாட்டில் உருவாக்க விரும்புகிறோம். நான் தமிழ்நாட்டில் பிறந்தவன் என்று கூறினாலே மக்கள் உங்கள் பாதங்களை தொட வேண்டும். அப்படியொரு சிறப்பு சேர்க்க வேண்டும். இதற்கு பெருமளவில் செயல் செய்யத் தேவை இருக்கிறது. நம்மிடம் அதற்குத் தேவையான தொழில்நுட்பமும், சாதனமும் உள்ளது. அதோடு சமூகத்தின் நல்லெண்ணமும் நமக்கு இருக்கிறது. எல்லோரும் இதை நோக்கி செயல்பட்டால் இதை நம்மால் உருவாக்க இயலும். இந்த இடத்தில் பிறப்பதும், வாழ்வதும், இறப்பதும் பெரும் பாக்கியமாக நிலைக்க வேண்டும். அப்படி இந்த இடத்தை நாம் உருவாக்க முடியும். அதற்கு ஏராளமான செயல் தேவைப்படும்.

அதற்காகத்தான், காசியின் மணிகர்னிகா காட் போல, இங்கேயே ஒவ்வொரு ஊரிலும் ஈஷா சுடுகாடு உருவாக்கும் நோக்கத்தில் நாம் இருக்கிறோம். மனிதன் எந்த ஊரில் இறந்தாலும், அதற்கான உதவி அவனுக்கு அந்த ஊரிலேயே கிடைக்க வேண்டும். அவன் காசிக்குத்தான் போகவேண்டும் என்ற தேவை இருக்கக்கூடாது. அந்த நோக்கத்தில்தான் நாம் செயல் செய்து கொண்டிருக்கிறோம். காசி உருவாக பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டது. நாம் அதை இங்கு ஒரு தலைமுறையிலேயே உருவாக்க நினைக்கிறோம். எனவே இந்தத் தலைமுறையிலேயே அதை முடிக்க வேண்டுமென்றால் நீங்கள் எல்லாம் உறுதுணையாக இருந்தால்தான் முடியும். இங்கேயே எல்லா ஊரும் காசி மாதிரி இருக்க வேண்டும்தானே? நம் பகுதியிலேயே மனிதர் எங்கே பிறந்தாலும் எங்கே இறந்தாலும் காசி போன்ற உதவியும், சக்தியும், காசியில் கிடைத்த அதே செயல்முறைகளும் இங்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். சிறப்பாக இறப்பதற்கு மட்டுமல்ல, அனைவரும் பிறப்பதற்கும் விருப்பப்படும் ஓர் இடமாக இதனை மாற்ற வேண்டும். நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருந்தால் அடுத்த 10 வருடத்தில் நாம் இதை செய்துவிட முடியும். 100 வருடம் கழித்து, எங்கு இறக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால், இந்தியாவின் தென் பகுதிதான் என்று அனைவரும் கூற வேண்டும்.