மஹாபாரதம் பிற பகுதி

சத்குரு: ஒருவர் தனது முயற்சியில் வெற்றியடைய வேண்டுமென்றால், அது எதுவாக இருந்தாலும், மூன்று அம்சங்கள் முக்கியமானவை. ஒன்று புத்திசாலித்தனமும் திறமையும், மற்றொன்று அருள், மூன்றாவதாக சரியான சூழ்நிலை அமைவது - பொதுவாக, இதையே நாம் அதிர்ஷ்டம் என்கிறோம். பாண்டவர்கள் பகடை விளையாடச் சென்றபோது, நிச்சயமாக அவர்களிடம் அதற்கான திறமை இல்லை. கிருஷ்ணர் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும் அருளும் அப்போது இல்லை, ஏனென்றால் அவர்கள் கிருஷ்ணரை தங்களுடன் அழைத்துச் செல்லவில்லை என்பதைவிட, குறைந்தபட்சமாக கிருஷ்ணரிடம் ஒரு தகவல் கூட தெரிவிக்கவில்லை. அதிர்ஷ்டம் என்பது அவர்களுக்கு திரௌபதியின் மூலமாக கிடைக்கிறது, அதுவும் அப்போது இல்லை. ஏனெனில் திரௌபதியும் அவர்களுடன் இல்லை. இந்த மூன்றும் இல்லாதபோது ஒரு மனிதன் செயலில் இறங்கினால் நிச்சயமாக அவன் பேரழிவை வரவேற்கிறான்.

திறமைசாலியாக இருங்கள், கவனியுங்கள்

உங்களிடம் தேவையான புத்திசாலித்தனமும் திறமையும் இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? உங்களிடம் திறமை இருக்கிறதா இல்லையா என்று நீங்கள் திகைத்தால், உங்களிடமே நீங்கள் தடுமாற நேரிடும். உங்களிடம் திறமை இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்த முட்டாளாகக் கூடும். இதை அறிய ஒரே வழி, இருக்கும் அருளை பெற்றுக்கொண்டு, உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை எளிதாக உணரும் தன்மையை கற்றுக்கொள்வது தான். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒவ்வொரு கணமும் பேசுகிறது - மக்கள் அதை கேட்பதில்லை; அவர்களால் கேட்க முடியாமல் போவதற்குக் காரணம், அவர்களது தலைக்குள் அளவுக்கதிகமாக அவர்களின் பேச்சே நடக்கிறது. அவர்களால் அருளுக்கோ அல்லது பிரபஞ்ச சூழ்நிலை எப்படி அமைந்திருக்கிறது என்பதையோ கேட்க முடிவதே இல்லை.

இவற்றைப் பற்றி மக்களிடம் பேசுவதில் உள்ள அபாயம் என்னவென்றால், ஒரு சிலர் இருக்கிறார்கள், திடீரென்று, அந்த தென்னை மரம் என்னிடம் ஏதோ சொல்கிறது என்று நினைக்கத் துவங்கிவிடுவார்கள். கவனமாக கேட்பது என்றால் கற்பனை செய்துகொள்வது என்று அர்த்தமல்ல. நீங்கள் பேசாமல் இருக்கும்போது மட்டும் தான் உங்களால் கவனிக்க முடியும். செவியால் கேட்பதும், சொல்வதை கேட்பதும் ஒன்றல்ல. உங்களுக்கு விருப்பமிருந்தாலும் விருப்பமில்லை என்றாலும் உங்கள் காதுகள் எதையாவதை கேட்டுக்கொண்டே தான் இருக்கும். தொடர்ந்து ஏதாவது காதில் விழுந்துகொண்டே இருந்தால் மனம் சஞ்சலமடையும் - நீங்கள் ஏதோவொன்றை கவனித்துக் கேட்டால் மனம் அசைவற்று நிற்கும். சும்மா ஏதேனும் உங்கள் காதுகளில் விழுந்துகொண்டே இருந்தால் மனம் நிலையாக நிற்காது - இதுதான் சப்தம் ஏற்படுத்தும் தாக்கம். ஆனால் அதையும் நீங்கள் கூர்ந்து கவனித்தால், எதை நீங்கள் சத்தம் என்று அழைக்கிறீர்களோ அதுவும் உங்கள் மனதை அசைவின்றி நிலைநிற்கச் செய்யும். சீராக அமைக்கப்பட்ட சப்தங்கள் அல்லது ஒலிகளையே இசை என்கிறோம். இசையின் தரம் இசையமைப்பாளரை மட்டும் சார்ந்ததில்லை, இசையை கேட்பவர் எவ்வளவு கூர்மையாக அல்லது ஆர்வமாக கவனிக்கிறார் என்பதிலும் இருக்கிறது

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம்பிக்கையின்மை ஏன் தோல்விக்கு வழிவகுக்கிறது

வெற்றிகரமான செயலுக்கான இந்த மூன்று அம்சங்களும் மஹாபாரதம் முழுவதிலும் விரவியிருக்கிறது. குருஷேத்திர போரின்போது, குறிப்பிட்ட சில தருணங்களில் பாண்டவர்கள் கிருஷ்ணர் சொல்படி கேட்டு நடந்தார்கள், சில தருணங்களில் கேட்கவில்லை. நீங்கள் யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்றால் அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் நன்றாக செவிமடுத்து கேட்பீர்கள், பிறகு மீண்டும் உங்கள் முட்டாள்தனங்களையே தொடர்வீர்கள். பாண்டவர்கள் செவிமடுத்து கேட்டு நடந்தபோது அவர்கள் வாழ்க்கை மேலெழும்பியது. "எனக்கு எது சௌகர்யமாக இருக்கிறதோ அதை கேட்பேன்; சௌகர்யம் இல்லையென்றால் எனக்கு தோன்றுவதை நான் செய்வேன்" என்று அவர்கள் நினைத்தபோது அவர்கள் கீழே சென்றார்கள். ஏனென்றால் எதையும் கேட்டு அதன்படியே நடப்பதற்கு நம்பிக்கை தேவை. கௌரவர்கள் எப்போதுமே கீழேயே இருந்தார்கள் - அவர்களுக்கு யார் மீதும், எதன் மீதும் நம்பிக்கையே இல்லை. பாண்டவர்களின் நம்பிக்கை எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. அவர்கள் நம்பிக்கை வைத்தபோது உயிர்தெழுந்தார்கள். நம்பிக்கை இல்லாதபோது கீழே விழுந்தார்கள்.

நம்பிக்கை இல்லாதபோது, பயமும் பதற்றமும் இருக்கும். எங்கே பயம் இருக்கிறதோ, அங்கே சீற்றம் இருக்கும். எங்கே சீற்றம் இருக்கிறதோ, அங்கே மோதல் இருக்கும். இதுதான் கதையின் சாரமாக அமைந்திருக்கிறது. எப்போதெல்லாம் அவர்களிடம் நம்பிக்கை இருந்ததோ, அப்போதெல்லாம் அவர்கள் அச்சமற்றவர்களாக இருந்தார்கள்; அவர்கள் அச்சமற்றவர்களாக இருந்தபோது சீற்றம் இல்லை; சீற்றமில்லாதபோது அவர்களின் நோக்கத்தில் செயல்பட்டார்கள். ஆனால் எப்போதெல்லாம் நம்பிக்கை இல்லையோ, அப்போது பயம் வந்தது; பயம் வந்ததும் சீற்றம் வந்தது; சீற்றத்தால் தங்கள் நோக்கம் பற்றிய கவனத்தை இழந்தார்கள், அப்போது அவர்களது புலன்கள் சரியாக வேலை செய்யவில்லை.

சீற்றம் ஏன் உங்களுக்கு உதவாது

யுத்தத்தில் தன் தந்தையார் இறந்தது அஸ்வத்தாமனை தூண்டிவிட்டது - குறிப்பாக, அவர் கொல்லப்பட்ட விதம் - தனது மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்று துரோணர் நம்பவைக்கப்பட்டார். அந்த தகவலை கேட்டதும் துரோணர் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு, கால்களை மடக்கி ரதத்திலேயே தியான நிலையில் அமர்ந்தார். ஆயுதங்கள் ஏதுமின்றி, கண்மூடி தியானத்திலிருந்த துரோணரின் தலையை திருஷ்டதியும்னன் சென்று கொய்தான். தனது தந்தை கொல்லப்பட்ட விதம் பற்றி அறிந்ததும் சீற்றமடைந்த அஸ்வத்தாமன், தனது சக்திவாய்ந்த நாராயண அஸ்திரத்தை கையில் எடுத்தான். இந்த அஸ்திரத்தை சாதாரணமாக பயன்படுத்தி இருந்தாலே, மொத்த பாண்டவர் படையையும் - பாண்டவர்கள் ஐவருடன் மற்ற அனைத்தையும் எரித்து சாம்பலாக்கியிருக்க முடியும். அஸ்வத்தாமன் அஸ்திரத்தை எய்த அந்த கணமே கிருஷ்ணர், பாண்டவர்களையும் அவர்கள் படையினரையும் பார்த்து, "அனைவரும் அந்த அஸ்திரத்தை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குங்கள்" என்றார். கிட்டத்தட்ட மொத்த பாண்டவர் படையும் அப்படியே தரையில் விழுந்து வணங்கியது, அஸ்திரம் அவர்களை கடந்து சென்றது. "இந்த அஸ்திரத்தை ஒருமுறை மட்டுமே அஸ்வத்தாமனால் பயன்படுத்த இயலும்" என்றார் கிருஷ்ணர். தனது சக்திவாய்ந்த அஸ்திரத்தையும் அஸ்வத்தாமன் உபயோகப்படுத்திவிடவே, பாண்டவர்களுக்கு அபாயம் என்பது இல்லாமல் போனது.

மஹாபாரதம் முழுவதிலும் இப்படித்தான் நடக்கிறது, வாழ்க்கையும் இப்படியேதான் நடக்கிறது: நம்பிக்கை இருந்தால் பயமில்லை. பயம் இல்லை என்றால் உங்கள் இதயத்தில் சீற்றமிருக்காது. உங்கள் இதயத்தில் சீற்றம் இல்லாதபோது உங்கள் உயிர் நோக்கத்தில் நீங்கள் செயல்படுவீர்கள், அறிவுபூர்வமாக அதைப்பற்றி அறியாவிட்டாலும் அந்த நோக்கில் நீங்கள் செயல்படுவீர்கள். இயல்பாக நீங்கள் நிறைவேற்ற வேண்டிய தர்மத்தை, அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் நீங்கள் நிறைவேற்றுவீர்கள். இப்படித்தான் செயல் இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் ஒன்றைப்பற்றி சிந்திக்கத் துவங்கும் கணத்தில், உங்கள் மனம் முடிவற்ற எதிர்மறைத் தர்க்கங்களை உருவாக்கும்.

தர்க்கவாதம் செய்து ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள். உங்கள் எதிரில் இருப்பவர் ஒரு முட்டாளாக இருந்தால் மட்டுமே நீங்கள் வாதம் செய்து முடிவுக்கு வரமுடியும். உண்மையாகவே புத்திசாலியான இரண்டு மனிதர்கள் உயிர் பற்றிய மிகச் சிறிய ஒரு அம்சத்தைப் பார்த்தாலும் கூட, அதைப்பற்றி அவர்கள் காலத்துக்கும் விவாதம் செய்துகொண்டே இருக்க முடியும். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நீங்களோ அல்லது உங்கள் எதிரில் இருப்பவரோ முட்டாளாக இருந்தால் மட்டுமே அது விவாதத்தில் முடிவுக்கு வரும். துரதிர்ஷ்டவசமாக இன்றைய நவீன அறிவு வாதம் செய்வதற்கே பயிற்றுவிக்கப்படுகிறது. எதைப் பற்றியாவது கேள்வி கேட்பதோ, அல்லது வாதம் செய்வதோ புத்திசாலித்தனம் என்று நினைக்கிறார்கள் - அது வெறுமே பொழுதுபோக்கு மட்டுமே.

உங்கள் புத்திசாலித்தனத்தையும் புலன்களையும் எப்படி கூர்மையாக்குவது

புத்திசாலித்தனம் என்பது ஒரு கத்தியைப் போன்றது - உங்கள் புத்திசாலித்தனம் எந்த ஒரு அடையாளத்தாலும் சோர்வடைய நீங்கள் அனுமதிக்காமல் இருந்தால், இந்த படைத்தலை ஊடறுத்து செல்லும் ஆற்றல் அதற்கு இருக்கிறது. உங்களிடம் என்ன தகவல் இருக்கிறதோ அதை வைத்து தான் நீங்கள் விவாதம் செய்வீர்கள். இந்த பிரபஞ்சம் பற்றி உங்களிடம் இருக்கும் தகவல்கள் மிகவும் குறுகியது. உண்மையில், உங்கள் உடலில் இருக்கும் ஒரு அணுவைப் பற்றி கூட உங்களுக்கு தெரியாது. இந்த அளவுக்கு தகவலை வைத்துக்கொண்டு, நீங்கள் ஒரு விவாதத்தைத் துவங்கினால் அது வெறும் பொழுதுபோக்காகவே இருக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தையும் புத்தி கூர்மையையும் நீங்கள் தவறாக பயன்படுத்துகிறீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தைத் தொடர்ந்து தூய்மையாக வைத்திருந்தால், அதாவது எதனுடனும் அடையாளம் எடுக்காமல் வெறுமே வேடிக்கை பார்ப்பது போல் இருந்தால், அது அனைத்தையும் ஊடறுக்கும் கூர்மையான கத்தியாக செயல்படும், நீங்கள் அனைத்தையும் அது எப்படி இருக்கிறதோ, அப்படியே காண்பீர்கள்.

உங்கள் ஐம்புலன்களுக்கு உதவியாக இருக்கவே உங்களுக்கு புத்திசாலித்தனம் வழங்கப்பட்டிருக்கிறது. உங்கள் புத்திசாலித்தனம் எதையாவது அடையாளமாக பற்றிக்கொள்ளும் போது தான் ஐம்புலன்களும் பிரச்சனையாக மாறுகிறது. உங்கள் புத்திசாலித்தனமானது உடல் அல்லது மனதுடன் அடையாளம் எடுக்காமல் இருக்கும்போது ஐம்புலன்களும் அதிசயமாகிறது. உங்கள் புத்திசாலித்தனம் இங்கே எந்த அடையாளத்திலும் சிக்காமல் நடுநிலையாக இருந்தால், எல்லாவற்றையும் ஊடறுக்கும். அப்போது நீங்கள் இந்த ஐம்புலன்களும் எவ்வளவு அதிசயமானவை என்பதையும், இந்த அதிசயத்தை அனைவரும் அறிய வேண்டும் என்றும் எண்ணுவீர்கள்; அதிலும், எந்த விலையும் கொடுக்காமலே உங்களுக்கு ஐம்புலன்களும் கிடைத்திருக்கிறதே! திருதராஷ்டிரன் நான்கு புலன்களுடன்தான் வந்தான், எனவே நீங்கள் அவனை மன்னிக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு எந்த மன்னிப்பும் இல்லை, ஏனென்றால் நீங்கள் ஐம்புலன்களோடு வந்திருந்தாலும், பார்வையற்ற நிலைக்கு சற்றும் குறைவின்றி இருக்கிறீர்கள்.

தொடரும்...

மஹாபாரதம் பிற பகுதி

ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதப் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞான தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.