மஹாபாரதம் பகுதி 24: துரியோதனன் - எந்த காரணமும் கொடுக்க முடியாதவன்
மஹாபாரதத்தில் வில்லனாக நாம் பார்க்கும் துரியோதனின் பின்புலத்தில் கர்ம வினையின் தாக்கம் ஏதும் இருந்ததா? இந்த கேள்விக்கு, வேத வியாசர் துரியோதனைப் பற்றி கணித்திருந்ததை விளக்கும் சத்குரு, சில நேரங்களில் குற்றவாளிகள் கதாநாயகர்களையே மிஞ்சுவது - சற்று பாதுகாப்பான தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டும் ஏன் அப்படித் தோன்றுகிறது என்பதையும் விளக்குகிறார்
கேள்வி: இவ்வளவு தீங்கிழைக்கும் குணம் சேருமளவிற்கு துரியோதனனின் கடந்த கால கர்மவினை என்னவாக இருந்தது?
சத்குரு: மஹாபாரதத்தை இயற்றிய வேத வியாசர், அனைவரின் பூர்வ ஜென்மங்களைப் பற்றியும் விளக்குகிறார், அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணர் உட்பட, அவர்கள் நர-நாராயணனாக இருந்திருக்கிறார்கள். மஹாபாரதத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் இப்போது இப்படி இருப்பதற்கு காரணம், முற்பிறவியில் அவர்கள் குறிப்பிட்ட விதமாக இருந்ததன் விளைவே என்பதாக காட்சிப்படுத்தப் பட்டிருப்பதுடன், அவர்கள் தற்போது என்னவாக இருக்கிறார்களோ, அதை ஏற்படுத்திய அந்த விளைவை மாற்றியமைக்கவே இவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம். இத்தனை கதாபாத்திரங்களில், துரியோதனனின் கடந்த காலத்தை மட்டும் வியாசர் குறிப்பிடாமல் தவிர்த்து விட்டார். ஏனென்றால், துரியோதனனின் குணத்திற்கு கர்மவினையை ஒரு காரணமாக தான் முன்னிறுத்தக்கூடாது என கருதினார். இப்படிப்பட்ட ஒரு குணத்திற்கு, இப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு, இப்படிப்பட்ட வாழ்க்கையை அவன் வாழ்ந்ததற்கு எந்த காரணமோ சமாதானமோ வழங்க அவர் விரும்பவில்லை.துரியோதனன் எப்படியெல்லாம் இருந்தானோ, அதற்கான முழு பொறுப்பையும், நூறு சதவீதமும் அவனே ஏற்க வேண்டும் என நினைத்தார் வியாசர். மற்ற அனைவருக்கும் அவர்களின் கடந்த காலம் என்று ஒன்று இருந்தது, அதிலிருந்து நல்ல - கெட்ட, அழகான - அசிங்கமான அவர்களின் குணநலன்கள் வெளிப்பட்டது. ஆனால் துரியோதனனுக்கு அப்படி எந்த காரணமும் இல்லை. இது நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், முட்டாள்தனத்திற்கு, சில சமயம் கோபவசப்பட்டு உணர்வற்றுப் போனதற்கு, உணர்ச்சி, சிந்தனை, செயலில் கண்மூடித்தனமாக இருந்ததற்கு என எல்லாவற்றிற்கும் விடுபடும் வழி ஒன்று இருக்கிறது. ஆனால், துரியோதனன் எப்போதுமே வெளிப்படுத்தி வந்த ஆவேசத்திற்கும், தீய நோக்கத்திற்கும் எந்த சாக்குப்போக்கும் கிடையாது.
Subscribe
கூட்டுக் களவாணி
சில நேரங்களில் துரியோதனனிடம் இருந்து வெளிப்பட்ட மாபெரும் தாராள குணமுள்ள நண்பன் எனும் அடையாளத்தைக் கடந்தும் இது அவனுக்கு பொருந்தும். எல்லா இடங்களிலும் நட்பு பாராட்டுபவனாக இருந்ததுடன், அவனிடம் யார் நட்புடனும் விசுவாசமாகவும் நடந்துகொள்கிறார்களோ, அவர்களை மிகச் சிறப்பாகவே நடத்தியிருக்கிறான் துரியோதனன் - இந்த அம்சத்தில் பாண்டவர்களையும் அவன் விஞ்சி விடுவான். இந்த உலகில் யார் தலைவர்களாக இருக்கிறார்களோ, யார் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்வை ஏற்படுத்த முனைகிறார்களோ, அவர்கள் வழக்கமாக நண்பர்கள் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். மாபெரும் கலைஞர்கள், மேதைகள், விஞ்ஞானிகளுக்கு பெரிதாக நண்பர்கள் இல்லை. ஆனால் மிக மோசமான குற்றவாளிகளுக்கு பெரும்பாலும் மிகச் சிறந்த நண்பர்கள் அமைகிறார்கள்.
குற்றம் நட்பினாலேயே பிழைக்கிறது. இந்த பேச்சுவழக்கு உங்களுக்கு தெரியும்தானே "கூட்டுக் களவாணிகள்." ஒரு குற்றச்செயலில் ஈடுபடவேண்டும் என்றால், உங்களுக்கு பொதுவாக துணை தேவை. இவர்களுக்கிடையே கொடுக்கல் வாங்கல் விசுவாசம் இல்லாமல் இருந்தால், இந்த உலகில் நடக்கும் குற்றச்செயல்கள் பெருமளவு குறைவாகவே இருக்கும். குற்றங்களில் ஈடுபட்டு, மக்கள் மனதிலும் சரித்திரத்திலும் இடம் பிடித்த புத்திசாலியான, வில்லங்கமான கூட்டாளிகள் ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால் துரியோதனன் அப்படி இருப்பதற்கு எந்த சாக்குபோக்கும் இல்லை. துரியோதனனின் ரசிகர்களிடம் இப்படி பேசுவதற்கு நாம் வருந்துகிறோம்: ஒரு மிருகத்தை நேசிப்பதில் எந்த தவறும் இல்லை - நீங்கள் அதனிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருக்கும்வரை.
ஒரு மிருகத்தை நீங்கள் காதலுடனும் பார்க்கமுடியும். ஒரு புலி கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் போது, வனவிலங்கு அருங்காட்சியகத்தில் அல்லது வன சுற்றுலா வாகனத்தில் பாதுகாப்புடன் செல்லும்போது அதை நீங்கள் ரசிக்கலாம். ஆனால் அதே புலியை நீங்கள் எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தால், அதை புகழ்ந்து உங்களால் பாட முடியுமா? இதேபோல், யார் ஒருவர் தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று மிகத் தீவிரமாக உழைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாரோ, இல்லை மற்ற யாரைவிடவும் துரியோதனன் அதிக ஈர்ப்புடையவனாக இருந்தான். ஆனால், ஒருவேளை எப்போதாவது துரியோதனனின் நண்பனாக இல்லாமல் நீங்கள் அவனை நெருங்க நேர்ந்தால், அதற்காக நிச்சயம் நீங்கள் வருந்தும்படியே நேரும்.
துயரத்தில் இளவரசி
ஒருமுறை, துரியோதனனின் அரண்மனையில் கிருஷ்ணர் விருந்தினராக தங்கியிருந்தார். துரியோதனனின் குணம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி சிறிதும் அறியாதவளாக இருந்தாள் அவனது அழகே உருவான மெல்லிதயம் கொண்ட இளம் மனைவியான பானுமதி. அந்த நாட்களின் வழக்கப்படி, தனது அரச குமார கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனை நேசிப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டிருந்தாள். துரியோதனனின் அன்புக்கும் அக்கறைக்கும் மிகவும் ஏங்கியிருந்தாள் பானுமதி. ஆனால் நிஜத்தில், பலவழிகளிலும் பயன்படுத்திக் கொண்டானே தவிர, பானுமதி மீது துரியோதனன் அன்பு செலுத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான் துரியோதனன். அரண்மனைக்குள்ளேயே போதை, களியாட்டங்களில் ஈடுபட மக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இதைப்பற்றி பின்னர் அறிந்த பீஷ்மர் கண்ணீர் விட்டு அழுதார். குரு வம்சத்திலேயே இதற்கு முன் இப்படி ஒரு புனிதத் தன்மையை மதியாத அடாத செயல்களோ வரைமுறையற்ற உடலின் நுகர்வோ நடந்திருக்கவில்லை. துரியோதனன் ஒருவனால் எல்லாமே மிருகத்தனமாக மாறிப்போனது.
தனது கணவனின் கவனம் தன் மீது திரும்பாததால் ஏற்கனவே மனச்சோர்வு அடைந்திருந்த பானுமதி, குழம்பிய மனநிலையோடு மதுவை உட்கொண்டாள். நிலைகுலைந்த மனதோடு நிலைதடுமாறி மோசமான சூழலுக்குள் விழவிருந்த பானுமதியை அறையின் மறுபகுதியில் இருந்து கவனித்தார் கிருஷ்ணர். மக்கள் கூட்டத்திற்கிடையே வழியேற்படுத்திக் கொண்டு முன்னேறிச்சென்று, பாதி உடையோடிருந்த பானுமதியை காக்கவேண்டி, தனது கைகளில் ஏந்தி அவளது அறையில் விடும் அபாய செயலுக்கு துணிந்தார். பானுமதியின் அறையிலிருந்து வெளியேறும்முன் திரும்பிப் பார்த்த கிருஷ்ணரின் மனதில், இவ்வளவு மெல்லிய அற்புதமான உயிர் துரியோதனின் கரங்களில் சிக்கிக் கிடக்கிறதே என்று தோன்றிய எண்ணம், அவரது கண்களில் கசிந்து ஊற்றெடுத்து கண்ணீராக பெருகியது.
தொடரும்...