வேத வியாசரின் பால்ய பருவம்
பராஷரர் தேசாந்திரம் சென்று திரும்பி வந்தபோது, தன் மகனான கிருஷ்ண த்வைபாயனா எப்படி மாறியிருந்தான்? அவனுடைய வேண்டுகோள் என்னவாக இருந்தது? தெரிந்துகொள்வோம் இப்பகுதியில்...
குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்! பகுதி 4
பராஷரர் தேசாந்திரம் சென்று திரும்பி வந்தபோது, தன் மகனான கிருஷ்ண த்வைபாயனா எப்படி மாறியிருந்தான்? அவனுடைய வேண்டுகோள் என்னவாக இருந்தது? தெரிந்துகொள்வோம் இப்பகுதியில்...
சத்குரு:
பராஷரர் அந்த தீவை விட்டுப் போய்விட்டார். ஆனால் அவருடைய மனைவி தன்னுடைய மகனிடம் அவனுடைய தந்தை எவ்வளவு பெரிய மகான் என்று தொடர்ந்து கூறிவந்தார். தான் பார்க்காத தந்தையைப் பற்றி மிக உயர்வாக நினைத்தபடி வளர்ந்தான் அந்தச் சிறுவன். அவனுக்கு ஆறு வயது ஆகும்போது கிராமத்தில் உள்ள மற்ற சிறுவர்களிடம் பெருமையாகப் பேசினான், “அவருக்கு எல்லாம் தெரியும், சூரியனைப் பற்றித் தெரியும், சந்திரனைப் பற்றித் தெரியும், நட்சத்திரங்களைப் பற்றி தெரியும்.” என்று. பராஷரர் ஒரு சிறந்த வானியல் நிபுணர். “அவருக்கு எல்லாம் தெரியும். அவருக்குத் தெரியாதது எதுவுமே இல்லை.” என்று சொல்லி மகிழ்ந்தான். அந்த சிறுவனைப் பொறுத்த மட்டில் பராஷரர் கற்பனைக்கு எட்டாத ஒரு உயர்ந்த மனிதர், அந்த அளவுக்கு அறிவும் மதிநுட்பமும் நிறைந்தவர். சிறுவனின் மனதில் மேலும் மதிப்பு வளர்ந்தது. அவரைப் பற்றியே ஒருமுனைப்பாக நினைத்த வண்ணம் வளர்ந்தான். நன்றாகப் படித்து தந்தையைப் போல வளர நினைத்தான். ஆனால் மீனவர்களிடையே வாழ நேர்ந்ததால் அதற்கான சூழ்நிலை சரி இல்லை. அத்தகைய கல்வி அறிவு பெற ஏற்றதாக இல்லை.
அக்குழந்தைக்கு எட்டு வயது ஆனபோது, பராஷரர் மீண்டும் அந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். கால்நடையாக நடந்து வந்தார். அந்த உபகண்டத்தைச் சுற்றிவர எட்டு ஆண்டு காலம் பிடித்தது. இன்று எல்லாமே மாறிவிட்டது. நான் இன்று காலை டில்லி சென்று இன்று மாலையே இங்கு திரும்பி வர முடியும். நான் அமெரிக்கா போய் பதினைந்து நாட்களுக்குள் திரும்ப முடியும். ஆனால் அப்போது!? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நான் டில்லிக்கு கால்நடையாகப் போய் திரும்புவதென்றால் மூன்று ஆண்டுகள் பிடிக்கும்.(சிரிக்கிறார்). அவர் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்தார். தந்தையைப் பார்த்த சிறுவனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தான் இதுவரை பார்க்காத தன்னுடைய தந்தையைப் பற்றி எவ்வளவு கற்பனை செய்து பார்த்தானோ, அவர் எவ்வளவு மிகச் சிறந்தவர் என்று கனவுலகில் மிதந்தானோ, இப்போது அவர் நேரில் வந்து சேர்ந்தார்.
“உங்களுக்குத் தெரிந்தவை அனைத்தையும் எனக்கு சொல்லித் தரவேண்டும். எல்லாவற்றையும் உடனே சொல்லித் தர வேண்டும்” என்று கேட்டான். பராஷரர், சிறுவனின் ஆர்வத்தைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார். கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமுடைய சிறுவர்கள் எத்தனை பேர்களைப் பார்க்க முடியும்? கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும் முழுவதும் அதைக் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பவர்கள் கிடைப்பது அரிது. அச்சிறுவன் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் மிகுந்து காணப்பட்டான். தான் அங்கு தங்கிய சில மாதங்களில் அவனுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். பிறகு அவர் புறப்பட வேண்டிய நேரம் வந்தபோது சிறுவன் சொன்னான், “நானும் உங்களுடன் வரவேண்டும்”.
Subscribe
பராஷரர் சொன்னார், “மகனே, என்னோடு நீ நடந்து வர முடியாது. சீடர்கள் மட்டுமே என்னுடன் நடக்க முடியும். என்னுடைய மனைவியும் மகனும் நடந்து வர முடியாது” என்று. அதைக் கேட்டவுடன் அந்த எட்டு வயது சிறுவன் சொன்னான், “அப்படி என்றால் என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் இந்த கணமே உங்கள் மகன் என்பதை மறந்து விடுகிறேன்”.
பராஷரர் சொன்னார், “நீ இப்போது வயதில் மிகவும் சிறியவன். சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் வருவேன். அப்போது உன்னை அழைத்துச் செல்வேன். இப்போது அதற்கு அவசியம் இல்லை”.
இப்போது அவர் இந்த உபகண்டத்தைச் சுற்றிவந்தால், மிக வேகமாக நடந்தாலும் குறைந்த பட்சம் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பிடிக்கும். அதற்குள் அந்த சிறுவனுக்கு பதினான்கு ஆண்டுகள் நிரம்பிவிடும். அதுதான் அவருடைய திட்டம். ஆனால் அந்த சிறுவன், “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்கள் பெற்ற அறிவை மதிப்பவராக இருந்தால், ஞானோதயம் பெறுவதை உயர்வாக நினைத்தால், எதற்காக நான் வருவதைத் தள்ளி வைக்க வேண்டும்? நான் இப்போதே உங்களுடன் வரவேண்டும்” என்றான்.
பராஷரர் அவனைத் தன் மகன் என்று பார்க்கவில்லை. அவன் ஒரு சிறந்த ஞானி ஆவான் என்று புரிந்து கொண்டார். அதற்கான அனைத்து தகுதிகளும் அவனுக்கு இருப்பதை பார்த்தார். உடனே அவனுக்கு பிரம்மச்சரியத்திற்கு அதாவது சந்நியாசி ஆவதற்கு உண்டான எல்லாவற்றையும் துவக்கி வைத்தார்.
குறிப்பு:
ஜூலை 9ம் தேதி, ஈஷா யோக மையத்தில் குரு பௌர்ணமி கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. ஆதியோகிக்கு அர்ப்பணிப்பாய், நமது நன்றியை அவருக்கு வெளிப்படுத்த இந்நாள் ஒரு நல்ல வாய்ப்பு. குருவின் அருளில், இத்தினத்தை கொண்டாடிட தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு: AnandaAlai.com/guru-purnima
'குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்!' தொடரின் பிற பதிவுகள்