இதுவரை: தனது மகள் திரௌபதியை மணமுடிக்க, தலைசிறந்த வீரனால் மட்டுமே வெல்லக்கூடிய போட்டி ஒன்றை மையப்படுத்தி சுயம்வரம் அறிவிக்கிறார்‌ துருபதன்.

சத்குரு: பஞ்ச பாண்டவர்களுக்கு எட்டியது போலவே, பாரத தேசம் முழுவதும் இருந்த ஷத்ரியர்கள் அனைவருக்கும் திரௌபதியின் சுயம்வரம் பற்றிய செய்தி தெரியவருகிறது. வீரத்திலும், தீரத்திலும் தலைசிறந்த வீரன் துருபதனுக்கு மருமகனாக கிடைக்க வேண்டும் என்பதால் தகுதிவாய்ந்த அனைவரையும் போட்டிக்கு அழைத்திருந்தார்கள். திரௌபதிக்கு மணமுடித்து, துரோணரையும், குரு வம்சத்தையும் பழிவாங்கும் வலுவை அதிகரித்துக் கொள்வதற்காகத்தான் சுயம்வரமே நிகழ்கிறது.

அனைவருக்குமே திரௌபதியை கரம்பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. திரௌபதி பேரழகு வாய்ந்தவள் என்பது ஒரு காரணம்; மற்றொன்று துருபதன் ஒரு பேரரசனாகவும் இருந்தான்.

சுயம்வரத்திற்கான நாளன்று, துரியோதனன், கௌரவர்கள், கர்ணன், இன்னமும் மாறுவேடத்தில் மறைந்து வாழ்ந்துவந்த பாண்டவர்கள் உட்பட வீரர்கள் பலரும் குழுமினார்கள். பாண்டவர்கள் உயிருடன் இருப்பது யாருக்கும் தெரியவில்லை - கிருஷ்ணரைத் தவிர. அரண்மனை தீக்கிரையானதில் இறந்தது நிஷாட பெண்ணும், அவளது ஐந்து மகன்களும்தான் - பாண்டவர்கள் அல்ல என்பதை தனது ஒற்றர்களை அனுப்பி அப்போதே உறுதி செய்து கொண்டிருந்தார் கிருஷ்ணர். பாண்டவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாவிட்டாலும், அவரது மனதிற்குள் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை இருந்தது - சுயம்வரம் பற்றிய தகவல் தெரிந்த பின்னும் அதில் பங்கேற்காமல் அவர்களால் இருக்க முடியாது என்பதுதான் அது.

சுயம்வரத்தில் ஏதும் சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிக்கத் தயாராக தனது யாதவ படையினருடன் பாதுகாப்பை மேற்பார்வையிடும் பொறுப்பை ஏற்றார் கிருஷ்ணர். அனைவருக்குமே திரௌபதியை கரம்பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. திரௌபதி பேரழகு வாய்ந்தவள் என்பது ஒரு காரணம்; மற்றொன்று துருபதன் ஒரு பேரரசனாகவும் இருந்தான். பெரும் சாம்ராஜ்யமாக திகழ்ந்த துருபதனின் பாஞ்சால தேசத்துடன் உறவு ஏற்படுத்திக்கொள்ள அனைவருமே விரும்பினார்கள்.

போட்டி நடைபெற்ற நாளன்று, அந்த பகுதியே பெரும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு போட்டியாளராக வந்து தங்களது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்த்தார்கள். ஆனால் பெரும்பாலானவர்களால் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த மாய வில்லில் நாணேற்றவே முடியவில்லை. நாணேற்ற முடிந்தவர்களில் பெரும்பாலானவர்களால் எண்ணெய் பாத்திரத்தில் தெரிந்த மீனின் பிரதிபலிப்பை மட்டும் பார்த்தபடி நேராக இலக்கை நோக்கி அம்பெய்ய முடியவில்லை.

விலகிக்கொண்ட துரியோதனன்

போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற துரியோதனன் விரும்பினாலும், முயற்சி செய்து, அதில் தோல்வியடைவதை அவன் விரும்பவில்லை‌. எனவே முதலில் தனது தம்பி துச்சாதனனை போட்டியில் வெற்றியடையும் நோக்கம் இல்லாமல், முயற்சி மட்டும் செய்து பார்க்கச் சொல்லி அனுப்பி வைத்தான். பெருமையும் தீரமும் நிறைந்த வீரனான துச்சாதனன் வில்லில் நாணேற்ற முயற்சி செய்து தோற்றான். தனது சகோதரனால் முடியவில்லை என்பதைப் பார்த்த துரியோதனன், தோல்வியடையும் அவமானத்தை தவிர்க்க போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்து வெளியேறினான். போட்டியாளர்களில் கடைசி வீரர்களில் ஒருவனாக, தனது வாய்ப்புக்காக காத்திருந்த கர்ணன் களமிறங்கும் நேரம் வந்தது.

அலட்சியமாக உள்ளே நுழைந்த கர்ணன் சர்வசாதாரணமாக வில்லை கையில் எடுத்து நாணேற்றி அம்பெய்ய தயாரானான். கர்ணன் நின்ற தோரணையிலேயே அவன் நிச்சயம் இலக்கை வீழ்த்திவிடுவான் என்பது அர்ஜுனனுக்கு புரிந்தது‌. அதேநேரத்தில், அரச பதவியளித்து, தங்களில் ஒருவனாக துரியோதனன் கர்ணணை ஏற்றுக் கொண்டிருந்தாலும், இன்னும் தேரோட்டியின் மகன் என்ற பெயர் சமுதாயத்தில் உலவிக் கொண்டிருந்ததும் அர்ஜுனன் நினைவுக்கு வந்தது. போட்டியை வடிவமைத்த கிருஷ்ணரும் கர்ணன் களத்தில் நின்றதை பார்த்ததும் திணறிப் போனார். இலக்கை வீழ்த்தும் திறன் வாய்ந்த கர்ணன் களத்தில் இறங்கி தனது திட்டத்தில் ஏற்படுத்திய இந்த திடீர் திருப்பத்தை கிருஷ்ணர் எதிர்பார்க்கவில்லை.

அவமானப்பட்ட கர்ணன்

ஒவ்வொரு முறை ஒரு புதிய வீரன் களமிறங்கும் போதும், திரௌபதி கிருஷ்ணரை நோக்கி ஒரு பார்வை செலுத்தி, தான் தேர்ந்தெடுக்க வேண்டிய மணாளனா இவர் என்பதைப்போல பார்த்து உறுதி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும், நடக்கும் நாடகத்தை ரசித்தபடியே குறுஞ்சிரிப்புடனான மந்தகாச புன்னகை கிருஷ்ணரிடமிருந்து திரௌபதிக்கு மறுமொழியாக கிடைத்து வந்தது. அந்த புன்னகையிலிருந்து தன் இலக்கு இதுவல்ல என தெளிவடைந்து கொண்டிருந்தாள் திரௌபதி. இங்கே வேடிக்கை என்னவென்றால், வந்திருந்த போட்டியாளர்களில் பெரும்பாலானவர்களால் நாணேற்றவே முடியவில்லை‌, பிறகு எங்கே அம்பெய்து மீனின் கண்ணை துளைப்பது. போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் கூட, திரௌபதி விரும்பினால் அவர்களில் யாரை வேண்டுமானாலும் மணாளனாக தேர்வு செய்திருக்க முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
கர்ணன் அவர்களை நெருங்கி வந்த சமயமாக பார்த்து, கர்ணனுக்கு நன்றாக கேட்கும்படி, "ஒரு தேரோட்டியை மணம்புரிய நான் விரும்பவில்லை" என்று தன் சகோதரனிடம் தெரிவித்தாள்

கர்ணன் அரங்கிற்குள் வந்ததும், கிருஷ்ணர் தன் கண்களை மூடியபடி திரௌபதியிடம், "உன் நிலையை எண்ணி நான் அச்சமடைகிறேன், திட்டத்தில் எதிர்பாராத திருப்பம் இப்போது நிகழ்கிறது. கர்ணன் போட்டியில் நிச்சயமாக வெல்லும் திறனுள்ள வீரன்" என்றார். கையில் மணமாலை ஏந்தி, தனது சகோதரன் திருஷ்டதியும்னன் துணையுடன் நின்றுகொண்டிருந்த திரௌபதி, கர்ணன் அவர்களை நெருங்கி வந்த சமயமாக பார்த்து, கர்ணனுக்கு நன்றாக கேட்கும்படி, "ஒரு தேரோட்டியை மணம்புரிய நான் விரும்பவில்லை" என்று தன் சகோதரனிடம் தெரிவித்தாள். "தேரோட்டி மகன்" என்றுகூட திரௌபதி உச்சரிக்கவில்லை. "என் சகோதரிக்கு தோரோட்டியை மணம்புரிய விருப்பமில்லை‌. முயற்சி செய்யும் சிரமம்கூட உனக்கு வேண்டாம்" என்று சபையில் அனைவருக்கும் கேட்கும்படி அறிவித்தான் திருஷ்டதியும்னன்.

அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்பட்ட கர்ணன், தலைகுனிந்தான். ஆனால் அங்கிருந்து விலகும் முன், கண்களில் ரௌத்திரம் தெறிக்க‌ திரௌபதியை ஒரு பார்வை பார்த்து, "எனக்கான நேரம் வரும்போது உன்னை தப்பவிட மாட்டேன்" என்றபடியே அவமானத்தை சுமந்து வெளியேறினான்‌ கர்ணன்.

அடுத்து, இளம் பிராமணனாக வேடம் தரித்திருந்த அர்ஜுனன் முன்னே வந்து, "இங்கிருந்த எந்த ஷத்ரியனாலும் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை, நான் முயற்சி செய்யட்டுமா?" என்றான். ஒரு பிராமணனை போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கலாமா வேண்டாமா என்று தெரியாமல் திருஷ்டதியும்னன் குழம்பினான். கிருஷ்ணரை பார்த்தான். எதையோ தவறவிட்டவராக கீழே குனிந்து எடுப்பது போன்று பாவனை செய்த கிருஷ்ணரின் செயலை ஆமோதிப்பாக எடுத்துக்கொண்டு, "சரி, உனக்கு முயற்சி செய்ய விருப்பமிருந்தால் கலந்துகொள்ளலாம். ஆனால் இங்கு வந்திருந்த வீரர்கள் யாராலும் முடியாதபோது நீ எப்படி இதை சாதிக்கபோகிறாய்?" என்றபடியே அனுமதி தந்தான்.

அர்ஜுனனின் வெற்றி

பிராமண இளைஞன் முன்னே வந்தான், வில்லை மூன்று முறை சுற்றி வந்தபின் தன் விதி முடிந்தது என்பதைப்போல நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினான், வில்லை சாதாரணமாக கையில் எடுத்து நாணேற்றி, கீழே வைக்கப்பட்டிருந்த எண்ணெயில் பிரதிபலித்த உருவத்தை பார்த்து மேலே சுழன்று கொண்டிருந்த மீனின் கண்ணை குறி வைத்து அம்பை எய்தினான்‌. ஒவ்வொரு வீரனுக்கும் ஐந்து அம்புகளை எய்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அர்ஜுனன் அடுத்தடுத்து அம்புகளை தொடுத்த வேகத்தில் ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து அம்புகளும் நேர்கோடாக வந்து துளைத்த வேகம் தாங்காமல் மீன் உருவம் தரையில் விழுந்தது.

திரௌபதி அர்ஜுனனுக்கு மாலையிட்டாள். அர்ஜுனனும் நான்கு சகோதரர்களும் தங்கள் அன்னையின் இருப்பிடமான அவர்கள் மறைந்து வாழ்ந்துவந்த வீட்டிற்கு திரௌபதியை அழைத்துச் சென்றனர்.

போட்டியை காண வந்திருந்த பிராமணர்கள் மற்றும் ஷத்ரியர் அல்லாத மக்களிடமிருந்து பெரும் ஆரவாரமும் உற்சாக குரலும் எழும்பியது. ஷத்ரியர்கள் மத்தியில் கோபக்குரல் கிளம்பியது, "இது முறையல்ல! ஒரு இளவரசி எப்படி பிராமணனை திருமணம் செய்வாள்? இப்போது பிராமணன் போட்டியில் வென்றிருக்கிறான், ஆரிய தர்மப்படி பிராமணனை நாம் கொல்ல முடியாது. ஆனால் அவனை அனுமதித்த திருஷ்டதியும்னனை நாம் கொல்வோம்" என்றபடி அனைவரும் தங்கள் வாளை உருவினார்கள்.

சட்டென அர்ஜுனனுக்கு பக்கபலமாக பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர் சண்டையிட தயாராக எழுந்தனர். அங்கிருந்த சிறிய மரம் ஒன்றை வேருடன் பிடுங்கிய பீமன், திருஷ்டதியும்னனை நோக்கி முன்னேறிச் சென்ற அனைவர் மீதும் மரத்தை சக்கரம் போல சுழற்றி தாக்கி வீழ்த்தினான். வில்லை கையிலெடுத்த அர்ஜுனன் சரமாரியாக அம்புகளை தொடுத்து தன்னை நெருங்கிய அனைவரையும் பீதிக்குள்ளாக்கினான். அவர்களுக்கு பக்கபலமாக யாதவர்கள் உள்ளே புகுந்து அணிவகுத்து நின்றனர். எல்லோருமாக சேர்ந்து சூழ்நிலையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்து வந்தனர்.

திரௌபதி அர்ஜுனனுக்கு மாலையிட்டாள். அர்ஜுனனும் நான்கு சகோதரர்களும் தங்கள் அன்னையின் இருப்பிடமான அவர்கள் மறைந்து வாழ்ந்துவந்த வீட்டிற்கு திரௌபதியை அழைத்துச் சென்றனர். பிராமணர்களாக வேடமணிந்து, எப்போது உணவு பிக்ஷை கேட்டு வெளியே சென்றாலும், அதில் என்ன கிடைத்தாலும் அன்னை குந்தியின் காலடியில் அப்படியே சமர்ப்பிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அதன்பின் அவரவருக்கான உணவை குந்தி பிரித்து தருவாள். இருக்கும் உணவை எப்போதுமே இரு சம பாகமாக பிரிப்பாள் குந்தி - ஒரு பாதி பீமனுக்கு, மறு பாதி சகோதரர்கள் நால்வருக்கும்.

வீட்டிற்குள் நுழைந்ததும், "அம்மா, நாங்கள் இன்று என்ன கொண்டு வந்திருக்கிறோம் பாருங்கள்" என்றார்கள் பாண்டவர்கள். திரும்பிப் பார்க்காமலே, "என்னவாக இருந்தால் என்ன, அதை உங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" என்றாள் குந்தி. திகைத்துப்போய், "அம்மா, இது ஒரு பெண். நாங்கள் ஒரு இளவரசியை அழைத்து வந்திருக்கிறோம்" என்று கூவினார்கள். திரும்பி பார்த்த குந்தி, அதுவரை தான் கண்டிராத பேரழகியை கண்ணுற்றாள். எந்த சலனமும் இல்லாத குரலில், "அதனாலென்ன, நான்தான் உங்களை பங்கிட்டுக்கொள்ள சொல்லிவிட்டேனே... அவ்வளவுதான்" என்றாள்.

சகோதரர்கள் குழம்பினார்கள்; திரௌபதி அதிர்ந்தாள். ஒரு மாவீரன் போட்டியில் வென்று தன் கரம் பற்றியதில் மகிழ்ந்திருந்த திரௌபதிக்கு, பாண்டவர்களின் தாயே சகோதரர்களுக்குள் தன்னை பங்கிட்டுக்கொள்ளச் சொல்வதை நம்பமுடியவில்லை. பாண்டவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அனைவரும் மீண்டும் துருபதனின் அரண்மனைக்கு திரும்பினார்கள். கிருஷ்ணரும் வியாசரும் அப்போது அங்கே இருந்தார்கள்‌.

"ஐந்து ஆண்கள் எப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியும்?" என்ற விவாதம் எழுந்தது. பாண்டவ சகோதரர்கள் துருபதனிடம், "எங்களின் தாயார் ஒருமுறை விரும்பிவிட்டால், அது என்னவாக இருந்தாலும் நாங்கள் அதை நிறைவேற்றுவோம். அர்ஜுன் மட்டும் திரௌபதியை மணந்துகொள்ள முடியாது. ஒன்று நாங்கள் ஐவரும் திரௌபதியை திருமணம் செய்ய வேண்டும் அல்லது உங்கள் மகளை நீங்களே திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்கள்.

ஐந்து கணவர்கள்

சுயம்வரம் நிறைவடைந்த நிலையில் தன் மகளை மீண்டும் தன்னிடமே ஒப்படைப்பது துருபதனுக்கு முழு அவமானமாக மாறியிருக்கும். ஆனால் இப்போது என்ன செய்வது என்பதும் துருபதனுக்கு தெரியவில்லை. மக்கள் கிருஷ்ணரிடம் ஆலோசனை கேட்டார்கள். இங்கு நடப்பது எதுவுமே எனக்கு தெரியாது என்பதைப்போல, அரண்மனையின் மேல் விதானத்தில் எதையோ கவனிப்பதைப் போன்ற பாவனையுடன் வேண்டுமென்றே அமைதியாக அமர்ந்திருந்தார் கிருஷ்ணர் - பெரும் புன்னகை தவழ.

வியாசரின் கால்களில் விழுந்த திரௌபதி, "நீங்கள் ஞானவான். நீங்களே சொல்லுங்கள்... ஐந்து ஆண்களை திருமணம் செய்யும் சூழ்நிலைக்குள் என்னை எப்படி அவர்கள் தள்ள முடியும்? இது தர்மமல்ல. நான் அப்படி செய்யவும் மாட்டேன்" என்றாள். வியாசர் திரௌபதியிடம், "உன் முன் மூன்று வாய்ப்புகள் இருக்கிறது. இப்போது அர்ஜுனனை மட்டும் நீ திருமணம் செய்து கொள்ளலாம்; அவன் உன்னை அழைத்துச் செல்வான், உன்னுடன் காதலாகவும் இருப்பான், ஆனால் சில காலத்திற்கு பிறகு, இந்த முடிவை எடுத்ததற்காக வருந்துவான். ஏனென்றால் உனக்காக தன் தாயையும் சகோதரர்களையும் பிரிந்து வந்துவிட்டோமே என்று நினைப்பான். வருத்தம் மெதுவாக கசப்பான உணர்வாக மாறும்; நாளடைவில் மனக்கசப்பு வெறுப்பாக மாறிவிடும்."

திரௌபதிக்கும் அவளது ஐந்து கணவர்களுக்கும் இடையேயான திருமண வாழ்க்கைக்கு ஒரு ஆலோசனையை, கிருஷ்ணர் திரௌபதிக்கு வழங்கினார்

தொடர்ந்த வியாசர், "இப்படித்தான் பெரும்பாலான தம்பதிகள் வாழ்கிறார்கள்." ஆரம்பத்தில் பெரும் காதல் காவியமாகவே வாழ்க்கை இனிக்கும். ஆனால் உங்களது பெற்றோரை, சகோதரர்களை, உறவினர்களை விட்டு விலகியே ஆகவேண்டும் என்ற நிலையை ஒருவர் ஏற்படுத்தினால், காதல் உணர்வு சில காலத்திலேயே வருத்தமாக, கசப்பாக மாறிவிடும். அதிலும், அர்ஜுனனைப் பொறுத்தவரையில் நிச்சயமாக அவன் இதை மெய்ப்பித்துக் காட்டுவான்.

எனவே உனக்கு இருக்கும் வாய்ப்பு இதுதான் - உனது கணவனுடன் அற்புதமான காதல் வாழ்க்கையை குறுகியகாலம் அனுபவித்து வாழலாம், ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு, தன் தாயையும் சகோதரர்களையும் பிரிந்ததற்கு வருந்தி, உன்னால்தான் இப்படி ஆனது என்பான். அல்லது இந்த மொத்த திருமணத்தையும் நிராகரித்து விட்டு நீ உன் தந்தையிடமே திரும்பிச் செல்லலாம். ஆனால் அதற்கு பிறகு எந்த மாவீரனும் உன்னை திருமணம் செய்துகொள்ள முன்வர மாட்டான், ஏனென்றால் இதற்குபிறகு உன்னை யாரும் பொக்கிஷமாக கருதமாட்டார்கள். காலம் முழுவதும் கன்னியாகவே உன் தந்தையின் வீட்டில் தங்கியிருக்கலாம். இங்கும் சிறிது காலத்திற்கு பிறகு உனது சகோதரன் நீ இப்படி இருப்பதை நினைத்து வருந்துவான்.

அல்லது இந்த பஞ்ச பாண்டவ சகோதரர்களை நீ திருமணம் செய்து கொள்ளலாம். இவர்கள் ஐவரும் சேர்ந்திருந்தால், தங்களின் விதியை தாங்களே நிர்ணயித்து இந்த உலகையே இவர்கள் ஆள்வார்கள். அவர்கள் அனைவரின் மனைவியாக, அவர்களை எப்போதும் இணைத்தே வைத்திருந்த பெருமையை நீ அடையலாம்‌. இவைதான் உனக்கு இப்போது இருக்கும் வாய்ப்புக்கள். உனக்கு எது விருப்பமோ அதை தேர்வு செய்" என்றார்.

வாழ்க்கையில் தான் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்புகளை கேட்டு திணறிய திரௌபதி மூர்ச்சையடைந்தாள். மீண்டும் சுய நினைவுக்கு கொண்டு வந்து ஆசுவாசப்படுத்தினார்கள். வியாசர் இன்னும் ஒருபடி மேலே சென்று, கடந்த பிறவியில் நள-தமயந்தியின் மகளாக திரௌபதி பிறந்து வாழ்ந்திருந்ததை பார்க்கச் செய்தார். விதர்ப தேசத்தின் அரசனான நளன் சமையல் கலையில் இந்த உலகிலேயே சிறந்தவன் என்று கதைகளில் சொல்லப்படுகிறது‌. நளனுக்கும் தமயந்திக்குமான காதல் பிரசித்தி பெற்ற ஒன்று. அந்த பிறவியில், இளம் பெண்ணாக இருந்தபோது சிவனை நோக்கி தவம் செய்கிறாள்.

சிவன் தோன்றுகிறார். சற்றே போதையிலும், தாராள மனதுடனும் இருக்கிறார் சிவன். சிவனிடம், "மஹாதேவா, எனக்கு ஒரு கணவன் வேண்டும். வெறும் கணவனாக மட்டும் இருக்கும் ஒருவன்; வலிமையான ஒருவன்; வீரமான ஒருவன்; புத்திசாலியான ஒருவன்; கம்பீரமான தோற்றமுடைய ஒருவனை நான் திருமணம் செய்ய வேண்டும்" என்று வேண்டுகிறாள். சிவன் "சரி, சரி, சரி, சரி, சரி" என்று ஐந்து முறை ஆமோதிக்கிறார். தனது கடந்த பிறவியில் நடந்ததைப் பற்றி தெரிந்ததும், இது தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டது என்பதை உணர்ந்தாள் திரௌபதி. இந்த குணங்கள் எல்லாம் சேர்ந்த ஒரு கணவன் வேண்டும் என்று நினைத்தாலும், கவனக்குறைவால் ஐந்து கணவர்களை கேட்டிருந்திருக்கிறாள். அந்த விருப்பத்தை சிவனும் வழங்கிவிட்டார். எனவே பஞ்ச பாண்டவர்கள் ஐவரையும் மணந்து கொண்டாள் திரௌபதி.

திரௌபதிக்கும் அவளது ஐந்து கணவர்களுக்கும் இடையேயான திருமண வாழ்க்கைக்கு ஒரு ஆலோசனையை, கிருஷ்ணர் திரௌபதிக்கு வழங்கினார், "ஒவ்வொரு சகோதரனுடனும் ஒரு வருடம் மனைவியாக வாழ்ந்திரு. அந்த ஒரு வருடத்தில் மற்ற சகோதரர்களில் யாராவது கவனக்குறைவாக உனது படுக்கையறைக்குள் நுழைந்தாலும் கூட அதற்காக அவன் ஒரு வருடம் வனவாசம் செல்ல வேண்டும்."

இந்த ஒப்பந்தத்தில் இருந்து தங்களின் மற்ற மனைவியரை விலக்கிக் கொள்ள சகோதரர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் ஒரே அரண்மனையில் சேர்ந்து வாழவில்லை. பாண்டவ சகோதரர்கள் ஐவருக்கும் மனைவியானதன் மூலம், அவர்களை ஒன்றாக இணைத்து வைக்கும் சக்தியாக திரௌபதி ஆனாள். நாட்டை ஆள வேண்டும் என்ற தங்கள் கனவை, இலக்கை நோக்கி பாண்டவ சகோதரர்கள் இணைந்து செயல்படவேண்டிய அவசியத்திற்கு கூடுதல் வலிமை சேர்த்தாள். அத்துடன், துருபதனுடன் ஏற்பட்டுள்ள உறவும் தங்களுக்கு பக்கபலமாக அமைய, புதிய பலத்துடன் பாண்டவர்கள் மீண்டும் ஹஸ்தினாபுரம் திரும்பினார்கள்.

தொடரும்...

IYO-Blog-Mid-Banner